29 April 2010

சபாபதி - 1941
தமிழில் வெளியான முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் சபாபதியாகத்தான் இருக்க வேண்டும். அதற்குமுன் வெளியான திரைப்படங்களை இதுவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அப்படி எந்தப்படமும் டிவிடியாக விற்பதாகவும் தெரியவில்லை. மேல் விபரங்களும் கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவலாம்.


1941ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது (நன்றி wiki). படத்தின் நாயகன் 'முட்டைக்கண்' டி.ஆர்.ராமச்சந்திரன் , 15 வயது பையனைப்போல் இருக்கிறார் ( வயது 12-13 இருக்கலாம்). படத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனாக நடித்துள்ளார். இவர் அன்பே வா படத்தில் சரோஜாதேவிக்கு தந்தையாக நடித்திருப்பார். இவர் இந்த படம் வெளியான காலத்தில் மிகபெரிய நடிகராம். அப்போதெல்லாம் அதிகம் அறியப்படாத எம்.ஜி.ஆர் , டிஆர் ராமசந்திரனுக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்றே அழைக்கவும் டைட்டிலில் போடவும் சொல்வராம்!


படத்தின் நாயகி ‘லக்ஸ் ஸோப்’ பத்மா (அந்தகாலத்து லக்ஸ் விளம்பரமாடல் போல!). அவருக்கும் 12 அல்லது 13 வயதுதான் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவின் மிகமிக இளம் நாயகி. பாலர் பள்ளியிலிருந்து பிடித்துவந்திருப்பார் போலிருக்கு! இவர் 1940களின் துவக்கத்தில் வெளியான பல படங்களில் நடித்தவராம்.


படத்தின் பெரும்பகுதியை நாயகனும் அவனோடு இருக்கும் துணை நாயகனுமே பகிர்ந்து கொள்கின்றனர். அண்மையில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் 35 வயது விஜய் பிளஸ்டூ படிப்பதாய் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதற்கே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த திரைப்படத்தின் நாயகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். நம்புங்கள் சத்தியமாக ஆறாம் வகுப்பு. அவரோடு படிக்கும் சக மாணவனுக்கோ திருமணமாகி மூன்று குழந்தைகள். அவர்கள் இருவரைத்தவிர மற்றவரெல்லாம் நிஜமான ஆறாம்வகுப்பு மாணவர்களைப் போல சின்னதாக உள்ளனர்.


வாத்தியார் இல்லாத நேரத்தில் அவரை கார்ட்டூன் போல வரைந்து வைத்து கலாய்க்கும் இதுவரை தமிழில் வெளியான பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு இந்த படம் அரிச்சுவடி. முதல் காட்சியே அதுதான். வாத்தியாருக்கு மீசை வரைதல் , புத்தகத்தின் பக்கங்களை கிழித்து வைத்து விளையாடுவது மாதிரியே நிறைய சேட்டைகள் பிளஸ் குறும்புத்தனங்களுடன் ஹீரோ ஓப்பனிங். ஓப்பனிங் சாங் கூட உண்டு. (எந்த கலர் தமிழன்களுக்கு எந்த மெசேஜூம் இல்லை )


படத்தின் இரண்டாவது நாயகன் இன்னொரு சபாபதியாக வரும் காளி.என்.ரத்தினம். படுபயங்கர சேட்டை படம் முழுக்க. அதிலும் பெயர் குழப்பம் கூடுதல் சேட்டை. அவருடைய முகம் ஒவ்வொரு காட்சியிலும் அஷ்டகோணலாக மாறும் போதும் ஏதாவது சில்வண்டித்தனமான வேலைகள் செய்யப்போகிறார் என்பது புரிந்து விடுகிறது. அதற்கு பின் வரும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு உத்திரவாதம். அவருக்கு ஜோடியாக வரும் பெண்ணும் (டி.பி.ராஜகாந்தம்) , இருவருக்குமிடையேயான காதலும் கனக்கச்சிதமான காமெடி கலக்கல். பிற்காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் ஜோடிக்கு இணையாக பேசப்பட்ட ஜோடியாக காளிரத்னம்-ராஜகாந்தம் ஜோடி இருந்துள்ளது.


நாயகன் சபாபதிக்கு (டி.ஆர்.ராமச்சந்திரன்) பள்ளியில் படிக்கும் போதே திருமணம். பின் பாஸானால்தான் சோபனம்!(முதலிரவு) என கன்டிஷன் போட்டுவிடுகிறார் தந்தை. பெண்ணை அவரது தாயார் வீட்டில் விட்டுவிட்டு சோபனம் பண்ணாத சோகத்தில் அலையும் நாயகன். அவன் தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு செல்ல அங்கே நடக்கும் கூத்துகள்.. அவன் கடைசியில் பாஸாகி அப்பாவின் ஆசையை தீர்த்தானா? அல்லது பாஸாகமலேயே சோபனம் பண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்தானா என்பதை சின்னத்திரையில் காசு கொடுத்து டிவிடி வாங்கி காண்க!


படத்தில் தமிழாசிரியாக கே.சாரங்கபாணி. அந்த காலகட்டத்தில் தமிழாசிரியர்கள் நடத்தப்பட்ட விதமும், அவர்கள் எப்படி ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டனர் என்பதும் கதையோட்டத்திலிருந்து தெரிகிறது. ஆங்கிலம் படிப்பதும் பேசுவதுமே உயர்சிந்தனை என்கிற சமூக மாற்றம் தமிழகத்தில் வேரூன்றிய காலகட்டமாக இருக்க வேண்டும்.
படத்தில் எழுபது வருடத்திற்கு முந்தை நகரத்து பணக்காரர்களின் வாழ்க்கைமுறை பதிவாகியிருக்கிறது. படத்தின் நாயகன் சபாபதியை சபாபதி முதலியார் என்கிறார் அவருடைய ஆசிரியர். 12 வயது சபாபதி முதலியாரை மரியாதையோடு அப்பா என்றழைக்கிறார் , அவனோ வீட்டு வேலைக்காரனான சபாபதியை டேய் இங்க வாடா.. என்று அதட்டுவதும் அவனை அடிப்பதுமாக.. பணக்காரர்களின் வெட்டிபந்தா, ஓவர் சீன் என பல காட்சிகளும் வயிறை புண்ணாக்குகிறது. மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் முன் வெட்டிப்பந்தா பண்ண அந்த அமெரிக்கனோ இந்தியானோ என்சைக்கிளோபீடியாவை எடுத்துவா என்று அதட்டும் காமெடி விவேக்கை நினைவூட்டியது.


அந்த காலத்தில் பிராமணர்களுக்கென தனியாக ஹோட்டல்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதைவைத்து காமெடி செய்திருப்பார்கள். நமக்கு தகவல். இப்படி படம் முழுக்க 1941ஆம் ஆண்டு குறித்த சின்ன சின்ன தகவல்கள் கசிகின்றன.


அந்த காலத்தில் தேர்தலில் போட்டியிடுபவருக்கு யார் வேண்டுமானாலும் ஓட்டுப்போடமுடியாது. பட்டம் படித்தவர்களும் பணக்காரர்களும்தான். தேர்தலில் போட்டியிடும் சபாபதியின் தந்தையார் அவனுடைய வாத்தியாரிடம் ஓட்டு போட சொல்லி பணம் கொடுக்கிறார். அவரோ ஓட்டுக்கு பணமா என்று முதலில் மறுத்தாலும் , பையனோட டியூசன் பீசா நினைச்சுக்கோங்க என்றதும் மனைவியின் அதட்டலுக்கு பயந்து வாங்கிக்கொள்கிறார். இது தரும் தேர்தல் தகவலை நீங்களாக புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் அதட்டலுக்கு பயப்படுவது 1941லிருந்தே இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
படத்தின் கதை தமிழ்நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார். அந்தக்காலத்திலேயே முதலிரவை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். இது அவருடைய மேடை நாடகத்தின் திரைவடிவமாகும்.


இசை யாரென்று தெரியவில்லை, குத்துப்பாட்டு கிடையாது, ஆனால் நாதஸ்வரம்,கர்நாடக இசை முதலான தத்தரீனாவுக்கு கியாரண்டி! நகைச்சுவை படங்களுக்கே உரிய டொய்யாங் டொய்யாங் படம் முழுக்க! சரஸ்வதி வாத்ய கோஷ்டிக்கு ஒரு ஷோட்டு! படத்தில் பல பாடல்கள் எண்ணிக்கை நினைவில்லை. காமெடி பாடல்களும் உண்டு.. கூர்ந்து கேட்டால் தமிழறிவு பெருகும்.. சுத்ததமிழில் காமெடி பண்ணலாம்!


படத்தின் சில காட்சிகளில் அந்தக்கால சென்னை வருகிறது. அதிக கட்டிடங்கள் இல்லாத ஓரளவு சுத்தமான சென்னை. இப்படி பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தால்தான் உண்டு.


ஏவிஎம் தயாரித்த இப்படத்தை இயக்கியவர்கள் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மற்றும் ஏ.டி.கிருஷ்ணசாமி. படத்தை இயக்கியதும் திரைக்கதை எழுதியதும் முழுக்க முழுக்க ஏ.டி.கிருஷ்ணசாமிதான் என்றும் சொல்லப்படுகிறது. (இவர் அறிவாளி,மனம் ஒரு குரங்கு, வித்யாபதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்)


படத்தின் பல இடங்களில் உலகப்போர் குறித்த வசனங்கள் இடம் பெறுகிறது. ஆனால் போரின் ஆரம்பகட்டம் என்பதால் அதன் தாக்கம் தமிழ்நாட்டை அடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப்படத்தின் மொத்த பட்ஜட் 40000! ஹீரோவின் சம்பளம் மாதத்திற்கு ரூ.35! ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தப்படம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


அந்தகாலத்து நகைச்சுவைக் காட்சிகளுக்கு சில இடங்களில் சிரிக்க முடியவில்லை என்றாலும் , பல காட்சிகள் நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு. இன்றைய படங்களின் புதிய மொந்தையில் வரும் பழைய கள் படம் முழுக்க! அதற்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம்.

24 comments:

♠ ராஜு ♠ said...

என்னய்யா எல்லாரும் இப்பிடி கிளம்பீட்டீங்க..!

தொடர்புடைய மற்றோர் பதிவு.

http://www.aathi-thamira.com/2010/04/blog-post_02.html

ஸ்ரீதர் நாராயணன் said...

அது ஆறாம் வகுப்பு இல்லை. Sixth form என நினைக்கிறேன். ஆறாம் வகுப்பு என்றால் First form அந்த காலத்தில். சரிபார்க்கவும்.

மேலும் நாயகனுக்கு 12-13 வயதாக காட்ட மாட்டார்கள். சாரதா சட்டம் அமலில் இருந்த காலம். Sixth form என்பது கிட்டத்தட்ட SSLCக்கு முந்தைய படி. அதனால் 18 வயதுக்கு மேல் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.

சில நல்ல நகைச்சுவை காட்சிகள் உண்டு. ‘Turn the table' என்பதை லிடரலாக புரிந்து கொண்டு மேஜையை தலைகீழாக மாற்றுவது, காளி என். ரத்தினத்திற்கு 1 ரூபாய அபராதம் விதிப்பதும் தொடர்ந்து ஒரு ரூபாய் எல்லாரிடமும் பயணப்படுவது ஞாபகம் இருக்கிறது.

டி ஆர் ராமசந்திரன் பின்னர் சிவாஜியோடு இணைந்து ‘முதல் கதாநாயகனாக’ கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி படத்தில் பட்டையை கிளப்பியிருப்பார். ஆனால் படம் முடிவடைவதற்குள் சிவாஜிக்கு பாப்புலாரிட்டி அதிகரித்து அவர் பாத்திரம் பெரிதாக்கப்பட்டிருக்கும்.

காளி என். ரத்தினம், பி டி சம்பந்தம் போன்றோர் பல நடிகர்கள், நடிகைகளை திரைக்கு பின்னர் வளர்த்தெடுத்த பிதாமகர்கள் என்றும் படித்திருக்கிறேன்.

நல்ல பதிவு :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஓவரா படம் பார்த்துட்டீங்கனு நினைக்கிறேன்.. ;)

பார்வையாளன் said...

அருமையான பதிவு... நானும் இந்த படத்தை ரசித்து இருக்கிறேன்.... வீட்டில் பெரியவர்களுடன் பார்த்தால் , அவர்கள் தரும் கூடுதல் தகவலுடன் ரசிக்க முடியும்... டி வி டி, எங்கு கிடைக்கும் ...?

அக்கபோர் பதிவுகளையும், போலி சமுக அக்கறை பதிவுகளையும் படித்து அலுத்து போன எனக்கு உங்கள் பதிவு ஆறுதலாக இருந்தது... நன்றி ( உண்மையிலேயே நெஞ்சார நன்றி சொல்கிறேன்.. )

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸ்ரீதர் சொல்வது போல அது ஆறாவது வகுப்பு அல்ல, ஆறாவது ஃபார்ம். (பத்தாம் வகுப்பைப்போல என்று நினைக்கிறேன்)

எங்கள் குடும்பப்படம் இது :-) எவர்கிரீன். விமர்சனமும் தகவல்களும் ரொம்பப்பிடித்திருந்தது..

பார்க்க..
http://www.aathi-thamira.com/2010/04/blog-post_02.html

Manickam said...

6th form என்பது 11வது வகுப்பு.1978வரை 11வதில் தான் SSLC தேர்வு எழுதவேண்டும்.

கே.ரவிஷங்கர் said...

அதிஷா,
சபாபதி சாமுவேல் லவ்வர் என்பவரின் ”Handy Andy" கேரகடரின் தழுவல் என்று என் அண்ணன் சொல்லுவார்.(நான் படித்ததில்லை.)
இவரின் ”வைகுண்ட வைத்தியர்” “சோம்பேறி ச்குனம் பார்த்தல்” போன்ற நாடகங்களைப்பற்றியும் என் அண்ணன் சொல்லுவார்.

கேடிவியில் அடிக்கடி recycle ஆகிக் காட்டப்படும் படம் இது.தவறாமல் பார்ப்பேன்.”குப்குப்குப்”தான் சிரிப்பு வரும் நகைச்சுவை.பரத நாட்டியத்தை “தேவடியா கச்சேரி” என்பதாக என்று ஒரு வசனம் வரும்.

பழைய படங்களில் படங்களை மீறி நான் ரசிப்பது:-

”டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ரீல் ஓடும் சத்தம்.ஓவர் ரீரிகார்டிங் இல்லாத அமைதி,கேரக்டர் வெகுளித்தனம்,
ஸ்கூல் டிராமா போல் வசன ஒப்புவித்தல்,பின்ன்ணியில்ஹார்மோனியம்/பு.குழல்வாசிப்பு,அந்த கால சொற்கள்....

ஜில்தண்ணி said...

வாய்ப்பே இல்லை
சுதந்திரதிற்க்கு முன் வந்த படம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கட்டுரையில் ரயில் ஓடும் காட்சியை எழுதி அதைப் படிப்பாரே..,

இன்றைய மொக்கை ராசுகளின் முன்னோடி அவர்.

அதிஷா said...

அந்த படத்தில் பள்ளியிலும் சபாபதி படிக்கும் வகுப்பிலும் காட்டப்படும் குட்டியூண்டு பசங்களை மனதில் கொண்டு தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். தவறை சுட்டிக்காட்டிய அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.

இளமுருகன் said...

நல்ல விறு விறு நடையில் பழைய பட விமர்சனம் good

பூந்தளிர் said...

ரயில்வண்டி வியாசம் இன்னும் எனக்கு மறக்கவில்லை ; 10 முறை பார்த்த ஒரே தமிழ்ப் படம்.

அதிஷா said...

@கே.ரவிஷங்கர்.

சபாபதி ஹேண்டிஏன்டி கனக்சன் பற்றி ரான்டர் கை சில வருடங்களுக்கு முன் ஹிந்துவில் எழுதியிருந்தார். (BLAST FROM THE PAST - FRIDAY REVIEW)

Sangkavi said...

அருமையான பதிவு...

~~Romeo~~ said...

இவ்வளவு சீக்கிரத்தில் விமர்சனமா ??

Palay King said...

விட்டுப்போன குறிப்பு ; இத்திரைப்படம் ஓடும் மெலோடி தியேட்டரின் மூன்றாம் வகுப்பு பத்து ரூபாய் டிக்கட்டில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு கையில் லேப்டாப் சகிதம் இந்த விமர்சனத்தை அடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் இணையத்தில் வெளியாகும் முதல் விமர்சனமும் இதுவே. ஏர்பெல் கனெக்சன் படுமட்டமாக இருப்பதால் இது நான்கைந்து நாட்கள் கழித்தும் வெளியாகலாம்.

வெற்றி said...

சூப்பர் காமெடி படம்..அடிக்கடி கே டிவியில போடுவாங்க..!

SanjaiGandhi™ said...

//அதிஷா, April 30, 2010 11:40 AM

@கே.ரவிஷங்கர்.

சபாபதி ஹேண்டிஏன்டி கனக்சன் பற்றி ரான்டர் கை சில வருடங்களுக்கு முன் ஹிந்துவில் எழுதியிருந்தார். (BLAST FROM THE PAST - FRIDAY REVIEW)
//

தொரைக்கு ஹிண்டு தான் சோர்ஸ் போல :))பதிவை பத்தி தான் எல்லாரும் சொல்லிட்டாங்களே.. நானும் முழுசா படிச்சா சொல்றேன் :)

raashidsite said...

இது போன்ற அரிய பொக்கிஷங்களை பற்றி விமர்சனம் செய்ய ஏன் பார்க்கவே ஒரு அசாதாரணமான (extrodinary) ரசனை வேண்டும். உம்மை பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
1987 ல் ஒரு முறை இந்த திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. உபயம்: தூர்தர்ஷன்

இரண்டு நகைச்சுவை காட்சிகளை இப்போதும் நினைவில் வைதிருக்கிறேன்.
1. வேலைக்கார சபாபதியிடம் ரெண்டு சோடா உடைத்து கொண்டுவா என்றதும் சோடா பாட்டில்களை உடைத்து நொறுக்கி கொண்டு வருவார்.
2. கடிகாரத்தில் அலாரத்தை திருகிவிட்டு அந்த சத்தத்தை மறைக்க பாடுபடுவதும் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை

இது போன்ற பொக்கிஷங்களை தேடி எடுத்து ஞாபகப்படுத்தி கொண்டே இருங்கள்

ராஜா said...

அந்த 3 - 4 பக்கங்களுக்கு சிக்கு.... புக்கு... என எழுதும் பயண கட்டுரை நான் விழுந்து விழுந்து சிரித்த... ரசித்த... காட்சி படம் முழுக்க வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லை.....

Anonymous said...

http://www.tamilflix.net/2010/04/24/sabapathy-tamil-movie-watch-online/ this is the link to sabapathy online

Balan said...

http://www.tamilflix.net/2010/04/24/sabapathy-tamil-movie-watch-online/ watch full movie in the above link

Manion said...

http://www.moserbaerhomevideo.com/title-search.htm?stimes=OK&language=10&CDTYPE=&category[]=ALL&searchin=MOV&keyword=Sabhapathi&x=68&y=24&sbox=OK

DVD and VCD available @ Moserbaer

what about Cho's Mohammad Bin Thuglak
it's available @ http://www.thuglak.com/thuglak/product_info.php?cPath=2&products_id=47

but the price is some what high!

செல்வம் said...

சன் டி.வி இந்தப் படத்திற்கு தற்போது சிங்கத்திற்கு நிகராக இல்லாவிட்டாலும், நல்ல விளம்பரம் செய்து நிறைய முறை போட்டுள்ளது.சன் டி.வியின் ஆரம்பக் கால வெறியனாக நான் மாறியதற்கு இது போன்ற திரைப்படங்களும் ஒரு காரணம்.

படம் உண்மையிலேயே கல்க்கல். என் டிவிடி தொகுப்பில் இப்படம் எப்பவும் இருக்கும்