Pages

23 June 2011

பாட்டுத்தலைவன்
நீதிபதிகள் தீர்ப்பை சொல்லச் சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். ஸ்ரீநாத் எலிமினேடட்! நீதிபதிகள் அறிவித்தனர். அப்பா அழுதுவிட்டார். அழுகை கோபமாக மாறியிருக்க வேண்டும். மனதிற்குள் ஸ்ரீநாத்துக்கு இனி பாடவேண்டாம் என்கிற மகிழ்ச்சி. சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான். டிவியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சோபலட்ச ஜனங்களும் அழுதனர். பிண்ணனியில் சோக இசை வடிய... ‘ஆறுவயதிலேயே அசாத்திய திறமை கொண்ட இவர் போட்டியை விட்டு இப்போது வெளியேறினாலும் வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் பாடுவார்..’ பிண்ணனி குரல் ஒலிக்க நிகழ்ச்சி முடிந்தது.

இன்னும் இரண்டு வாரங்களில் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் வொய்ல்ட் கார்ட் ரவுண்ட். தோற்றவர்கள் கூடி பாடுவார்கள். அதில் இருவருக்கு இறுதி வாய்ப்பு. வெற்றிப்பெற்றே ஆகவேண்டும். அவனுக்கல்ல அவனுடைய அப்பாவுக்கு. அவர் வெறிபிடித்த மாதிரி அலைந்தார். பல இசை கலைஞர்களோடுப் பேசினார். எஸ்.எம்.எஸ் ஓட்டு மிக முக்கியம்.. ஏர்பெல் நிறுவனத்திலிருந்து உயர் அதிகாரியிடம் நிறைய ஓட்டுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு விலை பேசத் தொடங்கினார்.

கடைசி சுற்றுப்போட்டியில் அவனை எலிமினேட் செய்தபோது எப்படி அழுதான் தெரியுமா? அதை அவனால் மட்டுமே விவரிக்க முடியும். தோற்றதற்காக அவன் அழவில்லை. அவனுக்கு தோல்வியென்றால் தெரியாது. அவன் பிறந்ததிலிருந்து அப்பா அவனை அது போல திட்டினதே இல்லை. பின் மண்டையில் அடித்து அடித்துத் திட்டினார். சனியனே சனியனே! எத்தன வாட்டி பிராக்டீஸ் பண்ணே! அப்படி என்ன ஞாபக மறதி.. இனி நான் எப்படி ஆபீஸ்ல மொகத்த காட்டுவேன்..

ஒவ்வொரு சுற்றிலும் அவன் வெற்றி பெற்று முன்னேறும் போதும் அப்பா நிறைய பாராட்டுவார். சிரிப்பார். நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு சார் ஸ்ரீநாத் ஜெயிச்சிட்டான். பாடகர் பாலா அசந்துட்டார். அப்படியே பையன அலேக்கா தூக்கிட்டார். பாடகி அனுசுயாஸ்ரீ எப்படி பாராட்டினாங்க தெரியுமா , வருங்காலத்துல பெரிய சிங்கரா வருவானு சொன்னாங்க.. தினமும் நிறைய ரசிகர்கள் போன் பண்றாங்க!

மகிழ்ச்சியில் சாக்லேட் வாங்கித்தருவார். அவன் சாக்லேட்டை வாங்கி ஆவலோடு பிரித்து வாயில் போடும் போது அதை பிடுங்கி விடுவார். பாதி உடைத்துக்கொடுப்பார். குரல் கெட்டுவிடுமாம். ஐஸ்கிரீம் அறவே கிடையாது. ஆனால் மடியில் வைத்துக்கொஞ்சுவார். அவன் என்றால் அவருக்கு உயிர். தன்னுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்று கருதினார். விளையாட்டாகத்தான் எக்ஸலன்ட் சிங்கரில் ஸ்ரீநாத் கலந்து கொண்டான். யாருமே எதிர்பார்க்கதது நடந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் அவன் ஜெயிப்பதும், தொடர்ந்து அவனுக்கு வந்து விழும் பாராட்டும்.. அவையெல்லாம் அப்பாவை நோக்கியாதாய் மாறியதும் .. காலில் இறகு முளைத்து பறக்கத் தொடங்கினார். இத்தனை புகழை அவன் பரம்பரையில் யாருமே பார்த்ததில்லை.

இப்போதெல்லாம் அவன் ஹோம் வொர்க் செய்வதில்லை. ஸ்கூலுக்கு எப்போதாவதுதான் செல்கிறான். மிஸ் கூட அவனை திட்டுவதில்லை , எப்போதும் அடுத்த என்ன பாட்டு பாடப்போறடா செல்லம்? பாலா சார்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கித்தரீயா? மாதிரியான கேள்விகள்தான்! ஹோம் வொர்க் ஏபிசிடி பிரச்சனைகள் இல்லை.. அது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.

பூங்காவுக்கு போய் சறுக்கி விளையாட முடிவதில்லை. பூங்காவுக்குள் நுழைந்தாலே ஏ அங்கபாரு ஸ்ரீநாத் என்று கூட்டம் கூடி விடுகிறது. சிலர் ஆட்டோகிராப் கூட கேட்கிறார்கள். அவன் பெயரை அட்சர சுத்தமாக எழுத பழக்கிவிட்டிருக்கிறார் அப்பா. யாரோடும் விளையாடுவதில்லை. அவன் கத்திக்கொண்டு எங்காவது ஓடினால் பிடித்துக்கொள்வார். ஏன் இப்படி கதர்ற வாய்ஸ் என்னாவறது..

தன்னுடைய முழுநேர பிஸினஸைவிட்டுவிட்டு இப்போதெல்லாம் எப்போதும் ஸ்ரீநாத்தை கவனிப்பதையே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். அதில் அவனுடைய அம்மாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான். முன்னெல்லாம் அர்த்தராத்தியில் கதவு தட்டி விடிவதற்கு முன் விமானத்தில் பறப்பார். ஆனால் அப்பாவின் பாட்டுக்காரன் பயணம் அம்மாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதை சொன்னதற்கு சண்டையாகி சண்டை முற்றிப்போய் டைவர்ஸ் வாங்கிட்டு உங்கப்பன் வீட்டுக்கே போய்க்க்கோடி என்பதாக , அம்மா சரணடைந்து சமாதானத்திற்கு வர முடிவுற்றது.

மியூசிக் சேனல்களுக்கு இணையாக இருபத்திநான்கு மணிநேரமும் வீடுநிறைய பாட்டுதான். காலையில் நான்கு மணிக்கே எழுப்பி விடுவார் அப்பா. தூக்கம் தூக்கமாக இருக்கும். டிவிஎஸ் பிப்டி அதிர பாட்டு மாஸ்டரும் வந்துவிடுவார் , அப்பா பக்கத்திலேயே அமர்ந்த படி அவனையே பார்த்துக்கொண்டிருப்பார். அவன் அரைக்கண்ணில் தூங்கியபடி பாடுவான். மீண்டும் மீண்டும் ஒரே பாட்டை பாடுவான். மாஸ்டர் விடாப்பிடியாக வாயில் மாவா வழிய ‘பையன் நன்னா பாதறான் அந்னா இந்நுனும் கொந்தம் பிராக்திஸ் பந்தா சரியாபூதூம்.. ‘’ என்பார். மாவா வாசனை அவனுடைய ஏசி அறையில் நிரம்பி எங்கும் மாவா பொடி காற்றில் அலைவதாய் கற்பனை செய்து கொள்வான். அந்த பொடி தூளாகி வானில் பரவி , கோலங்களைப்போல விதவிதமான உருவங்களாய் மாறி மாறி ஓடி ஆடி வித்தைகள் காட்ட.. ‘’தே கந்ணா இன்னடா நீ காலைலயே தூங்கதே..’’ என்று பின்மண்டையில் தட்டி எழுப்பி விடுவார் அந்த மாவா மாஸ்டர்.

இவன் விழித்துக்கொண்டு மீண்டும் சாசச சாசச ரீரிரி என கத்துவான். பக்கத்துவீட்டிலிருப்பவர்களுக்கு கூட இவன் இன்ஸ்பிரேஷன் ஆகிப்போயிருந்தான். தங்களுடைய பிள்ளைகளுக்கு அவனை காட்டி காட்டி ‘பாரு அதுவும்தான் புள்ள! என்னாமா பாடி என்னமா ஜெயிச்சுண்டு வந்திருக்கு.. நீயும்தான் இருக்கியே சரியான மண்ணு.. உன் அப்பா மாதிரி , சரியான தத்தி’ என்று பேசுவது ஸ்ரீநாத்தின் ஏரியாவில் சாதாரணமாகிவிட்டது. அவனுடைய வீட்டு வேலைக்காரியின் பையன் குமாரும் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டான். ஒப்புக்கு சப்பானியாக பாடவைத்து முதல் சுற்றிலேயே அவனுடைய சாரீரம் சரியில்லை என விரட்டிவிட்டார்கள். அதில் ஸ்ரீநாத்துக்கு நிறைய வருத்தம். ஆனால் குமாருக்கு வருத்தமில்லை எப்போதும் போல அம்மாவோடு வந்து ஸ்ரீநாத் பாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். அப்பா அவனோடு பேச விடுவதுமில்லை. பேசவிட்டால் நிறைய கதை சொல்லுவான்.. எல்லாமே அவனே சொல்லும் கதை. அவன் ஏரியாவில் கிடைக்கும் தேன்மிட்டாய் தருவான். ச்சே ஏன்தான் பாடுறேனோ! மீனாட்சிக்கு மகனா பொறந்திருக்கலாம் என்று நினைப்பான்.

இன்னும் மூன்று நாள்தான் இருந்தது. இவன் இதுவரைக்கும் அந்தப் பாடலை ஆயிரம் முறை பாடியிருப்பான். அவ்வளவும் பயிற்சி. சரணத்துல இன்னும் ஸ்பீட் வேணும்.. அந்த இடத்துல சங்கதி சரியில்ல.. பல்லவி பல் இளிக்குது மாதிரியான அப்பாவின் வசனங்கள் தூங்கும் போது கூட காதில் ரீங்காரமிடும். நேற்று தூங்கும் போது போட்டியில் இவன் தோற்பதாகவும் அப்பா அவனுடைய நாக்கை இழுத்து கத்தியால் அறுப்பதாகவும்.. ரத்தம் வருவதாகவும் கனவு கண்டான். அரை இரவில் விழித்தெழுந்து அழ ஆரம்பித்துவிட்டான். அப்பா எழுந்து வந்து அழக்கூடாது என்று அதட்டினார். அழுதாலும் சாரீரம் கெட்டுவிடுமாம். வாயைப்பொத்திக்கொண்டு விசும்பினான். அழாத அழாத.. என்று கையை ஓங்கிக்கொண்டு கண்கள் சிவக்க அப்பா நிற்பதைப் பார்த்து அம்மாவுக்கே லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி படுத்து உறங்கினான். அடுத்த நாள் போட்டி.. தூக்கத்திலும் அந்த பாடலையே பாடிக்கொண்டிருந்தான். அம்மா நான் நாளைக்கு தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு என்றான். அம்மாவும் பயத்தோடே இறுக்க கட்டியணைத்தபடித் தூங்கினாள்.

அடுத்த நாளில் அவன் பாடினான். நீதிபதிகள் கைத்தட்டினர். அனைவரும் பாராட்டினர். இறுதியில் முடிவு அறிவிக்கப்படும் நேரம் வந்தது. நீதிபதிகள் தீர்ப்பை சொல்ல சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்த அம்மாவும் நினைத்துக்கொண்டாள்.. ‘’ஒருவேளை தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு’’ திகிலாக இருந்தது. அவன் வெற்றிபெற்றான். அப்பா மகிழ்ச்சியில் அவனை தூக்கி கொஞ்சினார். சிரித்தார். கண்ணீர் விட்டு அழுதார். ஸ்ரீநாத்துக்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை. அவன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’தோத்திருந்தா அப்பா என்ன செய்திருப்பாரு’’ என யோசித்துக்கொண்டேயிருந்தான்.

(நன்றி- சூரியகதிர்)

20 June 2011

லீவ் லெட்டர்
விடுநர்

டி.சுரேஷ்குமார்,
விற்பனை பிரதிநிதியாளர்
மகிமை சொல்யூசன்ஸ்
சென்னை-18


பெறுநர்

மேலாளர்
விற்பனை பிரிவு
மகிமை செல்யூசன்ஸ்
சென்னை -18


பொருள் – விடுப்பு வேண்டி விண்ணப்பம்

மதிப்பிற்குரிய ஐயா,

கடந்த ஆறு ஆண்டுகளாக நம் மதிப்பிற்குரிய நிறுவனத்தில் நான் நேரத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். இக்கால கட்டத்தில் நான் அதிகமாக விடுப்பு கோரியதுமில்லை, மிக குறைந்த நாட்களே என் திருமணத்திற்காக மட்டும் மூன்று நாள் விடுப்பில் சென்றுள்ளேன். தற்சமயம் வேறு வழியின்றி விடுப்பு கோரி இந்த கடிதத்தை பெருமதிப்பிற்குரிய உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

உங்களுக்கு தெரியாததில்லை. ஏற்கனவே நம்முடைய நியூஸ் சேனல்களும் செய்தித்தாள்களும் நாளை காலை பதினோரு மணிக்கு ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடப்போவதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதை உறுதிப்படுத்துவதைப்போல உலகம் முழுக்க ஆங்காங்கே கடல்சீற்றமும் எரிமலை வெடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. அதை நீங்கள் அறிந்திருந்தும் இதோ இப்போது மணி மாலை ஐந்தாகிவிட்டது இதுவரை விடுமுறை அறிவிக்கவில்லை என்பதால் நாளை எப்போதும்போல வேலைக்கு வரவேண்டும் என்பதை உணர்கிறேன்.

உலகம் மொத்தமாக அழிவதால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சொல்லப்போனால் மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய வீட்டில் என் மனைவியும் குழந்தையும் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர். அவர்களை இதுவரை நான் எங்குமே அழைத்து சென்றதில்லை. என்மீது அளவிடமுடியாத காதலை வைத்திருக்கும் என் மனைவியோடு பத்து நிமிடத்திற்கு மேல் பேசியதேயில்லை. எப்போதும் வேலை வேலை என்றே இருந்துவிட்டேன். இந்த நிலையில் நாளை உலகம் அழிந்து அதில் மாண்டுபோகும் அனைவரோடும் என் மனைவியும் குழந்தையும் இறந்துபோனால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையாது. அதனால் நாளை அரைநாளாவது அவளோடு செலவிட முடிவு செய்துள்ளேன். நாளைக்கு உலகம் உண்மையிலேயே அழிந்து போனால் இந்த விடுப்பு விண்ணப்பத்திற்கு வேலையில்லை.

ஆனால் ஒரு வேளை நாளை மதியம் பதினொரு மணிக்கு உலகம் அழியாமல் போனால் திங்கள் கிழமை எப்போதும் போல நிச்சயமாக வேலைக்கு வந்துவிடுவேன் என்பதையும் உளமாற உறுதியுடன் கூறுகிறேன். எனவே தயை கூர்ந்து உங்கள் அளவிடமுடியாத கருணையோடு ஒரு நாள் விடுப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இக்கடிதம் கண்டு கோபம் கொண்டு என்னை வேலையை விட்டு மட்டும் நீக்கிவிட வேண்டாம் என்றும் வேண்டி விரும்பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

உண்மையுள்ள ஊழியன்

டி.சுரேஷ் குமார்.

11-12-2012


(நன்றி - தினகரன்)

15 June 2011

ஒரு ஊர்ல ஒரு தாதாவாம் - ஆரண்ய காண்டம்ஒரு ஊர்ல ஒரு தாதாவாம் இன்னொரு தாதா சோதாவாம். அதுல ஒரு ஹீரோவாம் அவனுக்கு ஒரு தாராவாம்.. படம் முழுக்க யுத்தமாம் அதுல வந்தது ரத்தமாம். கிளைமாக்ஸ்ல சண்டையாம்.. உடைஞ்சது வில்லன் மண்டையாம். தமிழில் வெளியான எல்லா கேங்ஸ்டர் திரைப்படங்களுக்குமே இதுதான் அடிப்படை கதை. மாதம் ஒரு படமாவது இதுபோல வெளியாவது சமகாலத்தில் தவிர்க்க முடியாதது. அவ்வகையில் இன்னொன்று ஆரண்யகாண்டம்.

இனி படம் குறித்து...

‘ஆரண்யகாண்டம்’ படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே இது நல்லபடம் உலகபடம் விருதுபெற்ற படமென செய்திகளும் பேட்டிகளும் தொடர்ந்து வெளியாயின. படமும் வெளியானது. இது ஏதோ நியோ நாயர் வகை படமென்று படத்தின் குழுவினரே சொல்லிக்கொண்டனர். பலரும் ஆகா இதுதான் தமிழ்சினிமாவின் மைல்கல் , வைரக்கல், கோமேதகக்கல் என பாராட்டித்தொலைத்தனர். பத்திரிகைகளும்... பாராட்டின. எல்லோரும் பாராட்டினால் அது நிச்சயம் நல்லதாகத்தானே இருக்கவேண்டும். அப்பாடா அறிவுஜீவிகள் முதல் ஆட்டோக்காரர்கள் வரைக்கும் கொண்டாடும் ஒரு நல்ல தமிழ்சினிமா தமிழில் வெளியாகிவிட்டது போலிருக்கிறதே என்கிற ஆர்வம் மேலிட படத்திற்கு சென்றோம்.

வடசென்னையை பின்புலமாக கொண்டு வெளியான தாதா தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை மூன்றிலக்க எண்களில் இருக்கலாம். இரண்டு தாதா கோஷ்டி அதில் சில ரவுடிகள் , அதில் ஒருவன் அதாவது கதையின் நாயகன் தனியாக பிரிந்துசெல்வதால் தாதாக்களிடையே ஹீரோவை மையமாக்கி உருவாகும் சிக்கல்கள்... டமால் டுமீல் பட் படார் வெட்டு குத்து கிளைமாக்ஸ். சுபம். இந்த தாதா கும்பல் கதையொன்றும் தமிழுக்கு புதிதில்லை. அண்மையில் வெளியான சுந்தர்சி நடித்த நகரம் மற்றும் தலைநகரம் படங்களின் கதையுங்கூட இதைப்போன்ற பின்னணியிலேயே அமைந்திருக்கும். கொடுமையாக ஆரண்யகாண்டம் படத்திலும் இதே மாதிரியான கதையே! கதையில் எந்த புதுமையும் கிடையாது. சொல்லப்போனால் படத்தில் கதையே கிடையாது. திரைக்கதை மட்டும்தான். திரைக்கதையிலும் புதுமையொன்றும் கிடையாது.

படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். அதாவது மற்ற தாதா படங்களில் நாம் காணுகிற அதே மாதிரியான மொக்கை லாஜிக் ஓட்டைகள்! அவை தெரிந்தே பகடிக்காக செய்யப்பட்டிருந்தால் அடடாவென கைத்தட்டி வரவேற்றிருக்கலாம்.. குவான்டின் டாரன்டினோவின் படங்கள் அதைத்தான் செய்ன. ஆனால் இதிலோ அவை திரைக்கதையின் ஒருபகுதி என்பதை உணரும்போது இதுவும் ஒரு சாதாரண படமே , இதில் நியோ நாயரும் இல்லை திவ்யா நாயரும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முயன்று தோற்றுப்போகிறான் வில்லன். உடனே அவளை அடிக்கிறான். ஷகிலா படங்களில் இதுபோன்ற காட்சிகள் ஏராளமாக பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு வில்லன் பல்விளக்கிக்கொண்டே கொர கொர குரலில் (வேலு நாயக்கர் போல பேசுகிறார்). தமிழ்சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சி. பிறகு ஒருகாட்சியில் நல்லவன் ஒருவனை போட்டு அடித்துவிட்டு வெளியே வந்து ஏதோ பாட்டுக்கு ரத்தம் வழியும் சட்டையோடு உற்சாக நடனமாடுகிறான் வில்லன். இதுவும் தமிழ்சினிமா கண்டிராத புதுமையான காட்சியில்லையா?

போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஜீப்பில் ரகளை செய்து தப்பிப்பது, அதற்கு பிறகு போலீஸும் அவரை ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவது, மனைவியை கடத்தப்போகிறார்கள் என்பது தெரிந்தவுடன் போலீஸிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ, போகும் வழியில் ஒரு போன் பண்ணி மனைவியை தப்பிக்க சொல்லக்கூடவா அவனுக்கு சிந்தனையிருக்காது.. இத்தனைக்கும் அதற்கு முந்தைய காட்சியில் அவன் செல்போனில் மனைவியோடுதான் பேசிக்கொண்டிருப்பான்!

இதுதவிர வில்லன்கள் கூட்டம் ஹீரோவை துரத்தும்.. டுப்பாக்கியோடு மாய்ந்து மாய்ந்து சுட்டாலும் ஹீரோ மேல் ஒரு குண்டு கூட பாயாது.. கிளைமாக்ஸில் நூறு பேர் மோதும் ஒரு பெரிய சண்டையில் முக்கிய வில்லனை குறிவைத்து கொன்றுவிடுவார் ஹீரோ.. அதுவும் எப்படி அவர் கையை சுழற்றினால் பத்து பேர் பறந்துபோய் விழுவார்களாம்.. ரத்தம் வேறு கிராபிக்ஸில் பல் இளிக்கிறது! இதற்கு நடுவில் தேவையே இல்லாமல் ஆங்காங்கே திணிக்கப்பட்ட சூப்பர் ஸ்லோ மோஷனும் படுத்துகிறது. இவையெல்லாம் பகடி நக்கல் நையாண்டி என்கிற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் வாவ் என்று சொல்லியிருக்கலாம்!

முதல் பகுதியில் பொறுமையாக நீளும் திரைக்கதை.. இடைவேளைக்கு பிறகு வேகம் பிடித்தாலும்.. முடிவை நோக்கி நீண்டுகொண்டே போவது சலிப்பை உண்டாக்கி விடுகிறது.
மணிரத்னமே கைவிட்டுவிட்ட இருட்டில் படமெடுக்கும் புராதன யுக்தியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். ஒருவேளை பிளாக் காமெடி வகை படமென்பதால் இருட்டிலேயே படமெடுத்திருக்க கூடும் என நினைக்கிறேன். அதற்காக இப்படியா? அதற்காக ஒட்டுமொத்தமாக ஒளிப்பதிவை நிரகாரிக்கவும் இயலவில்லை. சில இடங்களில் கேமரா நன்றாகவே இருக்கிறது.

இசை யுவன்ஷங்கர் ராஜாவென்பது படத்தின் பெரிய பலம். பல இடங்களில் பலமுறை கேட்ட ஹாலிவுட் படங்களின் பிண்ணனி இசை சாயலை கேட்க முடிந்தாலும், குட்டிப்பையன் ஒருவன் கையில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு ஓடுவான்.. அதை மறைத்துவைக்க.. அருமையாக படம்பிடிக்கப்பட்ட காட்சி மற்றும் பின்னணி இசை. நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஏனோ படத்தில் வருகிற சிறுவன் மற்றும் அவனுடைய அப்பா தொடர்பான காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ‘’பைசைக்கிள்தீவ்ஸ்’’ படத்தின் காட்சிகளை நினைவூட்டினாலும் மிகமிக பிடித்திருந்தது!

படத்தில் பாராட்டப்படவேண்டிய அம்சங்களில் ஒன்று அவ்வப்போது கேமரா, எப்போதும் இசை, அருமையான நடிகர் தேர்வு. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற நடிகர்களை தேர்வு செய்தது, அதற்கு உதாரணம் சப்பையாக வருகிற ரவிகிருஷ்ணா. ஜாக்கி ஷெராப் பாத்திரத்தின் பாத்திரம் விளக்கப்படவில்லையென்றாலும் அவருடைய நடிப்பு கச்சிதம் (வேலுநாயக்கரை நினைவூட்டினாலும்)

இவைதவிர இயக்குனரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. ஏற்கனவே முதல் அடி சறுக்கலாக இருந்தாலும் முயற்சி முக்கியமானது. அதற்காகவேனும் பாராட்டலாம். குவான்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்சன் படத்தினை நூறுமுறையாவது பார்த்திருப்பேன்.. அப்படியொரு படம் தமிழில் வராதா என்கிற ஏக்கம் எப்போதுமிருந்தாலும்.. இது அம்மாதிரியான ஜஸ்ட் பாஸ் முயற்சி என்பதே மகிழ்ச்சிதான்.

நாலைந்து கெட்டவார்த்தைகள், முகத்திலடிக்கும் நிறைய ரத்தம், ஆர்ப்பாட்டமில்லாத வன்முறை, புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டுமே போதும் என இயக்குனர் நினைத்திருக்கலாம். அதற்கும் மேல் ஒரு முழுமையான திரைப்பட அனுபவத்தில் ஏதோ மிஸ்ஸிங்.

சென்னையில் ஆங்கில நாடகங்கள் அடிக்கடி அரங்கேற்றப்படும். கதை சென்னையின் பின்புலத்தில் அமைந்திருந்தால் சொல்லவே வேண்டாம் நம் பீட்டர்வாழ்தமிழர்கள் சேரிகளை பற்றிய காட்சிகளில் மிகுந்த உற்சாகத்தோடு கலாய்க்கும் வேலையை செவ்வனே செய்வதை பார்த்திருக்கிறேன். அது எனக்கு எப்போதுமே எரிச்சலையே உண்டுபண்ணும். சேரிகளின் மீதான பீட்டர்களின் பார்வை எப்போதுமே ஒரே மாதிரியாகவே மேலோட்டமாகவே இருந்துதொலைக்கும். இப்படமும் அதே வேலையை செய்வதாக உணர்ந்தேன்.

கெட்ட வார்த்தைகள் நிறையவருவதாலும், படத்தின் நிர்வாணத்தன்மையினாலும் பலரையும் குறிப்பாக ஆண்களை கவரலாம்... கெட்டவார்த்தைகளும் நிர்வாணத்தன்மையும்தான் ஒரு படத்தை சிறந்ததாக மாற்றுகிறது என நான் நினைக்கவில்லை. இப்படம் எனக்கு பிடிக்கவில்லை.

14 June 2011

வியாசர்பாடி கபாலி!அண்மையில் வியாசர்பாடியில் ஒரு பேட்டிக்காக சில கால்பந்தாட்ட வீரர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்காக அதிகாலை 5 மணிக்கே சென்றுவிட்டிருந்தேன். வரவேண்டியவர்கள் வர தாமதமானதால் டீக்கடை வாசல் ஒன்றில் காத்திருந்தேன். உள்ளே போய்  ஒரு டீயை வாங்கிவிட்டு அங்கிருந்து நகர பின்னால் நின்றுகொண்டிருந்த ஆஜானுபாகுவான ஒரு உருவத்தின் மீது மோதிவிட்டேன். அதில் அவர் சரிய.. என் டீயெல்லாம் கொட்டிவிட்டது. நல்ல வேளை அவர் சட்டையில் படவில்லை. ஆனால் சரிந்தவர் விழுந்தேவிட்டார்.

சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். வியாசர்பாடியென்பது ரவுடிகளின் ஊர். அங்கே வாழ்கிறவர்கள் எல்லோருமே ரவுடிகள். அவர்கள் எப்போதும் கையில் பொருளோடு (பொருளின் பொருளென்னவென்றால் ஆயுதம்) அலைந்துகொண்டிருக்கிறவர்கள். அந்த ஆளும் அதைப்போலவே இருந்தான். சிகப்பு நிறகண்களில் கோபம் கொப்பளிக்க என்னைப் பார்த்தான். நான் அவனை பார்த்தேன்! அவனும் நோக்கினான் நானும் நோக்கினேன்!

எனக்கு பயத்தில் கைகளில் லேசான நடுக்கம், நான் பத்திரிகைகளில் படித்தவரை பல கொலைகளும் அதிகாலையில்தான் நடக்கின்றன. அவனுடைய பார்வையும் அதை உறுதி செய்வதாகவே இருந்தது. இரவெல்லாம் குடித்திருப்பான் போல நாற்றம் குடலை பிரட்டியது. இன்னமும் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். இந்த முறை உற்று பார்த்துக்கொண்டிருந்தான். கருவிழி குதித்துவிடும் போல இருந்தது. நான் அங்கிருந்து நகர்ந்து பக்கத்திலிருந்து பெட்டிக்கடையில் சிகரட் வாங்குகிற பாணியில் அவனை தவிர்த்துவிட்டு எஸ்ஸாக முடிவெடுத்தேன். ஆனால் அவனோ என்னை பின்தொடர்ந்து வந்து பார்த்துக்கொண்டேயிருந்தான். சும்மாவே வேர்க்கிற சென்னையில் இந்த நிலையிலும் ஒருவனுக்கு வேர்க்காவிட்டால் அவன் மனிதனே கிடையாதில்லையா..

சட்டையெல்லாம் நனைகிற அளவுக்கு வேர்த்துக்கொட்டியிருந்தது. அவனும் அதற்கேற்ப என்னை நெருங்கி வந்து நின்றான். ஆனால் பேசவில்லை. பார்த்துக்கொண்டேயிருந்தான். கண்களில் போதையும் கோபமும் ஆக்ரோஷமும்.. மவனே இன்னைக்கு செத்தடா.. செத்துப்போனா யாரு நம்ம வீட்டுக்கு போன் போட்டு சொல்லுவா.. இன்சூரன்ஸ் கிடைக்குமா.. கத்தில நெஞ்சுல குத்தினா உடனே சாவமா? பேசமா போலீஸ்க்கு போன் பண்ணிரலாமா? நிறைய கேள்விகளை நினைத்தாலும், அந்த ஆளை திரும்பி பார்க்கவும் பயமாகத்தான் இருந்தது.

துஷ்டனை கண்டால் தூரவிலகு என பாட்டி சொல்லிக்கொடுத்ததெல்லாம் நினைவுக்கு வந்து தொலைத்தது. ஒடிவிடலாம் என உத்தேசித்தேன். வேறு வழியில்லை நமக்கு தெரிந்த கராத்தே குங்பூ வித்தைகளை பயன்படுத்தி , கோபுடோ கிருஷ்ணமூர்த்தி சன்டிவியில் சொல்லிக்கொடுத்த தற்காப்பு கலைகளை பயன்படுத்தி அவனிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என சிந்தித்தேன். ரொம்ப காமெடியா இருக்கு பாஸ் என அசரீரியாக ஒரு குரல் மனதிற்குள் ஒலித்தது.
அவன் இப்போது என் முதுகிற்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தான். நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. லேசான உதறல். அடிவயிற்றில் புளிச்ச கரைசல்! அவன் என் தோளை பிடித்தான். ‘’எச்சூஸ்மீ பாஸ்’’ என்றான்.

‘’சாரி பாஸ்.. தெர்யாமே மோதிட்டேன்.. தப்பா நென்ச்சிகலியே’’ என்றான். பயமும் பதட்டமும் மனது முழுக்க இருந்தாலும் முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டு ‘’அதுக்கென்ன பாஸ் பரவால்ல பாஸ்.. பிரச்சனையில்ல பாஸ்’’ என்றேன். ஆனால் அந்த மனிதரோ முரட்டுத்தனமாக மூஞ்சை வைத்துக்கொண்டு ‘’பாஸ் இல்ல பாஸ்.. உங்கள பார்த்தா பட்ச்சவர் மாரி இருக்கு.. போதை கொஞ்சூம் ஜாஸ்தி’’ என்று விடாமல் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேயிருந்தார். மன்னிக்காவிட்டாலும் அடிவாங்குவேனோ என்கிற அச்சம் இப்போது!

‘’சரிங்க பாஸ்.. மன்னிச்சிட்டேன். ஓக்கேவா’’ என்று கைகளை நீட்டினேன்.
அவரு என் கையை பிடித்து அழுத்திப்பிடித்து... ‘’பாஸ் லவ்ப்பெயிலியர் பாஸ்.. அதான் ஓவராயிச்சி.. வரீங்களா ஒரு கட்டிங் சாப்டுவோம்’’ என்றவர் என் கையை பிடித்து இழுக்கவும் தொடங்கினார். அவருடைய முரட்டுத்தனமான அன்பை என்ன சொல்லி தவிர்ப்பதென்பதே புரியவில்லை.

‘’அய்ய்யோ அதெல்லாம் வேண்டாம் சார், நான் இன்னும் டிபன் கூட சாப்பிடல.. காலைல அஞ்சுமணிக்கு யாராச்சும் தண்ணி அடிப்பாங்களா, வெரி பேட்’’ என்றேன்.
அருகிலிருந்து சந்தில் நான்குபேர் அதில் ஒருவர் பெண் ஒரு ஃபுல் பாட்டிலை நடுவில் வைத்து ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் கஞ்சா வாசனையும் கமகமத்தத்து. பக் என்றிருந்தது. ‘’பாஸ் இன்னா பாஸ், உங்கள இட்ச்சி அசிங்கப்பட்த்திட்டேன்..ப்ளீஸ் வாங்க’’’ என்றார். நல்ல வேளையாக டீக்கடைக்குள்தான் அமர்ந்தோம். எதுவும் சொல்லாமல் அமைதியாய் சூடான டீயை உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்தேன்.

அவரோ தன் சோகமான உருக்கமான காதல் கதையை சொல்ல தொடங்கிவிட்டார். ஐந்தரை மணிக்கு காதல்கதையா.. டேய் ஏன்டா எங்கிருந்துடா வரீங்க என நினைத்தாலும் அவனுடைய கதையை கேட்காவிட்டால் அடிவிழ நேரிடும் என்கிற பயம். ‘’ச்சொல்லுங்க பாஸ்’’ என்றேன் எரிச்சலோடு!

‘’சார் ஜமுனானு ஒரு பொண்ணு’’

‘’பையனுக்குலாம் அப்படி பேர் வைக்கமாட்டாங்க மேல சொல்லுங்க’’

‘’இல்ல சார், ஜமுனானு ஒரு அழகான பொண்ணு’’

‘’சார் ஜமுனா அழகா இல்லையானு நாங்கதான் முடிவுபண்ணனும்.. ஹாஹாஹா’’
என்று கலாய்த்துவிட்டதாக நினைத்து சிரித்தேன். அவரோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு

‘’சார், இன்னாசார்..இப்படிலாம் பேசறீங்க.. நான் ஜமுனானு ஒரு பொண்ண இன்னாமாரி லவ்பண்ணேன் தெரியுமா’’ என்று சொல்லும் போதே கண்கள் கலங்கியிருந்தன..

நானோ ‘’தெரியாதே’’ என்று கிகிகிகி என சிரித்தேன்.

ஆனால் இம்முறை அவர் முறைத்தார். அவருடைய முகம் பற்றி எரிவதைப்போல இருந்தது. இந்த முறை தப்பிக்க முடியாது என்பது மட்டும் புரிந்தது. அவருடைய கண்கள் சிகப்பாகி கருஞ்சிவப்பாகி.. பல்லையெல்லாம் கடித்துக்கொண்டு... தோழர் உனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லையென நானே எனக்கே சொல்லிக்கொண்டேன்! ஆனா கடைசிவரைக்கும் பேட்டிக்கு வர சொன்னவய்ங்க மட்டும் வரவேயில்ல.. தீவிரவாதிகள் உருவாவதில்லை.. உருவாக்கப்படுகிறார்கள் என்று ஏதோ படத்தின் கிளைமாக்ஸில் போடுவாங்க இல்லையா.. அதுமாதிரி...

பின்குறிப்பு – இதற்கு பிறகு நடந்ததை சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் இந்தக்கட்டுரை இத்துடன் முடிவடைகிறது நன்றி வணக்கம்.