Pages

18 May 2010

அர்த்தராத்திரி பயங்கரம்!



அன்றாடம் எந்தக் கிழமை வந்தாலும் செயற்கரிய சனிக்கிழமை எப்போது வரும் என காத்திருந்த நாட்கள் அவை. சனிக்கிழமை வந்தால் சனிபகவான்,எள்ளுப்பிரசாதம்,எண்ணெய் என்று ஒன்பது முதல் 108 முறை சுற்றி சுற்றி வந்தவன் , கருடாழ்வாருடன் கோவிந்தம் பாடியவன் வாழ்வில் வசந்தம் வீசியதே இந்த சனிக்கிழமைகளில்தான். அந்தப்படங்கள் அவன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றபோகின்றன என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த புதுவசந்தம் தென்கிழக்கு சீமையிலிருந்து சீறிக்கொண்டு வந்தது ராஜூ வடிவத்தில்..!


நண்பன் ராஜுதான் அதை முதன் முதலில் அவனிடமும் மற்ற நண்பர்களிடமும் சொன்னான். யாருமே நம்பவில்லை.


‘அடப்போடா சன்டிவில அப்படிலாம் போடமாட்டாங்க’.


‘நிஜமா போடறாங்கடா , ஆனா சன்ல இல்ல சூர்யால! அதுவும் ஷகிலா நடிச்ச படமேதான்’.


‘நான் போன வாரம் பார்த்தேன்டா செம படம். செம பிட்டுடா. அய்யயோ நல்ல வேளை அப்பா தூங்கிட்டாரு. ஷகிலா மட்டுமில்ல ரேஷ்மா சிந்து மரியானு நிறைய பேரு.. ‘ வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினான்.. எனக்கும் கதற வேண்டும் போல இருந்தது. நான் அந்த படத்தை பார்த்துத் தொலைக்க வாய்க்கவில்லையே!.. அடுத்தடுத்த வாரங்களில் ராஜூவைப்போல மகேஷ்,சுரேஷ்,வசந்த்,அப்துல்லா,தமிழ்செல்வன்,கோகுல்.. மற்றும் பலர் படம் பார்த்த சுக மற்றும் சுய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போதெல்லாம் அவனுக்கு மட்டும் வயிறு எரியும்.


இருதயா தியேட்டரிலும் முருகனிலும் ஜிபியிலும் மட்டுமே திரையிடப்படும் காலைகாட்சி படங்கள் நம் வீட்டு டிவியிலேயே.. அதுவும் இலவசமாக. மீசை முளைக்காத அவனை ஒருநாளும் அந்த தியேட்டர்களுக்குள் அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் பத்துரூபாய் கொடுத்து படம் பார்க்கும் அளவுக்கு நிதிவசதி கிடையாது. ஸ்கூல் பையனுக்கு கிடைக்கும் இரண்டு ரூபாய் பஸ்ஸுக்கும் எப்போதாவது அடிக்கும் சிகரட்டுக்கும் தொலைந்து போகும் பேனாவுக்குமே சரியாய் போய்விடுகிறது.


நண்பர்களின் பீத்தல்களை கேட்டு கேட்டு பல வாரங்கள் முயன்றும் வீடு நிறைந்த காட்சிகளால் ஒரு நாளும் அந்த படத்திற்கான டிக்கட் கிடைக்கவே இல்லை. அந்த நாளும் வாராதோ என்ற அவன் காத்திருப்பு ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வீங்கி குபீரென வெடித்துவிடுமோ என்று அஞ்சினான். இன்னும் சில நாட்கள் போயிருந்தால் அது வெடித்து சிதறியிருக்கலாம். நல்ல வேளையாக யாரோ அவனுக்கு நெருக்கமான உறவினருக்கு திருமணம். வாழ்க மணமக்கள். வீட்டிலிருந்தே ஆசிர்வதித்தான். வீட்டில் அனைவரும் ஊருக்கு. சனியும் வந்தது.


யாருமில்லா வீட்டில் தனிமையில் சத்தம் குறைத்து போர்வையால் முழுக்க போர்த்தியபடி சூர்யா டிவியை ரிமோட்டுவதில்தான் என்னே ஆனந்தம். கம்ப ரசத்தை சிக்கன் 65யோடு தின்பது போல! அப்போது காம்பவுன்ட் வீட்டின் வராண்டாவில் ஒரு கொலுசு சப்தம். ஜல் ஜல்தான். கதவை யாரோ தட்டுவதைப்போலொரு பயம். டொக் டொக்தான்.
லேசான நடுக்கம் உடலெங்கும் இருந்தாலும்... பயம் பயம்தான். மணி பதினொன்னரை. குறுந்தாடி வைத்த கிழவர் ஒருவரும் அருகில் கும்மென்றிருந்த இளம்பெண்ணும் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் இப்போது பதினொன்றரையை தாண்டி இருந்தது. மற்ற சேனல்களுக்கு செல்ல மனமில்லை. விடாப்பிடியாக அந்த கிழவனை பார்த்து வேண்டி இருந்தது. சகித்துக்கொண்டு பார்த்தான். எதிரொலி நிகழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அல்லது புதிரா புனிதமா மலையாள ரீமேக்காக இருக்கலாம். ஒரு எழவும் விளங்கவில்லை. அந்த குறுந்தாடி கிழவனின் அருகிலிருந்த பெண் கடிதம் ஒன்றை படிக்க கிழவர் விளக்கினார். அவ்வப்போது கிழவரின் நமுட்டு சிரிப்பு. சிரிக்கும் போதெல்லாம் அந்த இளம்பெண்ணின் உதட்டு கடிப்பு இலவச இணைப்பு.


ஒவ்வொரு கடிதமாக படிக்க அதற்கு இந்த கிழவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அவன்.. கிழவர் வாயை பார்த்துக்கொண்டிருந்தான். அவர் பேச பேச தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்திருந்தது.


அய்ய்யோ தூங்கிட்டா இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா. வராது வந்த மாமணியாச்சே ஷகிலா!. அதுவும் இலவசமாக. விடுவானா.. அவசரமாக ஓடினான். பாத்ரூமுக்கு! தண்ணீரால் கண்களை கழுவிக்கொண்டு மீண்டும் கையில் ரிமோட்டை பிடித்தபடி போர்வையால் உடலை மூடி..


பிட்டுப்புத்தகங்கள் படிப்பதைக் காட்டிலும் இது கடினமாக இருந்தது. பயம் வேறு. ஓலியை ம்யூட்டில் வைத்தாலும் அவர்கள் பேசுவது கேட்பது போலவே இருந்தது. காம்பவுன்ட் வீட்டுக்குள் ஒண்டிக்குடித்தனமிருப்பவன் பேசுவது அவனுடைய பக்கத்துவீட்டுக்காரனுக்கு கேட்காமலிருக்காது. குறுந்தாடிக்கிழவன் தொடர்ந்து பேசினான். அவன் தாடியை பிச்சு பக்கத்தில் அமர்ந்திருக்கும் இளம்பெண்ணுக்கு ஒட்டவைக்க வேண்டும். நேரம் இப்போது 12.00


ஒருவழியாக அந்த புரோகிராம் முடிந்து தொலைத்தது. உடனடியாக படம் தொடங்கியது. டிஞ்சாக் டிஞ்சாக் இசைக்கு பின்னால் பெயர்கள் ஓடத்தொடங்கின. நிறைய பேர் நடித்திருப்பார்கள் போல.. நிறைய பேர் வந்துகொண்டே.... இருந்தது. ஒருவழியாக டைரக்சன் ஏ.டி.ஜோய் என்று முடித்ததும்தான் உயிர் வந்தது.


படம் தொடங்கியதுமே ஷகிலாவின் கவர்ச்சி தாண்டவம் தொடங்கிவிடும் என கற்பனை செய்தவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. விநாயகர் படத்து பூஜை போடுவதோடு தொடங்கியது படம். தொடர்ச்சியாக நிறைய சாமி படங்கள் காட்டினார்கள்.. பெரியார் வாழ்க என்று நினைத்துக்கொண்டான். பகுத்தறிவாளனாக மாறவேண்டும் போல் இருந்தது.


ஊரில் பெரிய பணக்காரனான அவனுக்கு ஒரு இளம் மனைவி. இதுதான் படத்தின் கதை! படம் தொடங்கி இரண்டாவது நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது. படத்தில் பிட்டுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதும் புரிந்தது. கொஞ்சம் கூட இடைவெளியில்லாமல் யார் யாரோ பேசிக்கொண்டேயிருந்தனர். பிராக்டிகல் எக்சாமில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதைப் போல் இருந்தது. சேட்டா எத்தர மணிக்கு பிட்டு போடும் என்று சூர்யாடிவிக்கு போன் போட்டு கேட்கவேண்டும் போல இருந்தது. ஷகிலாவும் வரவில்லை. அது ஷகிலா நடிக்காத பிட்டுபடமாக இருக்க வேண்டும் என மனதை தேற்றிக்கொண்டான்.
படம் தொடங்கி ஒருமணிநேரம் தாண்டியிருந்தது. ம்யூட்டில் வைத்துப்பார்த்தாலும் மலையாளப்படமென்றாலும் கதை கொஞ்சம் போல புரிந்தது. கதைக்காகவே காவாலித்தனமாக மிட்நைட்டில் இந்த படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று அலுத்துக்கொண்டான். அந்த இளம் மனைவிக்கு நிறைய காதலர்கள் இருந்தனர். சிலரோடு அவ்வப்போது முழுதாக சேலைக்கட்டி டூயட் பாடினாள். படத்தில் இரவு காட்சிகள் வரும்போதெல்லாம் ஆர்வமாக இருக்கும்.. ஆனால் சப்பென்று முடிந்துவிடும். படம் தொடங்கி ஒன்றரை மணிநேரம் ஆகியிருந்தது. ஒருவழியாக இளம்மனைவியின் காதலனும் இளம் மனைவியும் வீட்டில் தனியாக இருக்க.. படுக்கையறைக்கு சென்று அவள் சேலையை இவன் இழுக்க.. எனக்கு சூடேறிக்கொண்டிருந்தது. அவள் அவனைப் விரகத்தோடு பார்க்க அவள் அவனைப் பார்க்க அவன் டிவியைப்பார்த்துக்கொண்டிருந்தான்.


இருவரும் கட்டியணைக்க.. அடுத்து என்ன என்ன? ஆர்வமாக காத்திருக்க எங்கிருந்தோ வந்து தொலைத்தான் ஹீரோ.. ஆவேசமாக வந்தவன் தன் பாக்கட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து டுமீல் டுமீல் என்று சுட இளம் மனைவியும் காதலனும் அவுட்! மலையாளத்தில் ஏதோ வாசகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி சிகப்பு கலரில் ஓட.. கட் பண்ணினால் மோகன்லால் சோகமாக மோட்டுவளையை பார்த்தபடிப் என்ட பொண்ணு மோனே என்று பாடிக்கொண்டிருந்தார்..


ஆண்டுகள் உருண்டோடின. வசந்த் டிவியில் நள்ளிரவு 12 மணிக்கு பிட்டுப்படம் ஒளிபரப்புவதாக ராஜூ இமெயிலினான். அவன் உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் மேனேஜர். இன்னுமா இவன் ஷகிலா படம் பார்க்கிறான் என்று நினைத்தான். அவனை அசிங்கமாக நினைத்தாலும் பல வருஷங்களுக்கு பின்னும் அவன் மனதுக்குள் பொத்தி வைத்திருந்த அழியாத அந்த மத்தாப்பூ பூத்திருச்சு.


திருமணமாகி குழந்தைகுட்டிகள் என்று செட்டிலானாலும் இலவச பிட்டுக்கு இணையாகுமா!. இப்போதும் குடும்பம் மனைவி குழந்தைகள் என எப்போதும் போல டிவிமுன் அரங்குநிறைந்த காட்சிகள்தான். இப்போதும் அவர்கள் ஊருக்கு போக காத்திருந்தான். ஆர்வத்தோடு வசந்த்டிவியில் போட இருக்கும் பிட்டுக்காக காத்திருந்தான்.. காத்திருந்தான்.. இந்த முறை தமிழில் பாலியல் மருத்துவர் அரைமணிநேரம் ரம்பத்துக்கொண்டிருந்தார். அதே சுய இன்பம், விந்து முந்துதல் பிரச்சனைகள். ச்சே நைட்டான நச்சு நச்சுனு..


அதற்கு பிறகு படம் தொடங்கியது. தமிழ் படம்.. பெயர்கள் தமிழிலேயே வந்தன. படம் தொடங்கியது. தொடக்க காட்சியில் விநாயகர் படத்துக்கு பூஜை செய்தனர்.. அடுத்த காட்சியில் அதே கிழவன்.. இவன் கோபமாக தூங்கினான்.