Pages

24 January 2012

வேட்டை - கதற... கதற...
‘’சரியான முட்டாப்பசங்க சார் இவனுங்க!’’ என்று தமிழ்சினிமா ரசிகர்களை நினைத்துக்கொண்டிருக்கிற ஒருவரால் மட்டும்தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும். அப்படி ஒருபடம்தான் வேட்டை! படமெடுத்தவர் லிங்குசாமி! லாஜிக்கோ கதை குறித்த அக்கறையோ இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாக்கியராஜ் படமொன்றின் கதையை லேசாக தட்டிஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்து ஆள்மாறட்டக்கதையை இன்னும் எத்தனை முறைதான் பார்க்க வேண்டியிருக்குமோ.. மசாலா படம் பார்க்கிறவர்களை முட்டாள்கள் என்று நினைத்து படமெடுப்பதை நீங்கள் நிறுத்தாவிட்டால் மசாலா படம் பார்ப்பதை முட்டாள்கள் நிறுத்திவிடக்கூடிய ஆபத்திருக்கிறது.

இந்திய கமர்ஷியல் மசாலா படங்களுக்கென ஒரு பார்முலா உண்டு. அந்த பார்முலாவை கொஞ்சம்கூட மீறாமல் அதே குத்துப்பாட்டு, அதே மொக்கை ஹீரோயின் காமெடி, அதே கொலைசெய்யும் கொடுரமான ரவுடி வில்லன்,நடுவில் பஞ்ச் டயலாக்,குத்துப்பாட்டு, கிளைமாக்ஸில் சண்டை என்கிற அடிப்படைகளோடு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் சூட்டிங் கேப்பில் அதே மேக்கப்பில் அதே சட்டை பேண்ட் ரேபன் கண்ணாடியோடு இந்த படத்திலும் நடித்துக்கொடுத்திருப்பார் போல! அதுக்கொசரம் கேரக்டரை கூடவா மாத்தாம வச்சிருக்கணும்! படம் முழுக்க பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டேயிருக்கிறார். இவருக்கும் அடுத்த முதல்வர் ஆகிற ஆசை வந்திருக்கலாம். அல்லது இப்படம் வெற்றியடைந்து ‘மாஸ்’ அந்தஸ்து கிடைக்கநேர்ந்தால் இந்த டபரா ஸ்டாரிடமிருந்து தமிழகம் தப்பவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் பஞ்ச் வசனம் பேசும்போதும் தியேட்டர் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. வசனம் லிங்குசாமியே எழுதியிருப்பாரோ என்னவோ! சம்பந்தா சம்பந்தமில்லாமல் பஞ்ச்!

மாதவன் படம் முழுக்க பயப்படுவதுபோலவே நடிக்கிறார். ஏன் இப்படி என்று வெளியே வந்து டிக்கட் கிழிப்பவரிடம் விசாரித்தபோதுதான் அவர் காமெடியனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மங்காத்தா அஜித்போலவே மாதவனுக்கும் நல்ல அழகான உருண்டு திரண்ட தொப்பை.  ஒரே பாட்டில் பணக்காரனாவது போல நம்ம ''சின்ன தல'' மாதவன் எக்ஸைஸ் செய்து தொப்பையை குறைத்து பக்கா ஜென்டில்மேனாகிவிடுகிறார். ஒருகாலத்துல மாதவன் எப்படி இருந்தாரு.. பாவம் ஒரு டூயட்டு கூட இல்லை..

படத்தின் நாயகிகளை பார்க்க சகிக்கவில்லை. மேக்கப் மேனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ வாய் முழுக்க லிப்ஸ்டிக்கையும் முகம் முழுக்க ரோஸ்பவுடரையும் அப்பிவிட்டு அனுப்பியிருப்பார் போல!. (கவுண்டமணி ஒருபடத்தில் தன் தங்கைக்கு பெயின்ட் அடித்து ஏமாற்றுவாரே அதுபோல) அதிலும் படத்தின் முக்கிய நாயகியான சமீரா ரெட்டியை குளோஸ் அப்பில் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது! நாம் பார்த்துக்கொண்டிருப்பது வேட்டையா அல்லது ஈவில் டெட்டா என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் சமீரா! கேமராமேன் நீரவ்ஷா இன்னுமும் உயிரோடிருப்பது அவருடைய மனைவியின் தாலிபாக்கியமாகத்தான் இருக்க வேண்டும்.

சமீராவுக்கு பதிலாக இந்த சமரசீமா ரெட்டியோ சமோசாக்குள்ள ரொட்டியோ அவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்! பெரிய வித்தியாசமேயிருந்திருக்காது. அமலாபால் படம் முழுக்க வறுமையால் வற்றிப்போன வயிறோடு தொப்புள் காட்டிக்கொண்டு வலம்வருகிறார். பேருக்கு தாவணியை போட்டுக்கொண்டிருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களுக்கு எதையோ காட்ட முயல்கிறார். ஏனோ சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை.

பாடல்களுக்கும் ரீரெகார்டிங்குக்கும் பெரிதாக மெனக்கெடாமல் யுவன் தன் முந்தைய படங்களிலிருந்தே சுட்டு அப்படியே மாற்றி மாற்றி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பப்ப பப்பாம் பபரப்பாம் பாட்டு மட்டும் ஓக்கே! மாதவனும் ஆர்யாவும் ஓடும் காட்சி சில்வஸ்டர் ஸ்டாலனின் ராக்கியில் சுட்டதாக இருக்கிறதே என ஆச்சர்யபட்டுக்கொண்டிருக்கும்போதே பிண்ணனியில் அதே படத்தில் இடம்பெற்ற அதே இசை! இருந்தாலும் தமிழ்மக்கள் மேல் லிங்குசாமிக்கு ஏகப்பட்ட நம்பிக்கை. ஆரம்பிச்ச படத்தை முடிக்கணுமே முடிச்சி.. முடிச்ச படத்தை வெளியிடணுமேனு வெளியிட்டிருப்பார்களோ என்கிற ஐயம் படத்தின் கிளைமாக்ஸில் படம் பார்க்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கட்டாயம் ஓடும்.

ஒரு பாகவதர் காலத்து கதை எடுத்துக்கொண்டு அதை காமெடிப்படமா எடுக்கறதா? இல்ல சீரியஸ் ஆக்சன்படமா எடுக்கறதா? ஃபேமிலி சென்டிமென்ட் டிராமாவா எடுக்கறதா? ரொமான்டிக் காமெடியா எடுக்கறதா? என பெருங்குழப்பத்தில் படமெடுத்திருப்பார் போல லிங்கு. காமெடி ஆக்சன் கலந்த பேமிலி எமோசனல் நிறைந்த ரொமான்டிக் மொக்கைப்படமாக வந்திருக்கிறது வேட்டை!

18 January 2012

ஆணியே புடுங்க வேணாம்!
எப்படியாவது இலக்கிய புஸ்தகங்களை படித்து பெரிய இலக்கிய அப்பாடக்கர் ஆகிவிடவேண்டும் என்கிற ஆர்வ வெறியோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினான் முட்டாள் முருகன்.. உள்ளே நுழையும்போதே ஆப்புகள் காத்திருந்தன. பைக் பார்க்கிங்கில் தொடங்கியது முதல் ஆப்பு. வண்டி நிறுத்த பத்துரூபாயாம்! அடப்பாவிகளா என வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டான்.

‘’யோவ் காசு குடுத்து நான் புக்கு வாங்க வந்திருக்கேன்.. நான் எதுக்கு பார்க்கிங்குக்கு பத்துரூவா கொடுக்கோணும்’’ என சிங்கத்தைப்போல பூமிஅதிர தட்டிக்கேட்டான்.

‘’ஏன்டா! தியேட்டர்ல என்னைக்காச்சும் போயி அப்படி கேட்டுருக்கியா..’’ என்று சொன்ன அந்த முரட்டு உருவம் நடுமண்டையில் நங் என ஒரு கொட்டு வைத்தது. சிங்கம் அசிங்கப்பட்டு வாசூவை பொத்திக்கொண்டு பத்துரூபாயை கொடுத்து பார்க்கிங் டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது.

வழியெல்லாம் பேனர்கள். ஒவ்வொரு பேனரிலும் ''நாங்கதான் நம்பர் ஒன்'', ''பாகித்ய மொக்காதமி விருது எப்போதும் எங்களுக்கே'' , ''இந்தியாலயே ஏன் இந்த உலகத்துலயே காரு வைச்சிருக்கற பதிப்பகம் நம்ம பதிப்பகம்'' என ஆளாளுக்கு அளந்துகொட்டியிருந்தனர். அனைத்தையும் பரமசிரத்தையோடு நோட்பண்ணிக்கொண்டான்.

புத்தக கண்காட்சி என்றுதான் பெயர்... ஆனால் நுழைந்ததுமே அவன் கண்ணில் பட்டது கடலைமிட்டாய்,சோன்பப்படி,டெல்லி அப்பளம், குச்சி ஐஸ் என அவனுக்கு மிகவும் பிடித்த தின்பண்ட சமச்சாராங்கள். "அறிவுப்பசியாற்ற வந்த இடத்துல இதையெல்லாம் ஏன் வச்சிருக்காங்க" என்கிற தத்துவார்த்த கேள்வி நங்கென்று நட்டுக்கொண்டு எழுந்துவிட்டது. அப்போதே அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நாமளும் இலக்கியவாதியாகிடுவோம்!

எங்கு பார்த்தாலும் எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கு நடுவில் நூற்றுசொச்சம் வாசகர்கள் பாவமாய் கையில் அஞ்சுபத்து வைத்துக்கொண்டு எதை வாங்குவது என பெரும் குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே நிற்கிற நாலைந்து பேரில் இருவர் எழுத்தாளர்களாக இருந்தனர்.

அப்படி ஒரு எழுத்தாளர் நம்ம முருகனை கையைபிடித்து இழுத்தார். ‘’சார் யாரு சார் நீங்க.. உங்களை பார்த்ததே இல்லையே, என்னை ஏன் கையபுடிச்சி இழுக்கறீங்க’’ என மிரண்டுபோய் கேட்டான் முருகன்.

‘’பாஸ் என்ன தெரியலையா.. மறந்துபோச்சா.. டபிள்யூ டபிள்யூ குனிஞ்சாகுத்து டாட்காம்ல பின்னூட்டம்லாம் போட்டீங்களே.. ஐயாம் பிரபலபதிவர் சாம் மார்த்தாண்டன்.. உங்களை எனக்கு நல்லாத்தெரியுமே உங்க பிளாக்கை தினமும் படிப்பேனே... அதை விடுங்க... நான் ஆளப்பிறந்தவன்னு நாவல் ஒன்னு வெளியிட்டிருக்கேன்... பிரமாதமான நாவல்.. நேத்துதான் பில்கிளின்டன் போன்ல கூப்பிட்டு என் லைஃப்ல இப்படி தமிழ்நாவல படிச்சதேயில்லனு பாராட்டினாரு... ஒபாமா நாலு சாப்டர் படிச்சிட்டு அப்படியே ஷாக் ஆகிட்டாராம்..

''எனக்காக ஒன்னு வாங்குங்க... உங்க கிட்ட என்ன கேட்டுகிட்டு , ஏய் அண்ணனுக்கு ஒரு ஆளப்பிறந்தவன் பார்சேல்’’ என்று கட்டாயப்படுத்தி வலிந்து திணித்தார். என்ன கொடுமைடா இது என தலையிலடித்துக்கொண்டு அந்த கொடுமையையும் வாங்கி வைத்துக்கொண்டான்.

‘’பாஸ் புக்கு வாங்கினா மட்டும் போதுமா..’’ என்று அசட்டு சிரிப்பை உதிர்ப்பார்.

‘’அய்யய்யோ இவன் புக்க வாங்கினத்துக்கு டேன்ஸெல்லாம் ஆடச்சொல்லுவான் போலிருக்கே என பயந்தபடி ‘’வேற என்ன சார் பண்ணனும்’’ என்று முட்டாள் முருகன் ப்பம்மி பம்மி பயந்தபடி கேட்டான்.

‘’புக்குல ஆட்டோகிராப்லாம் வாங்கமாட்டீங்களா பாஸு’’ என அடுத்த குண்டைப்போட்டுவிட்டு அப்படியே முந்தாநாள் சமைஞ்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டார் நம்ம எழுத்தாளர். பேசிக்கொண்டிருக்கும்போதே முருகனிடமிருந்து புத்தகத்தை பிடுங்கி அதில் ஆட்டோகிராபையும் போட்டுவிட்டு.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதேகடையில் வேறு ஒருவரிடம் ‘’எச்சூஸ்மீ சார் உங்களை எங்கயே பார்த்திருக்கேனா.. நீங்கதானே அந்த பின்னூட்ட புயல் பிரேம்ஜி ராகு’’ என ஆரம்பித்திருந்தார். ‘’அடப்பாவிங்களா! இப்படித்தான் கதற கதற புக்கு விக்கறீங்களா’’ என மிகுந்த கடுப்புடன் கிளம்பினான்.

ஒவ்வொரு கடையில் ஒரு எழுத்தாளர் அவருடைய புத்தகம் கதறகதற ஆட்டோகிராப்பு என பல நூறு கண்டங்களை தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. காசு கொண்டுவரலங் சார் என்று சொன்னாலும்.. சார் கிரெடிட் கார்ட் டெபிட் கார்டுனு எது இருந்தாலும் குடுங்க பார்த்துக்கலாம், நம்ம பேங்க்ல பர்சனல் லோன்கூட போட்டுக்கலாம் புக்கை மட்டும் வாங்கிடுங்க என பயமுறுத்துகின்றனர்.

எல்லா பதிப்பகங்களிலும் தலா ஒரு செட் பொன்னியின் செல்வன் விதவிதமான சைஸ்களில் வைத்திருந்தனர். ஒருவேளை பதிப்பகம் ஆரம்பிக்கணும்னா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சி காட்டினாதான் அனுமதி கிடைக்குமோ என நினைத்துக்கொண்டான். இல்லாட்டிப்போனா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சாதான் புக்ஃபேர்ல ஸ்டால் போட விடுவாய்ங்களோ என்னவோ? அவனுக்கு தெரிந்த ஒரே இலக்கிய புத்தகமான பொன்னியின் செல்வனை குறைந்தவிலைக்கு மலிவு பதிப்பினை வாங்கிக்கொண்டான்.

பொன்னியின் செல்வனுக்கு இணையாக சமகால எழுத்தாளர்களும் ஏகப்பட்ட குண்டு குண்டு புத்தகங்கள் போட்டிருந்தனர். ‘’தமிழனோட வரலாற்றை அப்படியே புழிஞ்சு.. படுக்க போட்டு நெஞ்சுல ஏறி மிதிச்சா மாரி சும்மா நறுக்குனு நாலாயிரம் பக்கத்துல சொல்லிருக்காப்ல நம்ம குண்டுபுக்கு குமரேசன்’’ என யாரோ இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தனர். விருதெல்லாம் குடுத்தாய்ங்களே என ஆர்வத்தோடு அந்த குண்டு புத்தகத்தை தூக்கிப்பார்த்தான். என்னா வெயிட்டு.. நாலுநாள் அதை தூக்கி தூக்கி படித்தாலே பைசெப்ஸ் தாறுமாறாக ஏறிவிடும்.. அப்புறம் ஓங்கி அடிச்சா ஒன்னரை ட்ன்னு வெயிட்டுடா என்று பஞ்ச் டயலாக் பேசலாம். விருது குடுக்கறவங்க பெரிய தராசோடதான் இப்பலாம் விருதுக்கு புக்கு தேர்ந்தெடுக்கறாங்களோ என்னவோ என நினைத்தான். விலையை பார்த்தான் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் வந்தது.

கேன்டீன் பக்கம் ஒதுங்கினான். லட்சக்கணக்கான ரூபாய்களை கொட்டினால்தான் கேன்டீனில் ஒரு டீயும் பன்னும் சாப்பிட முடியும் என்கிற நிலையை கண்டான். சின்ன போண்டா அம்பதுரூவா.. அதைவிட சின்ன பஜ்ஜி எழுபதுரூபா... காஞ்சி சங்கராச்சாரியார் சிலையெல்லாம் வைத்துக்கொண்டு பட்டப்பகலில் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர்.
முருகனுக்கு நரம்பு புடைத்தது.. யாரோ தூரத்தில் ‘’ டேய் உங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா’’ என சொல்லுவதைப்போல இருந்தது.. ஆனால் வரும்போது பார்க்கிங்கில் வாங்கிய் ‘நங்’ கொட்டு நினைவுக்கு வந்தது. இலவசமாக கொடுத்த தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் புத்தக சந்தைக்குள் நுழைந்தான்.

தூரத்தில் இரண்டுபேர் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர். அதை ஒரு மிகப்பெரிய கூட்டமே நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது. அதோடு புத்தகம் வாங்க வந்திருந்தவர்களும் சண்டை நடந்த இடத்திற்கு அருகிலேயே கிடைத்த லிச்சு ஜூசை வாங்கி உறிஞ்சியபடி அதை மகிழ்ச்சியாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் முருகனிடம் கேட்டார் ‘’சார் இதுமாதிரி சண்டை தெனமும் நடக்குமா.. இதுபத்தி தகவல்கள் எங்கே கிடைக்கும்’’ . முருகனுக்கும் அதே ஆர்வம்தான். சண்டை போட்டவர்கள் இரண்டுபேரும் பிரபலமான கவிஞர்களாம்.. அடுத்தமுறை பபாஸியே இலக்கியவாதிகள் சண்டை போட எழிலான ஸ்டால் ஒன்றை கொடுத்து உதவலாம். அங்கே ஒவ்வொருநாளும் யார் யாரோடு புரளப்போகிளார்கள் என்பதையும் பட்டியலிட்டுவிட்டால் ஜாலியான வாசகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என நினைத்தான்.

''ஏன்ப்பா சண்டைபோடும்போது அதை கேமரால படம்புடிச்சி டிவி ரியாலிட்டி ஷோக்களில் கொடுத்தீங்கன்னா.. அதை அவங்க தினமும் காட்டுவாங்க.. நம்ம கவிஞருங்க ஃபேமஸாகி அவர்களுடைய புத்தகங்களும் லட்சக்கணக்கில் விற்குமில்லையா! உங்களுக்குலாம் கொஞ்சம்கூட ஐடியாவே இல்லையா'' என ஒரு பழைய கவிஞர் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

எல்லா சமையல் புத்தகங்களும் பார்க்க ஒரேமாதிரி தோன்றின. 500 கோலம், 400 கோலம் என மாமிகள் விதவிதமாக புத்தகங்கள் வாங்கினர். பகவத் கீதையும் குரானும் சல்லிசு விலையில் கிடைத்தது. எத்தனை விதமான சாமியார்கள்.. சாமியாராக ஆவதற்கு ஒரு வெண்தாடியின் மகத்துவம் எத்தனை முக்கியமானது என்பதை புத்தக கண்காட்சியில் ஸ்தாபித்திருந்த எண்ணற்ற சாமியார்களின் ஸ்டால்களுக்கு அலைந்து திரிந்து தெரிந்துகொண்டான்.

ஏழைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக தலித்துகளுக்காக பெண்களுக்காக குரல் கொடுக்கிறோம் பேர்வழி முற்போக்கு எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஏனோ ஏழைகளுக்கு கட்டுபடியாகத அநியாய விலையிலும், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன்கதைகள்,மரியாதை ராமன் கதைகள், ராமாயணம்,மகாபாரதம், கோலங்கள் ஆயிரம், விதவிதமான சைவ சமையல், கற்பனை கதைகள் மட்ட ரேட்டில் கிடைத்தன. கேட்டலாக்குகள் நிறைய இலவசமாக கிடைத்தன. வேண்டியவரை வாங்கி பையை ரொப்பிக்கொண்டான். அப்போதுதான் அந்த புத்தகம் கண்ணில் பட்டது..

‘’முதலீடேயில்லாமல் பணம் சம்பாத்திக்க எளிய வழி’’

முதல்ல பணம் சம்பாதிப்போம்.. நிறைய சம்பாதிச்சாதான் இலக்கிய பொஸ்தகம் வாங்கமுடியும். அப்புறமா அதையெல்லாம் படிச்சி அப்பாடக்கர் ஆவோம் என முடிவெடுத்தான். புத்தகத்தை வாங்க நினைத்து பாக்கெட்டில் கைவைத்தால் ஆச்சர்யமாக அதிர்ச்சியாக இருந்தது. சும்மா சுற்றியதற்கே கொண்டுவந்த முன்னூறில் முக்கால்வாசி காலியாகியிருந்தது. அந்த புத்தகத்தின் விலை நூற்றம்பது! ‘’நான் இலக்கியவாதியா ஆகவே முடியாதா’’ என கதறி அழவேண்டும் போல இருந்தது.

11 January 2012

குவியும் குப்பைகள், காத்திருக்கும் எமன்!
தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்திற்கு... ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது! எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8000 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன!

குப்பைகள் ஒன்றுக்கும் உதவாத யாருக்கும் பிரச்சனையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகளாகவே வாழ்ந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனால் யாருக்கு பிரச்சனை! ஆனால் அவை நம் உயிருக்கே உலை வைக்கவல்ல எமனாக மாறிவருவது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த பயத்தினை உண்டாக்குகிறது. நம் சந்ததிகளுக்கு இந்த பூமியில் எதை மிச்சம் வைத்துவிட்டுப்போக போகிறோம் குப்பைகளையா சுத்தமான சுற்றுசூழலையா என்பதை இப்போதே முடிவு செய்யவில்லையெனில் நாளை அதற்கான வாய்ப்பேயில்லாமல் போகலாம்!

அதிலும் குறிப்பாக சென்னை,கோவை,மதுரை,திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பைக்கொட்டுவதில் போட்டிபோடுகின்றன. சென்னையில் 1991ஆம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600டன்! ஆனால் இன்றோ ஒவ்வொருநாளும் 4000டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன.. நீர்நிலைகள் அழிகின்றன.. மக்களின் உடல்நலம் உயிருக்கும் ஆபத்து..

குப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? எப்படி சரிசெய்வது?

குப்பைகள் ஓர் எளிய அறிமுகம்!

குப்பைகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள்,எல்க்டாரனிக் குப்பைகள்,அணுக்கழிவுகள்,கட்டிடக்கழிவுகள்,தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை,மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கலாம்! இதுதவிர சில ஸ்பெஷல் குப்பைகளும் உண்டு.

தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60%. மக்காத குப்பைகளின் அளவு 35% மற்றவை 5%தான்.

இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர்,மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,மாமிசம் என நமக்கு மிகநெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான்! மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக்,ரப்பர்,கண்ணாடி,உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்.

நம்மை அழிக்கவல்ல நரகாசுரன்!

‘’அதுதான் மக்கிடுமே சார்! அதனால நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது’’ என நினைக்கலாம்! இந்த மக்கும் குப்பைகளை கொட்டி கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம் இந்த மீத்தேன்தான்!
குப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும்.

காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்க காரணம். இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக்,ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாகும்.

மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும்,சுகாதார கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்துகொண்டுபல ஆயிரம் கிலோமீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கிய காரணமாகவும் உள்ளது! ‘’சார் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது , ஆனா பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’’ என நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம்.

காரணம் இந்த குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். இன்றைக்கு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாக காரணம் இந்த குப்பைகள்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படுகிற பகுதிகளான பள்ளிக்கரணை,கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி முதலான பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தாய்ப்பால் கூட விஷத்தன்மை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறைய பேருக்குக் கருச்சிதைவும்,ஆண்மைக்குறைவும்,சுவாசக்கோளாறுகளும்,நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. காரணம் அங்கே மலைபோல குவியும் குப்பைகள்தான். அணுக்கதிர்வீச்சால் உண்டாகலாம் என்று நாம் அஞ்சுகிற அனைத்துவிதமான உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்தும் சக்தி குப்பைகளுக்கும் உண்டு. ஒரு ட்யூப்லைட்டில் இருக்கிற ஒருகிராம் பாதரசம் போதும் ஒரு ஏக்கர் நீர்நிலையை புல் பூண்டு முளைக்காத அளவுக்கு அழிப்பதற்கு!

மனிதர்களுக்கு இம்மாதிரி பிரச்சனைகள் என்றால் மக்காத குப்பைகளால் நிலமும் நீர்வளமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒருகாலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட மெகாசைஸ் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது!

அதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்த குப்பைகளுக்கு உண்டு. விஷத்தன்மையுள்ள பொருட்களை குப்பைகளில் எரிந்துவிடுகிறோம். ஆனால் அவை நிலத்தடி நீரோடு கலந்து பல நூறு கிலோமீட்டர்களுக்கு பூமிக்கு கீழே பயணிக்கின்றன. எங்கோ சென்னையில் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரை ஈரோட்டில் ஒருவர் உபயோகித்து பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.

குப்பைகள் ஏன் பெருகின?

நம் வாழ்க்கை முறை மாற மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால் போதும்.. சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார்! ஆனால் இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப்போயிருக்கிறது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது.

அதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர்,பவுடர் டப்பா,மைடப்பா,பாட்டில்கள்,உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காய்லாங்கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான்! அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர்தான். சென்ட்டு பாட்டில் உபயோகித்தால் உபயோகித்துவிட்டு குப்பைத்தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையை கையாண்ட நம்மால் இன்று அதை பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்!

இன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி அதிலேயே உணவுக்கழிவுகளும் பவுடர்டப்பாவும் சென்ட்டு பாட்டிலும் மொத்தமாக குவிகின்றன. அதில் பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. பேட்டரி வேலை செய்யலையா?,ட்யூப்லைட் ப்யூஸ் போயிடுச்சா? தூக்கிவீசு தெருவில்! பரட்டோ வாங்கப்போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்கவேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருக பெருக குப்பைகளின் அளவும் பெருகியுள்ளது. வாங்கும் சக்தி அதிகரிக்க கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைகாட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் இன்றோ எல்சிடி,3டி,எச்டி என மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகிறது! நுகர்வு கலச்சாரமும் உலகமயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது.

இதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைகழிவுகளும் மருத்துவகழிவுகளும் மலைபோல குவிகின்றன? இதை தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ,ரமணாவோ,சூப்பர்மேனோ வரப்போவதில்லை.. பிறகு என்னதான் செய்வது
இந்த குப்பைகளை?

அரசு என்ன செய்கிறது?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி ரொப்புகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா.. பெருங்குடியில் கொட்டு அங்குமிடமில்லையா பள்ளிக்கரணையில் கொட்டு.. அங்குமிடமில்லையா... புதிய இடம் கண்டுபிடி! இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைகளை எதுவும் செய்வதில்லை..

இதுதான் தற்போதைய சுழற்சிமுறை திடக்கழிவு மேலாண்மையாக இருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80% அரசினால் அள்ளமுடிகிறது! மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி நோய் பரப்பி வாழும்!

அரசு இந்த குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500ரூபாயிலிருந்து 1100 வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே அப்படீனா நல்லாதானே பண்ணுவாய்ங்க என்று நினைக்கலாம். உண்மையில் இந்த தொகையில் 60-70% குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30% அதை எடுத்துசெல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5%தான் அதை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வெறும் 5%ஐ வைத்துதான் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்! அதனாலேயே என்னவோ கொட்டப்படுகிற குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கப்பட்டாலும் அவை மீண்டும் கலக்கப்பட்டு அப்படியே கொண்டுபோய் கொட்டப்படுகிறது.

அதாவது உங்கள் வீட்டுவாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்துவீதியில் இருக்கிறவருடைய வாசலில் கொட்டுவதைப்போலவே!

‘’நமக்கு நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்.. என்கிற மனநிலையில்தான் அரசும் செயல்படுகிறது. அதாவது பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார,நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்’’ என்கிறார் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.
குப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகமோசமான நிலையில் இருப்பதை யாருமே நேராகவே சென்றாலும் கூட பார்க்க முடியும். குப்பைலாரிகள்தான் நோய்பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகளில் தொழிற்சாலை கழிவுகளை மாநகராட்சி குப்பைவண்டிகளில் பெறக்கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை.

‘’ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையை கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம்.. ஆனால் இங்கே யாருக்கு அதைப்பற்றி கவலை, இங்கே குப்பை கொட்டு இடங்களில் தெருநாய்கள் கூட நுழையக்கூடாது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர், இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான்! இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என வருந்துகிறார் பெயர் சொல்லவிரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர்.

நாங்க மட்டும் சளைச்சவங்களா?

என்னதான் அரசு கூவி கூவி குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க சொன்னாலும் விடாப்பிடியாக குப்பைகளை ஒன்றாக்கி கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். அதோடு குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமேயில்லாமல் காலியிடங்கள்,சாக்கடைகள் என பார்த்த இடத்திலும் கொட்டுகிறோம். கரப்பான் பூச்சி ஸ்ப்ரே பாட்டில்களை குப்பைகளில் போடுவது தொடங்கி மெர்குரி மிகுந்த ட்யூப் லைட், காட்மியம் கொண்ட பேட்டரி என சுற்றுசூழலை ஒருகை பார்க்கத்தான் செய்கிறோம். அதோடு விட்டாலும் பரவாயில்லை.. கடலை மிட்டாய் வாங்கினால் பிளாஸ்டிக் கவர்.. அண்டா குண்டா வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்.. வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். பிளாஸ்டிக் கவரில் கிடைக்காத பொருட்கள் மட்டமானவை என்னும் சிந்தனைகளை வளர்த்திருக்கிறோம்!

இதுவேறயா!

மருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்துவகையாக பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சிலவகை குப்பைகள் 900டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால் இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களை கரக்ட் செய்து எப்படியோ பொதுக்கழிவுகளோடு கலந்துவிடுவது தொடர்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல.. கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக எலக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் கூட பொதுக்கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவும் தடுத்து நிறுத்தப்படவேண்டியது.


தீர்வுதான் என்ன?

இதுகுறித்து எக்ஸனரோ இன்டர்நேஷனல் அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம். ‘’நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால் அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக கொஞ்சம் உழைப்பும்,பொறுமையும் அவசியம், குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்’’ என்றார்.

நிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார் அவர் மட்டுமல்ல பல தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.

‘’வேலூர் தங்கக்கோவிலுக்கு ஒவ்வொருநாளு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவுசெய்தது எக்ஸனோரா, அங்கே கிடைக்கும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காக தயாராகின்றன, இவை தவிர்த்து மிகச்சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன’’ என்றார் எக்ஸனோரா நிர்மல்.

ஹேன்ட் இன் ஹேன்ட் என்னும் அமைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம் பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்கில் ஒன்றை பிடித்துள்ளது! குப்பைகளின் மூலம் பயனடைதல் அதன்மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியை பின்பற்றி இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.

தமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொருநாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒருபகுதியாக மகாபலிபுரத்தில் பயோகேஸ் தயாரிப்பு மற்றும் உணவு கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்திவருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம் விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது! தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது! மின்சாரம் உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.

நம்முடைய மத்திய மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புற பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம்பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும்.. அவை வெறும் 10%தான். மீதி?

‘’இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதிகள் இன்மை. இதை தீர்க்க மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழு வீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி அவற்றை கையாளுதல் அழித்தல் வரை சுற்றுசூழல் சட்டம் சொல்கிற படி செய்யவேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப்போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக்கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்’’ என்கிறார் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.

அவர் மேலும் பேசும் போது ‘’சுவீடன் மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் குப்பைகளை கையாள ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அவருடைய வருவாயில் சிறிய தொகையை அரசே நேரடியாக வரியைப்போல கட்டயமாக பெறுகிறது. அதைக்கொண்டு நாட்டின் குப்பைகளை கையாளுகிறது. அதோடு அங்கே தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளின் தன்மைகேற்ப மறுசுழற்சி செய்வதற்கான தொகையை முன்பே செலுத்தவும் வற்புறத்தப்படுகின்றன, அதாவது ஒரு குளிர்பான பெட் பாட்டில் விற்கும்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்யத்தேவையான தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியே ஆகவேண்டும், அதே போல மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம் உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதனால் உண்டாகும் குப்பைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதை மாற்ற வேண்டும். குப்பைகளுக்கு விலை நிர்ணயம் செய்துவிட்டால் யார்தான் அதை சாலையில் அநாதையாக விட்டுவைத்திருப்பார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல இங்கேயும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்திலும் குப்பைகளை வெகுவாக குறைக்க முடியும்’’ என்றார்.

‘’மக்களை மட்டுமே குறைச்சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேணவேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோமெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால் இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்.

தீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில் தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால் பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே!

அடுத்த முறை ஒரு பிளாஸ்டிக் பையை வாங்குவதற்கு முன்பாகவும், குப்பைத்தொட்டியில் எல்லா குப்பைகளையும் கலந்து கொட்டும் போதும் ஒரே ஒருநிமிடம் நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நமது மூதாதையர்கள் நமக்காக விட்டுச்சென்ற அழகான பூமியை குப்பைகூளமாக மாற்றிவிட்டோம் என்பதை உணருவோம்.

குப்பைகளை கையாள்வதில் அரசை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் நம்மால் இயன்றதை இந்த சுற்றுச்சூழலுக்கு செய்ய முன்வர வேண்டும். ஊழலைப்போலவே தனிமனிதனிடமிருந்துதான் இந்த மாற்றம் தொடங்கவேண்டும்! நம் குழந்தைகள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் குப்பை போடுவதை பாவமாக கருத வேண்டும். அதுதான் குப்பைகளுக்கு முடிவுகட்டும். இதோ இந்த நிமிடம் தமிழகம் முழுக்க ஒன்பது டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன..குப்பையை சப்பை மேட்டராக நினைத்தால் ஆபத்து நமக்கே!


******************************************


மக்களாகிய நாம் செய்யவேண்டியதென்ன?

*உங்கள் பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படவில்லையென்றாலும் தரம்பிரித்தே துப்புரவு தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

*காலிமனைகளில்,சாலை ஓரங்களில்,கழிவுநீர் கால்வாய்களில்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள்

*குப்பைகளை எரிக்கவே எரிக்காதீர்கள்

*கடைகளுக்கு செல்லும் போது துணி அல்லது சணல் பை எடுத்துச்செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.

*இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம்.

* நான் இன்னும் அதிகமா செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்.. உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல் அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக்கழிவுகளை கொட்டிவிட்டு கொஞ்சமாக காய்ந்த சாணமோ அல்லது காய்ந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்று போகும் வழிசெய்து மூடிவைத்துவிடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார்! அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம்! இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது! அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள்! காசுக்கு காசு. சுற்றுசூழலுக்கும் நல்லது.

அரசு செய்ய வேண்டியது

*ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருப்பதுபோலவே இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன்மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாக குறைக்கலாம்.

*குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம்பிரித்து அதை சரியான முறையில் கையாள வேண்டும்.

*குப்பைகளை கையாள நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும்.
 
*மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.

*சிறிய அளவில் பயோகேஸ் தயாரித்தல் ,குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

*உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியை பெற்று சரியான முறையில் உபயோகித்தல்.

*நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*மருத்துவக்கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.


சட்டம் என்ன சொல்கிறது?

பெருகிவரும் குப்பைகளை சரியாக பயன்படுத்தவும் அழிக்கவும் அதை கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES, 2000 என்கிற சட்டம் நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்றவேண்டும், அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது.
அதன்படி

1.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நேரடியாகவோ குப்பைத்தொட்டிகள் மூலமாகவே குப்பைகளை பெறுதல்

2.கிடைத்த குப்பைகளை அதன் தன்மைகேற்ப தரம் பிரித்தல்

3.உணவுக்கழிவுகளை தனியாக எரு தயாரிக்கவும் பயோகேஸ் உற்பத்திக்கும் பயன்படுத்துதல்

4.பயோ மெடிக்கல் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகரக்கழிவுகளோடு கலக்காதிருத்தல். மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல் அழித்தல்.

5.குப்பைகள் எரித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது

6.தெருநாய்கள் முதலான விலங்குகள் குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவுதேடுதலையும் தடுத்தல்

7.ஒவ்வொரு குடிமகனுக்கும் குப்பையை தரம்பிரித்து கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துதல் மற்றும் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தல்

8.மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்குமுன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புறவு தொழிலாளர்கள் அதை கைகளால் தொட்டு உபயோகிக்காமல் ஆட்டோமேடிக் முறையை பயன்படுத்துதல்.

9.குப்பை அள்ளும் வாகனங்களை உபயோகித்தல். அந்த வாகனம் சுத்தமானதாகவும் தரம்பிரித்த குப்பைகளை கலக்காமல் எடுத்து செல்லும் வகையிலும் இருத்தல் வேண்டும்.

10.பெறப்பட்ட குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்தல் முதலான காரியங்களின் மூலம் அழித்தல். மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மட்டும் பிரித்து உபயோகித்தல்.

11.மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை LAND FILLS எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்டவேண்டும். அப்பகுதி மக்கள் வசிக்காத பகுதிகள்,காடுகள்,நீர்வளப்பகுதிகள்,வரலாற்று பகுதிகள்,தேசியபூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமைக்க கூடாது. இந்த இடம் 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும்.

12.இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும் காம்பவுன்ட் சுவர்கள் கட்டப்பட்டதாகவும், போதிய காவலர்களோடும் இருக்க வேண்டியது அவசியம். இங்கே வெளியாட்களும் தெருநாய்கள் முதலான விலங்குகளும் நுழைவதை தடுக்க வேண்டும்.
இவை தவிர உரம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும், இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் காற்றும் நீரும் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் விரிவாக உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள http://envfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.


************************

ஆன்லைன் காயலாங்கடை!

சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு – http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.(நன்றி புதியதலைமுறை)

09 January 2012

மயில் ரக்க...
பாப்பாவுக்கு மூன்று நாளாக ரொம்பவே கவலையாகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் யாரோ கொடுத்த மயில்ரக்கையை கணக்கு புத்தகத்தில் வைத்திருந்தாள். அது குட்டிபோடும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தும் அது குட்டிபோடாமல் இருந்ததே கவலைக்குக் காரணம்.

‘’அப்பா.. ரம்யாவோட மயில் ரெக்கை ரெண்டு குட்டி போட்டுடுச்சுப்பா.. என்னோட மயில் ரெக்கை எப்போ குட்டிப்போடும்’’ என ஒவ்வொரு நாளும் கேட்பாள். ராஜேஷும் ‘’நாளைக்கு குட்டிப்போட்டிடும்மா’’ என்று பொய்யான நம்பிக்கை தருவான். தினமும் காலையில் எழுந்ததும் ஓடிப்போய் கணக்கு புத்தகத்தை திறந்து பார்ப்பாள். அதில் அவள் ஏற்கனவே வைத்திருந்த அதே மயில் ரக்கை உறங்கிக்கொண்டிருக்கும். புத்தகத்தை பார்த்ததும் முகம் வாடிவிடும். கணக்கு புத்தகத்திலிருந்து தமிழ்புத்தகத்திற்கு வீடு மாற்றிப்பார்த்தாள் அப்போதும் குட்டிபோடவில்லை.

‘’அப்பா! நேத்து நைட்டு சொன்னியே நாளைக்குக் காலைல குட்டிப்போட்டிடும்னு.. ஏன்ப்பா இன்னும் குட்டிப்போடல, என்னை தூங்கவைக்கறதுக்காக பொய் சொன்னியா!’’ என கோபத்துடன் திட்டுவாள். பார்க்க பாவமாக இருக்கும்.

‘’மயில்ரக்கைலாம் குட்டிபோடாதுடா.. அதுலாம் சும்மா.. ரம்யா வீட்லருந்து இன்னொரு மயில் ரக்கைய எடுத்துட்டுவந்து புக்குக்குள்ள வச்சி உன்னை ஏமாத்திருப்பா.. அதெல்லாம் நம்பாத பாப்பா’’ என்று சொன்னாலும் விடமாட்டாள்.

‘’போப்பா! அதெல்லாம் கிடையாது நானும் உன்னையமாரியே ரம்யா கிட்ட கேட்டேன்பா.. என்னடி வீட்லருந்து வேற ரக்கை வச்சி எடுத்துட்டு வந்துட்டியானு.. ஆனா அவ நிஜமாவே குட்டிப்போட்டுச்சுனுதான் படிப்புமேல பிராமிஸ் பண்ணி சொன்னா, நம்முள்து நல்ல ரக்கை இல்ல போல.. உடம்பு சரியில்லையோ என்னவோ.. அதான் குட்டிப்போடல’’ என அவளுக்கான காரணங்களை அவளே கண்டுபிடிப்பாள்.

பார்க்கவே பாவமாக இருக்கும். பாப்பாவைப்போலவே ராஜேஷூம் இரண்டாம் வகுப்பு படித்தபோது  இதுபோல மயில் ரக்கைகள் வைத்து அது குட்டிபோடுமா என காத்திருந்து ஏமாந்துபோயிருக்கிறான். அப்போதெல்லாம் அவனுடைய நண்பன் வடிவேலுவின் புத்தகத்தில் இந்த மயில் ரக்கைகள் குட்டிப்போட்டதாக சொல்லி நிறைய காட்டுவான்.

அவனுக்கு இன்று வரை அதுவே புதிரான விஷயம்தான். சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன.

பாப்பாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. தாயில்லாத குழந்தை. மனசு கேட்காமல் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் கோயில்வாசலில் ஒரு நல்ல ஃப்ரஷ்ஷான மயில்ரக்கையை வாங்கிக்கொண்டு வந்து அன்றைக்கு இரவே ராவோடு ராவாக பாப்பா உறங்கிய நேரம் பார்த்து அவளுடைய தமிழ் புத்தகத்தை திறந்து அதில் அந்த மயிலிறகை வைத்துவிட்டான். விடிந்தால் அதை பார்த்து குட்டிப்பாப்பா துள்ளிகுதித்து மகிழ்வாள் என்கிற கனவோடு தூங்கப்போனான். விடிந்தது. பாப்பா அந்த புத்தகத்தோடு டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ராஜேஷிடம் வந்தாள்.

‘’அப்பா அந்த புக்குல மயில்ரக்கைய ஏன் வச்ச..?’’ என்றாள். ராஜேஷூக்கு திக்கென்றிருந்தது.

‘’நான் வைக்கல பாப்பா.. அது உன் ரக்கை போட்ட குட்டியா இருக்கும்.. ’’ என்றான்.

‘’பொய் சொல்லாத.. நீதான் வச்சிருக்க எனக்கு நல்லாத்தெரியும்’’ என உறுதியாக சொன்னாள்.

‘’ஏன் பாப்பா இப்படி சொல்ற.. அப்பா பொய் சொல்லுவேனா.. நான்தான் வைக்கலேனு சொல்றேனில்ல’’ என்றான்.

‘’ஏன்ப்பா இதுமாதிரிலாம் பண்ற.. பொய்வேற சொல்ற, பொய்சொல்றது ரொம்ப தப்பு! இங்கே பார் இது நான் வச்சிருந்த மயில் ரக்கை..’’ என அவளுடைய மயில் ரக்கையை காட்டினாள்.

‘’இது நீ வச்ச மயில் ரக்கை’’ என அவன் இரவு வைத்த மயில்ரக்கையையும் காட்டினாள். ராஜேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. திருதிருவென முழித்தபடி பாப்பாவிடம் என்ன சொல்வது என யோசித்தான்..

‘’எங்கேயாச்சும் குட்டி அதோட அம்மாவை விட பெரிசா இருக்குமா! பாரு நீ வச்ச மயில் ரக்கை எவ்ளோ பெரிசா இருக்கு.. என்னோட மயில்ரக்கைய பாரு எவ்ளோ சின்னதா இருக்கு.. இதுகூட தெரியாம மயில்ரக்கையை கடைலருந்து வாங்கிட்டு வந்து வச்சதுமில்லாம பொய்வேற சொல்ற.. போப்பா..பேட் அப்பா.. இவ்ளோ பெரியவங்களா இருந்துட்டு பொய் சொல்லலாமா? பொய் சொல்லக்கூடாதுனு நீதான் எனக்கு சொல்லிக்குடுக்கணும்!’’ என பேசிவிட்டு எரிச்சலோடு அவன் வாங்கி வைத்த மயில்ரக்கையை டேபிளில் வைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.

விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.

பாப்பாவின் அராஜகம் இப்படியாக அதிகமாகிக்கொண்டே சென்றது. ஒருநாள் மாலைநேரம் அலுவலகத்திலிருந்து வந்தவனிடம் தன் கணக்கு புத்தகத்துடன் ஓடிவந்தாள். ''அப்பா தோ பாரு என் மயில் ரக்க குட்டி போட்டிருச்சி!'' என்று காட்டினாள். ராஜேஷுக்கு புரியவேயில்லை. எடுத்துப்பார்த்தான் ஏற்கனவே பாப்பா வைத்திருந்த அதே மயில்ரக்கையின் ஜாடையில் இன்னொரு சின்ன மயில்ரக்கை!

''பாப்பா உண்மைய சொல்லு இது எப்படி வந்துச்சு..''

''அப்பா இது அந்த ரக்க போட்ட குட்டிப்பா.. பாரு எவ்ளோ அழகா இருக்குன்னு.. அவங்க அம்மா மாதிரி''

''மயில்ரக்கைலாம் குட்டிபோடாதும்மா! நீ நல்ல பாப்பா தானே பொய்சொல்லாத! இந்த குட்டி ரக்க எப்படி வந்துச்சு''

''அப்பா படிப்பு பிராமிஸ்! இது அந்த ரக்கை போட்ட குட்டிதான்ப்பா'' என்று அடித்து சத்தியமும் செய்தாள். ராஜேஷுக்கு குழப்பமாக இருந்தது. இன்னொரு முறை கணக்கு புத்தகத்தை பார்த்தான்..ஆமாம் இரண்டு மயில் ரக்கை இருக்கிறது.. ஆனால் எப்படி?

''அப்பா உனக்கு ஐஸ்க்ரீம் சாக்லேட் வீடியோகேம்ஸ்லாம் வாங்கித்தரேன்.. உண்மைய சொல்லும்மா''

''அப்பா இந்த மயில்ரக்கைய தமிழ் புக்குலருந்து எடுத்து கணக்கு புக்குக்குள்ள காலைல ஸ்கூலுக்கு போனதும் வச்சேனா! அப்புறம் ஈவ்னிங் எடுத்துப்பார்த்தா குட்டிப்போட்டிருக்கு! மயில்ரக்கை எப்படி குட்டிபோடும்னு இவ்ளோ பெரிய ஆளு உங்களுக்கே தெரியல.. நான் குட்டிப்பொண்ணு எனக்கு எப்படி தெரியும்! போப்போ ஒனக்கு ஒன்னுமே தெரியல!'' என்றாள் பாப்பா.

இந்தமுறையும் விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ். இதற்குமேல் அவளை கட்டாயப்படுத்தி கேட்டால் அழத்தொடங்கிவிடுவாள்.. அவளை சமாதானப்படுத்தவே முடியாது. அதனால் இந்த பிரச்சனையை இத்தோடு நிறுத்திவிட்டு ''ஓக்கே பாப்பா! அது இன்னொரு குட்டிப்போட்டா எனக்கு ஒன்னு குடும்மா'' என்று சொல்லிவைத்தான்.

தன்னுடைய டைரியில் அன்றொரு நாள் பாப்பா வீசிச்சென்ற மயில்ரக்கையை பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதை எடுத்துப்பார்த்தான். அது குட்டியெல்லாம் போடாமல் அமைதியாக டைரியின் பக்கங்களுக்குள் உறங்கிக்கொண்டிருந்தது.சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன.


(நன்றி-வசந்தம்)

07 January 2012

புத்தக கண்காட்சி 2012
புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கி குவித்த புத்தகங்களில் பாதிகூட இன்னும் படித்து முடிக்கப்படவில்லை. அதனால் இம்முறை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறேன். ஏகப்பட்ட பதிப்பகங்கள் கோடிக்கணக்கான நூல்கள். அடுத்த பத்து நாட்களுக்கு கண்களுக்கும் கால்களுக்கும் நிறைய வேலையிருக்கும் என்றே நினைக்கிறேன். முடிந்தவரை அங்கே காண்பதையும் கேட்பதையும் நம் இணையதளத்தில் தரமுயல்கிறேன்.

எப்போதும் போல இந்த ஆண்டும் கிழக்கு,நக்கீரன் மாதிரியான பெரிய பதிப்பகங்கள் ஏகப்பட்ட பினாமி ஸ்டால்களை போட்டிருப்பதை பார்க்க முடிந்தது. போலவே ஏகப்பட்ட சாமியார் மார்க்கெட்டிங் ஸ்டால்கள்ளை காண முடிந்தது. இதில் மத வேறுபாடே கிடையாது. யுனானி சித்த மருத்துவ ஸ்டால்களும் நிரம்பியிருந்ததை பார்க்க முடிந்தது. நோனி மருந்து விற்கும் ஸ்டால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சியில் இந்த சாமியார்களுக்கும் மருத்துவர்களுக்கும் என்ன வேலை என்கிற கேள்வியிருந்தாலும் பொருளாதார அடிப்படையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாதோ என்றும் தோன்றுகிறது.

ஆண்டுதோறும் புத்தக காட்சி அரங்கில் கிழக்கு பதிப்பக சந்துகளில் நடைபெறும் எழுத்தாளர் பாராவின் வாசகர் சந்திப்பு இந்த முறை மிஸ்ஸிங். அதனாலேயே என்னவோ புத்தக கண்காட்சியை பூரணமாக அனுபவித்த சுகமேயில்லை. பீரில்லாத டாஸ்மாக்கும் சாரு இல்லாத புக்ஃபேரும் ஒன்றுதான். கடந்து சில ஆண்டுகளாக உயிர்மை ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுக்கும் அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா
இந்தமுறை இல்லை என்பது வெந்த எதிலோ வேல் பாய்ச்சுவதாக அமைந்தது. ஆனால் உயிர்மை அரங்கில் சாருவுக்கு பதிலாக இம்முறை எஸ்ரா அமர்ந்திருக்கிறார். ஆட்டோகிராஃப் போடுவதோடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார். நேரமிருந்தால் யார் வேண்டுமானாலும் அவரோடு பல மணிநேரங்கள் உரையாட முடியுமென நினைக்கிறேன். அவரோடு எப்போதும் போல மனுஷ்யபுத்திரனும் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

சுஜாதாவின் பல புத்தகங்கள் மீனாட்சி புத்தக நிலையத்தில் மலிவு விலையில் கிடைக்கிறது. நமக்கு அறிமுகமில்லாத அவருடைய பல நாவல்களும் 50ரூபாய்க்கும் கம்மியாக கிடைப்பது அவருடைய பெருந்திரளான ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும். கண்காட்சி தொடங்கிய இரண்டே நாளில் கொண்டு வந்த புத்தகங்களில் முக்கால் வாசி காலி என கடைக்காரர் பெருமிதமாக சொன்னார். ‘’யாரோ இன்டர்நெட்டுல எழுதிருப்பாங்க போல சார்.. வரவங்க பூரா நெட்ல பார்த்தோம் சுஜாதா புக்கு எங்கேனுதான் கேக்கறாங்க’’ என்றார். ஸ்டாக் தீர்வதற்குள் முந்துங்கள். சுஜாதா புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கிற இன்னொரு பதிப்பகமான விசாவில் எல்லாமே ரீப்ரின்டில் ஏகத்திற்கும் விலையேற்றி விட்டனர்.

புத்தக சந்தையில் நம் கமர்ஷியல் தோழர் யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் நாவல் நன்றாக விற்பதாக அங்கே கடை போட்டிருக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் மகிழ்ச்சியுடன் கூறினார். (ஸ்டால் எண் – 334). விலை 50தான். சுஜாதாவின் கதைகளை விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு இந்நாவல் நல்ல தீனியாக இருக்கும் என பிரபல எழுத்தாளர் ஒருவர் அழிக்கபிறந்தவனை படித்துவிட்டு நேரில் பாராட்டினார். டிஸ்கவரியிலேயே பதிவர் உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் சிறுகதை தொகுப்பும், கேபிள் ஷங்கரின் தெர்மக்கோல் தேவதைகளும் கிடைக்கிறது. டிஸ்கவரி புக்பேலஸ் கடையில் இணையவாசி என அறிமுகம் செய்துகொண்டால் சிறப்பு சலுகைகள் கொடுக்கிறார்.

கலைஞர் கருவூலம் என்கிற ஸ்டாலில் திராவிட இயக்க வரலாறு என்கிற குண்டு புஸ்த்தகம் வெகுவாக கவர்ந்தது. விலையும் 300தான். 1999வரையிலான திராவிட இயக்க வரலாறு எளிய தமிழில் சின்னச்சின்ன சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஒன்று வாங்க நினைத்திருகிகறேன். கிழக்குப்பதிப்பகத்தில் இன்னமும் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று பார்க்கவில்லை. ஆனால் இந்த புத்தக கண்காட்சியில் சிறந்த கேட்டலாக் அவர்களுடையதுதான். இலக்கிய நாவலினைப்போல பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலவசம் என்பதால் அந்தப்பக்கம் செல்பவர்கள் கேட்டுவாங்கிச்செல்லவும்.


காமிக்ஸ் ரசிகர்களுக்கு சரியான வேட்டை ஸ்டால் நம்பர் 372ல் காத்திருக்கிறது. முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் தரம் பிரித்து வகை வகையாக வரிசைபடுத்தி வைத்திருக்கின்றனர். கௌபாய்கதைகள், சயன்ஸ் பிக்சன் கதைகள், டெக்ஸ்வில்லர் கதைகள், மர்ம மனிதன் மாண்ட்ரேக், துப்பறியும் கதைகள், எனக்கு பிடித்த சிஐடி ராபின் சாகசங்கள் என ஏகப்பட்ட காமிக்ஸ்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. அதுபோக 900ரூபாய்க்கு லயன்+முத்துகாமிக்ஸ் ஃபுல்செட் ஒன்றும் வைத்துள்ளனர். மேலதிக விபரங்களை அடுத்த பதிவில் தருகிறேன். நேற்று ஒரே நாளில் பதினைந்துக்கும் மேல் ஃபுல்செட் விற்றுத்தீர்வதால் ஆர்வமுள்ள நண்பர்கள் இன்றே வாங்கிப்பயனடையலாம்! அதோடு லயன் கம்பேக் ஸ்பெஷல் என்கிற புதிய 200 பக்க காமிக்ஸ் களஞ்சியமும் விற்பனைக்கு வந்துள்ளது.இதுதவிர சொல்ல இன்னும் நிறையவே இருக்கிறது.. அது அடுத்த பதிவில்!
படங்கள் - கிங்விஸ்வா

06 January 2012

கோடம்பாக்கம் கும்மி

நல்லபடங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் தோல்வியை தழுவுகிற துயரமெல்லாம் கலைஞர் ஆட்சியில் மட்டுமல்ல கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் ஆட்சியிலும் நடக்கிறது. குடும்ப ஆட்சி மாறினாலும் கண்ணீர்க்காட்சிகள் மாறவில்லை என கோடம்பாக்கம் வட்டாரங்கள் இப்போதே கூடிகூடி கும்மியடித்து அழத்தொடங்கிவிட்டனர். அதற்கு சரியான உதாரணம் அண்மையில் வெளியான மௌனகுரு மற்றும் மகான் கணக்கு. மௌனகுரு படத்தின் நாயகன் கலைஞரின் பேரன் அருள்நிதி என்பது நீதிக்கதைகளை உங்களுக்கு நினைவூட்டலாம்.


கடந்த ஆண்டில் வெளியான மிகச்சில நல்லபடங்களில் மௌனகுருவும் ஒன்று என விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்ட படம். ராஜபாட்டை பார்த்து பேண்ட்டு சட்டையெல்லாம் கிழித்துக்கொண்டதிலிருந்து இனி தமிழ்படமே பார்ப்பதில்லை என சபதமேற்றிருந்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மௌனகுரு நன்றாக இருப்பதாகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமென்றும் சொல்லி சொல்லி அதிர்ச்சியூட்டிக்கொண்டே இருந்தனர்.


மௌனகுரு படத்தின் நாயகன் அருள்நிதி , கலைஞர் அளவுக்கு பிரமாதமான திறமை கொண்டவரில்லை. இருந்தாலும் அவருடைய வம்சம் திரைப்படம் பசங்க பாண்டிராஜின் கதையால் எப்படியோ பிழைத்துக்கொண்டது. ஆனால் அவர் நடித்த உதயன் படத்தினை பார்த்து சரக்கடிக்காமலேயே வாமிட் பண்ணியிருக்கிறேன். அப்படி ஒரு படம் வந்தது கூட பலருக்கும் தெரிந்திருக்காது. படுபயங்கரமான திரைப்படம் அது. அதைபற்றி நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. அது ஒரு காரணம் என்றாலும் படம் பார்க்க தூண்டுகிற எந்த அம்சமும் இல்லாமல் இவ்வளவு மொக்கையாக கூட டிரைலர் வெட்ட முடியுமா என கீழத்தெரு கிச்சாகூட கேட்குமளவிற்கு வெட்டப்பட்ட ஒரு டிரைலரும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெகுவாக குறைத்தன. இருந்தும் நான் மௌனகுரு படம் பார்த்த சம்பவம் ஒரு விபத்தினைப் போல நடந்தேறியது!


படமெடுத்தவர் மிஷ்கினுக்கு தூரத்து சொந்தமாக இருக்கலாம், திரையில் வருகிற எல்லா காட்சிகளும் அச்சு அசல் மிஷ்கின் டைப். அதிலும் அந்த மஃப்டி போலீஸ்காரர்கள்,ஹாஸ்டல் காட்சிகள்,வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள், பொறுமையாக நகரும் காட்சிகள் என எல்லாமே மிஷ்கினையே நினைவூட்டியது. அதுதான் இந்த படத்தின் குறையும் கூட. விருவிருவென வெறித்தனமாக ஹைவேஸில் பாய்கிற கார் போல சென்றிருக்க வேண்டிய படம் பொறுமையாக மெட்ரோ ரயில் பிராஜக்ட்டைப்போல சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் வேகம் தவிர்த்து குறையொன்றுமில்லை! சிறந்த திரைக்கதை, நல்ல கதை சொல்லும்பாணி, பாத்திரத்தேர்வு, ஒரளவு ஓக்கேவான இசை, நாடகத்தனமில்லாத எளிமையான வசனங்கள், இயற்கையான லைட்டிங்கில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் என எல்லா விதத்திலும் சிறந்தபடம். எப்போதும் உம்மென எந்த ரியாக்சனும் இல்லாமல் கல்லுப்பிள்ளையார் போலவே நடிக்கும் அருள்நிதிக்கு அல்வா போல கேரக்டர்.


குடும்பம் என்கிற அமைப்பின் பிடிமானத்தில் வளர்க்கப்படுகிற ஒரு சாதாரண மாணவன் அதன் பிடியிலிருந்து விலக்கிவைக்கப்படுவதால் உண்டாகும் மன அழுத்தம் , அவன் அந்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என நீளும் கதையை எந்த பாசாங்கும் இல்லாமல் சிறந்த காட்சி அனுபவமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு பாராட்டுகள். நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் மௌனகுருவும் இடம்பெறும்.
சென்ற வாரம் பார்த்த இன்னொரு உருப்படியான படம் மகான் கணக்கு. மொக்கை பிலிம் கிளப் சார்பில் பார்க்கிற எந்த படமும் உருப்படியாக இருந்ததாக சரித்திரமே இல்லை. மகான் கணக்கு மொக்கை படமாகவே இருந்தாலும் அது பேசுகிற காட்சிப்படுத்தியிருக்கிற விஷயம் தமிழ்சினிமாவுக்கு புதுசு. கிரடிட் கார்டு,பர்சனல் லோன் மாதிரியான சமாச்சாரங்களால் நாம் படுகிற துன்பங்களையும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கிற கரம் மசாலா படம்! அதிலும் லோன் வாங்கிவிட்டு அவதிப்படும் மனிதர்களை மிகச்சரியான காட்சிகளால் கண்முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர்.


அதிலும் வீட்டிற்கே வந்து மிரட்டுகிற வங்கி அதிகாரிகள் , அவர்கள் தரும் மன உளைச்சல் என நீளும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. தியேட்டரிலேயே பலரும் பச்சை பச்சையாக பிரபல வங்கிகளை திட்டித்தீர்த்தனர்.


படத்தின் ஹீரோயின் தொடங்கி இசை,கேமரா என எல்லாமே சுமார்தான் என்றாலும் வங்கிக்கடன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சுவாரஸ்யமாக படமெடுத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த தனியார் வங்கிகள் தருகிற கிரடிட் கார்டுகள்,பர்சனல் லோன் மாதிரியான ஏமாற்றுவேலைகளின் மேல் நிச்சயம் வெறுப்புண்டாகும் என்பது நிச்சயம். இனி எப்போதும் இந்த வங்கிகளில் எந்த கடனையும் வாங்க பத்துமுறை யோசிக்க தூண்டும். மிகப்பெரிய ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய படம், நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் வங்கிக்கடன் குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டுபோயிருக்கலாம். படம் கோவையில் நடப்பதாக காட்டப்படுவதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்ளுகிறது.


சொந்த ஊர் என்றாலே கொஞ்சம் பெருமிதமும் ஒரு சிலிர்ப்பும் உண்டாவது இயல்புதானே. அந்த வகையில் கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி ‘’கோயம்புத்தூரா கொக்கா’’ என்கிற வீடியோ ஆல்பத்தினை உருவாக்கியுள்ளனர். பாடலில் ஆங்காங்கே கொஞ்சம் பீட்டர்த்தனம் தென்பட்டாலும் பாடலை காட்சிப்படுத்திய விதத்திலும் அது எழுதப்பட்டதிலும் கவர்கின்றனர். இதை பார்க்கிற ஒவ்வொரு கோயம்புத்தூர் காரவீகளுக்கும் ஒருநிமிஷம் ஒடம்பு சிலுத்துக்கும் நெஞ்சுமுடி நட்டுக்கும் என்பது நிச்சயம். கோவையின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் அதன் தன்மை மாறாமல் படம் பிடித்து சரியான அளவில் எடிட் செய்து அருமையாக கோர்த்துள்ளனர். இதை பார்க்கும் போது நிஜமாகவே நானும் ஒரு கோயம்புத்தூர்காரன்தானுங் என்கிற காலர் உயர்த்துதலின் சுயபெருமைத்துவம் வருவது இயல்புதான் என்றே நினைக்கிறேன். அதே நேரம் கோவையின் அழகே பச்சையும் பசுமையும்தான் அது வரவர மாமியா கழுதா மாறி ஆனாளாம் என்பதுபோல கோவையில் பச்சை என்கிற நிறமே இல்லாத அளவுக்கு கான்க்ரீட் காடாக மாறிக்கொண்டிருப்பதாகவும் ஒரு அச்சம்!


மரமில்லாத கோவைக்கும் மயிரில்லாத மண்டைக்கும் மரியாதை கிடையாது அதை கோவை வாசிகள் உணர்ந்து நிறைய மரம் நடுங்கப்பா!


கோயம்புத்தூரா கொக்கா வீடியோ

இந்தியாவே கொலைவெறி பிடித்து அலைந்த போதும் எனக்கு ஏனோ அந்தப்பாடல் மனதில் ஒட்டவேயில்லை. காரணம் இதையெல்லாம் கிமுவில் இளையராஜாவே செய்துவிட்டதாகவே கருகிறேன். அதுபோக இசைக்கோர்வையும் பாடல்வரிகளும் கொஞ்சம் கூட ஈர்க்கவேயில்லை. வில்பர் சற்குணராஜ் செய்யாத சாதனையை கொலைவெறி செய்துவிட்டதாக தெரியவில்லை. தனுஷ் போலவே இதுவும் பார்த்ததும் பிடிக்காதோ என்னவோ பார்க்க பார்க்க பிடிக்குதா என்று பார்க்கவேண்டும். ஆனால் அதே பாடலை ஹைதராபாதினை சேர்ந்த குட்டிப்பாப்பா ஒன்று பிரமாதமாக ரொம்ப அழகாக அசத்தலாக க்யூட்டாக பாடி அசத்தியிருக்கிறாள். இதை பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடித்தது.


பாப்பா பாடும் பாட்டு..