Pages

11 October 2011

வாகை சூட வா




எம்.ஜி.ஆர் தொடங்கி ராமராஜன்,பாக்யராஜ்,சத்யராஜெல்லாம் நடித்து சலித்து புளித்துப்போன கிராமத்து வாத்தியாரும் முரட்டு பண்ணையாரும் அப்பாவி மக்களும் கதைதான்! ஆனால் இது ரொம்பவே ஸ்பெஷல். மற்ற சினிமாக்களில் வருவதைப்போலவே இதிலும் கதையின் நாயகி காடு கரையெல்லாம் ஓடி ஓடி விரட்டி விரட்டி நாயகனை காதலிக்கிறார், ஆனால் இதில் வேற மாதிரி!. இதிலும் ஏழைகளை சுரண்டி வாழுகிற ஆண்டைதான் வில்லன். ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி அவரை விரட்டியடிக்கின்றனர் . போலவே இதிலும் கிராமத்து மனிதர்கள், அழுக்கு சிறுவர்களின் குறும்புகள்,ஆயாக்களின் நக்கல்பேச்சு என வழக்கமான பாரதிராஜா டைப் கிராமம்தான் ஆனால் அதுவும் கொஞ்சம் புதுமாதிரி!

களவாணி படத்தினை எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியாது. சரண்யாவும் விமலும் அசத்தியிருப்பார்கள். படம் முழுக்க ஒரு எகத்தாளமும் தெனாவெட்டும் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நிறைந்திருப்பதை காணலாம். அதுதான் அப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கருதுகிறேன். ஆனால் வாகை சூட வா அதற்கு நேர்மாறாக அமைந்திருந்தது ஆச்சர்யம். படம் முழுக்க எங்கும் எப்போதும் வெள்ளந்தித்தனமும் கிராமத்துக்குசும்பும்தான். குட்டிப்பையன்களின் அலும்பு அட்டகாசம்!

செங்கல்சூளைகளில் வேலைபார்க்கிற குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கையை படமாக எடுக்க முன்வந்தமைக்காக தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முதலில் ஒரு பூங்கொத்து பார்சேல். வசந்தபாலனின் அங்காடித்தெரு பாலாவின் நான்கடவுள் போல இல்லாமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை ரசனையோடு அவர்களின் கொண்டாட்டங்களோடு அழுதுவடியாமல் கண்ணீர்விட்டு கதறாமல் படமாக்கியமைக்கு இன்னொரு பூங்கொத்து. இங்கே வறுமையோ சாதியோ கொத்தடிமைத்தனமோ எதுவாக இருந்தாலும் கல்வியால் மட்டுமே ஒரு சமூக மாற்றத்தை உண்டுபண்ண முடியும் என்கிற செய்தியை நறுக்கென சொன்னதற்காக இன்னொன்று.

நாலு ஃபைட்டு மூணு டூயட்டு கொஞ்சம் காமெடி கலந்து மசாலாவா சொல்லியிருந்தால் இன்னொரு ராமராஜன் படமாகியிருக்கும். நல்ல வேளையாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை அதன் இயல்பு மாறாமல் சொன்னதோடு தமிழ்சினிமாவுக்காக எங்குமே வளைந்துகொடுக்காமல் படமாக்கியமைக்காகவும் இன்னொரு பூங்கொத்து! இப்படி படத்தின் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் பூங்கொத்து கொடுக்க ஆரம்பித்து ஒரு பூந்தோட்டத்தையே பரிசளிக்கலாம். அவ்வளவும் அச்சு அசல் அக்மார்க் அசத்தல்!

வேறு வழியில்லாமல் ஒரு பட்டிக்காட்டுக்கு வாத்தியார் வேலைக்கு வருகிறார் விமல். அங்கோ சிறுபிள்ளைகள் கூட செங்கல்சூளையில் பணிபுரிகின்றனர். அந்த கிராமத்து மக்களை அடக்கி ஆளுகிறார் ஒரு ஆண்டை. இதையெல்லாம் பார்க்கும் நாயகன் அங்கே நடக்கும் அநியாயங்களை கண்டு கொதித்து எழவில்லை. முரட்டு பண்ணையாரோடு சண்டை போடவில்லை. பஞ்ச் டயலாக் பேசவில்லை. படம் முழுக்க குறும்பு பையன்களுக்கு பாடம் நடத்த அல்லாடுகிறார். அவமானப்படுகிறார். குழந்தைகள் கூட அவரை ஓட்டுகின்றனர். காரணம் பட்டிக்காட்டில் பாடம் நடத்தினால் அதன்மூலம் கிடைக்கிற சர்டிபிகேட் சர்க்கார் உத்தியோகம் கிடைக்க வழிபண்ணும் என்கிற சுயநலம் மட்டுமே. நாயகன் லட்சிய வீரனோ, அசகாய சூரனோ கிடையாது. ஒரு காட்சியில் அவரை போட்டு மிதித்து உதைத்து வதைக்கின்றனர் பண்ணையாரின் அடியாட்கள். மக்கள் ஒன்றுகூடி காப்பாற்றுகின்றனர்.

பொதுவாக மக்களை துன்புறுத்தும் வில்லனை தனியாளாக பஞ்ச் பேசி அடித்து உதைப்பார் ஹீரோ. அல்லது அடியாட்களை அடித்து நொறுக்கிவிட்டு நீண்ட நெடிய வசனம் பேசி வில்லனைத் திருத்திவிடுவார். அதுதான் திராவிட சினிமா பண்பாடு. ஆனால் இதிலோ ‘’பணம் குடுக்கறவன்லாம் உங்களுக்கு கடவுளாகிடறான்.. இவனையும் நம்பாதீங்க.. ஏன்னா இவனும் முதலாளிதான்’’ என்பதைத்தவிர வேறெங்கும் நாயகன் அதிகமாக வீரவசனம் பேசுவதேயில்லை.

தமிழ்சினிமாவில் எப்போதுமே மக்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைக்காக கல்விக்காக பொருளாதார முன்னேற்றத்திற்காக போராடுவதாக படங்கள் எடுக்கப்படுவதில்லை.(ஒன்றிரண்டு கண்காணாமல் இருக்கலாம்) அதனாலேயே இது ஸ்பெஷலாகிவிடுகிறது. அதிலும் அந்த கிளைமாக்ஸ். வில்லன்களின் சேஸிங்கோ மக்களின் கதறலோ ஹீரோவின் மொக்கை பஞ்ச்களோ இல்லாமல் நச்சுனு வைத்ததற்கே இப்படம் வெற்றியடைய வேண்டும் என நினைக்கிறது மனசு.

படத்தின் நாயகன் விமல் அப்பாவி நடிப்பில் அசத்துகிறார். சில இடங்களில் பாக்யராஜ் சாயல் தெரிந்தாலும் (படத்தில் அவருடைய அப்பா பாக்யராஜ்!) ஓகேதான். படத்தின் இன்னொரு ஆச்சர்யம் படத்தின் நாயகி.. அடடா அந்த பொண்ணு கண்ணு... வாவ்! பார்த்துகிட்டே இருக்கலாம் போல ஒரு ஏக்கம். அவ்வளவு அழகான கண்ணு. ‘’சரசர சாரகாத்து வீசும் போது’’ பாடலில் அவருடைய அபிநயங்கள் அல்லது கண் அசைவுகள் அல்லது முகபாவனைகள் அல்லது நடன அசைவுகள் அய்யய்ய்யோ என்ன அழகு?. பார்த்துகிட்டே இருக்கலாம் அந்த கண்களை. காதல் பொங்கி வழியுதுய்யா! இந்தப்பொண்ணுக்காகவே இன்னொருக்கா படம் பாக்கணும் போல..

நீங்களும் பாருங்களேன்!




படத்தின் கேமராமேன்,இசையமைப்பாளர்,எடிட்டிங்,கலை இயக்குனர் என பலரின் மென்னியை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி உழைத்திருக்கிறார்கள். அதிலும் போறாளே போறாளே பாடலில் வருகிற எலி வேட்டை.. சரசர சாரக்காத்து பாடலில் வருகிற வின்டேஜ் ஷாட்டுகள்.. அக்கினி குஞ்சொன்று (அறிவுமதி எழுதியது) பாடலில் செங்கலில் கரையும் ‘அ’ என நேர்த்தியோ நேர்த்தி. அனாவும் ஆவன்னாவும் ஆற்றில் கரையுதே என்கிற அறிவுமதியின் வரிகள் அழகு!

படம் அறுபதுகளில் நடப்பதாக சொல்லப்பட்டாலும் அதை மிகச்சில இடங்களில் மட்டுமே உணர முடிந்தது படத்தின் குறை. இன்னொரு குறை படத்தின் டீடெயிலிங். அதனால் பல இடங்களில் போர் அடிக்கவே செய்கிறது. கதைக்குள் நுழைய எடுத்துக்கொண்ட நேரமும் படம் பார்க்கிறவர்களை கொஞ்சம் சோதிக்கலாம். மற்றபடி தமிழ்சினிமாவின் நிர்பந்தங்களை புறந்தள்ளி இப்படி ஒரு படம் கொடுத்த சற்குணத்திற்கு பாராட்டுகள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பேசும்போது ‘’லைட்டா போர் அட்ச்சாலும், ரொம்ப நல்ல படம் சார்’’என்றார். நம் கருத்தும் அதுவே!