Pages

06 August 2011

சீமானும் முட்டாள்சீடர்களும்
நாம்தமிழர் இயக்கத்தின் தொண்டர்களுக்கு மூளை என்கிற வஸ்துவே இருக்காதோ என்கிற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதை நிரூபிக்கும் வகையில் சில்லறைத்தனமான காரியங்களில் ஈடுபடுவதில் முதன்மையானவர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் புத்தகயாவுக்கு பாதயாத்திரை செல்வதற்காக சென்னை வந்திருந்த சிங்களவர்கள் சிலரை அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். புத்த பிட்சுகளிடம் தங்களுடைய வீரத்தை வெளிக்காட்டுவது இது இரண்டாவது முறை! சினிமாவில் காட்டுவதைப்போல புத்தபிட்சுகளுக்கு குங்ஃபூவெல்லாம் தெரியாதுபோல!

சென்ற மாதத்தில் ஒருநாள் தொலைபேசிக்கான கட்டணம் செலுத்த ஏர்டெல் மையம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்தோம். எங்களுக்கு முன்னால் இருந்தவர் நாம்தமிழர் டிஷர்ட் போட்டுக்கொண்டு பரட்டை தலையும் முரட்டு பார்வையுமாக காட்சியளித்தார். க்யூ நகர அந்த நபர் கட்டணம் வசூலிக்கிற இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். அன்றைய தினம் ஏதோ இணைய பிரச்சனையால் டெபிட் கார்டில் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அதை அந்தப்பெண் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் முரட்டு நபரோ விடாப்பிடியாக அந்த பெண்ணை திட்டத்தொடங்கினார். பேச்சு இன்னும் நீண்டு.. ஏய் நீ ராஜபக்சேவோட கைக்கூலிதானே.. அந்தநாதாரி நாயோட பினாமிதானே.. என்றுதொடங்கி.. தமிழினத்தை இலங்கைல அழிச்சது பத்தாதுனு இங்கேயும் வந்துட்டீங்களா.. அது இது.. என அந்த பெண்ணிடம் பேச.. அப்பாவியான அந்தப்பெண்.. அழத்தொடங்கிவிட்டார். அந்தபெண்ணுக்கு ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு?

ஆனாலும் நம் வீரர் விடவில்லையே.. ஏர்டெல்லுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை பட்டியிலிட தொடங்கிவிட்டார். இதெல்லாம் சீமானுக்கே தெரியுமாவென்று தெரியவில்லை. கிட்டதட்ட ஒரு ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரைப்போலவே நடந்துகொண்டார். அந்த சென்டரின் மேலாளர் நேரடியாக வந்து அவரை சமாதானப்படுத்தி.. அனுப்பி வைப்பதற்குள் இடமே போர்க்கோலமாகிவிட்டது. நல்ல வேளை அந்த நபர் மட்டும் தனியாக வந்ததால் அடிதடி வெட்டுகுத்து கலவரம் ஏதும் நடக்கவில்லை. கூட்டமாக வந்திருந்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் போட்டு அடித்திருக்கலாம்.

தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பொறிபறக்க பேசும்போது உன் அக்கா தங்கைகளை நான் கற்பழிக்கட்டுமா என சவால் விடுகிறார். என்ன பேச்சு இது.. சிங்களர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் நாமும் அதையே செய்யவேண்டும் என சொல்வதெல்லாம் என்ன அரசியல் பார்வை என்பதை புரிந்துகொள்ளமுடிவதில்லை.

புத்தகயாவிற்கு பாதயாத்திரை வந்த சில சிங்களவர்கள் தங்களுடைய டிஷர்ட்டில் சிங்கள வாசகங்கள் எழுதப்படிருந்த காரணத்தினால் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களொன்றும் சிங்கள ராணுவத்தினரோ ராஜபக்சேவின் கைக்கூலிகளோ அல்ல , நம்மை போல சாதாரண மனிதர்கள்தான். தமிழ்நாட்டில் பாதயாத்திரை போகிறவர்கள் டீஷர்ட்டில் ஓம்முருகா என்று எழுதப்பட்டிருக்கும் இல்லையா அதுபோல அவர்களுக்கு தெரிந்த சிங்கள மொழியில் ஏதாவது வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிங்கள மொழி டிஷர்ட் அணிந்துகொண்டு தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டார்கள் என அவர்களை தாக்குவது எவ்வளவு முட்டாள்த்தனமான செயல்!

அப்பாவிகளை தாக்குவதில் சிங்கள ராணுவத்திற்கு நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை என்பதை காட்டுகிற செயலா இது!

ராஜபக்சேவும் அவருடைய இன்னபிற அடிபொடிகளும் இந்தியா முழுக்க சுற்றும்போதும் திருப்பதியில் தரிசனம் செய்யும்போதும் கருப்பு கொடி மட்டுமே காட்டுகிற இவர்களால் அடித்தால் திருப்பி அடிக்க முடியாத புத்தபிட்சுகளை தாக்குவதும் அப்பாவிகளிடம் எகனை மொகனையாக பேசுவதும்தான் என்ன கருமாந்திர வீரம்!

நாம்தமிழர் இயக்கத்தினரின் இந்த கண்மூடித்தனமான கொலைவெறிப்பாசம்.. தமிழகத்திற்கு வருகிற சிங்களர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற வெறி , எவ்வளவு பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை ஏனோ இயக்கத்தலைமையோ தொண்டர்களோ உணர்வதில்லை. மீனவனை அடித்தால் உன் மாணவனை அடிப்போம் என சவால் விடுவதால் பாதிக்கபடப்போவது யார்? இங்கே நீ சிங்களவனை அடித்தால்.. தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழனுக்கு பிரச்சனையொன்று வரப்போவதில்லை. இலங்கையில் வாழ்கிற அப்பாவி தமிழர்களுக்குத்தான் அடிவிழும். ஏற்கனவே பேரினவாத வெறிபிடித்த சிங்கள இராணுவத்தினர் இதுமாதிரியான செய்திகளை அறிந்துகொள்ளும்போதெல்லாம் நம் மீனவனிடமும் இலங்கையில் வாழும் அப்பாவிதமிழர்களிடமும் நம் சகோதரிகளிடமும்தான் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரிந்திருந்தும், இவர்களுடைய இச்செய்கைகளுக்கு பின்னால் இருக்கிற உளவியலை புரிந்துகொள்ள முடியவில்லை.

தற்போதைய சூழலில் நம்முடைய கவனமும் ஆற்றலும் இலங்கையில் உண்ண உணவின்றி உறைவிடமின்றி தவிக்கிற எண்ணற்ற தமிழர்களில் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்வதில் அல்லவா இருக்க வேண்டும். வீரப்பேச்சும் வெட்டிநாயமும் கொலைவெறி தாக்குதல்களும் அவர்களுக்கு எந்த நன்மையையும் விளைவித்துவிடாது என்பதை உணரவேண்டாமா? அப்பாவி தமிழர்களுக்கு நாம் உதவி செய்யவேண்டாம் குறைந்தபட்சம் இதுமாதிரியான பைத்தியக்காரத்தனமான செயல்களால் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நல்லது.