09 February 2010

தன்னம்பிக்கை

கோவை, இடையர்பாளையத்திலிருந்து வடவள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீடு. அவரை சந்திக்க காலையிலேயே அவரது முகவரி கேட்டு போனில் பேசினோம். வடவள்ளி சாலையில் நுழைந்து குழந்தையிடம் கேட்டால் கூட என் வீட்டை காட்டிவிடும் என்று கூறியிருந்தார். அந்த பாதையில் நாமும் நுழைந்தோம். சுற்றிலும் பல வீடுகள் இருந்தாலும் சாலைகளில் யாருமில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகள் சிலர் கண்ணில் தென்பட்டனர். அவர் விளையாட்டுக்காக அப்படி கூறியிருந்தாலும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடமே கேட்டோம் , ‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு!’ என்று தமிழில் பதில் சொன்னார்கள்.

குழந்தைகள் காட்டிய வீட்டில் நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் ‘ஏனுங்க பெரியவரே இங்க எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வீடெதுங்க’ என்றோம், நம்மை திரும்பிப்பார்த்தவர் ‘’இதானுங்க’’ என்று சொல்லிவிட்டு ஸ்டைலாக ‘உடலை’ திருப்பியபடி மீண்டும் வாசற்படியிலிருந்த புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டார். ஆனால் அவர் தன் கைகளால் புத்தகத்தின் பக்கங்களை திருப்பவில்லை , தன் முகத்தை பயன்படுத்தி திருப்பிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்பது புரிந்தது.

எங்களோடு திரும்பி பார்த்துப் பேசும் போது முகத்தை திருப்பாமல் உடலை திருப்பி பேசியிருக்கிறார். இரண்டு கைகள்-கால்கள் இல்லை! இடுப்புக்கு கீழ் உடலே இல்லை! உலகிலேயே இது போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் மூன்று பேர் மட்டுமே இன்றும் நம்மிடையே உள்ளனர். அதிலும் அறுபது வயதைக் கடந்தும் வாழ்க்கைச்சவாலை எதிர்கொண்டு போராடிவரும் ஒரே இந்தியர் இவர். நான்கடவுள் திரைப்படத்தில் மௌனசாமியாராக வந்து தன் உருட்டும் விழிகளால் மிரட்டியிருப்பார் இந்த 62 வயது அறிமுக நடிகர்!

ச்சே இவர்லாம் வாழ்றதே அற்புதமென நினைத்துக்கொண்டிருக்கையில் கர்நாடக இசையில் பல சாதனைகளை புரிந்து விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இந்த கலைமாமணி!
சிறுவயதில் சமூகத்தையும்,கேலிகிண்டல் செய்பவர்களையும் நினைத்து வருந்தி வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தவரை , அவருடைய தந்தைதான் உற்சாகமூட்டி ஊக்கமளித்துள்ளார். மூன்றரை வயதில் தன் வீட்டுத்திண்ணையில் தனியாக அமர்ந்திருப்பார். பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியர் ஒருவர் பாட்டு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். அங்கே கற்றுக்தரப்படும் பாடல்களை திண்ணையிலிருந்தே பாடிப்பழக ஆரம்பித்தார். இவர் தினமும் பாடுவதை கவனித்த அந்த பாட்டு ஆசிரியர் இவரை அழைத்து தினமும் இசை கற்றுக்கொடுக்க துவங்கினார். தன் 17 வயதில் அரங்கேற்றம். படபடப்போடு மேடையேறிய அந்த இளைஞருக்கு மட்டுமல்ல , அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே தெரியாது இவர் எப்படி பாடப்போகிறார் என்று. பாடி முடித்தார். அரங்கமே அமைதியாக இருந்தது , என்னடா ஒருவருக்கு கூடவா நம் பாட்டு பிடிக்கவில்லை , யாருக்குமே கைத்தட்டணும்னு தோணலையா என நினைத்து கண்கள் கலங்க அமர்ந்திந்தவருக்கு முதல் கைத்தட்டல் ஒலி கேட்டதாம். தொடர்ந்து இரண்டு மூன்று என ஐந்து நிமிடங்கள் கைத்தட்டல்களும் பல ஆயிரம் துளிகள் கண்ணீருமாய் முடிந்தது அந்த அரங்கேற்றம். இவரது திறமை கண்டு அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதற்கு பின் ஏறிய மேடைகளெங்கும் கிருஷ்ணமூர்த்தியின் இசை ராஜ்யம்தான்.

இதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். பல வெளிநாடுகளிலும் இவரது கச்சேரிகள் அரங்கேறியுள்ளது. தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக அவர் விவரிப்பது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையிலேயே (ராஷ்டிரபதி பவன்) பாட அழைத்திருக்கிறார். அது வெகு சில இசைக்கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய மரியாதை. அது தனக்கு கிடைத்ததாக சிலாகித்து கூறினார்.

இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். வந்ததும் அவருக்கு வணக்கம் கூறி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

யாரிவர்கள் என நாங்கள் கேட்க நினைத்தோம். அதற்கு முன் அவரே சொல்லத்துவங்கினார் , ‘’எனக்கு 35 வயதாக இருக்கும் போது , எனக்கு கிடைத்த இசை என்னும் இந்த ஆற்றலை , மற்றவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும், எப்போதும் வீட்டிலேயே நான்கு சுவர்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் நாலு பேருக்கு சங்கீதம் கற்றுத்தந்தால் நன்றாக இருக்குமே என இசை ஆர்வம் உள்ளவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்கத்துவங்கினேன் , இதோ இவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து லீவிற்கு இங்கே வந்திருக்கின்றனர், தினமும் நான் கற்றுத்தரும் பாடங்களை அப்படியே ரிகார்ட் செய்து கொண்டு ஊரில் போய் கேட்டு கேட்டு பயிற்சி பெறுவார்கள்! இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன்!’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது!

2006ல் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார். 2001ல் ஜனாதிபதியிடமிருந்து தேசிய அளவில் மாற்றுதிறன் படைத்தவர்களில் சாதனை புரிந்தவர் என்ற விருதை பெற்றுள்ளார். ஜனாதிபதி மாளிகளையில் பாடும் வாய்ப்பும் கிடைத்து அப்துல்கலாம் முன்னிலையில் பாடி தன் குரலால் அப்துல்கலாமையே இவருக்கு ரசிகராக்கியிருக்கிறார். விருதுகள் வாங்குவதும் பாராட்டுகள் பெறுவதும் அவருக்கு காபி குடிப்பது போலாகியிருக்க வேண்டும். அறை முழுக்கவே விருதுகளாலும் கேடயங்களாலும் வாழ்த்து மடல்களாலும் நிரம்பி வழிகிறது. அத்தனை விருதுகளும் அவரைவிட உயரமானவை.

பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் எடுக்கிறார். தன்னம்பிக்கையைப்பற்றிப் பேச இவரைவிட சிறந்த ஆள் உண்டா?
‘’என்னால் சாதிக்க முடிந்தால் மட்டும் போதுமா என்னை போலிருக்கும் அனைவரும் சாதிக்க வேண்டும் , மற்றவர்களை காட்டிலும் அதிகம் உழைத்து வாழ்க்கையில் எதையாவது நிகழ்த்தி காட்டவேண்டும் என்கிற துடிப்பும் வேகமும் வேண்டும், எந்த சமூகம் நம்முடைய குறையை சுட்டிக்காட்டி கேலி பேசுகிறதோ அதே சமூகத்தில் உயர்ந்த இடத்தில் சாதனையாளனாக உயர வேண்டும் , இந்த உணர்வுகள்தான் என்னை மேம்படுத்துகிறது , இந்த உணர்வுகள்தான் என்னையும் சாதனையாளனாக மாற்றியது, இதைத்தான் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன் , நான் எப்போதும் என்னை குறைவாக நினைத்ததே இல்லை , அல்லது எனக்கு குறைகள் இருப்பதாகக்கூட நினைத்ததில்லை , என்னால் ஒரு காரியம் முடியாவிட்டால் அது யாராலும் செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன், இந்தியாவுக்கு பெருமைத்தேடி தருவதைப் போல ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டி விட வேண்டும் , இசையில் இன்னும் சாதிக்க வேண்டும்! அதற்காகத்தான் இன்றும், எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன்’’ படபடவென சிவகாசி சரவெடியாகப் பேசினார்.

பள்ளிக்கே சென்றிராதவர் , வீட்டிலிருந்தே சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பட்டம் பெற்றுள்ளார். பொழுது போக்கிற்காக சித்ராலயா ஓவியப்பள்ளியில் அஞ்சல் வழியில் ஓவியமும் பயின்றுள்ளார். ஏழு மொழிகள் எழுத படிக்க பேசவும் தெரிந்து வைத்துள்ளார். தன் வீட்டிலேயே குட்டி லைப்ரரியும் வைத்துள்ளார். அவருடைய திரைப்பட அனுபவம் குறித்து கேட்டோம்.

‘’இயக்குனர் பாலா என்னைப்பற்றி அறிந்து கொண்டு ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார், இளையராஜா ஒரு படத்தில் பாடவும் வாய்ப்பளிப்பதாக கூறியிருக்கிறார். பல தொலைகாட்சித்தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தாலும் , உடல் ஒத்துழைப்பதில்லை, நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கிறது , மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது நிச்சயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன், என்னதான் திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் இசைதான் என்னை வழிநடத்தி செல்கிறது, அதுதான் என் உயிர் , அதுதான் எனக்கு எல்லாமே’’ என புன்னகைக்கிறார்.
தன் வீட்டிற்குள் எங்கு போவதாக இருந்தாலும் உருண்டேதான் செல்கிறார். புதிதாக பார்க்கும் நமக்கு மனம் பதட்டமடைகிறது. அவரோ நடக்கும் வேகத்தில் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்கு உருண்டே செல்கிறார். தன் புத்தகங்களை தாழ்வாக வைக்கப்பட்டிருக்கும் அலமாரியிலிருந்து தானே எடுத்து தன் தோளின் உதவியுடன் பக்கங்கள் புரட்டி படிக்கிறார். செல்போன் அழைத்தால் அவரே எடுத்து பேசுகிறார். ஆச்சர்யம்தான்!

‘’எனக்கு இறைவன் அருளால் எந்த குறையுமில்லை , நான் வீழும் போதெல்லாம் தூக்கிவிட என் அண்ணன்கள் இருக்கின்றனர். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கு எப்போதும் உதவியாய் என்னோடு இருக்கும் சீனிவாச ராகவன் இருக்கிறார் , வேறென்ன வேண்டும். சில மாற்றுத்திறனாளர்களை காணும் போது நான் எவ்வளோவோ பரவாயில்லை என்று எண்ணுவேன் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து அவர்களுக்கு தேவையான ஊக்கம் அளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன், அதுவே என்னை இன்னமும் வழிநடத்திச்செல்லும் ஊக்கமாய் இருக்கிறது’’ என பேசும் போதே அந்த ஊக்கம் நமக்கும் கிடைக்கிறது.நன்றி - புதியதலைமுறை

29 comments:

Vijayashankar said...

நல்ல கட்டுரை. அவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.

அவரை பற்றி கோவையில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டுள்ளேன். ஈச்சனாரி கோவிலில் விசேசங்களில் அவர் பாடியதாக நினைவு.

மணிஜி said...

நன்றி அதிஷா!

manjoorraja said...

இடயர்பாளையம் வழியாக வடவள்ளிக்கு பலமுறை சென்றிருக்கிறேன். இவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ம்ம்
ஏற்கனவே இவரைப்பற்றிப் படித்திருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

எறும்பு said...

நல்ல பகிர்வு

நன்றி அ..

வெள்ளிநிலா said...

நான் உயிரோடு இருக்கிறேன் , கிருஷ்ணமுர்த்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்

Unknown said...

ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு!’ என்று தமிழில் பதில் சொன்னார்கள். //

கோயமுத்தூர் தமிழும் கெட்டு போச்சா..
அருமையான ..தன்னம்பிக்கை தரும் பதிவு

Unknown said...

//வெள்ளிநிலா said...
நான் உயிரோடு இருக்கிறேன் , கிருஷ்ணமுர்த்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
//

வழிமொழிகிறேன்...

Unknown said...

நன்றி அதிஷா :)

Unknown said...

நல்ல பதிவு. மிக்க நன்றி.

Ganesan said...

அதி,,

நன்றிகள்.

அக கண் திறக்கும் கட்டுரை.

Sabarinathan Arthanari said...

நல்ல அறிமுகம்

நன்றி

SurveySan said...

Adengappaa. arumayana pagirvu.

VIKNESHWARAN ADAKKALAM said...

//‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு!’ என்று தமிழில் பதில் சொன்னார்கள். //

இங்கயும் உன் குசும்ப காமிச்சிட்டியே மாம்ஸ்...

பதிவு சிறப்பாக பகிர்வு...

Subbaraman said...

நல்ல பேட்டி. இவர் ஒரு அதிசயம் தான்.

GHOST said...

enna solradu, varthye illa great person

இராஜ ப்ரியன் said...

அவரை நான் வணங்குகிறேன். நன்றி தல இதுபோன்று நிறைய பதியுங்கள் ......

தோமா said...

மிக அருமையான கட்டுரை. படித்து முடித்தவுடன் நானெல்லாம் ரொம்ப வேஸ்டா இருக்கேன்னு தோணுது

தஞ்சாவூர்க்காரன் said...

இவரைப் பற்றின செய்தி ஏற்கனவே வந்துவிட்டது. இருந்தாலும் உங்கள் கட்டுரை நலம்.

Paleo God said...

அற்புதமான மனிதர் நன்றி அதிஷா பகிர்வுக்கு..

PPattian said...

பகிர்வுக்கு நன்றி அதிஷா..

நர்சிம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அதிஷா.

Rajeswari said...

நல்ல பகிர்வு..

வாழ்த்துக்கள்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி அண்ணா

YUVARAJ S said...

Manam sorndhu poyi irukkum anaivarum oru nimidal ivarai paarthaal kandippaaga thannambikkai pirakkum.

Gud posting.

visit me at:
http://encounter-ekambaram-ips.blogspot.com

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி அதிஷா.

Unknown said...

Nice To Hear About U...Hats Off to Your Confidence..

Vetirmagal said...

Touching!

Gives a lot of enthusiasm for living under any circumstances.

Thanks for bringing him to lay persons like me.
God bless him.

அன்புடன் அருணா said...

உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது போலிருக்கு.பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி அதிஷா!