Pages

18 June 2010

சமகால டிவி நிகழ்ச்சிகள்திருமணத்திற்கு முன் அம்மா மட்டும்தான் என் ரிமோட்டுக்கான சமகால எதிரி, இப்போது இன்னொரு ஆளையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இருமுனை தாக்குதலையும் சமாளித்து எப்போதாவது கிடைக்கும் டிவியில் பார்ப்பது டிஸ்கவரி சேனல். டிஸ்கவரியில் தமிழில் டப்பிங் ஒளிபரப்பு தொடங்கியதிலிருந்து எப்போது டிவி கிடைத்தாலும் கை தானாக 50ஆம் எண்ணை அமுக்கி விடுகிறது. டிஸ்கரியில் நான் பார்க்கும் போதெல்லாம் யாராவது காட்டில் தனியாக அலைவதும், அதிலிருந்து தப்பிப்பதும் , பூச்சி புழுக்களை தின்பதும் , என... சர்வைவர் மேன் மாதிரியான நிகழ்ச்சிகளே ஆக்கிரமித்திருக்கும். அதை பற்றி பூச்சி தின்றவனின் டப்பிங் தமிழில் சொல்வதென்றால்.. ஆஹா அற்புதம், இதுமாதிரி இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல! மற்ற படி டிஸ்கவரியில் இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் லைஃப் நிகழ்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. வாய்ப்புக்கிடைத்தால் அனைவரும் குடும்பத்தோடு காணவேண்டிய குடும்ப நிகழ்ச்சி லைஃப்! தினமும் இரவு 8 மணிக்கு உங்கள் டிஸ்கவரி சேனலில் தமிழில்.

தமிழில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான சேனல்களில் டிஸ்னி சேனல் ஏற்கனவே பவர் ரேஞ்சர்களை பல வித கலர்களில் காட்டிக் கொல்கின்றன. நிக்லோடியனும் தமிழில் குதித்திருக்கிறது. குழந்தைகளுக்கு பிடிக்காத கார்ட்டூனாய் தேர்ந்தெடுத்து ஒளிபரப்புகிறார்கள். வாமிட் வருகிறது. சுட்டி டிவியில் டோரா புஜ்ஜி , சிந்துபாத் மற்றும் அரேபிய கதைகள் தவிர்த்து வேறேதும் சுவாரஸ்யமில்லை. புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் சித்திரம் தொலைக்காட்சியில் கிங்காங்,ஹூமேன் இரண்டும் பார்க்கலாம் ரகம். திருக்குறள் கதைகள் என்றும் ஒரு கார்ட்டூன் படம் சித்திரம் தொ.காவில் தினமும் காலை 7.30க்கு ஒளிபரப்பாகிறது. வசனங்கள் அந்தக்காலத்து சிறுவர் மலர்,அம்புலிமாமா,பூந்தளிர் டைப்! தொடங்கியதிலுருந்து மிஸ்ஸாகாமல் தினமும் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இதுதான். டோன்ட் மிஸ் இட்!

சென்னை ஸ்பெசல் நியூஸ் தொ.காவான என்டிடிவி ஹிந்துவில் மொக்கையான நியூஸுக்கு நடுவில் ஹேன்ட் அப் என்னும் நிகழ்ச்சி ஓரளவு ரசிக்கும் படி இருக்கிறது. திரையுல பிரபலங்களை பேட்டிகாண்கிறேன் பேர்வழியென்று அவர்கள் டவுசரை அவிழ்த்து ஓடவிடுகிறார்கள். இது கண்ட கண்ட நேரங்களில் ஒளிபரப்பாகும்.

பாலிமர் தொலைகாட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து விடாமல் ‘விரைவில்’ விளம்பரம் போட்டுக்கொண்டிருந்த்து தமிழகத்தின் சாம்பியன்ஸ் என்னும் புரோகிராமுக்கு!. அமெரிக்கன் ஐடல்,இந்திய ஐடல் தண்டையார்பேட்டை ஐடல் முதலான நிகழ்ச்சிகளின் லோக்கல் மேக்கிங். அதுவும் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியிருக்கிறது. இது மற்றும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய் ஆதிராஜும் , டிரம்ஸ் சிவமணியும், சுதா சந்திரனும் முயற்சி செய்வதை பார்க்க நல்ல வேடிக்கையாக இருக்கிறது. பாட்டு பாடியும் நடனமாடியும் கொல்லும் மற்ற ரியாலிட்டி ஷோக்களை விடவும் நல்ல வெரைட்டியான பல திறமைகளை காண ஏற்ற நிகழ்ச்சி. ஜட்ஜுகள், சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜுகளைப்போல அலட்டிக்கொண்டாலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறவர்களில் சிலர் மிரள வைக்கிறார்கள். ஆனால் வாரத்திற்கு நான்கு பர்ஃபார்மென்ஸுதானாம்.. இன்னும் இரண்டு சேர்க்கலாம். எனக்குத்தெரிந்து எங்கள் வீட்டில் அனைவரும் மனமொத்து காணும் நிகழ்ச்சி இது ஒன்றுதான்! இது ஞாயிறு தோறும் இரவு எட்டு மணிக்கு உங்கள் பாலிமர் தொலைக்காட்சியில் மட்டுமே!

சூப்பர் சிங்கர் போட்டிகள் விஜய்டிவியில் முடிவுக்கு வந்துவிட்டது. பலரும் நினைத்தது போலவே அல்கா அஜித் என்னும் குட்டிப்பெண் இந்த முறை பட்டம் வென்றார். அவர் 11 மொழிகளில் பாடக்கூடிய திறமை கொண்டவராம். லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளாராம். சின்ன வயதிலேயே அசாத்திய திறமை கொண்ட அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள். பக்கத்துவீட்டு மாமி எப்போதும் அந்த பாப்பா குறித்து குறிப்பிடும் போது அந்த அல்கா எவ்ளோ நன்னா பாட்றா பார்த்தியா, அவதான் கெலிக்க போறா என்று சிலாகிப்பார். அல்கா வென்றதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் தெருவுக்கு தெரு போஸ்டர் அடித்து குழந்தைகளை ஓட்டுப்பிச்சை எடுக்க வைத்த கொடுமைகளை தடுத்திருக்கலாம். எரிச்சலாக இருந்தது. அடுத்ததாக விஜய்டிவியில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் தொடங்க இருக்கிறது.. விஜய் டிவியில் நீயா நானா , கதையல்ல நிஜம் முதலான நிகழ்ச்சிகள் வரவர போரடிக்கிறது. ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் பற்றி சொல்லவேண்டுமானால் கர்ண கொடூர திராபை! ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் டப்பிங் திரைப்படங்கள் நிச்சயம் பார்க்கலாம்.

ஜூ தமிழில் விரும்பிப்பார்ப்பது இரவு ஒன்பதிலிருந்து பத்து வரைக்கும் ஒளிபரப்பாகும் ஜு தெலுங்கில் ஒளிபரப்பாகும் நடன போட்டியின் மறுஒளிபரப்பு. மானாட மயிலாடவைப் போல் இல்லாமல் குரங்கு சேட்டைகள் இல்லாத நாகரீகமான நடனத்திற்கு கியாரண்டி. சமயங்களில் உடைகள் கொஞ்சம் ஆபாசமாக ஆணாதிக்க வாதிகளுக்கு தெரியலாம்! சில போட்டியாளர்கள் மெய்சிலிர்க்க வைப்பார்கள் , அதற்கு கியாரண்டி. மற்றபடி ஜு தமிழில் ஒளிபரப்பாகும் சுதாங்கனின் நாயகன் தொடரை விரும்பிப்பார்ப்பேன். எம்.ஜி.ஆரின் வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சி அது. நடுவில் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் பேட்டி கூடுதல் போனஸ். அதைப்போலவே சுதாங்கனின் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பாகும் பிரபலங்களுடனான பேட்டியும் நல்ல நிகழ்ச்சி. கடந்த இரண்டு வாரங்களில் எஸ்.வி.சேகர் மற்றும் குஷ்புவுடனான பேட்டிகள் கவர்ந்தன. அதே போல அனைத்து பிட்டுப்படங்களுக்குமான ஹோல்சேல் உரிமம் ஜீயிடம்தான் உள்ளதாக கருதுகிறேன். வேலுபிராபகரனின் காதல்கதை, இளமனசு,பத்துபத்து,சுட்டபழம்,காந்தர்வகன்னி,கருநாகம் லொட்டு லொசுக்கு என அண்மையில் வெளியான அனைத்து படங்களும் அவ்வப்போது பிட்டுகள் நீக்கப்பட்டு மொக்கையாக திரையிட்டப்படுகிறது.

கேப்டன் டிவி என்றொரு டிவி இருக்கிறது. அதிலும் சில நிகழ்ச்சிகள் கவர்கின்றன. குறிப்பாக ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் கேக்ஸ் மாதிரியான கேன்டிட் கேமரா ஒன்று ஒளிபரப்பாகிறது. சுவாரஸ்யம். அதைத்தவிர்த்து தாய்லாந்து,கேரளா,கர்நாடகா முதலான பல மாநில நாட்டு உலக சினிமாக்களையும் தமிழில் டப் செய்து போடுகிறார்கள். உலக சினிமா ஆர்வலர்கள் ப்ளீஸ் நோட். ரோகிணி அடிக்கடி வந்து உலக சினிமா பற்றிய நிகழ்ச்சி விரைவில் வரவிருப்பதாக குறிப்பிடுகிறார் எப்போதென்று தெரியவில்லை. ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனா மாதிரியான படங்களும் ஒளிபரப்பப்படுகிறதாம். பார்க்க வேண்டும்.

வசந்த் தொலைகாட்சியில் தினமும் காலைவேளையில் ஒளிபரப்பாகும் பழைய பாடல் நிகழ்ச்சி நடுவில் பேசுபவரை மறந்துவிட்டு கண்டுரசிக்க ஏற்ற ஒன்று. சனிக்கிழமை இரவு 12மணிக்கு ஒளிபரப்பாகும் பிட்டுப்படத்தை பார்க்க வேண்டாம். பிட் வரும் போதெல்லாம் வசந்த் அன் கோ விளம்பரம் போட்டு பயமுறுத்துகின்றனர். நமக்கு ஆண்மைகுறைவோ என்கிற சந்தேகம் எழ வாய்ப்புண்டு. மெகாவிலும் காலையில் எந்த விளம்பர இடைவேளையில்லாமல் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகிறது. காணலாம்.

சன்னுக்கு போட்டியாக வரும் என்று அந்த காலத்தில் நினைத்த ராஜ்டிவியில் எந்த நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை. அது எந்த சேனல் எண்ணில் இருக்கிறது என்பது கூடத்தெரியவில்லை. ராஜ்டிஜிட்டல் பிளஸில் 80களில் வெளியான மொக்கைப்படங்கள் அவ்வப்போது ஒளிபரப்பாகும் , வரலாறு தெரிந்து கொள்ள காணலாம். கலைஞரில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி ஏற்கனவே ஒரளவு பலராலும் பார்க்கபடுகிறது. நான் அவ்வப்போது பார்க்கிறேன். மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் புதிய கோணங்கிகள் , 10நிமிடப்படங்கள் , ஞாயிறு ரஷ்யப்படங்கள் பார்க்கலாம்.

பொதிகையில் செம்மொழி மாநாட்டையொட்டி சில நல்ல உரையாடல்கள் ஒளிபரப்பாகிறது. பார்க்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கிற அளவுக்கு பொறுமையும் அறிவும் இல்லை. இது தவிர வேற்று மொழி சேனல்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் சமகால உலக டிவிகள் என்று ஒரு புத்தகம் எழுத வேண்டியதாயிருக்கும்.

இப்படி ஒரு நாளில் இத்தனை நிகழ்ச்சிகளையும் தொலைகாட்சிகளையும் வேலை வெட்டியில்லாமல் பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும் ஆவலும் வேட்கையும் எனக்கு எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனோ ரிமோட்டினை ஆக்கிரமித்துக்கொண்டு எப்போதும் சன்டிவியில் டீலா நோடீலோ,தங்கம்,செல்வி,ஹனிமூன் எக்ஸ்பிரஸ்,அசத்தப்போவது யாரு, என பார்த்துக்கொண்டும், இரவு 11 மணிக்கு கூட சன்மியூசிக்கில் நல்லநல்ல பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டும் , சன்னோடு சன்னாக மக்கிப்போய் வாழ்கிற குடும்பத்தில் சன்னாக பிறந்து விட்டதால், நானும்அதையே பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நம்ம நாட்டிலே...