Pages

07 October 2011

கோமாதா எங்கள் குலமாதா





மாட்டுக்கறி என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். உயிர்! அதற்காக எதையும் செய்யதுணிந்திருக்கிறோம். என்னது மாட்டுக்கறியா... உவ்வ்வ்வ்வே! என்பவர்கள் உடனடியாக விண்டோவை மூடி வைத்துவிட்டு ஓடிடுங்க!

ஆனால் பாருங்க பாஸ்... உவ்வே என்று ஓடுகிற அளவுக்கு மாட்டுக்கறியொன்றும் மோசமான உணவு கிடையாது. சொல்லப்போனால் அசைவ உணவுகளில் சுவை மற்றும் உடல்நலம் முதலிய காரணிகளின் அடிப்படையில் சிறந்தது மாட்டுக்கறிதான். அப்போது எங்களுக்கு வயது ஏழோ எட்டோதான். மாட்டுக்கறியை மென்றுதின்ன சரியாக பற்கள் கூட முளைத்திருக்காது! ஓட்டை பாக்கெட்டில் காசுமிருக்காது.

எங்களுக்கு பிரியாணி என்பதே பெருங்கனவு. அதிலும் சிக்கன் பிரியாணியெல்லாம் கொடுங்கனவு. அந்த சமயத்தில் மாட்டுக்கறி பிரியாணிதான் சீஃப் அன் பெஸ்ட். ஒரு கப்பு வெறும் பத்துரூபாய்தான்! நாங்கள் அதில் அரைக்கப்பு சாப்பிடுவோம். மாட்டுக்கறியுடனான எங்கள் முதல் உறவு அப்படித்தான் தொடங்கியது.

சீஃப் அண்ட் பெஸ்ட் என்ற பெயரிலேயே கோவை கோட்டைமேட்டில் ஒரு புலால் உணவகமிருந்தது. கோட்டைமேட்டில் இருக்கிற மாநாகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு நேர் எதிரில்.. மிக மிக அருகில். இப்போது அந்தக்கடையை மூடிவிட்டனர். பிரியாணிக்கு மசாலா அரைக்கும் போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்! பள்ளிக்கோடம் பக்கம் போகும்போதெல்லாம் நாவில் நீர் சொட்டும். அப்படி ஒரு மணம். அதிலும் மாட்டுக்கறியின் வாசமிருக்கிறதே சொல்லவும் வேண்டாம்.. ஆஹா!

கோட்டைமேட்டுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருந்தது. அது மாட்டுக்கறியின் மணம். எங்கும் நிறைந்திருக்கும். மாட்டுக்கறியினை வேகவைக்கும்போது அதிலிருக்கிற அதிகப்படியான கொழுப்பு நீருக்கு மேல் ஒரு படலமாக எண்ணெயைப்போல மிதப்பதை காணலாம். அதன் மணம் வெண்ணையை உருக்கும் போது உண்டாகுமே அதைப்போலவே இருக்கும். ஏனோ அந்த மணம் ஏற்காமல் சைவபட்சினிகள் வாந்தி எடுத்துவிடுவதை பார்த்திருக்கிறேன். வெண்ணை காய்ச்சும்போது வருகிற துர்நாற்றம் இதைவிடவும் மோசமானது!

அஜ்மீர் பிரியாணி ஹோட்டல்தான் பீஃப் பிரியாணிக்கு கோவை ஃபேமஸ். இரவு ஒருமணிக்குப்போய் கேட்டாலும் சுடச்சுட சூடு குறையாமல் பிரியாணி போடுவதை பார்த்திருக்கிறேன். ஒரே குறை அந்தக்கடையில் பீஃப் என்று கேட்டால் கோச்சிப்பாங்க! மட்டன் என்றே கேட்க வேண்டும். அதைப்பின்பற்றி கோவையின் மற்ற பீஃப் கடைகளும் மாட்டுக்கறியை மட்டன் என்றே அழைத்தனர். ஒரு கப் பிரியாணியில் ஐந்தாறு நல்ல பீஸாவது நிச்சயமாக இருக்கும். பீஸ் என்றால் ஏனோ தானோ ச்சவ ச்சவ பீஸ்கள் அல்ல! நல்ல வெந்த மிருதுவான கையால் பிட்டுப்பார்த்தால் அப்படியே கரைகிற அற்புதபீஸ்கள் அவை. மாட்டுக்கறியின் சுவையே அது வேகும் பதத்தில்தான் இருக்கிறது.

சிக்கன் பிரியாணியில் பெரிய பெரிய பீஸ்கள் போட்டு சமைப்பதை பார்த்திருப்போம். மாட்டுக்கறிக்கு அப்படி சமைத்தால் கரக் மொறுக் என ரப்பர் துண்டுகளை போட்டு பிரியாணி சமைத்தது போலவேதான் இருந்துதொலைக்கும். அதனால் சின்ன சின்னத்துண்டுகளாக போட்டு சமைப்பதென்பது பீஃப் பிரியாணி சமையலில் அடிப்படை. மட்டனுக்கும் பன்றிக்கறிக்கும் கூட இது பொருந்தும்.

என் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே பீஃப் குழம்பு, பீஃப் சுக்காவெல்லாம் கிடைக்கும். கடைகளில் சில்லி பீஃப் என்று ஒன்று கிடைத்தாலும் சுவையேயில்லாத அந்த கொடிய வஸ்துவை குடிக்கும் போது மட்டுமே வேறு வழியின்றி உபயோகிக்கவியலும்.. அதுவும் சென்னையில் சில இடங்களில் கிடைக்கிற பீஃப் ரைஸெல்லாம் மாட்டுக்கறிக்கே அவமானம்.
வார இறுதியில் கிரிக்கெட் ஆடிவிட்டு , களைத்துப்போன எங்களுக்கு ஊக்கமருந்தாக இருந்தது மாட்டுக்கறிதான். போதிய ஊட்டச்சத்தின்றி சோம்பிப்போய் திரிந்த எங்களுக்கு புரத சத்தினை தந்த வள்ளல் அது. அஜ்மீர் பிரியாணி மற்றகடைகளைவிடவும் ஐந்துரூபாய் விலை அதிகம். ஐந்து ரூபாய் புரட்டுவது பெரும்பாடு அதனால் அஜ்மீருக்கு மாற்றாக இன்னொரு கடையை தேடிய போது அகப்பட்டதுதான் முத்துராவுத்தர் கடை. அஜ்மீருக்கு சற்றும் குறையாத அருமையான சூடான பிரியாணி இங்கே இப்போதும் கிடைக்கிறது. மதியம் மூன்று முப்பதுக்குப்போனால் முதல் ஆளாக அப்போதுதான் சமைத்த சூடான பிரியாணி கிடைக்கும். ஒன்றிரண்டு ரப்பர் துண்டுகளிலிருந்தாலும் நல்ல பீஸ்களும் கிடைக்கும். விலையும் மலிவு (ஐந்துரூபா கம்மி).

கோவையைவிட்டு சென்னை வந்த சிலநாட்களிலேயே தெரிந்துவிட்டது. மாட்டுக்கறிக்கும் சென்னை நகருக்கும் ஆகாதென்பது. எங்கு பார்த்தாலும் சிக் சிக்கென்று ஒரே சிக்கன்கறியும் பிரியாணியும். அடச்சே! என்றாகிவிட்டது. நண்பர்கள் இல்லாத மாட்டுக்கறியில்லாத நாட்கள் நரகமாயிருந்தன.

ஆனால் பீஃப் தாகம் மட்டும் தணியவேயில்லை. நண்பர்களோடு இணைந்து சாலைகளெங்கும் அலைந்து திரிந்து மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டிலேயே சமைப்போம். வீட்டில் சமைப்பதில் இருக்கிற பெருங்குறை இந்த மாட்டுக்கறியை வேகவைப்பதுதான். அதற்கு கூகிளில் ஆராய்ச்சி செய்து நாங்கள் கண்டுபிடித்த நுணுக்கமான வழி வொய்ன் கலந்து சமைப்பது. அது மாட்டுக்கறியின் சுவையை கூட்டுவதோடல்லாமல் சீக்கிரமே நல்ல பதமாக வேகவும் உதவுகிறது. அதாவது ஒன்றரை மணிநேரம் வேகவேண்டிய கறியினை வெறும் அரைமணிநேரத்தில் வேகவைத்துவிடும்.

முதலில் கறியைவாங்கி சுத்தம் செய்து , நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வொயினில் போட்டு ஊறவைக்க வேண்டும் பிறகு அதை அப்படியே கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தால் அற்புதமான மணம் காற்றில் பரவும். அருகாமை வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே அழைத்துவரும்.. சாராயம் காய்ச்சறீங்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இந்த மணத்தின் சுகம் அறியாத வீட்டு ஓனரிடம் ஓத்தாம்பட்டை வாங்கியிருக்கிறோம். இதற்குநடுவே நன்கு வெந்த கறியை தனியாக எடுத்து வைத்துவிட்டு வெங்காயம் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் மசாலா சேர்த்து கறியையும் போட்டு கிளறி உப்புப்போட்டு தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி மூடிவைத்துவிட்டால் அரைமணிநேரத்தில் நல்ல மிருதுவான மாட்டுக்கறி கிரேவி தயாராகிவிடும். அதை தின்பதற்காகவே திண்டிவனத்திலிருந்து நண்பர்கள் கூட்டம் எங்கள் அறையை மொய்க்கும்! ஃபுல்லோடு வரும் புரவலர்களை எப்போதுமே நாங்கள் தடுத்துநிறுத்தியதில்லை.

அண்மையில் கோவை சென்றிருந்த போதும் கூட முத்துராவுத்தர் கடையில்தான் நண்பர்களோடு பீஃப் பிரியாணி சாப்பிட்டேன். சுவையும் மணமும் நான்கில் ஒருபீஸ் சவசவவும் மாறவேயில்லை! விலைமட்டும் கொஞ்சம் உயர்த்தியிருந்தனர். மற்றபடி கோவைமுழுக்க நிறைய பிரான்ச்சுகள் திறந்துள்ளனர். எல்லா கடைகளிலும் நல்ல பீஃப் பிரியாணி கிடைக்கிறது. பீஃப் ரசிகர்கள் மிஸ்ப்பண்ணிவிடக்கூடாத கடைகளில் அஜ்மீர் மற்றும் முத்துராவுத்தர் பிரியாணிகள் முக்கியமானது. கோவையில் சில கடைகளில் பீஃப் பிரியாணியை பீப் பிரியாணி என எழுதிவைத்திருந்தது கோபத்தை வரவழைத்தது. இதை மாற்ற தமிழ் ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இவைகளுக்கிணையான பீஃப் பிரியாணிக்கடை எங்குமே கிடையாது. நண்பர்கள் தெரிந்திருந்தால் சொல்லி உதவலாம். உதயம் தியேட்டருக்கு அருகில் ஒரு கடை கண்டுபிடித்து சில நாட்கள் அங்குதான் பீஃப் பிரியாணி சாப்பிட்டுவந்தேன். ரொம்ப சுமார்தான் என்றாலும் சக்கரையில்லாத ஊருக்கு.. என்று வேறு வழியின்று தின்றுவந்தேன். ஏனோ அந்தக்கடை சிலமாதங்களில் மூடப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பீஃப் சாப்பிட சரியான ஒரு டக்கர் கடையை பர்மா பஜாருக்கு அருகே ஒரு கண்டுபிடித்திருக்கிறோம். அங்கே பீஃப் தந்தூரி கிடைக்கிறது! எனக்குத்தெரிந்து மாட்டுக்கறியில் தந்தூரி பண்ணுகிற ஒரே கடை அதுவாகத்தான் இருக்கும். கடையென்றால் சாலையோர கடை. பர்மா பஜார் சந்துகளுக்குள் புகுந்துசென்றால் ஒரு மசூதி இருக்கும் அதன் வாசலிலேயே இந்த சாலையோர தந்தூரி கடை அமைந்திருக்கிறது. அக்கடைகுறித்து இன்னொரு பதிவில் கடை உரிமையாளரான மெகாசைஸ் தாடிபாயின் பேட்டியோடு எழுதுவோம்.

சிக்கன் தந்தூரி மட்டுமே சாப்பிட்ட எனக்கு இந்த பீஃப் தந்தூரி வித்தியசமான அனுபவத்தினை கொடுக்கிறது. பீஃப் பிரியாணி சாப்பிடமுடியாத ஏக்கத்தினை தந்தூரி தின்று போக்கிக்கொள்கிறேன். நல்ல பீஃப் பிரியாணிக்கான என் தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதுகுறித்து பேசவும் நிறைய இருக்கிறது. இன்னொரு முறை பேசுவோம்.