Pages

14 February 2012

எம்ஜிஆரின் ஆவி!

சண்டையே போடாமல் 25 வருஷம் புருஷனும் பொண்டாட்டியுமாக வாழ்வதில் என்ன ஜாலி இருக்கு! ஊடலும் கூடலும்தானே காதலுக்கினிது என்று யாரோ எங்கேயோ அறிவுரையாக கூறியது நினைவுக்கு வருகிறது. இன்னமும் எனக்கு பெண்களுடனான நட்போ காதலோ எதுவாக இருந்தாலும் சிக்கல்தான். எப்போதும் சண்டைதான்! பெண்களுடைய உலகத்தை புரிந்துகொள்ளவே முடியாது. எந்த நேரத்தில் கோபம் வரும் எப்போதும் சிரிப்பு வரும் என்பதையெல்லாம் கணிக்கவே முடியாது. பெண்களுக்கும் ஆண்களை புரிந்துகொள்வதில் இதேமாதிரியான சிக்கல்கள் இருக்கலாம்.

எழுத்தாளர் தமிழ்மகனின் ‘’ஆண்பால் பெண்பால்’’ நாவலும் இன்று நாம் அன்றாடம் சந்திக்கிற இந்த ஆண்பெண் உறவு சிக்கல்களை பற்றியே அலசுகிறது.

வெட்டுப்புலியில் நூறாண்டுகால தமிழக அரசியல் வரலாற்றினை கையிலெடுத்துக்கொண்டு வூடுகட்டி சுழற்றியடித்த தமிழ்மகன் அதற்கு நேர் எதிராக இம்முறை ஆண்பெண் உறவுச்சிக்கல்களை பேசியிருப்பது நாவல்மீதான ஆர்வத்தினை அதிகமாக்கியிருந்தது. அதோடு இந்த நாவலில் எம்ஜிஆர் ஆவியாக வருகிறார் என்கிற தகவல் வேறு! .

‘’இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பண்றோம்னே முக்கால்வாசி பேருக்கு தெரியாது’’ என ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா நகைச்சுவையாக பேசியிருப்பார்! அவர் பேசி அதாகிவிட்டது ஒரு மாமாங்கம் இன்றைக்கும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. யாருக்குமே எதற்காக திருமணம் செய்துகொள்கிறோம்.. ஏன் மனைவி அல்லது கணவன் என்கிற காரணமே தெரியாது. வயது மட்டும்தான் திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியாக இருக்கிறது. வயதாகிவிட்டால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதுதான். காதலித்துவிட்டாலும் கல்யாணம்தான் எல்லை! பையனுக்கு 27வயசு பொண்ணுக்கு 21 வயசு ! போதும் கல்யாணத்தை கடனை உடனை வாங்கியாவது பண்ணிவைத்துவிட்டால்தான் பெற்றோருக்கு நிம்மதி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. விடுமுறை நாட்களில் கூட குடும்பநல நீதிமன்றங்கள் செயல்படத்தொடங்கிவிட்டன. நமக்கு இன்று சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையாக மாறிப்போயிருக்கிறது. மங்காத்தா அஜித் போல மனி மனி மனிதான் எல்லாமே! தம்பதியருக்கிடையே சின்ன சின்ன ஊடலும் கூடலும் அந்நியோனியமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

இருவரும் பேசிக்கொள்வதே எப்போதாவது என்கிற நிலையும் உண்டு. கணவன் மனைவி இடையேயான புரிதலுக்கெல்லாம் நேரமே கிடையாது. அவரசமாக கல்யாணம் பண்ணிக்கொண்டு அடுத்த வருடமே குழந்தையும் பெற்றுவிட்டால் முடிந்தது! காமம் கூட அவசரகதியில்தான். அல்லது எப்போதாவது நேரம் கனிந்து வரும்போது மட்டும்! அருமையான நிகழ்காலத்தை இளமையை மகிழ்ச்சியை அழித்துக்கொண்டு எதிர்காலத்திற்காக மாடு மாதிரி உழைப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம்!

இப்படிப்பட்ட மோசமான சமூக சூழலைப்பற்றிய ஒரு நாவலை கதற கதற கண்ணீருடன் சொன்னால் ரொம்பவே போர் அடிக்குமோ என்னவோ என எண்ணி எம்ஜிஆர் என்னும் சென்ற நூற்றாண்டில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த மாபெரு ஆளுமையின் பின்புலத்தில் இக்கதையை சொல்லியிருக்கிறார் நூலின் ஆசிரியர். சந்திரமுகி கதை போலதான்! எம்ஜிஆரின் ஆவி தனக்குள் புகுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு ஏறுக்குமாறாக நடந்துகொள்ளுகிற மனைவி..

மனைவியிடம் எதை செய்தாலும் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து எதிர்பார்த்து அவளை திருப்தி படுத்தவே முடியாத ஒரு கணவன். ஒருபாதி நாவல் முழுக்க மனச்சிதைவோடு தன் கதையை முன்னுக்கு பின் முரணாக பேசுகிற மனைவியின் வெர்ஷன். மனைவி கணவனிடம் எதிர்பார்க்கிற சின்ன சின்ன விஷயங்கள்! இரண்டாம் பாதி ஆண்பாலில் ‘’மனைவியின் எதிர்பார்ப்பு என்ன? எதை விரும்புகிறாள்? எதை வெறுக்கிறாள்?’’ என்பதை அறிந்துகொள்ள போராடுகிறான் கணவன். முதலிரவில் தொடங்கும் கதை கோர்ட்டில் விவாகரத்தில் முடிகிறது! இடையில் நடக்கிற அமளி துமளிகளை அதிவேகமான தன் எழுத்துநடையில் நறுக் சுறுக் என்று சொல்லியிருக்கிறார் தமிழ்மகன்.

ஒரே கதையை மனைவியின் பார்வையில் முதல் பகுதியிலும், கணவன் பார்வையில் இரண்டாவது பகுதியிலும் எழுதியிருப்பது சுவாரஸ்யம். சில இடங்களில் லேசாக அலுப்பு தட்டினாலும் அடுத்தது என்னாகிருக்கும் என்கிற சஸ்பென்ஸ் நம்மை நாவலின் முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கத்தின் கடைசிவரி வரை அப்படியே கழுத்தில் கொக்கி மாட்டி இழுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடுகிறது!

முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.

கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!

எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!

ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!

நாவல் முழுக்கவே இரண்டே இரண்டு பாத்திரங்கள் பேசிக்கொண்டிருப்பது நடுநடுவே போர் அடிக்கிறது என்பது குறையாக தெரிகிறது! இன்னொரு குறை இந்த நாவலின் குழப்பமான எதையோ சொல்ல முயன்று எதையுமே சொல்லமுடியாமல் தெளிவில்லாமல் இருக்கிற அந்த முன்னுரையும் நடுநடுவே தமிழ்மகன் பற்றி வருகிற குறிப்புகளும். இதெல்லாம் எதற்கென்றே புரியவில்லை. இலக்கியமாக இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம். நமக்கெதுக்கு அதெல்லாம் என்று நினைக்கிற நினைக்காத அனைவருமே இந்நாவலை நிச்சயமாக வாங்கி படிக்கலாம். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது. (சென்ற ஆண்டின் சிறந்த நாவலாக விகடன் தேர்ந்தெடுத்த நாவல் இது என்பது தகவலுக்காக!)

நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448