Pages

07 February 2012

மெரீனா





சில படங்கள் பிட்டு பிட்டாக பார்க்க பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஒரு குறும்படத்தின் நேர்த்தியுடன் அமைந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு முழுதிரைப்படமாக பார்க்கும்போது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற எண்ணத்தையே உண்டாக்கும். பசங்க பாண்டிராஜின் மெரீனா இந்த வகைப்படங்களில் ஒன்று என நிச்சயமாக சொல்ல முடியும்.

அங்காடித்தெருவையும் நான்கடவுளையும் கலந்து செய்த கலவை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப்படங்களையும் மீறின கொண்ட்டாட்டமும் குதூகலமும் நிறைந்திருக்கிறது. ஆனால் மேற்சொன்ன இரண்டு படங்களும் படம் பார்த்தவர்கள் மத்தியில் உண்டாக்கிய சலனத்தையும் அதிர்வையும் இப்படம் ஒரு டீஸ்பூன் அளவுகூட உருவாக்கவில்லை. குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு தேவை கல்விதான் என்கிற கருத்தும் அதையே படத்தின் களமாக எடுத்துக்கொண்டமைக்கும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு நல்ல படைப்பாக இப்படம் தேறவில்லை என்பது நிதர்சனம்.

பசங்க படத்தில் பெரியவங்க கதையை குழந்தைகளை வைத்து சுவாரஸ்யமாக சொல்லி அசத்தியவர் பாண்டிராஜ். மீண்டும் பையன்களோடு கூட்டணி போட்டிருக்கிறார் என்பதும் படத்தின் டிரைலர் வேறு மிரட்டலாக வந்திருந்ததும் படம் வெளியானதும் முதல் நாளே பார்க்க தூண்டியது. அதோடு அந்த 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' பாட்டு ரொம்பவே கவர்ந்தது. ஆனால் நாம் ஒன்று நினைக்க இயக்குனர் வேறு எதையோ நினைத்திருக்கிறார். படம் சுக்கல் சுக்கலாக சுக்கா வருவலாக வந்திருக்கிறது.

நட்புக்காக ஏங்குகிற சிறுவன், உறவை தேடும் தாத்தா, எதையுமே எதிர்பார்க்கமல் உதவும் தபால்காரர் என படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான பாத்திரங்கள். கைதட்டல்களை பெற்றுதருகிற அபாரமான வசனங்கள். பாடல் காட்சிகளிலும் கடற்கரை குறித்த காட்சிகளிலும் காட்டப்படுகிற கவித்துவமான காட்சியமைப்புகள்.

இப்படி ஒவ்வொரு பாத்திரத்திற்கும், அவர்கள் பேசுகிற வசனத்திற்கும், காட்சி அமைப்பிற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் கதையின் பக்கமும் திருப்பியிருக்கலாம். மணல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாது. அது மாதிரி கதையின் பிரதான பாத்திரங்களும் எந்த இடத்திலும் ஒன்றிணையவேயில்லை. அனைவருமே தனித்தனி தீவாகவே காட்சியளிக்கின்றனர்.

மெரீனா கடற்கரையில் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. அதனாலேயே படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானவை மனதை உலுக்க கூடியவை. நல்லது! ஆனால் அந்த அத்தனை கதைகளும் ஒரே இடத்தில் சங்கமம் ஆகியிருக்க வேண்டாமா? என்னதான் யதார்த்தபடம் என்றாலும் இதுமாதிரி கதைகளுக்கே உரிய நாடகத்தன்மையும் ஒப்புக்காவது வேண்டாமா? உதாரணம் சிவகார்த்திகேயன் வருகிற காதல்காட்சிகள்! திடீரென கிளைமாக்ஸில் முக்கியத்துவம் பெரும் பிச்சைக்கார தாத்தா!

அதோடு இப்படம் சொல்லவருகிற செய்தி கொஞ்சம் அபாயகரமானது. ஊரிலிருந்து ஓடிவரும் பையன்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடனடியாக ஜாலியாக சுண்டல் விற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டப்படுகிறது. படம் பார்க்கும் எனக்கே பேசாம நாம கஷ்டப்பட்டு எழுதுவதை விட்டுட்டு சுண்டல் விற்க போய்விடலாமா என்று தோன்றும் அளவிற்கு அந்த வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பதாக காட்டப்படுகிறது. இதே எண்ணம் எங்கோ தேனியில் வாடிப்பட்டியில் படம் பார்க்கிற சிறுவனுக்கும் உண்டானால் என்ன செய்வது? இதை பார்த்து ஊரிலிருந்து மெரீனாவை நோக்கி குட்டிப்பையன் படையெடுக்க தொடங்கிவிட்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். குழந்தைகளின் கல்விமேல் அக்கறையோடு படமெடுத்த இயக்குனர் இதைப்பற்றி ஏன் சிந்திக்க தவறினார் என்பது புரியவில்லை.

ஏதோ மெரீனா கடற்கரைக்கு வந்துசேர்ந்துவிட்டால் யார்வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக பிழைத்துக்கொள்ள முடியும் என்பதாக இப்படம் போதிப்பது எவ்வளவு ஆபத்தானது. ஒரே பாட்டில் எப்படி ஒருவன் பணக்காரன் ஆகமுடியாதோ அதுபோலவேதான் இதுவும். இதே மெரீனாவில் சுண்டல் விற்கும் பையன்கள் எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்கின்றனர், என்னமாதிரியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர், மழைக்காலங்களில் வசிப்பிடம் இல்லாமல் படுகிற பாடினை சொல்லிமாளாது, ரவுடிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வாழ்கிற இந்த பையன்களின் வாழ்க்கையை இவ்வளவு மேலோட்டமாக சொல்லியிருக்க வேண்டாம்.