16 February 2012

பருத்திப்பால்


வக்கனையா தின்றதுக்குன்னே பொறந்தவங்கப்பா இந்த மதுரைக்காரங்க என்று எப்போதும் நினைப்பேன். அந்த அளவுக்கு மதுரைக்கென்றே பிரத்யேக உணவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது. வீச்சு பரோட்டாவில் தொடங்கி கறிதோசை,ஜிகர்தண்டா,பணியாரம் என நீளுகிற இந்த பட்டியலில் முக்கிய இடம் பருத்திப்பாலுக்கும் உண்டு! சுடச்சுட ஆவிபறக்க ஒரு டம்ளர் குடித்தால் அப்படியே உடம்பெல்லாம் ஜிவ்வுனு ஆகிவிடும். அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்!

மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன். என்னுடைய உறவினர்களின் வீடுகளுக்கு பள்ளி விடுமுறைக்காக மதுரை செல்லும்போது பருத்திப்பால் விற்கிற பாட்டி வீதிப்பக்கம் வந்தாலே கையில் தூக்குபோசியோடு ஒட்டுமொத்தமாக ஓடுவோம். இரண்டுரூவாக்கு குடுங்க.. அஞ்சுரூவாவுக்கு குடுங்கனு கையை நீட்டினால்.. தன்னுடைய கரண்டியால் தள்ளு என ஒரு அதட்டலோடு கொதிக்க கொதிக்க தூக்குபோசி நிறைய ஊற்றிவிட்டு அதில் கொஞ்சம் தேங்காய் துருவலையும் தூவிகொடுப்பாள் பாட்டி!

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு!
சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

இந்த பருத்திப்பால் செய்வது பெரிய வித்தையெல்லாம் கிடையாது. எளிமையானதுதான். பருத்தி விதைகளை வாங்கி ஓர் இரவு ஊறவைத்து அதை காலையில் எடுத்து நன்றாக அரைத்து பாலெடுத்துவிடவேண்டும். பிறகு வெல்லமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பருத்திப்பாலை நன்கு காய்ச்சி அதனோடு இந்த பாகையும் விட்டு காய்ச்சிக்கொண்டே, அரிசி மாவு கரைசல் கொஞ்சம் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிட்டு, சுக்கு ஏலக்காய் தட்டிப்போட்டு கொஞ்சம் தேங்காய்துருவலை மேலாக தூவிவிட்டால் பருத்திப்பால் ரெடி! படிக்கும்போது எளிதாக தெரிந்தாலும் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவு இருக்கிறது. அதை சரியாக செய்யவில்லையென்றால் பாயாசம் ஆகிவிடும் அல்லது களிமாதிரி இருகிவிடும்! திராட்சை முந்திரியெல்லாம் போடலாமா தெரியவில்லை? நான் இதுவரை சமைத்ததில்லை.

இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஊரில் சொல்வதை கேட்டிருக்கிறேன். அதோடு மதுரையில் கடைகளிலும் பருத்திப்பால் விற்பதை பார்த்திருக்கிறேன். பருத்திக்கு ஃபேமஸான கோவையில் பருத்திப்பால் எங்கும் கிடைக்கிறதா தெரியவில்லை. கோவையில் குடித்ததும் இல்லை. சென்னையைப்பற்றி சொல்லவே வேண்டாம். வேலையாக அவ்வப்போது மதுரைக்கு போய்வந்தாலும் எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்பது தெரியாமல் விட்டுவிடுவேன். கிருஷ்ணாஸ்வீட்ஸில் பருத்திப்பால் குடிக்கும் அளவுக்கு எனக்கு திராணி கிடையாது!

அண்மையில் பெசன்ட் நகர் சென்றிருந்தபோதுதான் வேளாங்கண்ணிமாதா சர்ச் அருகே அந்த கடையை பார்த்தேன். பருத்திப்பாலும் பணியாரமும் மட்டுமே விற்கிற பிரத்யேக கடை. சாதாரண கடைதான். வாசலிலேயே பெரிய பானையில் பருத்திப்பால் வைத்திருக்கிறார். விலையும் குறைவுதான் பத்துரூபாய்! உடனே ஆர்வந்தாங்காமல் ஒரு கப் வாங்கி குடித்துப்பார்த்தேன். மதுரையில் குடித்த பருத்திப்பாலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் இதுவும் ஓக்கே ரகம்தான். மோசமில்லை. பெசன்ட் நகர் பக்கமாக நண்பர்கள் சென்றால் அந்தக்கடைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம்!

சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம்.

23 comments:

Minmalar said...

//அருவாளை தூக்கிக்கிட்டு நாலுபேரை வெட்டலாம்னு தோணும்!//
நீங்களூமா?

kovairafi said...

சூடான பருத்திபால் என்றால் மதுரை தான் சார், ஐயோ ! ஞாபகப் படுத்திட்டேங்களே ! இப்போல்லாம் சேமியா, ரவை போட்டு தான் தாரெங்கே ! அதனால, ஒரிஜினல் டேஸ்ட் இல்ல. இப்போ மதுரைலே ஜிகர்தண்டா தான் பேமஸ் .

Guru said...

இன்றும் நல்ல தரமான சுவையான பருத்திப் பால் வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி, பழ மார்க்கெட் ஏரியாவில் கிடைக்கிறது. அதிகாலை,மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள். அடுத்த முறை சென்றால் சுவைக்கவும்.

Anonymous said...

i remember that GD Naidu only invented this milk. In coimbatore area, mashed paruthi is given to cows.

But still since Cotton is one of the crops where Pesticides are used to the maximum extent, i think we should ask some health professionals/doctors on whether it is safe to consume "Paruthi Milk"

felix said...

வணக்கம் அதிஷா, சென்னையில் பருத்திப்பால் கிடைக்கிறதா ? என்று நாங்களும் சற்று ஆச்சரியப்பட்டு தான் போனோம், பன்னெண்டாவது படிக்கிறவரைக்கும் காலைல பருத்திப்பால் சாப்பிட்டு போன அந்த நாட்களை நினைவுபடுத்தியது உங்கள் பதிவு . கடந்த வாரம் தான் சாப்பிட்டோம் . சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, அது ஒரு சந்தோஷமான அனுபவம் தான். அந்த கடையின் உட்சுவர்களில் வரைந்திருந்த ஓவியங்களை கவனித்தீர்களா? அவை அந்த கடையின் உரிமையாளரே வரைந்ததாக சொன்னார்.

felix said...

அந்த azhgial பேருல கமெண்ட் போட்டது நாந்தாங்கோ பேரு பெலிக்ஸ்,

Anonymous said...

Athisha,

Coimbatore Ganapathi-Lakshmipuram ( Pricol ) Bridge pakkathula iruntha ( ? ) lakshmi vilas'la paruthi paal kidaikkum.

Oru glass kudicha vayiru, manasu nirinthuvidum.

Regards
Friend.

Yaathoramani.blogspot.com said...

எதோ மதுரையிலேயே இருக்கிறதுனாலே
இது/ ஜிகர் தண்டா /கொத்து புரோட்டா
இதையெல்லாம் வாரம் விடாம டேர்ன் போட்டு
அனுபவிச்சிட்டு வாரோம்

Anonymous said...

வீச்சு பரோட்டா .. கறிதோசை,ஜிகர்தண்டா,பனியாரம் பருத்தி பால்... ஞாபகப்படுத்திட்டீங்களே...
பல்கலை நகர் நினைவுகளையும் ...

G said...

ஐயோ! ஞாபகப் படுத்திட்டேங்களே! கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் தினமும் பருத்தி பால் குடிச்சிருக்கேன்... இப்பவும் மதுரை முனிச்சாலையில், (தினமணி தியேட்டர் பக்கத்துல) இது சுட சுட கிடைக்குது....

கோவை நேரம் said...

கோவையில் இருக்கிறது..ஆனால் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்கின்றனர் டேஸ்ட் இருக்காது,,,மதுரையில் சிம்மக்கல்லில் நான் குடித்து இருக்கிறேன்

தராசு said...

"பிறகு வெள்ளமோ கறுப்பட்டியோ ஏதாவது ஒன்றை காய்ச்சி பாகெடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும்."

தலைவா, இது வெல்லமில்லையா????

eraeravi said...

மதுரையில் இன்றும் பருத்திப் பால் விற்பனை ஆகின்றது .நல்ல கட்டுரை .சளி , இருமல் போக்கும் மருந்து பருத்திப் பால்.மதுரை வடக்கு மாசி வீதி செல்லத்தம்மன் கோயில் அருகில் தினசரி காலை, மாலை கிடக்கும் .தினம் குடிக்கும் வாடிக்கையாளர்கள் உண்டு .படிக்காத விதவைப் பெண்கள் தினமும் காலையில் சுமந்து சென்று பருத்திப் பால் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

குரங்குபெடல் said...

" சென்னையில் வேறு எங்கே பருத்திப்பால் கிடைக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்தால் நண்பர்கள் சொல்லலாம். "

அது தெரியவில்லை . . .

ஆனா . . .

சென்னை சுவரெங்கும் அமலாபால் கிடைக்கிறது

கழுதைகளுக்கு "வேட்டை "தான்

இன்னிக்கு amala paul 2 படம் release

நல்ல பதிவு

நன்றி

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

Avargal Unmaigal said...

ஏன் சார் இப்படி எல்லாம் பதிவு போட்டு ஆசையை தூண்டி விடுறீங்க...நாங்க என்ன உங்களைப் போல பக்கத்திலேவா இருக்கோம் ஒரு நடை வந்து சாப்ப்பிட்டு போக....சரி மறக்காமா எங்க ஊரு ஐயட்டங்களை ஒரு பார்சல் வாங்கி அனுப்பி வையுங்க

Anonymous said...

//அமலா‘பால் கிடைக்கிறது//

லிட்டர் எவ்ளோ பாஸ்..!!

ரிகார்ட்ஸ்,
நண்பன்

Marruthu said...

Agri Marruthu,Coimbatore
Now a days farmers using huge amount of Pesticides and fungicide for cotton cultivation and they usnig Bt seeds thus not suitable for human and animal consumption because the seeds having residues of harmful chemicals
Good Post....
Marruthu

சசிகலா said...

பருத்திப் பால் இப்பதாங்க கேள்விப் படுறேன் .நீங்க சொல்லும் விதமே சுவைக்கணும் போல இருக்கு .
அருமையான பகிர்வு .

Saravana kumar said...

இப்ப கோவையிலும் [கணபதி] கிடைக்குது அண்ணா.,
இரவு தோறும் சைக்கிள்ல்ல கேன் கட்டி கொண்டு வந்து விக்கிறாங்க.
ஒரு கப் நாலு ரூபாய் தான்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! எங்கள் ஊரில் கிடைக்கிறது !

Raashid Ahamed said...

நல்ல வேளை பருத்திபால் ரெகுலராக சாப்பிடுபவர்களை ஏமாற்ற முடியாது ரொம்ப சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள் இல்லையென்றால் இதிலும் போலி கலந்திருக்கும். ஏதாவது ஒரு பாலை கரைத்து பருத்தி பால் என்று விற்று விடுவார்கள். எனக்கு உண்மையில் தெரியாது, ஏதாவது ஒரு பாலை கொடுத்து இது தான் பருத்தி பால் குடி என்றால் எமாந்து குடிப்பேன். ஒரிஜினலா என ஆராயும் அறிவு எனக்கு கிடையாது.

Rajan said...

"G" சொன்னது கரக்ட்..
மதுரையில் முனிச்சாலை தினமணி டாக்கீஸ் பக்கத்தில், நடனா தியேட்டர் ரோடு துவக்கத்தில் தள்ளுவண்டியில் இன்றும் கிடைக்கிறது.
அந்த பருத்திப்பால்கடைக்காரர் நாம போனதும், அன்பா விசாரிச்சு தலையை வெட்டிக்கிட்டே பால் ஆத்திக்கொடுப்பார்.