Pages

30 August 2011

அபூ பக்கீர் சிக்கந்தர்


‘’என்னடா பேர் இது இவ்ளோ நீளமா இருக்கு.. ஏதாச்சும் ஜாஃபர்கான், ஜாகீர்கான்,சித்திக் ஃபைசல்னு சின்ன பேரா வச்சுக்கிட்டாதான் என்ன? என்னடா நீயி!’’

‘’இல்ல மச்சான் சிக்கினா வெட்டுதான்.. என்பேரு ஃபரூக் அப்துல்லா,உன் பேரு அபூ ஃபக்கீர் சிக்கந்தர்.. எங்கே சொல்லு’’ ராஜேஷை மிரட்டினான் சிவா.

ராஜேஷுக்கு அந்த பெயர் வாயிலேயே நுழையவில்லை. இவன் மட்டும் நல்ல ஈஸியா பரூக் அப்துல்லானு வச்சுகிட்டான்.. எனக்கு மட்டும் எவ்ளோ நீளமான பேரு.. வேணும்ணே நம்மள மாட்டிவிட சதி பண்றானோ என தோன்றியது. மவனே நான் மாட்டினா உன்னையும் போட்டுகுடுத்துட்டுதான்டா மறுவேலை பாப்பேன்! என மனதிற்குள் கொதித்துக்கொண்டான்.

‘’டே சிவா.. நீ வேணா அந்த பேரை வச்சுக்கோயேன் நான் பரூக் அப்துல்லானு வச்சுகிறேன்.. டக்குனு நினைவுக்கு வருது பாரு இப்போகூட சொன்னேன்பாரு.. ப்ளீஸ் ப்ளீஸ்...’’

முகமெல்லாம் சிவக்க அவனையே ஒரு நிமிடம் முப்பத்திரண்டு விநாடிகள் முறைத்துப்பார்த்தான் சிவா.. என்னதான் வாடாபோடாவாக இருந்தாலும் ராஜேஷை விடவும் சற்றே பெரியவன் சிவா! அவனுடைய ஒற்றை முறைப்புக்கே அடிபணிந்தான் ராஜேஷ்.

‘’கடைசியா கேக்கறேன் அந்த அஃபூ பக்கர் சிக்கன் பேரை நீயே வச்சிக்கடா.. மச்சான்.. ப்ளீஸ் மச்சான்.. பேர்னால அவங்ககிட்ட மாட்டிக்கணுமானு யோச்சிப்பாரு’’ , ஏனோ கடுமையாக விடாப்பிடியாகவே இருந்தான் சிவா.

‘’நாளைக்கு சாயங்காலம் அஞ்சுமணிக்கு மசூதியாண்ட வந்திடு...’’ என்று சொல்லிவிட்டு சென்றான். ராஜேஷ் தனியாக அமர்ந்து கொண்டு அன்றைக்கெல்லாம் அந்த பெயரை சொல்லி சொல்லி மனப்பாடம் செய்தான்.. ம்ஹூம் அந்தப்பெயரில் ஏதோ பிரச்சனை இருக்கிறது மறந்துபோய்விடுகிறது. இந்த பெயரால்தான் எவ்வளவு பிரச்சனை.. மாற்றித்தொலைத்தால்தான் என்ன?

தண்ணி ஊற்றி முகங்கழுவி.. சாமி கும்பிட்டு நெற்றியில் செவ்வகமாக விபூதி போட்டுக்கொண்டு தன் குடிசையிலிருந்து மசூதியை நோக்கி கிளம்பினான் ராஜேஷ்.. அங்கே சிவா ஏற்கனவே இவனுக்கு முன்பாகவே காத்திருந்தான்.

‘’என்னடா பேர் நினைவிருக்கா இருக்கா? கரெக்டா சொல்லிருவல்ல?‘’

‘சொல்லிருவேன்’’

‘’எங்கே சொல்லு’’

‘’அபூ பக்கிர் சி...சி... சிகந்தர்’’ உஃப் என கடைசியில் மூச்சுவிட்டுக்கொண்டான்.

மசூதிக்கு அருகிலிருந்த மைதானத்தில் நின்றுகொண்டிருந்த நீண்ட வரிசையில் நின்றுகொண்டனர். ராஜேஷுக்கு திக்திக் என்றிருந்தது. தலையில் குல்லாப்போட்டுக்கொண்டும் கர்சீப் கட்டிக்கொண்டும் அங்கிமிங்கும் அலைகிறவர்கள் ஒரு விநாடி நின்று அவனை கவனித்துவிட்டு செல்வது வேறு கிலியை உண்டாக்கியது. அவனுடைய பரம்பரையில் யாருமே கர்சீப் உபயோகித்த்தில்லை. தலையில் கர்சீப்பாச்சும் கட்டிருக்கலாம். அந்த பேர் வேறு.. என்ன பேர் அது.. அபூ.. பக்கீர்.. சிக்கந்தர்.. மந்திரம் போல மனதுக்குள் ஜெபித்துக்கொண்டே வந்தான்.

‘’சிவா திரும்பி போயிரலாம்டா.. பயமாறுக்குடா, பேர் மறந்திடும் போலருக்கு, கர்சீப்கூட இல்ல’’

‘’பேசாம நில்லுடா..’’ என்று தலையை திருப்பினான் சிவா.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து க்யூ முன்னுக்குச்செல்ல.. அவனுடைய முறை..
ராஜேஷ் தன் தூக்குப்போசியை எடுத்து ரமலான் கஞ்சி ஊற்றிக்கொண்டிருந்த பெரியவருக்கு முன்னால் நீட்டினான். அவர் அவனை புன்னகையோடு சில விநாடிகள் பார்த்தார். பேர் கேப்பாரோ? அது என்ன பேரு.. அபூ பக்கீர்.. அப்புறம் மறந்துடுச்சே.. இதயம் படபடவென அடித்தது. அடிவயிற்றில் ஏதோ செய்வதுபோல இருந்தது. அவன் தன் ஓட்டை டவுசரிலேயே மூத்திரமே போய்விடுவான் போல இருந்தது. தூக்குபோசி நிறைய கஞ்சி ஊற்றிக்கொடுத்தார் பெரியவர். ஒரு பாக்கெட் பிரியாணியும் பூசணி அல்வாவும் கொடுத்தார். ஏனோ கடைசிவரை பெயரை கேட்கவேயில்லை. மனதுக்குள் சிரித்துக்கொண்டான் ராஜேஷ்.


(28-08-2011 தினகரன் வசந்தம் இதழில் வெளியான ஒருபக்க கதை)