Pages

13 March 2010

மஞ்சள் கேக் மகிமைஜாதுகுடா. ஜாது என்ற சொல்லுக்கு இந்தியில் மாயம் என்று பொருள். குடா என்றால் மலையாகத்தான் இருக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜாதுகுடா என்னும் அந்த மலை கிராமமும் உண்மையிலேயே மாயமலைதான். பசுமை மலைகள் அழகான வயல்கள். அருகே சின்னதும் பெரிதுமாக குடிசைகள். இயற்கையோடு இயற்கையாய் வாழுகிற மக்கள். தத்தி தத்தி மலை காடுகளினுடே ஓடி விளையாடும் பிள்ளைகள். வருடத்திற்கு நான்கு திருவிழா. அவர்களுக்கென பிரத்யேக கலைகள். உரிமையாளர்கள் இல்லாத நிலப்பரப்பு. மலையும் மலை சார்ந்தும் மகிழ்ச்சியான வாழ்க்கை. எல்லாமே பாஸிட்டிவ், இதுதான் ஜாதுகுடா. இப்போதல்ல. எப்போதோ..


‘’ஒரிடத்தில் நிலையாய் இருக்க விடாமல் அனுதினமும் விரட்டி அடிக்கிறாயே இறைவா இந்த அலைச்சலின் முடிவெப்போது’’ ஜார்கண்டின் பூர்வ குடிகளான ஆதிவாசிகளின் நாட்டுப்புற பாடல் இது. அதன் பின் ஒலிக்கும் சோகமான வரலாறு யாருக்கும் தெரியாது. இவர்களுக்கென தனியாக எந்த வரலாறும் எழுதப்பட்டிருக்கவில்லை. அவர்களுடைய வரலாறெல்லாம் வழிவழியாய் பாடுகிற இந்த தெம்மாங்கு பாடல்களில்தான். எப்போதும் அதிகார வர்க்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட வரலாறு. ஒவ்வொரு முறை அகதிகளாக இடம்பெயரும் போதும் விசும்பி அழும் குழந்தைகளின் கண்ணீரால் எழுதப்பட்ட வரலாறு.


தோல் நோய்கள்,டிபி,மலட்டுத்தன்மை,புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு கால் கைவிரல்கள் அதிகமாகவும் குறைவாகவும் இருப்பது , உடலின் ஒருபக்கம் மட்டும் வளர்ச்சி, குழந்தைகளுக்கு மூளை குறைபாடு, கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு , குழந்தைகள் இறந்து பிறப்பது, புற்றுநோய்,காச நோய், வாதம், தோல் நோய்கள், புற்றுநோய் இன்னும் இன்னும் ஏராளமான அறியப்படாத நோய்கள். இத்தனை நோய்களும் ஹிரோசிமா-நாகசாகியில் அணுகுண்டு வெடித்த பின் அதில் தப்பிப் பிழைத்த மக்களுக்கு ஏற்பட்ட பின்விளைவுகள். ஜப்பானுக்கு ஹிரோசிமா இந்தியாவுக்கு ஜாதுகுடா. ஆனால் அங்கு யாரும் இதுவரை அணுகுண்டு வீசியிருக்கவில்லை.


‘அட நீங்க வேறங்க , அந்த ஊர்க்காரங்க கிட்ட குடிப்பழக்கம் ஜாஸ்தியாகிருச்சு , அப்புறம் ரொம்ப அசுத்தமான இடங்கள்ல வாழ்றாங்க, அப்புறம் வியாதி வராம என்ன பண்ணும் , ஆ ஊனா எங்களையே குத்தம் சொல்றதே இந்த மக்களுக்கு பொழப்பா போச்சுங்க’’ அரசு தரப்பிலிருந்து வந்த பதில் இது. அரசுக்கு உண்மையான காரணம் தெரிந்திருந்தது. ஆனால் அதை ஒப்புக்கொள்கிற தைரியம் இல்லை.


யுரேனியம் என்றால் என்னவென்று தெரியுமா? அணுசக்திக்கு ஆதாரமான மிக முக்கிய எரிபொருள். மிகமிக விலை உயர்ந்த கனிமம். அதன் மூலக்கனிமம் மஞ்சள் கேக் என்று அறியப்படுகிறது. அது ஜாதுகுடாவின் மலைபகுதிகளுக்குள் நிரம்பி இருந்தது. யுரேனியம் மட்டுமல்ல இன்னும் பல அரிய கனிமங்கள் கொட்டிக்கிடந்தது. பழங்களும் காய்கறிகளும் உண்டு வாழும் ஆதிவாசிகளுக்கு அது எவ்விதத்திலும் உதவவில்லை. உண்மையில் அது அம்மக்களுக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளைத்தான் கொண்டு வந்து சேர்த்தது. முதலில் பிரிட்டிஷ் காரர்கள் வந்து இடம்பெயர சொன்னார்கள். இடம்பெயர்ந்தனர். அவர்களுடைய நிலத்திலிருந்து தாமிரம் எடுக்கப்பட்டது. தாமிரத்தோடு வெளியேறிய யுரேனியத்தினை பிரிட்டிஷார் அறிந்திருக்கவில்லை. அந்த மக்களும்!. அந்த மஞ்சள் கேக் வெளியாக தொடங்கியபோதே அந்த இனத்தின் அழிவும் தொடங்கிவிட்டது. தாமிர சுரங்கத்தின் வழியாக செல்லும் கர்ப்பிணி பெண்களுடைய கருக்கலைந்தது. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். அந்த மலையில் ஏதோ சாத்தான் அமர்ந்திருப்பதாய் எண்ணினர். அந்த சுரங்கம் மலைக்கு செல்லும் முக்கிய சாலையில் இருந்தது. மலையில்தான் அவர்களுடைய பிழைப்பு.
பிரிட்டிஷ் காரர்கள் அங்கிருந்து போன பின் தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாய் எண்ணினர் ஆதிவாசிகள். ஆனால் வல்லாதிக்கம் மீண்டும் இந்தியா என்கிற பெயரில் மீண்டு உள் நுழைந்தது. இந்த முறை யுரேனியத்தையே குறிவைத்தனர். யுரேனிய சுரங்கங்களில் போதிய பாதுகாப்பின்றி ஆதிவாசி இளைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யுரேனிய கதிரியக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஊருக்குள் சென்றனர். சென்ற இடமெல்லாம் பாதிப்பு.


யுரேனியத்தை அப்படியே நிலத்தினடியிலிருந்து வெட்டி எடுத்து விட முடியாது. சில நூறு டன் மண்ணைத்தோண்டினால் சில நூறு கிலோ யுரேனியம் கிடைக்கும். கிடைக்கும் மண்ணை கழுவி சுத்தம் செய்து இன்னபிற தொழில்நுட்ப வேதியியல் வேலைகள் பார்த்தால் மட்டுமே யுரேனியம் மஞ்சள் கேக்காய் மாறும்.


வேதியியல் வேலைகள் பார்க்கும் போது வெளியேறும் கழிவு நீரை அகற்ற இடம் வேண்டுமே!. ஆதிவாசிகளே வேறெங்காவது போய் குடியேறுங்கள். விவசாய நிலங்களில் ஒரு அணை உருவாக்கப்பட்டது. அந்த அணையில் கதிரியக்க கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. மழைக்காலங்களில் அந்த நீர் மழைநீரோடு ஊருக்குள் புகுந்து விடும். மக்களுக்கு அப்போதும் தெரியாது யுரேனியம் கொல்லும் என்பது. கொன்றது. மேலே சொன்ன உடல்நலக்குறைபாடுகள் அதிகரித்தன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசிடம் முறையிட்டன.


பாபா அணுமின் ஆராய்ச்சி நிறுவனத்தின் அப்போதைய தலைவரோ ‘’உங்கள் மனைவியோடு கட்டியணைத்து படுத்திருக்கும் போது உங்கள் மனைவியின் உடலிலிருந்து உங்கள் உடலுக்கு பாயும் கதிரியக்கத்தைவிடவும் ஜாதுகுடா கழிவுநீர் குட்டையில் குறைவு, அதனால் அது மக்களுக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது’’ என்றார். அலட்சியம் கொடியது.


யுரேனிய சுரங்கங்களில் வேலை பார்ப்பவருக்கு பாதுகாப்பில்லை. கழிவுநீர் குட்டைக்குள் கால்நடைகளும் குழந்தைகளும் விளையாடினர். நிலத்தடி நீரும் , ஆற்று நீரும் பாதிக்கப்பட்டது. மீன்கள் இறந்து மிதந்தன. அதை தடுக்க போதிய பாதுகாப்பில்லை. மழைநீரோடு கலந்து வரும் கதிரியக்க கழிவுகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. இது போதாது என்று அந்த கழிவு நீர் குட்டையில் மைசூரிலிருந்தும் ஹைதராபத்திலிருந்து அணு உலைக்கழிவுகள் கொட்டப்பட்டன. யுரேனிய மஞ்சள் கேக்குகள் போதிய பாதுகாப்பின்றி சாலைகளில் உடைந்த பேரல்களில் கையாளப்பட்டன. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டது. பெண்களுக்கு கருக்கலைந்து போவது சகஜமாகவிட்டது. கிராமத்திலிருக்கும் ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கு ஏழு முறை எட்டு முறை கருக்கலைந்து போக தொடங்கிவிட்டது. குழந்தைகள் அங்கஹீனத்துடன் பிறந்தனர். இளமையிலேயே பலருக்கும் மரணம் சம்பவித்தது. அரசு அறிக்கைகாளால் ஆறுதல் கொடுத்தது. எல்லாமே மாறிவிட்டது.


மக்கள் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. மக்கள் யுரேனிய சுரங்கத்தை மூடுமாறு அரசை வற்புறுத்தினர். ஆனால் அரசு வேறு திட்டம் வைத்திருந்தது. அது மற்றுமொரு கழிவுநீர் அணைக்கட்டை கிராமத்தின் இன்னொரு பகுதியில் கட்டத்துவங்கியது. நிலைமை மேலும் மோசமானது இப்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர். சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் பலர் போராடினர். வல்லாதிக்கம் சிரித்தது. 1998ல் புத்தர் மீண்டும்  சிரித்தார். ஜாதுகுடா யுரேனியத்தில் அணுகுண்டு வெடித்தார். இந்திய தேசியம் தலைநிமிர்ந்தது. புத்தரின் தேசமான ஜாதுகுடாவிலோ புத்தரின் ஆன்மா கதறி அழுதது. போக்கிடமில்லாத அந்த மக்கள் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டேதான் போனது. அரசும் மக்களை காப்பாற்றுகிறேன் , அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டித்தருகிறேன் , சாலை அமைக்கிறேன் என்று ஏதேதோ செய்து பார்க்கிறது. அங்கே நிகழும் மரணங்களை யாராலும் மூடி மறைக்க இயலாது. இப்போதும் ஜாதுகுடாவின் யுரேனிய சுரங்கங்களுக்கு அருகில் குழந்தைகள் சுள்ளி பொறுக்கிக்கொண்டும் , சுற்றிக்கொண்டிருக்கின்றனர். அன்றாடம் யாராவது ஒருவர் காரணமின்றி இறந்தபடி இருக்கின்றனர்.
 


விஞ்ஞானிகள் இது குறித்து அணுசக்திக்கு சாதகமான புள்ளிவிபரங்களை அடுக்கலாம். புரட்சியாளர்கள் எதிரானவற்றை கொடுக்கலாம். பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி கடைநிலை மக்களே. என்ன செய்யப்போகிறோம் நாம் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இது இந்தியாவில் அன்றாடம் நிகழும் சக பிரச்சனைகளின் ஒரு துளி. இதைப்போல இன்னும் எத்தனையோ அறியப்படாத நிகழ்வுகள். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு மக்கள் கூட்டம் தன் வாழ்விடத்தினை இழந்து அகதியாகவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டோ கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கும். நமக்கு மிக அருகிலிருக்கும் கொடைக்கானலில் சமகாலத்தில் நிகழ்ந்த மெர்க்குரி தொழிற்சாலை பிரச்சனை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.


மேலே குறிப்பிட்ட ஜாதுகுடா பிரச்சனையை கூட புத்தர் அழுதுகொண்டிருக்கிறார் என்னும் டாகுமென்டரி பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அணுகுண்டு வெடித்ததால் உண்டாகும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஊடகங்கள் ஏனோ இது போன்ற நிகழ்வுகளில் வாய் மூடி மௌனமே சாதிக்கின்றன. நாமும் கூட அணுசக்தி முதலான நாட்டின் மிகமுக்கிய பிரச்சனைகளில் இதே கள்ள மௌனத்தையே தொடர்கிறோம்.


ஜாதுகுடா குறித்த டாகுமென்டரி பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கடுமையான மன உளைச்சல். மனமெங்கும் குற்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. உருத்தலாய் உணர்கிறேன். அந்த மக்களின் கவலைகளுக்கு பிரதானமான காரணகர்த்தா வேறு யாருமல்ல நான் மட்டுமே என்பதாய் உணர்கிறேன்.


இன்று நம்மால் மின்சாரமின்றி ஒரு விநாடி கூட இருக்க முடியாது. தினமும் இரண்டு மணிநேர கட்டாய மின்தடை குறித்து பெரிதாய் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிக்கு பின்னாலிருக்கும் சோகமும் நாம் அறியாதவை அல்ல. அதை கண்டும் காணதவர் போல கிடைத்த்தையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கிறோம். வேறு வழியில்லை. வசதிகளுக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம். கணினிக்கு கூட கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வசதி எத்தனை உயிர்களை பலிகேட்டாலும் அதை வழங்கிவிட தயாராயிருக்கிறோம். இதையெல்லாம் மாற்றிவிட முடியாதா என எப்போதாவது ஏங்குகிறோம். ஆனால் பிரதனாமாக நம் குடும்பமும் வாழ்வியலும் அது சார்ந்த சமூகமும் இன்னபிறவும் இன்றியாமையாததாய் இருக்கிறது. இதன் மத்தியில் அப்பாவிகளின் மரண ஓலம் சாலையில் கடந்து செல்லும் வாகனத்தின் ஹாரன் ஒலிக்கு ஒப்பானவையாக கடந்து செல்கிறது.


போபால் விஷவாயு கசிவு குறித்து நம் அனைவருக்குமே தெரியும். யுனைடெட் கார்பைட் நிறுவனம் இதுவரைக்கும் கூட இந்தியாவை ஏமாற்றி சுதந்திரமாய் அலைவதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்று வரை அந்த மக்களுக்கு உரிய நஷ்ட ஈடோ , அந்த நிறுவனத்திற்கு தண்டனையோ கிடைத்த பாடில்லை. இதோ இப்போதும் கூட மீண்டும் இந்தியாவில் தன் பெயரை டவ் கெமிக்கல் என்று மாற்றம் செய்து கொண்டு மீண்டும் தொழிற்சாலை அமைக்கும் வேலையில் மும்முரமாய் இருக்கின்றனர் போபால் அரக்கர்கள். நம்மால் என்ன செய்து விட முடியும். ஜனவரியில் சென்னையில் நடந்த மார்கழி இசை கச்சேரிகளுக்கு முக்கிய ஸ்பான்சர் யார் தெரியுமா டவ் கெமிக்கல்ஸ். சரிகமபதநி என்று தொடை தட்டி பாட்டு கேட்பதை தவிர!


இடது சாரிகளாக அறியப்படும் புரட்சிக்காரர்கள் உட்பட பலரும் சமூகத்தில் நிகழும் இது மாதிரியான பிரச்சனைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அவர்களிடம் அதற்கான தீர்வுகள் இல்லை. மீண்டும் பூஜ்யத்திற்கே நம்மை திருப்பி அனுப்புவதை தவிர நம்மிடம் வேறு வழிகள் இல்லை. பிடி கத்திரி தொடங்கி அணு சக்தி பிரச்சனை வரைக்குமான தொடரும் சோகங்களை மௌனத்தோடு ஏற்று கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. நாளைக்கே கூடங்குளம் அணுமின் நிலையத்தால் நேரடியாக நாமும் பாதிக்கப்படலாம். அப்போதும் அதே மௌனத்துடன் அதையும் ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை நமக்கு நமது வசதிகள் பிரதானமாக்கப்பட்டுவிட்டன.


****************அந்த டாகுமென்டரி திரைப்படம் - நன்றி - யூடியுப்

பாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6