Pages

01 February 2012

இளையராஜாவின் மகிமைகள்





நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம். அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ''நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா!'' அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம்! அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது. இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம்!

இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஏன் என்றால் சமகால இசையமைப்பாளர்கள் ஒரே ஒருபாடலுக்கு ட்யூன் போட பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வதையும் , அதிலும் எனக்கு மிட்நைட்டில்தான் ட்யூன் போடவரும், அமெரிக்காவில்தான் பாடவரும் என சீன் போடுவதையும், பல லட்சம் செலவில் லண்டன்,ஆஸ்திரேலியா,சுவிட்ஸர்லாந்துக்கெல்லாம் போய் ரீரிகார்டிங் செய்வதையும் பார்க்கிற இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் இளையராஜா குறித்த இந்த தகவல்கள் ரொம்பவே ஆச்சர்யமுட்டுபவைதான்.

இந்த ஆச்சர்யங்களுக்கு மேலும் வலுசேர்ப்பதைப்போல அண்மையில் வெளியிடப்பட்ட தோனி திரைப்பட பாடல்வெளியீட்டுவிழாவில் நடிகர் நாசர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

நாசர் தயாரித்து இயக்கி நடித்த அவதாரம் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசை உருவான விதம் குறித்து கூறினார் நாசர். அவதாரம் திரைப்படத்தினை தொடங்குவதற்கு முன்பு ஒருநாள். இளையராஜாவிடம் ‘’சார் இதுமாதிரி கூத்துக்கலைஞர்கள் பத்தி ஒருபடம் பண்றேன்.. நீங்க இசையமைக்கணும்’’ என்றதும் .. ‘’பார்ப்போம்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் ராஜா. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டு மீண்டும் இளையராஜாவை அணுகியபோது அவர் படத்தை பார்த்துவிட்டு ஓக்கேடா அருமையா இருக்கு நாளைக்கு ரெகார்டிங் என சொல்லியிருக்கிறார்.

கையில் பணமில்லாத நாசர் இப்படி திடீர்னு சொன்னா.. ஒருவாரம் கழிச்சி என மண்டையை சொரிய.. அவருடைய சிக்கலை புரிந்துகொண்டு தன் செலவிலேயே ரீரிகார்டிங்கிற்கும் பாடல் சேர்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு படத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தினை சொல்லி இந்த இடத்தில் ஒரு பாட்டு வச்சா ரொம்ப நல்லாருக்கும்.. (படம் பார்த்த அரைமணிநேரத்தில்) ட்யூன் போட்டுட்டேன் கேக்கறீயா என சொல்லி.. தன்னுடைய ஹார்மோனியத்தில் ‘’தந்தனனா தான னான தான னான நா!’’ என கட்டைகுரலில் சுரத்தே இல்லாமல் பாட.. நாசருக்கு கிலியாகிவிட்டது.

பாட்டு ரொம்ப மொக்கையா இருக்கும்போலருக்கே.. என நினைத்தவர்.. இளையராஜாவிடம் எப்படி இதை சொல்வது என்பது புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார். சரி நாசர் நீ நாளைக்கு காலைல வா வேலைய தொடங்கிருவோம்.. என திருப்பி அனுப்பியுள்ளார்.

அடுத்த நாள் அந்த ட்யூன் ரொம்ப மொக்கையா இருக்கு.. வேற போட சொல்லணும் , இன்னைக்கு ட்யூன் டிஸ்கசன்ல அவரை ஒரு ஆட்டு ஆட்டிடணும் என்கிற வெறியோடு இளையராஜாவின் வீட்டுக்கு போகிறார் நாசர். இளையராஜா தன் வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்க நாசர் உள்ளே நுழைகிறார். உட்காருங்க என்று சொல்லிவிட்டு ஒரு சாக்லேட்டை அவருக்கு கொடுத்துவிட்டு மீண்டும் எதையோ எழுத ஆரம்பிக்கிறார் இளையராஜா.. ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல வேக வேகமாக இசைக்குறிப்புகளை எழுதி க்கொண்டேயிருக்க.. அரைமணிநேரம் ஒருமணிநேரமாகிவிட்டது. நாசர் பொறுமையிழந்து திட்டிவிடலாம் என்று நினைக்கும்போது.. சரிவாங்க ரெகார்டிங் போவோம்.. என்று சொல்ல நாசருக்கு ஒன்றுமே புரியல..

ரெகார்டிங் ரூமில் எல்லாமே தயார். பாடகர்கள் வந்திருக்கின்றனர்.. இசைக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர். நாசர் அந்த ட்யூன் வேண்டாம் என்று சொல்ல நினைத்துக்கொண்டிருக்க.. ஒரு மேஜிக் நடக்கிறது.. இளையராஜா இசைக்கலைஞர்களை பார்த்து தன் கைகளை தூக்கி இறக்க.. தானத்தந்த தானத்தந்தா.. தானத்தந்த தானத்தந்தா.. அந்த இசை..... எங்கும் நிறைய நாசர் அப்படியே சிலிர்த்துப்போய் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றாராம்! அதே நாளில் மொத்தபடத்திற்குமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தையும் செய்துமுடித்து அசத்தினாராம் ராஜா! (பாடல்களை அவரே எழுதிவிட்டார் என்பது கூடுதல் தகவல்)


(அந்த மேஜிக்கை நீங்களும் உணருங்க!)





அதே தோனி பட இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் ஒரு புதுமையை செய்துகாட்டினார். ஒரு சீரியஸான காட்சி முதலில் போட்டுக்காட்டப்பட்டது.. பின்னணி இசை சேர்க்காமல். உடனடியாக இளையராஜாவின் பின்னணி இசையோடு போட்டுக்காட்டியபோதுதான் ஒன்று புரிந்தது.. ஏன் இந்த தமிழர்கள் அந்த மனிதரை கடவுளாக வழிபடுகின்றனர் என்பது! பிரமாதம் என்று சொல்லுவது சரியாக இருக்காது. அதை விவரிக்கும் வார்த்தைகள் என்னிடம் இல்லை!

விழாவில் பேசிய பலரும் ஒருகுறிப்பிட்ட பிரச்சனையை முன்வைத்து பேசினர். இன்றைக்கு திரையுலகம் சந்தித்துவரும் பெரிய சிக்கல்களில் ஒன்று புரொடக்சனுக்காக எடுத்துக்கொள்ளும் கால அளவு.. சமகால இசையமைப்பாளர்கள் அனைவருமே ஒரு பாடலுக்கு கம்போசிங் செய்யவே வருடக்கணக்கில் நாட்களை எடுத்துக்கொள்ளுவதை பெருமை பீத்தலாகவே செய்துகொண்டிருக்கின்றனர். பின்னணி இசை சேர்க்க லண்டனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்வது இன்னும் மோசம். மணிவண்ணன் ஒருகூட்டத்தில் சொன்னதுதான்.. புதிய தொழில்நுட்பம் நம்முடைய உழைப்பு நேரத்தை செலவை குறைக்கவேண்டுமே தவிர அது இருக்கிற வேலையை நேரத்தை அதிகமாக்க கூடாது என்பதுதான்!

வெறும் ஐந்தே பேரை வைத்துக்கொண்டு உயிரை உலுக்கும் இசையை சிகப்பு ரோஜாக்களில் கொடுக்க முடிகிற இளையராஜா மாதிரியான உன்னதமான கலைஞர்கள்தான் இன்றைய சினிமாவுக்கு தேவையே தவிர ஆண்டுகணக்கில் யோசித்து மொக்கையான இசையை கொடுக்கிற பீட்டர்கள் அல்ல!