Pages

16 February 2012

பருத்திப்பால்






வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பணியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்!

மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி விடுமுறைக்காக மதுரை செல்லும்போது பருத்திப்பால் விற்கிற பாட்டி வீதிப்பக்கம் வந்தாலே கையில் தூக்குபோசியோடு ஒட்டுமொத்தமாக ஓடுவோம். இரண்டுரூவாக்கு குடுங்க.. அஞ்சுரூவாவுக்கு குடுங்கனு கையை நீட்டினால்.. தன்னுடைய கரண்டியால் தள்ளு என ஒரு அதட்டலோடு கொதிக்க கொதிக்க தூக்குபோசி நிறைய ஊற்றிவிட்டு அதில் கொஞ்சம் தேங்காய் துருவலையும் தூவிகொடுப்பாள் பாட்டி!

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு!
சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

இந்த பருத்திப்பால் செய்வது பெரிய வித்தையெல்லாம் கிடையாது. எளிமையானதுதான். பருத்தி விதைகளை வாங்கி ஓர் இரவு ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக அரைத்து பாலெடுத்துவிடவேண்டும். பிறகு வெல்லமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பருத்திப்பாலை நன்கு காய்ச்சி அதனோடு இந்த பாகையும் விட்டு காய்ச்சிக்கொண்டே, அரிசி மாவு கரைசல் கொஞ்சம் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிட்டு, சுக்கு ஏலக்காய் தட்டிப்போட்டு கொஞ்சம் தேங்காய்துருவலை மேலாக தூவிவிட்டால் பருத்திப்பால் ரெடி! படிக்கும்போது எளிதாக தெரிந்தாலும் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதை சரியாக செய்யவில்லையென்றால் பாயாசம் ஆகிவிடும் அல்லது களிமாதிரி இருகிவிடும்! திராட்சை முந்திரியெல்லாம் போடலாமா தெரியவில்லை? நான் இதுவரை சமைத்ததில்லை.

இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஊரில் சொல்வதை கேட்டிருக்கிறேன். அதோடு மதுரையில் கடைகளிலும் பருத்திப்பால் விற்பதை பார்த்திருக்கிறேன். பருத்திக்கு ஃபேமஸான கோவையில் பருத்திப்பால் எங்கும் கிடைக்கிறதா தெரியவில்லை. கோவையில் குடித்ததும் இல்லை. சென்னையைப்பற்றி சொல்லவே வேண்டாம். வேலையாக அவ்வப்போது மதுரைக்கு போய்வந்தாலும் எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்பது தெரியாமல் விட்டுவிடுவேன். கிருஷ்ணாஸ்வீட்ஸில் பருத்திப்பால் குடிக்கும் அளவுக்கு எனக்கு திராணி கிடையாது!

அண்மையில் பெசன்ட் நகர் சென்றிருந்தபோதுதான் வேளாங்கண்ணிமாதா சர்ச் அருகே அந்த கடையை பார்த்தேன். பருத்திப்பாலும் பணியாரமும் மட்டுமே விற்கிற பிரத்யேக கடை. சாதாரண கடைதான். வாசலிலேயே பெரிய பானையில் பருத்திப்பால் வைத்திருக்கிறார். விலையும் குறைவுதான் பத்துரூபாய்! உடனே ஆர்வந்தாங்காமல் ஒரு கப் வாங்கி குடித்துப்பார்த்தேன். மதுரையில் குடித்த பருத்திப்பாலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இதுவும் ஓக்கே ரகம்தான். மோசமில்லை. பெசன்ட் நகர் பக்கமாக நண்பர்கள் சென்றால் அந்தக்கடைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்!

சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம்.