Pages

07 November 2009

ஜாலியா ஒரு கொலை!
சொதசொதவென மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கையிலிருந்த சிகரட்டு வெகுநேரமாக கரையாமல் புகைந்து கொண்டிருந்தது. மேலே பார்க்கிறான் சோடியம் வெளிச்சத்தில் சின்ன மழையும் பெரிதாக தெரிந்தது. அழகாகத்தான் இருந்தது. ஆனால் மணி பத்தரைக்கு மேல் இப்போது கிளம்பினாலே வீட்டிற்கு போவதற்குள் பனிரெண்டாகிவிடும். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு போய் அங்கே வண்டியை பார்க்கிங்கில் போட்டுவிட்டு டிரைன் பிடித்து செல்ல வேண்டும். பாழாய்ப்போன மழை விடுவதாய் இல்லை. சொத சொத சொத...

இன்னொரு சிகரட்டையும் வாங்கி பற்றவைத்துக்கொண்டான் , இது மூன்றாவது சிகரட் , பாக்கட்டில் இதற்கு மேல் சில்லரை இல்லை. பர்ஸிலும் பணம் இல்லை. டிரெயின் பாஸும் முப்பது ரூபாய் பெட்ரோலுக்கும்தான் இருந்தது. மழை லேசாக குறைந்த மாதிரி இருந்தது. ரோட்டில் தண்ணீர் பிளாட்பாரத்திற்கு கொஞ்சம் மேலே ஓடிக்கொண்டிருந்தது. இறங்கினால் முழங்கால் அளவிற்கு இருக்கும். அவனுடைய டிவிஎஸ் ஒரு முறை ஆப் ஆகிவிட்டால் அப்புறம் நாளைக்குத்தான் ஸ்டார்ட் பண்ண முடியும். யோசித்தான். வேறு வழியில்லை. இறங்கி டிவிஎஸ் மிதித்து ஸ்டார்ட் செய்தான். ஒரே அடியில் ஸ்டார்ட் ஆகாவிட்டாலும் நாற்பது முறை முயன்று ஸ்டார்ட் செய்தான். லேசான வேகத்தில் சென்று பின் வேகமெடுத்து வேகமெடுத்து பாலத்தின் மீதேறி சூப்பர் வேகத்தில் கீழே இறங்கிக்கொண்டிருந்தது பாலத்திற்கு கீழே தண்ணீர் நிரம்ப நின்று கொண்டிருந்தது , அருகில் பெட்டிக்கடை இருப்பது தெரிந்தது , அருகில் சிலர் லுங்கி கட்டிக்கொண்டு டீ குடித்து கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் வண்டி இறங்கிவிட்டால் , இல்லை இல்லை வண்டிக்குள் தணீணீர் இறங்கிவிட்டால் வண்டி ஆப் ஆகிவிடும் மீண்டும் என்ன அடி அடித்தாலும் ஸ்டார்ட் ஆகாது , ஓரே முறுக்கில் தண்ணீரை கடந்து விட வேண்டியதுதான் என விர்விர் என முறுக்கி கொண்டு தண்ணீரில் சர்ர்ர்ர்ரென பாய்ந்தான் , தண்ணீர் இரண்டு புறமும் பவுன்டெயின் போல கிர்ர்ர்ர் என அடித்த படி சென்றது , டீ குடித்துக்கொண்டிருந்தவர்களின் டீயிலும் வாயிலும் உடலிலும் சேற்றுத்தண்ணீர் பளீர் பளீர். அதை அவனும் கவனித்தான்.அவர்கள் முகத்தில் தெரிந்த கோபமும் தெரிந்தது , திரும்பி திரும்பி பார்த்த படியே வண்டியை ஓட்டினான். அவர்கள் ஏதோ அவனை நோக்கி கத்துவது போல் இருந்தது.. த்த்தா ஏளி என ஏதேதோ கேட்டது வேகமான காற்று என்பதால் சரியாக கேட்கவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மூவரும் முதகுகிற்கு பின்னாலிருந்து ஆளுக்கொரு வீச்சரிவாளை எடுப்பது அந்த கும்மிருட்டிலும் பளிச் என தெரிந்தது. இதையெல்லாம் அவன் டிவியில்தான் பார்த்திருக்கிறான். தண்ணி தெரிச்சதுக்கு கொலையா! அய்யய்யோ என வண்டியை முறுக்கினான். வண்டி என்ன ஓட்டினாலும் முப்பதிற்கு மேல் போகாது. ம்ம்ம்ம்ம் முடிந்த வரை முறுக்கினான். இங்கிருந்து கொஞ்சம் தூரம் போய் திரும்பி பார்த்தான். பின்னால் அந்த மூவரும் இரண்டு பைக்கில் வெறியோடு வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு சோடியம் விளக்கை தாண்டும்போதும் திரும்பி பார்த்துக்கொண்டான். அவர்களது பைக்கும் இவன் ஸ்கூட்டர் வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தது.

ஆனால் அவர்களால் அவனை நெருங்கவே முடியவில்லை. வண்டி ஆஃப் ஆகிற கூடாது ஆண்டவா உனக்கு ஒம்பது தேங்கா உடைக்கிறேன் இல்ல நூத்தியெட்டு தேங்கா உடைக்கிறேன். மிரண்டுபோய் வண்டியை ஓட்டிக்கொண்டே இருந்தான். வண்டி ஓடிக்கொண்டே இருந்து. விடாத ஓட்டம். பின்னால் வெறிபிடித்தது போல மூவரும் பலத்த சத்ததுடன் அருகில் வருவது போல் இருந்தது. ஐய்யயோ பக்கத்துல வந்துட்டாய்ங்களே இன்னைக்கு செத்தன்டா நான் என நினைத்த படி வண்டியை ஸ்டேசன் பைக் பார்க்கிங்கில் நிறுத்தினான். திரும்பி பார்த்தான் கொலைகாரப்பாவிகள் அவர்களும் வண்டியை பார்க்கிங்கில் இவனுக்கு கொஞ்சம் தள்ளி நிறுத்திக்கொண்டிருந்தனர். இவனுக்கு பதைபதைப்பு தாங்க முடியவில்லை. அவர்களும் இவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தனர்.

கொலைகாரர்கள் பார்க்கிங்கிற்கு காசு கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டிருந்தனர். இவனுக்கு பாஸ் அதனால் அங்கிருந்து நடை ஓட்டமாய் ஒடக்கத்துவங்கினான். கிடுகிடுவென நடந்து போய் , நின்று கொண்டிருந்த அவனது ரயில் ஏறிக்கொண்டான். உள்ளே ஏறிவிட்டு திரும்பி பார்த்தான் அவர்களை காணவில்லை. கம்பார்ட்மென்ட்கள் காலியாகத்தான் இருந்தன. இப்படிலாம் கிரைம் கதைகளில்தான வரும் நம்ம கதைல ஏன்டா வருது என நினைத்துக்கொண்டான். தனியாக போய் ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு தனது சாப்பாட்டு கூடையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். சட்டையும் பேண்டும் ஈரமாக சொதசொதவென்றிருந்தது. வெளியே மழை பெய்து ஜன்னல் வழியே சாரல் அடித்தது, டைட்டான கண்ணாடி ஜன்னலை பாடுபட்டு இழுத்து பூட்டிக்கொண்டான். மனதிற்கு லேசான பயம் இருந்தது. அந்த குண்டர்களை காணோம். அய்யோய்யோ நம்மை கொலை செய்து விட்டால் இந்த மாத சம்பளத்தை யார் வீட்டிற்கு தருவார்கள். கிரெடிட் கார்டு காரன் என்ன செய்வான். கொலை செஞ்சிட்டா இன்சூரன்ஸ் உடனே கிடைச்சிடுமா? அரிவாளால வெட்டினா வலிக்குமா.. ஒரு வேளை கைய வெட்டிட்டா? பேசாம கால்ல விழுந்துருவோமா? எல்லா கதைலயும் வரமாதிரி கிளைமாக்ஸ்ல ஏதாவது திடீர் திருப்பம் வந்து அவங்க எனக்கு பதிலா வேற யாரையாவது கொன்னுட்டா? ஒரு வேளை கொலைகாரனுக்கு வயித்தாலை போயி வீட்டுக்கு போகலாம்னு கிளம்பிட்டா! பல எண்ணங்கள். வரிசையில்லாமல் மாறி மாறி. ஆனாலும் பயம் கவ்வியது. வயிற்றுக்குள் கடமுடா என்றது புளித்த ஏப்பமாய் வந்தது. அந்த அரிவாள் நண்பர்களை காணவில்லை.

வண்டி கிளம்பும் சத்தம் கேட்டது. பாங்கென கத்திக்கொண்ட டும்சாக் டும்சாக் என தாள லயத்தோடு கிளம்பியது டிரெயின். நாற்காலியில் அமர்ந்திருந்தவன் லேசாக வெளியே வந்து கம்பார்ட் மென்ட்டில் பார்த்தான் பக்கத்து கம்பார்ட் மென்டில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தனர். நிம்மதியாக இருந்தது. துணைக்கு ஆள் இருக்கு.. ஸ்ஸ்ப்பா! மூச்சுவிட்டுக்கொண்டான்.

பாத்ரூம். வாசலில் அந்த மூன்று பேர். கறுத்த நிறம். லுங்கி. குறுகுறுவென பார்வை. இவன் சாதாரணமாக நடந்து கொள்ள முயன்று தோற்றுப்போனான். வேகமாக திரும்பி மீண்டும் பழைய இடத்திற்கே வந்து அமர்ந்து கொண்டான்.

அந்த மூவரும் பின்னாலேயே வந்தனர். அவனுக்கு எதிரில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டனர். ஆஹா இன்னைக்கு நாம செத்தோம்டா என நினைத்துக்கொண்டான். அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தனர் இவனுக்கு மரணபயம் ஒன்றும் கேட்கவில்லை. சரக்கு வாடை அடித்தது. எங்க சரக்கடிச்சிருப்பாங்க டாஸ்மாக்காதான் இருக்கும். பிராந்தியா விஸ்கியா யோசித்தபடியே அமர்ந்திருந்தான். அவர்கள் இவனைப்பார்த்து சிரித்தனர். மூன்றாவது ஆளின் பெயர் சொல்லி அழைத்தனர்.

ஏன்டா கொலை பண்ணி பழகணும்னு சொல்லிட்டு புதுப்பொண்ணாட்டம் வெட்கப்பட்டுகிட்டு அங்கயே நின்னுட்டுஇருந்தா வாடா என அவனை அழைத்தனர். இவனுக்கு ஓட வேண்டும் போல் இருந்தது.

கதை எழுதுபவனுக்கும் கதையை படிப்பவனுக்கும் கூட அவனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது. இந்த இடத்தில் திருப்பம் வந்து அவன் பிழைத்துக்கொள்வான் என்றே எழுதுபவன் எண்ணினான்.ஆனால்

மூன்றாவது ஆள் தயங்கி தயங்கி அந்த கம்பார்ட்மென்ட்குள் நுழைந்தான். அட இவனப்பாரு அருவாளை எப்படி புடிச்சிருக்கானு , ஒழுங்க புடிலே! என அவனது கைகளை பிடித்து சரி செய்தான் அவனை வெட்டுலே என்றான். உடலில் இருந்த மொத்த நரம்புகளும் விடைக்க , மெய்சிலிர்க்க அமர்ந்திருந்தான். சரக் சரக்.. லேசாக வலித்தது. பின் வலிக்கவில்லை. நல்லா கழுத்தை புடிச்சு அறுல! என்று அவனது கையைபிடித்து ஸ்கூட்டர்காரன் கழுத்தை அறுத்துக்கொண்டிருப்பதை, யாரோ ஒருவன் மழையின் நின்றுகொண்டு நனையாமல் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.