Pages

14 September 2009

போலி(ளி)(ழி) என அனைத்திற்கும் ஒரு எளிய அறிமுகம்!
போளி(லி)(ழி) என்றதும் ஏதோ கெட்ட ஐட்டமாக நினைத்து விடாதீர்கள். போளி உடலுக்கு மிகவும் நல்ல ஒரு தீனி. மாலை வேளைகளில் மந்தமாக இருக்கும் போது உடலுக்கு உற்சாகமும் உல்லாசமும் தரும் பண்டம். அந்த பண்டம் உங்கள் ஊரில் யாராவது ஐயமார் ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும். வெளியே மஞ்சள் கலரிலோ அல்லது வெளிர் பிரவுண் நிறத்திலோ இருக்கும். உள்ளே மஞ்சளாக பருப்புகள் அல்லது மாவு போன்ற ஒரு பிசுபிசு வஸ்து இனிப்பு சுவையோடு இருக்கும். உள்ளேதான் அப்படி! ஆனால் வெளியே பார்க்க எண்ணை பிசுபிசுப்பின்றி ரசித்து சுவைக்க உகந்த உணவு இந்த போளி.

இதை சிலர் வெறுக்கக்கூடும். சக்கரை வியாதிக்காரர்களுக்கு பார்ப்பதெல்லாம் விஷம்தான். ஆனால் நம்மைப்போன்ற எதையும் தின்னும் இதயங்களுக்கு போளி ஒரு தெய்வப்பிரசாதம். அதன் சுவையை அனுபவித்தவனால் மட்டுமே உணர முடியும். கலியுகத்தில் நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத இந்த பண்டம் காலப்போக்கில் அழிந்து கொண்டிருக்கின்றது. அதைக்காக்க வேண்டியது நம் கடமையில்லையா?. நாளைய சந்த்தியினருக்கு போளி என்று ஒரு ஐட்டம் இருந்தது. அதன் சுவை அபாரமானது என்பது இணையத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. போளி எனக்குதான் சொந்தம் என யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. இந்த நவீன யுகத்தில் போளிக்கும் தனக்குமான தொடர்பைக்கூட சொல்ல பலரும் வெட்கப்படுகின்றனர் வேதனைப்படுகின்றனர். ஆனால் இவர்களோ அந்த காலத்தில் மூச்சு முட்ட போளியை ருசித்தவர்கள். போளியை உபயோகித்து வாழ்க்கையின் உன்னதங்களை தெரிந்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட போளிக்குத்தான் இன்று இப்படி ஒரு நிலை.அதனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போளி குறித்து அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.

இந்த போளி எப்படி உருவாகியிருக்கும்? போளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றன. முதலில் வந்த்து சப்பாத்தியா பூரியா என்பது போல! முதலில் வெந்து போவது போண்டாவா! அல்லது உள்ளே இருக்கும் மசாலாவா? என்கிற ஆராய்ச்சிப்போலத்தான் போளியும். பார்க்க சப்பாத்தி போல இருந்தாலும் போளிகளுக்குள் அந்த இனிப்பு எப்படி குடிகொள்கிறது. அது உருவாகும் இடம்தான் எது!. இந்த போளிகளை உருவாக்குவதால் மானிடகுலத்திற்கு கிடைக்கும் பராக்கிரமம்தான் என்ன?. முதலில் ஒரு உருண்டை இனிப்பை எடுத்து உருட்டி அதை மாவிற்குள் வைத்து தினித்து ஒன்றாக்கி சப்பாத்தி போல தேய்த்து , பொறித்து எடுத்தால் போளி தயார்.

போளிகள் தானாக உருவாவதில்லை. நன்றாக வேக வைத்து , சூடாக்கி , அதிலும் அதிக சூட்டில்தான் நல்ல போளிகள் கிடைக்கும். அந்த சூட்டை உருவாக்குவது உங்கள் திறமை. இதற்கான ரெசிப்பிகள் குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் தோழர் ஒருவர் குறிப்புகளை அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் செய்வதாக வாக்களித்திருக்கிறார். பார்ப்போம்.
நேற்று பிரபல எழுத்தாளர் ஒருவர் போளி தயாரிப்பு பட்டறை இணையத்தில் எழுதுபவர்களை வைத்து நடத்தலாம் என அறிவுரை கூறினார். போரடிக்கும் போதெல்லாம் தின்கிற சாதாரண சப்பை உணவா போளி. அதி உன்னதமான உணர்வுகளை உங்களிடமிருந்து கிளர்ந்தெளச்செய்யும் அருமருந்தல்லவா அது!

பட்டறைகளால் போளிகளை உருவாக்கி விட முடியுமா!. அதற்கான பக்குவம் ஒரு சிலருக்குத்தானே வரும். போளிகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள் இணையத்தில் மிகச்சிலரே! அவர்களும் இப்போதெல்லாம் அமைதியாகிவிட்டனர். அதனால் இந்த போளி குறித்த மின்னஞ்சல் ஒன்றை நேற்று தோழர் ( போளி என்றால் அவருக்கு உயிர்.. அதெல்லாம் சிறு வயதில் ) அனுப்பியிருந்தார். அது உங்களுக்காக

போளி சுடுவது எப்படி!

1. போளியை ஒரு கம்பியில் குத்தி வைத்து, துணிக்காயப்போடும் கயிற்றில் தொங்கவிட்டு துப்பாக்கி வைத்து சுடலாம்

2. போளியை வடைச்சட்டியில் நிறைய எண்ணை ஊற்றி பூரி போல உப்பலாக சுடலாம்.

3. போளியை உருட்டி திரட்டி போண்டா போல பொரித்து எடுக்கலாம்.

4. போளி மாதிரியே போலியாக( போலி என்றால் டூப்ளிகேட் என்று பொருள் ) சப்பாத்திக்குள் சக்கரை வைத்து சுடலாம்.

5. இதையெல்லாம் முயற்சித்து பார்க்கும் வீரமும் தீரமும் இல்லாத சப்பையான மாந்தர்கள் ஏதோ ஒரு கடையில் அடுக்கி வைத்திருக்கும் போளியை சுட்டுத்தின்னலாம்.

இப்படி போகிறது அந்த மின்னஞ்சல். பாருங்கள் ஒற்றைப்போளி என்னமாதிரியெல்லாம் அவதாரமெடுக்கிறது. இப்போது புரிகிறதா அதன் சக்தி பலம்.. துஷ்மன்..

அதனால் என் பெருங்குடி மக்களே , போளிக்கும் உங்களுக்குமான தொடர்பை துண்டித்துக்கொள்ள விரும்பாதவர்கள் , போளி ரசிகர்கள் , போளிக்கு உதவ விரும்புபவர்கள் அனைவரும் திரளுங்கள். போளி தயாரிப்பு பட்டறை ஒன்றை நடத்துவோம். அதற்கான நிதி தற்சமயம் குறைவாக இருப்பதால் , உங்களால் முடிந்த நிதியுதவியை மின்னஞ்சலில் தெரிவித்தால் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என்று நமது அகில உலக போளி ரசிகர் மன்றம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்க போளி வளர்க அதன் சுவை!


பி.கு. சாப்பிடும் போளிக்கு எந்த lee என்பதில் நேர்ந்த குழப்பத்தால் தலைப்பில் எல்லா லீயும்.. புருஸ் லீக்கும் போலீக்கும் கூட தொடர்பு இருக்காமே! இருந்தாலும் இருக்கும் சுண்டெலிக்கு பெருச்சாளிக்கு கூட தொடர்பு இருக்கு..புரூஸ்லீக்கு இருக்காதா!

***********

இந்த பதிவு கூறும் மிகப்பெரிய கருத்து என்னவென்றால்!

அதாகப்பட்டது சிரிப்புதான் சகலரோக நிவாரணி அதனால் சிரித்து சிரித்து மகிழ்ச்சியாக இருப்போம்.