24 November 2009

டணால் தங்க விலை!இந்த இந்தியாக்காரங்களுக்கும் மட்டும் ஏன்தான் தங்கம் மேல இவ்ளோ ஆர்வம்?

இதற்கான காரணத்தை ஆராய வரலாற்றின் பக்கங்களை ‘லைட்டாக’ புரட்டிப்பார்க்க வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பல நூறு குட்டிகுட்டி ராஜ்ஜியங்கள் தேன்கூடுகள் போல ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பணம். வித்தியாசமான பொருளாதார கோட்பாடுகள். யாரும் யார் மீதும் படையெடுக்கலாம்.

உதாரணத்திற்கு மடிப்பாக்கம் மன்னருக்கு அந்தப்புரத்தில் சரசமாடி , சோமபானம் அருந்தி வாந்தியெடுத்து போரடிக்கிறது. உடனே மாம்பலம் அரசர் மீது போர் தொடுக்கிறான். மாம்பல மகாராஜாவின் படைகளை துவம்சம் பண்ணி வெற்றியும் காண்கிறான். அடுத்து என்ன? ஊருக்குள் புகுந்து அந்த நாட்டின் கஜானா முதல் ஊரிலிருக்கும் தட்டுமுட்டு சாமான்கள் வரை சகல செல்வங்களும் கொள்ளையடிக்கப்படும். அந்த சூழலில் ராஜாக்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் அப்பாவி மிஸ்டர்.பொதுஜன கோவிஞ்சாமி , தன்னுடைய செல்வங்களை பாதுகாக்க , முடிந்த வரைக்கும் மதிப்பு மிக்க தங்கமாக வாங்கி வைத்துக்கொண்டு போர்க்காலங்களில் வீட்டுத்தோட்டத்திலோ தோப்புகளிலோ புதைத்து வைத்துவிடுவான். இப்படித்தான் தன்னுடைய எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தை சேர்த்துவைத்துக் கொள்ளும் வழக்கம் நம்மூரில் மட்டுமல்ல உலகெங்கிலும் நம் ஒவ்வொருவருடைய ஜீன்களிலும் பரவியுள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2000 வருடங்களுக்கு முன்னால் எகிப்தில் தொடங்கி இன்றுவரை தங்கமோகம் மனிதனுக்குள் இருந்துள்ளது. இன்றும் நம்மூரில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் குண்டுமணி தங்கத்தில் மூக்குத்தி சைஸிலாவது வாங்கி வைத்துக்கொள்வதை பார்த்திருப்போம். பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் அதை விற்றோ அடமானத்திற்கோ கொடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

இந்த தங்கத்தின் விலை திடீரென ஜெட் வேகத்தில் உயர்வதும் , திடீரென குறைவதும் ஏன்? தங்கத்தின் விலையை யார் தீர்மானிக்கின்றனர்?

முகூர்த்த நாட்கள், விழாக்காலங்கள், போனஸ் நேரம் இப்படி எப்போதெல்லாம் நம் கைகளில் காசு அதிகமாய் புரளுமோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கூடும்! அந்த நேரத்தில் அதிகம் பேர் தங்கம் வாங்குகின்றனர் அதனால் தங்கம் விலை உயர்கிறது! நம்ம எல்லாருமே இப்படித்தான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மைக்கதை வேறுவிதமாக இருக்கிறதே!


நம் பணப்புழகத்திற்கேற்றாற் போல தங்கத்தின் விலை உயர்ந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போதெல்லாம் சில ஏஜன்ட்கள் வெளிநாட்டிலிருந்து மொத்தமாக தங்கம் வாங்கி அதை நாடுமுழுதும் இருக்கும் பல ஆயிரம் வியாபாரிகளுக்கு பிரித்து தருவதில் சிக்கல் இருந்தது. எப்போதெல்லாம் வியாபாரிகளுக்கான தேவை அதிகமாகியதோ அப்போதெல்லாம் விலையும் கூடியது.

ஆனால் இன்று ஒற்றை பட்டனை ‘டிக்’ எனத் தட்டினால் அடுத்த நாளே ‘டங்’ என்ற சத்தத்துடன் தங்க்க் கட்டிகள் விமானத்தில் தரையிறங்கிவிடும். இன்ஸ்டன்டாக தங்கத்தை சப்ளை செய்யத் தேவையான வசதிகள் வந்துவிட்டன. கணினியின் பயன்பாட்டால் தங்கத்தினை வாங்குவதும் விற்பதும் எளிதாகியுள்ளது. இது தங்கத்தின் விலை நிர்ணயத்தின் பாணியை மாற்றியுள்ளது. தங்கத்தின் விலை இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போதெல்லாம் அதிகமாகிறது என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர். நம்மூர் மக்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மிகமிக அதிகம். அது ஒரே நாளில் திடீரென ஊரில் இருக்கும் அத்தனை பேரும் ஜாய் ஆலுக்காஸ் வாசலில் தவம் கிடப்பதெல்லாம் கிடையாது. சென்னையிலிருக்கும் ஒரு பிரபல நகைக்கடையின் தினசரி விற்பனை சராசரியாக ஐம்பது லட்சமாம்!

தங்கத்தின் விலை ரங்கநாதன் தெருவிலோ ராஷ்டிரபதி பவனிலோ தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லாமே நியூயார்க்கில் . இதை ‘LONDON GOLD FIXING’ என்கின்றனர். ஏன் நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு லண்டன் கோல்டு பிக்சிங்னு பேரு? ஓவராக யோசிக்க வேண்டாம் , இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை லண்டனில் தீர்மானிக்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை , அதன்பின் நியூயார்க்கிற்கு இடம் மாறியது , ஆனால் லண்டன் மட்டும் பெவிகால் போல காலாகாலத்திற்கும் ஒட்டிக்கொண்டது.

உலகின் முண்ணனியான ஐந்து தங்க வர்த்தகம் செய்கிற பெரும் நிறுவனங்கள்( இவர்களுக்கு புல்லியன்ஸ் என்று பெயர்) தினமும் ஒன்று கூடி பேசி தங்கத்திற்கான விலையை தீர்மானிக்கின்றனர். இந்த விலை டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. தற்சமயம் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை 1070 டாலர்களுக்கு விற்கிறது. எதை வைத்து இந்த விலையை உலக மார்க்கெட்டில் நிர்ணயிக்கின்றனர்? இவர்கள் யார் தங்கத்தின் விலையை முடிவு செய்ய?

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டினர் தங்க விற்பனைக்காக இரண்டு முக்கிய கால நிலைகளை வைத்துள்ளனர்..

1.SUMMER DOLRDUMS ( கோடைக்காலம் ) – மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை

2.WINTER EUPHORIA ( குளிர்காலம் ) – டிசம்பர் முதல் பிப்ரவரி பாதி வரைக்கும்

கோடைக்காலத்தில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பலர் தங்களுடைய தங்கத்தினை விற்றுவிட்டு விடுமுறையில் சென்று விடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் குறையும். அதனால் டோல்ட்ரம்ஸ் குறைந்த லாபம் தரக்கூடியது.

குளிர்காலங்களில் தங்க வர்த்தகத்தில் அதிகம் பேர் ஈடுபடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை அந்த காலங்களில் அதிக அளவில் அதிகரிக்கிறது. குறுகிய கால முதலீடாக தங்கத்தினை வர்த்தகம் செய்பவர்களுக்கு யுப்போரியா அதிக லாபத்தை ஈட்டித்தரும்.
உலகெங்கும் தங்கம் மற்றும் இன்னபிற உணவுப்பொருட்கள் மற்றும் உலோக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களை SPECULATOR COMMUNITY என்கிறோம். இதில் 95% வர்த்தகம் இன்டர்நெட் வழியாகவே நடைபெறுகிறது. உங்களிடம் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அதேபோல் பத்துமடங்கு அதாவது ஒரு லட்சத்திற்கு தங்கம் வாங்க முடியும். உடனே உங்கள் கையில் கட்டித்தங்கத்தை வெட்டி எடுத்து தந்து விட மாட்டார்கள். எல்லாமே டாகுமென்ட்டாக இருக்கும். விலை உயரும்போது அதை விற்று லாபம் பார்க்கலாம். இது அதிக அளவிலான குட்டி குட்டி முதலீட்டாளர்களை இந்த வர்த்தகத்தின் பக்கம் இழுத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் விலை மடமடவென ஜெட்வேகத்தில் உயர்வதற்கான காரணமும் அதுதான். இந்த தங்க விலை ஏற்றம் குறையும் அல்லது இன்னும் அதிகரிக்குமா என்று அனைவருக்கும் பயம் கலந்த ஒரு கேள்வி நிச்சயம் இருக்கும்.

சென்றவாரம் தங்கம் விலை 13000ஐ எட்டியிருக்கிறது. அதுவும் ஒரே நாளில் 1300 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இந்த மெகா விலை உயர்வு தமாக்கா இந்தியாவிற்கோ உலகத்திற்கோ புதிதல்ல. 1980 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? 850 டாலர்கள் , ஆனால் அடுத்து இரண்டே ஆண்டுகளில் அந்த விலை குறைந்து வெறும் 250 டாலர்களாக குறைந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அதில் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. அதே மாதிரியான ஒரு சூழல்தான் தற்சமயம் நிலவுகிறது, ஆனால் இந்தியாவின் பன்னாட்டுக் கொள்கைகளால் உருவான திடீர் பொருளாதார வளர்ச்சி அதிக பாதிப்பு இருப்பது போல தோற்றமளிக்கிது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை ஓரளவு அதாவது 20% வரை குறையும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக அளவில் இது மிகமிக ‘சாதாரணமான நிரந்தரமில்லாத’ விலையேற்றமாகவே கருதப்படுகிறது. குறுகிய கால முதலீடு செய்பவர்கள் வேண்டுமானால் இப்போது தங்கம் வாங்கி அடுத்து மூன்று மாதங்களில் விற்கலாம்! மற்றபடி தங்கத்தின் விலை ஏற்றம் என்பது ஒரு மாயையே , சிறிய அளவில் தங்கம் வாங்குபவர்களுக்கு இந்த விலையேற்றம் எந்தவித பாதிப்பையும் உண்டாக்காது. பெரிய முதலாளிகளுக்குத்தான் பாதிப்பெல்லாம்!

13 comments:

pudugaithendral said...

டணால் தங்கத்தால் பர்ஸ் பணால் ஆகிடும் போல இருக்கு. 10 பவுன் நகை போட்டு யாராவது மகளுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தா அவர் தான் கோடீஸ்வரர்.

க.பாலாசி said...

தங்கத்தை பற்றி அறிய தகவல்கள்...பகிர்தலுக்கு நன்றி...

Raju said...

புதிய தலைமுறையா..?

Rajeswari said...

விரிவான தகவல்கள். நன்றி!

Unknown said...

இது புதியதலைமுறை கட்டுரை அல்ல!

வால்பையன் said...

தற்போதய தங்கத்தின் விலை 1170$

வெட்டிப்பயல் said...

Good One Athisha!!!

malarvizhi said...

தங்கத்தை பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

ஊர்சுற்றி said...

//மடிப்பாக்கம் மன்னருக்கு அந்தப்புரத்தில் சரசமாடி , சோமபானம் அருந்தி வாந்தியெடுத்து போரடிக்கிறது. உடனே மாம்பலம் அரசர் மீது போர் தொடுக்கிறான். மாம்பல மகாராஜாவின் படைகளை துவம்சம் பண்ணி வெற்றியும் காண்கிறான். // அக்மார்க் அதிஷா உதாரணம். :)

தமிழ் பையன் said...

Good article, but the following shows the devaluation of Indian rupee. Is that what you mean??? << ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அதில் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது>>

பீர் | Peer said...

மிக உபயோகமான தகவல் அதிஷா, பகிர்வுக்கு நன்றி.


(இந்தபதிவுக்கும் யாருப்பா -ve ஓட்டு போட்டது?)

நவீனன் said...

நல்ல தகவல்கள் அதிஷா...ஆனால்
(இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது)
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதா? இல்லை குறைந்துள்ளதா?

வெண்பூ said...

அதிஷா... இதுவரை தெரியாத பல தகவல்கள்.. நன்றி..

ஒரு சிறு தவறு..
//
அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது.
//

ஒரு டாலருக்கு எதிரான மதிப்பு 15 (அ) 16 ஆக இருப்பதுதான் மதிப்பு அதிகம். உதாரணமாக ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரம் டாலர் என்றால் 15,000 ரூபாய்க்கே ஒரு அவுன்ஸ் தங்கத்தை வாங்க முடியும். அதுவே 45 ரூபாய் என்றால் 45,000 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க முடியும். டாலருக்கு எதிராக முப்பது வருடத்துக்கு முன்னால் இருந்ததை விட இப்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.