18 August 2010

எக்ஸ்பென்டபிள்ஸ்தமிழில் வெளியாகும் தொண்ணூறு சதவீத படங்களும் ஆண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுபவை. மிகச்சில படங்களே பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானவை. ஹாலிவுட்டிலும் கூட அப்படிப்பட்ட தரமான ஆண்கள் ஸ்பெசல் படங்கள் அடிக்கடி வெளியாவதுண்டு.

ஆண்களே ஆண்களுக்கான இந்த படங்களில் மைக்ரோபாவடையோ பிகினியோ அணிந்த அறிவில்லாத அழகு பெண்கள், உருண்டு திரண்டு கட்டுமஸ்தான நரம்பு முறுக்கேறிய தேகத்துடன் அலையும் ஹீரோ , கோட் சூட்டோடு அடியாட்களும் துப்பாக்கியுமாக அலையும் வில்லன்கள். ஆயிரம் பேராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் சுட்டு வீழ்த்தி எதிரிகளின் கோட்டையை தகர்க்கும் கிளைமாக்ஸ் , நடுநடுவே தேவையில்லாத புத்திசாலித்தனமான டுவிஸ்ட்டுகள் என முழுக்க முழுக்க கதையே இல்லாமல் ஆக்சன் மசாலாவை அள்ளித்தெளித்தால் ஆண்களுக்கான சூப்பர் ஹிட் படம் ரெடி! இந்த ஃபார்முலாவை 80-90களில் வெளியான பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் காணக்கிடைக்கும்.

அதே உப்புமாவை கொஞ்சம் நெய் ஊற்றி லேசாக டெக்னாலஜி காரம் போட்டுக் கிண்டினால் சில்வஸ்டர் ஸ்டாலனின் ‘எக்பென்டபிள்ஸ்’. ஹாலிவுட்டின் பழைய ஆக்சன் தாத்தாக்களும் புதிய அதிரடி அண்ணன்களும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படம்! பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாமே படம் தொடங்கி அரைமணிநேரத்திலேயே தவிடு பொடியானது. இனிமேல் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பும் படங்களுக்கே போகவேண்டாம் என நினைத்திருக்கிறேன்.

நம்மூரில் விஜயகாந்த்,அர்ஜூன் இருவரும் போட்டிப்போட்டு நடித்த கெட்டவர்களை அழிக்கும் கதைதான் இந்தப்படத்தின் கதையும். அர்ஜூனின் ஜெய்ஹிந்த் படத்தையே கொஞ்சம் தட்டி ஒட்டி டிங்கரிங் செய்து பேரை மாற்றி படமெடுத்திருக்கிறார்களோ என்று சந்தேகமே வந்துவிட்டது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை இது கேப்டன் பிரபாகரன் ரீமேக் என்று பக்கத்துசீட்டு தோழர் உறுதியளித்தபின்புதான் நிம்மதி பெருமூச்சு மூக்கில் முட்டியது.

படம் முழுக்க திரையில் தோன்றும் எல்லா பாத்திரங்களுமே புஜபலங்களை காட்டிக்கொண்டே அலைகின்றனர். ஸ்கிரீனில் எங்கு பார்த்தாலும் ஆண்கள் ஆண்கள் ஆண்கள் மட்டுமே! உடலெல்லாம் பச்சை என்கிற டேட்டூ போட்டுக்கொண்டு , அடித்தொண்டையில் கர்கர் சப்தத்துடன் கையில் கத்திகபடாவுடனே டெரராக சுற்றுகின்றனர். படத்தில் இரண்டே இரண்டு பெண்கள்தான்! தமிழ்ப்படங்களில் நடிக்கும் டம்மி பீசு ஹீரோயின்களாக நடித்துள்ளனர்! இரண்டில் பெஸ்டை படத்தின் இயக்குனர் ஸ்டாலன் உஷார் செய்துவிடுகிறார். ஒரே ஒரு காட்சியில் அர்னால்ட் தோன்ற தியேட்டரில் விசில் பறக்கிறது. புரூஸ் வில்லீஸும் ஒரு காட்சியில் வருகிறார்.

சொல்லிக்கொள்ளும்படியோ ரசிக்கும்படியோ ஆக்சன் காட்சிகள் அமையவில்லை. நிறைய குண்டு வெடிப்பதும், டுமீல் டுமீல் என சுடுவதையும் , எங்க ஊர் விஜயகாந்தே இன்னும் சிறப்பாக செய்வார் மிஸ்டர் ஸ்டாலன்! ஓவராக எடிட்டிங் செய்து விட்டார்கள் போல! ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் கட் பண்ணிபண்ணி கண்ணு வலிக்கிறது. படத்தின் மேக்கிங்கும் கேமராவும் தமிழில் வெளியான பில்லா தரத்தில் அருமையாக இருக்கிறது.

படத்தின் பிளஸ் தமிழ் டப்பிங்தான். படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகளை கொட்டித் தீர்த்திருக்கின்றனர். படத்தின் ஒரே மகிழ்ச்சி தமிழ் வசனங்களே! அதற்காக வேண்டுமானால் ஒருமுறை திருட்டு டிவிடியில் பார்க்கலாம். மற்றபடி இந்தப்படத்தை பார்க்காமல் தவிர்ப்பது பாக்கெட்டுக்கு நல்லது.

4 comments:

KUTTI said...

NICE REVIEW

MANO

உண்மைத்தமிழன் said...

100 ரூபா கொடுத்து பார்த்துத் தொலைச்சேன்.. கொடுமை..!

Anonymous said...

மொதல்ல உம்ம உடம்ப கண்ணாடியில பாரும் ஓய். ரொம்ப நாள் கழிச்சி ஒரு மொக்கை விமர்சனம் உம்மகிட்ட இருந்து.

Vivek Iyer said...

really a nice tamil blog...i love ur way of expressing thoughts

Cheers
Vivek Iyer
http://myviews7.blogspot.com