10 September 2010

கொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்சிறுவர்மலர் காலத்திலிருந்தே ஒரு நல்ல பழக்கம் எனக்கிருந்தது. வாரந்தோறும் வாசகர் கடிதம் எழுதிப்போடுவது. அதற்காக நாலணா கார்டு வாங்கி , முதலில் பென்சிலால் எழுதிப்பார்ப்பது. பின் ரப்பர் வைத்து அழித்து திருத்தி கடைசியாக ஹீரோ பேனா கடன் வாங்கி அழுங்காம குலுங்காம அத்திப்பூ வாடாம எழுதி அனுப்புவேன்.


அப்போதெல்லாம் நல்ல கையெழுத்து கொண்ட வாசகர் கடிதத்திற்கு 100ரூ பரிசு + கடிதமும் அப்படியே கார்டோடு பிரசுரமாகும். எப்படியும் நூறிலுருந்து நூற்றைம்பதாவது அனுப்பியிருப்பேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை.


கொஞ்சம் வளர்ந்தபின், அதாவது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் வாசகர் கடிதத்தில் இருந்து முன்னேறி ஒன்லி கதைகள் மட்டுமே அனுப்பத்தொடங்கினேன்.. எல்லா கதைகளுமே இப்படித்தான் தொடங்கும் 'செல்வபுரம் என்று ஒரு ஊர் இருந்த்து, அதை செல்வேந்திரன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு நான்கு மகன்கள்' , ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''. கிட்டத்தட்ட அது ஒரு இருபது அல்லது இருபத்தி மூன்று கதைகள் இருக்கும். அதில் ஒன்று பிரசுரமானது.


பிரசுரமான நாள் இப்போதும் நினைவிலிருக்கிறது. தினமும் பத்திரிகை வாங்கிப்படிக்கும் அளவுக்கு எங்களுடைய வீட்டில் யாருக்கும் வசதி கிடையாது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனக்கும் கிடையாது. பக்கத்து வீட்டு போட்டோகிராபர் வீட்டில் வாங்கும் தினமலர்தான். அதையும் அவர் இரண்டு நாள் தள்ளிதான் எனக்குக் கொடுப்பார். என்ன நினைத்தாரோ வெள்ளியன்றே கொடுத்தார். புரட்டினேன்.. மங்கி பங்கி பிங்கி என ஏதேதோவைத் தாண்டி என்னுடைய செல்வபுரமும் அரசனும் செல்வேந்திரனும் கதையும் இருந்தது. ஆனால் கதையை வேறுமாதிரி எழுதியிருந்தனர். ''அண்ணா இந்த புக்குல என் கதை வந்திருக்குங்கண்ணா'' என்று போட்டோகார அண்ணனிடம் அப்போதே காட்டினேன். அவரோ சிரித்துவிட்டு 'சும்மா வுடாத! பேரையே காணோம்' என்றார். ஆனாலும் சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.


எப்படியும் அந்த கதையை பள்ளி ஆசிரியர் தொடங்கி பக்கத்துவீடு எதிர்த்த வீடு என எங்கள் சின்ன ஊரின் நானூறு வீடுகளில் 399ல் காட்டியிருப்பேன். 400வது வீடு என்னுது. அங்கே யாருக்கும் படிக்க வராது. அம்மாவிடம் காட்டினேன். கதையை தடவிப்பார்த்துவிட்டு நல்லா வருவடா என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு பக்கத்துவீட்டு காரர்களிடமெல்லாம் இதைப்பற்றி பேசியது இப்போதும் நினைவிருக்கிறது. (இப்போது அம்மாவே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார் என்பது பின்கதை சுறுக்கம்)


அதற்குபின் வீரியமாய் நிறைய கதைகளை எழுதிக்குவித்து அனுப்பிக்கொண்டேயிருப்பேன்.. நான் வீரியமாய் எழுதினாலும் கதையின் நிலைதான் பரிதாபம். ஒன்றும் வெளியாகவில்லை. அதற்குள் பத்தாம்வகுப்பு பரீட்சை மார்க் அது இது லொட்டு லொசுக்கு இத்யாதிகளால்... சிறுவர் மலரும் பூந்தளிரும் அம்புலிமாமாவும் ராணிமுத்து காமிஸ்களும் குதிரை வீரன்களும் என்னை விட்டு பிரிந்து போனது தனிக்கதை.


சிறுவர் மலரோடு நின்று போன என்னுடைய வாசிப்பனுபவம். வாரமலரின் நடுப்பக்க சினிமா துணுக்குகளோடு மீண்டும் தொடங்கியது. இம்முறை வாசகர் கடிதம் , மாறி இ.உ.பக்கம் பகுதிக்கு பார்ப்பதையெல்லாம் எழுதி அனுப்பத்தொடங்கினேன்.இது இப்படித்தொடங்கும் ''நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன், எதிரில் பலரும் சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்'' என்பதாகவோ , ''எனக்குத்தெரிந்த உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அங்கே அனைவரும்.. ப்ளா ப்ளா' வாக இருக்கும். அனுப்பி அனுப்பி ம்ஹூம் ஆணியை பிடுங்க முடியவில்லை. அதற்குபின் குமுதத்திற்கு ஒரு பக்க கதை எழுதி அனுப்பி.. அது திரும்பி வந்து...


அதற்கு பிறகு பிளாக் எழுதி , ஏதேதோ எழுதி , இதோ சிறுவர் மலர் மகிழ்ச்சியை, அதே கொண்டாட்டத்தை என் பிரியத்திற்குரிய விகடனில் என்னுடைய முதல் சிறுகதை வெளியானபோதும் அடைந்தேன்.


ஆனந்த விகடனின் கொம்பு வைத்த தாத்தாவை பல காலம் பாட்டி என்றே நினைத்திருக்கிறேன். அதன் முக சாயலும் , சைடாக போர்த்தியிருக்கும் சால்வையும் எனக்கு , இந்திராகாந்தியையே நினைவூட்டும். இ.காந்திக்கு ஏன் கொம்பு வைத்திருக்கிறார்கள் என்று ஒருமுறை மாமாவிடம் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி அது தாத்தாடா கண்ணா! என்பார். சும்மா பீலா வுடாதீங்க இது பாட்டிதான் என்று முழுமையாக நம்பியிருக்கிறேன். கொஞ்சம் விபரம் தெரிந்து கொண்ட பின்தான் அது பாட்டி அல்ல தாத்தா என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன்.


கெட்ட வார்த்தை என்கிற நான் எழுதிய சிறுகதை ஒன்று சென்ற வார விகடனில் பிரசுரமாகி இருந்தது. தமிழகம் முழுக்க வியாழன்றே புத்தகம் கடைகளில் கிடைத்தாலும், சென்னையில் வெள்ளிதான்! அதே வெள்ளி! அதே சோகம்!


வியாழன்று அதிகாலையிலேயே போனில் அழைத்தார் நண்பர். உன் கதை விகடனில்! கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுண்ணே தெரியாம , பல் விளக்கி, குளித்து , உடைமாற்றி எப்போதும் போல பைக் ஸ்டார்ட் செய்து ஆபீஸ் வந்தேன். எப்போதும் போல வேலை பார்த்தேன்.

எழுத்தாளர் ச.ந.கண்ணன் புதன்கிழமை இரவே கோவையில் வாங்கி இருக்கிறார். ஆபீஸ் வாங்க தரேன் என்றார். மதிய உணவு இடைவேளையில் அலுவலகம் சென்று புத்தகத்தை கைகளில் வாங்கி தடவி, முகர்ந்து.... அடடா! நம் படைப்பை அச்சில் பார்ப்பதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது! அதுவும் என் ஆதர்ஷன ஆனந்தவிகடனில்...


கதையை படித்துவிட்டு பல நண்பர்கள் போனிலும் , குறுஞ்செய்தியிலும் அழைத்து ஊக்கமூட்டினர். மின்னஞ்சலில் பல கடிதங்கள் வந்திருந்தன. ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நிறைய நண்பர்கள் கதையை தாறுமாறாக விளாசி பல நெகட்டிவ் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்கு ஸ்பெசல் நன்றி. கதை குறித்து திட்டி வந்த விமர்சனங்கள் நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுதிப்பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது.


இதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது.27 comments:

KUTTI said...

super boss...

keep it up.. i love your writing style.

mano

Arul said...

வாழ்த்துக்கள் தல ..

Unknown said...

////இதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது. ///இது இது இருந்தா போதும் வாழ்கையில் பல லட்சம் என்ன ட்ரில்லியன் லட்சம் மீட்டார் கூட போகலாம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆக, ஒரு வழியாக ஆனந்த விகடனில் உங்களின்
ஒரு கதை பிரசுரமாகிவிட்டது. (அந்தக் கதையை
இணைப்பு கொடுத்திருக்கலாம்.) வாழ்த்துக்கள்!
உங்களின் ஆரம்ப விடாமுயற்சிகள் முதல் இன்றைய
நிறைவேற்றம்வரை சுவாரஸ்யமாய் இடுகையில்
சொல்லியிருந்தீர்கள்.
இனிமேல் மற்ற பத்திரிகைகளுக்கும் சிறுகதைகள்
எழுதுங்கள். (விகடனில் வாரத்திற்கு ஒரு கதைதான்
போடுவார்கள்.)
இளைய தலைமுறை பற்றிய அனுபவங்களும்
எழுதுங்கள்.

அகல்விளக்கு said...

அது இங்க போட வேண்டிய கதை இல்லைன்னு....

ப்ளாக்குல போட்டு, உடனே டெலிட் பண்ணப்பவே நினைச்சேன் தல....

ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு தல....


:-)

பிச்சைப்பாத்திரம் said...

வாழ்த்துகள் அதிஷா. அடுத்த சிறுகதை காலச்சுவடில் வர வாழ்த்துகள். :)

Unknown said...

வாழ்த்துகள் வினோ!

Sukumar said...

வாழ்த்துக்கள்...

Truth said...

மிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அதிஷா! எதுக்கும் புதியதலைமுறைக்கு எழுதி பாருங்க. கண்டிப்பா வரும்:-)

Unknown said...

வாழ்த்துகள் அதிஷா..

ப்ளாக்ல போட்டுட்டு ஏன் டெலிட் பண்ணீங்கன்னு நானும் யோசிச்சேன்.

எறும்பு said...

வாழ்த்துகள் Athisha..

அப்ப உங்க கதையை விமர்சித்து திட்டி மெயில் போட்டவர்கள்ள நானும் ஒருத்தன்

:)

Jackiesekar said...

வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஸ்ரீ.... said...

உங்கள் ஆரம்ப வெற்றிக்கு வாழ்த்துக்கள் அதிஷா! இன்னும் சாதிப்பீர்கள்.

ஸ்ரீ....

மோனி said...

வாழ்த்துகள் சகா...

rajasundararajan said...

ஏலாமையைக் 'கெட்ட வார்த்தை' என்று குறியீடாக்கித் தந்திருக்கிறீர்கள் என்பது என் வாசிப்பு. வெகுளியும் இன்னாச்சொல்லும் ஏலாமையால் வருவனதாமே?

உண்மையைச் சொல்லப் புகுந்தால், பெரும்பாலான வலை எழுத்தாளர்களை என உங்களையும் - உங்கள் குற்றச்சாட்டுகள் நக்கல்களைக் கொண்டு - ஒரு விடலைத்தன எழுத்தாளராகவே கணக்கு வைத்து இருந்தேன். 'கெட்ட வார்த்தை' சிறுகதை இவ்வளவு விரைவில் உங்களை முதிரத் தந்ததில் மகிழவும் மகிழ்கிறேன். (இப்படித் திருவினை ஆக்கும் என்று பைத்தியக்காரன் வலைப் பக்கத்தில் உங்களை முன்னெச்சரித்து இருந்ததும் நினைவுக்கு வருகிறது). நர்சிம் தன் வலைப்பதிவில் உங்கள் கதையைப் பற்றிக் குறிப்பு எழுதி இருக்காவிட்டால் ‘கெட்ட வார்த்தை’யை நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை.

நர்சிம் பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம்:

rajasundararajan said...

நன்றி, நர்சிம். 'ஆனந்தவிகடன்' இதுபோல் ஆகச் சிறந்த படைப்புகளையும் அவ்வப்போது பொதுப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அது எவ்வப்போது என்று ஆரூடம் அறிய வழியில்லாததால், மற்று கொப்பூழ், முலைப் படங்களுக்கா இந்த விலை என்று நான் வாங்குவதில்லை.

சற்று முன்புதான் டாக்டரம்மா வீட்டில் 'ஆனந்தவிகடன்' கிடக்கக் கண்டு, அதிஷாவின் 'கெட்ட வார்த்தை' கதையை வாசித்தேன். அவர் வாழ்க!

தாயைப் பற்றிய மிகச் சரியான புரிதல்/ படிமம்: பசி தீர்ப்பவள் தாய்; மகன் சாப்பிட்டானா, யாரையும் சாராமல் நிற்கிறானா இந்தக் கவலைகளுக்கு உரியவள் தாய். பசி என்பது பற்றாக்குறை; வெறுமை. கதை நெடுகிலும் காணக் கிடப்பது இதுதான். அத்தைபெண்ணின் தாவணி விலகலும் பசியோடு முடியப்படுகிறது.

வாசிப்பின் முடிவில், பசியோடான சமன்பாட்டில் தாயை இட்டுப் பார்க்க நேர்ந்து எனக்கும் அழுகை வந்தது.

September 8, 2010 12:24 AM

டுபாக்கூர் பதிவர் said...

இது மாதிரி இன்னும் பல கோடி மில்லிமீட்டர்கள் செல்ல வாழ்த்துகள்...

அப்பாலிக்கா ஒரு டவுட்டு...

// ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''.//

இது தற்செயலா எழுதினதுதானே! :)

Anonymous said...

கதையின் போக்கு அருமை. ஆண்களின் ஒரு உலகத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தாயன்பை உணர்த்த ஒரு “கெட்ட வார்த்தை” தேவையாய் இருந்தது தான் உறுத்தியது. நேர்மறை சிந்தனைகளை மேம்படுத்துங்கள். ராஜாஜி படித்திருக்கிறீர்களா? ”அறிவின் குரல்”-ராஜாஜியின் மணிமொழிகள் , தொகுத்தவர் எஸ்.வி.எஸ், திருவரசு புத்தக நிலையம்...படித்துப்பாருங்கள்.

சுவாசிகா said...

வாழ்த்துகள் அதிஷா!

பாருங்க..சென்ற வாரம் அந்த கதையை படிச்சேன் ஆனா எழுதினது யார்ன்னு கவனிக்கல..

எனக்கு கதை பிடிச்சிருந்தது! இன்னும் நிறைய படைப்புகள் அச்சில் வர வாழ்த்துகள்!

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Giri Ramasubramanian said...

சார்....ஊரறிந்த உலகறிந்த பத்திரிக்கையாளரான நீங்களே விகடனில் கதை வெளி வந்ததை இத்தனை துள்ளிக் குதித்து எழுதினால்.... எழுதியதோடு மட்டுமல்லாமல்....இன்னும் நிறைய வாசிக்கோணும்.....பழகோணும்'னு இத்தனை அடக்க ஒடுக்கமா எழுதினால்...
தெருவோரம் டீ ஆற்றிக் கொண்டிருக்கும் நாங்களெல்லாம் எவ்ளோ அடக்க ஒடுக்கமா இருக்கோணும்'னு புரியுது.

உங்க கதையை வீடு சென்றுதான் வாசிக்க வேண்டும். இருப்பினும், என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள், தாமதமாக.

Muthukumara Rajan said...

கதைகள் படிக்கும் பழக்கம் இல்லை ஆனால் உங்கள வலைப்பதிவு நன்றாக உள்ளது


வாழ்த்துகள் மேன்மேலும் வளர ...

subbu said...

"கெட்ட வார்த்தை" யில் நுண் உணர்வுகளை அழகாக எழுதி இருந்தீர்கள் ...

vvraja said...

தீயா எழுதுங்க பாஸு

☼ வெயிலான் said...

படித்தவுடனே ஏன் இந்தக் கதை பதிவில் வந்தது என்ற சந்தேகம் வந்தது.

விகடனில் வந்தது மகிழ்ச்சி வினோ!

Karthik said...

வாழ்த்துக்கள் அதிஷா. கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. :)

Raashid Ahamed said...

கண்டிப்பாக நீங்கள் செய்த அத்தனை விடா முயற்சிகளையும் பின்னாளில் பெரிய ஆளாக வந்தவர்கள் அத்தனை பேரும் செய்திருக்கிறார்கள். அத்தனை பேர்களும் ஜெயித்தார்களா தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஜெயிப்பீர்கள். “அந்த புள்ளைய பாத்தியா முன்னுக்கு வற்ற லட்சணம் அது முகத்திலேயே தெரியுது.” அப்டீன்னு என் பாட்டி உங்க போட்டோவ பாத்துட்டு சொன்னாங்க !!