07 September 2010

பீட்டர் பிரானா!
சினிமாவுக்கு போறதுன்னு முடிவெடுத்துட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்... அப்படி முடிவெடுத்துதான் பீரானா த்ரீ டி படத்துக்கு போறதுன்னு முடிவாச்சு. பீரானா த்ரீ டி படத்த பிவிஆர்லயோ எக்ஸ்பிரஸ் அவன்யூலயோ சத்யம்லயோ த்ரீ டி ல பாக்க ஆசதான். என்ன செய்ய கையில இருக்கற எழுவது ரூவாய்க்கு , அங்கெல்லாம் போனா ஒரு டீ கூட குடிக்க முடியாது! இந்த லட்சணத்துல மூனுடீயப் பத்தி சிந்திக்கமுடியுமா!


அதனால எப்பவும் பாக்கற பைலட்ல, தமிழ் டப்பிங்ல, முப்பது ரூவாவ குடுத்தோமா, ஸ்கிரீன்லருந்து மூணு சீட் தள்ளி , குந்த வச்சு உக்காந்து படம் பார்த்தமானு இருக்கறதுதான் என்னைமாதிரி பாவப்பட்ட சென்னைவாசிங்களுக்கு நல்லது! மாலுங்க எல்லாமே மாலு உள்ளங்களுக்கு மட்டுந்தான

ஏழு மணி ஷோவுக்கு ஆபீஸ்லருந்து அஞ்சு மணிக்கே போக என் தாத்தா என்ன கருணாநிதியா! இல்ல என் மச்சான் என்ன அழகிரியா! ஏழு மணிக்கு ஷோன்னாலும் ஆறு முப்பதுக்குதான ஆபீஸ்லருந்து கிளம்ப முடியும். கிளம்பினேன்.


ஓட்ட வண்டிய மிதிச்சி ஸ்டார்ட் பண்ணி டிநகர்லருந்து பைலட் தியேட்டர் போய் சேர அதிக பட்ச நேரம் பதினைஞ்சு நிமிஷம். ஈவ்னிங் டிராபிக்னா கூட பத்து நிமிஷம். என்ன ஆனாலும் தியேட்டருக்கு அஞ்சு நிமிஷம் முன்னால போய் சேர்ந்துரலாம். டிக்கட்ட வாங்கிட்டு, ஒரு தம்மப்போட்டுட்டு , வண்டிய ஸ்டான்ட்ல போட்டுட்டு போய் உக்கார்ந்த படம் போடறதுக்கு கரெக்டா இருக்கும்! இது பிளான்.


யெஸ் நீங்க நினைக்கறது அப்சலுட்டிலி கரெக்ட் ,. விதி வலியது! அதைவிடவும் வலியது சென்னை டிராபிக். எதிர்பார்க்க முடியாததை எதிர்பாருங்கள்னு பொடனில அடிச்சு சொல்லும்! சில சமயம் சி எம் கிராஸ் ஆவாரு, சில சமயம் அண்ணா சாலை மேம்பாலத்துல எந்த கார்க்காரனாவது எவன் மேலயாவது முட்டிகிட்டா டிநகர்ல டிராபிக் எகிறும். காரணமேயில்லாம அண்ணாசிலையிலருந்து மேம்பாலம் வரைக்கும் க்யூவுல நிப்பானுங்க.. டிநகர்ல புறப்படும் போதே கால் தடுக்குச்சு! ஆனாலும் தில்லா வண்டிய கிளப்பிக்கிட்டு சீறிப்பாஞ்சு அண்ணா மேம்பாலம் வரைக்கும் வளஞ்ச வளஞ்சு வந்து பார்த்தா நீ....ளமா டிராபிக்கு.


பீரானா..


சென்னையின் பிருமாண்ட டிராபிக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவனுக்கு இதெல்லாம் தூசியாச்சே! எப்படியாச்சும் அண்ணாசாலைய தாண்டி பீட்டர்ஸ் ரோடுக்கு போய்ட்டா அப்புறம் டிராபிக் இருக்காது. ச்சும்மா சீறிப்பாய்ஞ்சு சுறா மாதிரி (நாட் விஜய் மாதிரி , ஒரிஜினல் சுறா மாதிரி) எப்படியோ முக்கி முனகி திக்கி திணறி பாதி கிணறு தாண்டிட்டேன். அண்ணாசாலையதான் சொல்றேன். சத்யம் தியேட்டர் பின்னால ஒரு ரோடு போகும் பாருங்க , அதுக்கு பேருதான் பீட்டர்ஸ் ரோடு! அந்த ரோட்டுல ஈ காக்கா மட்டும்தான் இருக்கும்.. அது வழியாப்போய் எக்ஸ்பிரஸ் அவன்யூவ கடந்து ரைட் எடுத்தா ராயப்பேட்டை மணிகூண்டு.. அங்கருந்து ஸ்டிரைட்டா உட்டா பைலட் தியேட்டர். இதுதான் ரூட்டு!


சத்யம் தியேட்டர்ல படம் பாக்கற கார்க்காரனுங்க தொல்லைய கடந்துதான் எப்பவும் அந்த ரூட்டுல போய்த்தொலைய வேண்டியதாயிருக்கும். ஆனாப்பாருங்க அன்னைக்கு அவ்வளவா சத்யம் தியேட்டரான்ட கூட்டமே இல்ல. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.. டைம் பார்த்தேன் ஆறு நாப்பத்தஞ்சு! இன்னும் பதினைஞ்சு நிமிஷமிருக்கு.. எப்பவும் இல்லாம இன்னைக்கு ரொம்ப ஸ்பீடாவே வந்துட்டேன் போலன்னு , என்னோட வீரதீர சாகசங்கள நினைச்சு அப்படியே புளங்காகிதமடைஞ்சுட்டேன். எனக்கே லைட்டா சிலிர்ப்பாதான் இருந்துச்சு..


சிலிர்ப்போட சிலிர்ப்பா ஒரு சிரிப்போட சத்யம் தியேட்டர் புறக்காலி வழியத் தாண்டி பீட்டர்ஸ் ரோட்ல வண்டிய உட்டா.. ம்ம் .. என்னத்த சொல்ல ஒரு பயங்கர அதிர்ச்சி.. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குதானா இந்த ரோட்டுல டிராபிக் ஆகணும்.  ஆகிருச்சே! என்ன செய்ய..

எனக்கு முன்னால நாலு ஆட்டோ , ரெண்டு மினி லாரி, பின்னாடி ஒரு பஸ் , லெப்ட்ல மூணு பைக்கு, ரைட்டுல ஒரு ஆட்டோ , திரும்பிக்கூட போக முடியாத அளவுக்கு லாக் பண்ணி வச்சிருந்தானுங்க. கால் மணிநேரமாச்சு.. ம்ஹூம் முன்னால ஒரு இஞ்ச்கூட நகரல.. பக்கத்து ரோட்டு ஆட்டோகாரர் வண்டிய நிறுத்திட்டு வெளிய இறங்கி பீடிய பத்தவச்சுகிட்டு நின்னாரு. ண்ணா என்ன பிரச்சனைங்கணா என்றேன். புதுசா கட்டின எக்ஸ்பிரஸ் அவன்யூல அடுத்த ஷோ ஆரம்பிக்க போகுதுல அதான் கார்லாம் உள்ளே போகுதுப்பா.. அதான் டிராபிக்ன்னாரு..


பைலட் தியேட்டர்ல படம் பாக்கறவன்லாம் மனுஷன் கிடையாதாண்ணா என்றேன் அப்பிராணியாக.. அவரும் சோக முகத்தோடு ராஜா நீயும் பைலட்டுக்குதான் போறீயா என்றார்.. அவரும் அங்கேதான் போகிறார் போல.. பைலட்தியேட்டர்தான் ஆட்டோக்காரர்களின் சொர்க்கமாச்சே! பாவம் அவர்கிட்டயே ஒரு பீடிய வாங்கிப் பத்த வச்சுகிட்டு எட்டிப்பாத்தேன்.. எக்ஸ்பிரஸ் அவன்யூ வாசல்ல நாலஞ்சு கார் எடக்கு மடக்காக நின்னுகிட்டு ரோட்ட மறிச்சுகிட்டு மல்லுக்கட்டிக்கிட்டிருந்தாய்ங்க... இன்னைக்கு படம் பார்த்த மாதிரிதாம்டே மாப்ளேனு நினைச்சுகிட்டே புகைய குப்பு குப்புனு இழுத்து இழுத்து வுட்டேன்..


ஒரு வழியா டிராபிக் கிளியராகி ராயப்பேட்டை மணிகுண்டுகிட்ட வண்டிய திருப்ப.. மணிகுண்டுல டயம் 7.10! இதுக்கு மேல படத்தப்போய் பார்த்து அஞ்சாராச்சுனு பேசாம மணிகுண்ட சுத்திட்டு அப்படியே வீட்டப்பார்த்து போய்ட்டேன்.


விடிஞ்சுது! ஞாயித்துக்கிழமையாச்சே! இன்னைக்காச்சும் அந்த பீரானாவ பார்த்துரணும்னு கைல இருநூறு ரூவாவ எடுத்துகிட்டு தில்லா பிவிஆர் சினிமாஸ் போனேன். மூணு டில பக்கணும் 200ரூவாயாச்சும் வேணும்லா! 200 ரூவா எனக்கு ஒருநாள் கூலி! பரவால்லடா இன்னைக்கு பகட்டா ஒரு படத்த பார்த்துரணும்னு முடிவுபண்ணி கிளம்பினேன். உள்ளே போனா அடேங்கப்பா சொர்க்கம். வெளிய மழை.. லேசா மூச்சா முட்டிச்சு.. செக்யூரிட்டிகிட்ட பாத்ரூம் எங்கனு கேட்டு பாத்ரூம் பக்கமா போனேன். மறுபடியும் ஒரு சொர்க்கம்.


ஆனா பாருங்க அந்த மூச்சாபோற டாய்லெட்டுல தண்ணி வரல.. ஆனா சுத்தமா வாடையும் இல்ல.. தண்ணி திறந்து உடலாம்னா டாப்பையும் காணோம். வெளிய வந்து செக்யூரிட்டிகிட்ட கேட்டேன்.. ண்ணா உள்ள தண்ணியே வரலைங்கண்ணா என்னங்கண்ணா மேட்டர்ன்னேன். இந்த நுண்ணுயிரி கிருமி வச்சு அதுவா சுத்தம் பண்ணிக்குமாம்பா , தண்ணிய சேமிக்கணும்ல என்றார். ஓஓஓ என்று வாயை திறந்தவன் அப்படியே எல்லா மிட்டாய் கடையையும் பார்த்துகிட்டே , தானாவே ஏறி இறங்குற படிக்கட்டுல ஏறி இறங்கி.. தியேட்டர் கிட்ட வந்தேன். தண்ணித்தாகம்! தொண்டை அடைச்சுச்சு..

சுத்திமுத்தி பெரிய அண்டாவுல டம்ளர சங்கிலில வச்சு கட்டிவுட்டுருக்காய்ங்களானு தேடி தேடி தேடி தேடி.. ம்ஹூம் கிடைக்கல.. நம்ம தோஸ்த் செக்யூரிட்டிண்ணா இருக்காருல்ல.. ண்ணா தண்ணி.. என்றேன். தம்பி அந்த கடைல தண்ணி பாட்டில் கிடைக்கும் வாங்கி குடிச்சிக்கோங்கன்னாரு. கடையில தண்ணிபாட்டில் கேட்டேன் அரை லிட்டர் 12 ரூவாயாம்!


சுத்தியும் பார்த்தேன். நிறைய பீட்டர் பீரானாங்க 3டில  நூறு ரூவா காஃபிய குடுச்சிக்கிட்டிருந்துச்சு.. கார்ல வந்த பீரானா! காஃபி ஷாப் பீரானா! பீட்டர்ஸ் ரோட் பீரானா! என்னை முழுங்க வந்த பீரானா!


அன்புடன்
அதிஷா.

17 comments:

பரிசல்காரன் said...

;-)

// கார்ல வந்த பீரானா! காஃபி ஷாப் பீரானா! பீட்டர்ஸ் ரோட் பீரானா! என்னை முழுங்க வந்த பீரானா!
//


:-)))))))))))))))))))

Mohan said...

பிரானா படம் கூட உங்கள் எழுத்து அளவிற்கு சுவாரசியமாக இருந்திருக்காது!

Anonymous said...

padam pateeya illaya

KUTTI said...

அதிஷா...

அதகளபடுத்தியிருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்.


மனோ

VISA said...

இது கம்யூனிஸமா சோஷியலிஸமா அனார்க்கிசமா இல்ல பீரானாயிஸமா. செம டாப்.

பீரானா விமர்சனத்த பீட்டர்ஸ் ரோட் பீரான கணக்கா சொல்லிடுவியோன்னு பயந்துகின்னே உள்ள வந்தேன். படத்த பத்தி ஒரு வார்த்தை இல்ல. இந்த விமர்சனம் எனக்கு புடிச்சிருக்குடோய்.

சுவடுகள் said...

அப்போ படம் எப்படி இருந்தது என்று கடைசி வரை சொல்லுவதாக இல்லை ஆதிஷா?

JDK said...

Super..அடி தூள் !!!

butterfly Surya said...

கலக்கல்..

இதே போல அடிச்சி ஆடு.

vinthaimanithan said...

எங்க போவனும்...(ஐஸ் அவுஸ்பா)
இப்டிக்கா குந்து....(சரிண்ணே)
தா பர்... இப்டிக்கா நேஏஏஏரா போனீன்னா வெய்யி... ஆங்
லெஃப்டுல ஒரு கட கீது... அது நமக்கு தாவயில்ல... சரிண்ணே
ரைட்டுக்கு வா மவனே நூல்புட்ச்சா போல நேரா போனீன்னா வெய்யி...இப்டிக்கா ரொம்ப நாளா ஒரு பீச்சு ஒண்ணு க்குதுபா...அது நமக்கு தாவயில்ல.. லெஃப்டுக்கா வா...தலைவர்கள் சமாதில்லாம் க்குது...தலிவருங்க நமக்காவ என்னாபா ஒழப்பு ஒழச்சிருங்காங்க...ஜோதி ஒன்னு க்குது பாரு. எரிஞ்சினே க்குதுபா.... அது நமக்கு இன்னாத்துக்கு...இப்டிக்கா போனா கொருக்குபேட்ட, வண்ணாரபேட்ட,பாரீஸ்லாம் க்குது.. அது நமக்கு தாவயில்ல..இப்டிக்கா ரைட்டு வா....இப்டிக்கா வந்தின வெய்யி... ஆல் இண்டியா ரேடியோ க்குது...அப்டிக்கா போனீன்னா வெய்யி எஸ்டேட் க்குது... மவனே அப்டிக்கா லெஃப்டு வந்தினா வெய்யி... ஐயப்பன் கோயில் ஒண்ணு கட்டியிருக்கான் பாரு...என்னா வேலப்பாடு தெரியுமாப்பா....அரும்மையா கட்டிகிறாம்பா...கும்ப்டுக்கடா கய்தே....ஆமா எங்க போவணும் நீ.. (தெரியலயே)....அட பொறம்போக்கு பையா.. போற எடம் தெரியாமலா சுத்துனிகீற நீய்யி... சரிதான் ஒன் வழிக்கே வரேன்...இப்டிக்கா போனா மந்தவெளி போவணுமா....மயிலாப்பூரு? ராயப்பேட்ட? மவனே எங்கதாண்டா போவணும் நீ? டேய் இப்ப ஐஸ் அவுஸு மணிக்கூண்டாண்ட வந்துகீறடா...

யாத்தே.. நல்லா சொல்றாய்ங்கப்பா ரூட்டு..

vinthaimanithan said...

follow up

பித்தன் said...

ennaa naretionu pinnitteenga thala, kadaisila padam paatheengalaa illaiyaa....

கார்க்கிபவா said...

மாம்ஸ்.. ஐ லவ் யூ

Emjiyar said...

Hi Athisha,

Thanks for doing great job here.Hope ur making people to think in diff manner.(sorry dont know tamil typing)

Thanks,

Subbaraman said...

காமெடி மேளா :)

senthil velayuthan said...

கலக்கல்..

Raashid Ahamed said...

சும்மா ரோட்டுல போன விஷயத்தை இத்தனை சுவைபட நகைச்சுவையோட சொல்ற திறமை எல்லாருக்கும் வராது. உங்க எழுத்துல ஒரு காந்தம் இருக்கு. சரி கடசில படம் பாத்தீங்களா இல்லயா ?

thangaraj said...

super!!! kalakkal!!!!