04 August 2012

சமரசம் உலாவும் இடம்...
தமிழ்சினிமாவில் குடிப்பழக்கமும் குடிகாரர்களும் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. எம்ஜிஆர் சிவாஜி காலம் தொடங்கி சிம்பு தனுஷ் வரைக்கும் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு புதிய கதைகளை நமக்கு சொல்லியிருக்கிறது.

ஆரம்பகால திரைப்படங்களில் குடிகாரன் எப்போதுமே வில்லன்தான். அவன் போதையில் கொலை,கற்பழிப்பு,கொள்ளை முதலான தவறுகளை செய்கிறவனாக இருப்பான். பணக்கார குடிகாரன் VAT 69 குடிப்பான்.. சேரி வில்லன் சாராயம் குடிப்பான். ஒழுக்கம் என்பதன் அளவுகோல் குடிதான். குடிப்பவன் வில்லன், குடிக்காதவன் நாயகன். (எம்ஜிஆர் படங்களை விட இதற்கு நல்ல உதாரணம் தேவையில்லை)

இது காலப்போக்கில் மாறி ஒரு கட்டத்தில் நாயகனும் குடிக்கத்தொடங்குகிறான். அவன் மகிழ்ச்சிக்காக குடிப்பதில்லை.. தோல்வியால் குடிக்கிறான். குடித்தாலும் வில்லன் செய்கிற மாபாதகங்களை செய்வதில்லை.

நாயகன் குடிப்பழக்கத்தினால் சீரழிவான். அதோடு போதையினால் வில்லன் செய்த கொலைகளுக்காக மாட்டிக்கொள்வான். அவனுடைய குடும்பம் அழிந்துபோகும்.. இதுபோல கதற கதற கதை சொல்லும் கண்ணீர் காவியங்கள் தமிழில் அதிகம். சிவாஜிகணேசன் நடித்த சொர்க்கம், ஜெய்ஷங்கரின் குழந்தையும் தெயவமும் மாதிரியான பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். காதலில் அல்லது வாழ்க்கையில் தோல்வியடையும் நாயகர்கள் குடித்து குடித்து குடல் வெந்து செத்துப்போவதாகவும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன (உதா – தேவதாஸ்,வசந்தமாளிகை,வாழ்வேமாயம்). அல்லது கிளைமாக்ஸில் குடிகார ஹீரோ திருந்தி உத்தமனாக குடிக்காதவனாக மாறிவிடுவான்.. சுபம்.

90களின் இறுதிவரைக்கும் கூட நிலைமை இப்படித்தான். குடிப்பழக்கம் என்பது வில்லன்களுக்கு பூஸ்டாகவும், நாயகர்களுக்கு தோல்விகால மருந்தாகவும் மட்டுமே இருந்திருக்கிறது.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மதுர,சிவா மனசுல சக்தி,பருத்திவீரன்,பாபா தொடங்கி சகுனி வரைக்கும் டாஸ்மாக் பார்களில்தான் நாயகனின் பெரும்பாலான காட்சிகள் அரங்கேறுகின்றன. விவேக் தொடங்கி சந்தானம் வரைக்கும் குடியின்றி காமெடி செய்வதில்லை. நாயகன் குடித்துவிட்டு குத்தாட்டம் போடாத திரைப்படங்களே வெளியாவதில்லை. குடிப்பழக்கம் நாயக அந்தஸ்தை வழங்குகிற ஒரு விஷயமாகவும் மாறிவிட்டது. சிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது. போதையிலிருப்பவனே பிஸ்தா!

இன்றைய திரைப்பட குடியர்களில் நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாடு கிடையாது. வில்லனும் குடிப்பான், நாயகனும் குடிப்பான், காமெடியனும் குடிப்பான். டாஸ்மாக்கில் காதலை சொல்லி, அதிநவீன பாரில் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சினிமாவில் குடிப்பழக்கம் முன்னேறி வந்திருக்கிறது. ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதங்களற்ற மெய்யான சமரசம் உலவும் இடங்களாகவும் அவை மாறிவிட்டன. நம் திரைப்படங்களும் தொடர்ந்து குடியை ஒரு கொண்டாட்டமாக முன்னிறுத்துகின்றன. குடித்துவிட்டு போதையில் ஆடுவதை தொடர்ந்து காட்சிப்படுத்துகின்றன. ‘’மச்சி கைல கிளாஸ் எட்த்துக்கோ இன்னொரு கைல ஸ்நாக்ஸ் எட்த்துக்கோ’’ என்று நம் வீட்டு குழந்தைகள் பாடுவதை ரசிக்கிறோம். பெருமையோடு உச்சிகுளிர்கிறோம்!

கடந்த பத்தாண்டுகளில்தான் இத்தகைய மாற்றத்தை நம்மால் சினிமாவில் மட்டுமல்ல சமூகத்திலும் அவதானிக்க இயலும். இதற்கு பல அரசியல் காரணங்களும் சமூக பொருளாதார வியாக்யானங்களும் தரப்படுகின்றன. அரசுகூட பின்விளைவுகளை பற்றி கவலையின்றி மகிழ்ச்சியோடு உற்சாகமாக சாராயம் விற்கிறது. நாமும் டாஸ்மாக் லீவு விட்டாலும் கள்ளச்சந்தையில் அதிக விலைகொடுத்தாவது வாங்கி வாங்கி வயிறுமுட்ட குடிக்கவும் தொடங்கியுள்ளோம்.

****தமிழில் சமகால அரசியலை கட்சி பாகுபாடின்றி விமர்சிக்கிற அல்லது அவற்றை பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிற படங்கள் மிகமிக குறைவு. அப்படி எதுவும் வந்திருப்பதாகவும் தெரியவில்லை. (ஒன்றிரண்டு இருக்கலாம். நான் பார்த்ததில்லை) அவ்வகையில் மதுபானக்கடை திரைப்படம் மிக முக்கியமானதாக இருக்கிறது. இது தமிழில் இதுவரை காட்சிப்படுத்திய ஒட்டுமொத்த குடியர்களையும் அக்கலாச்சாரத்தையும் புரட்டிப்போடுகிறது. இப்படத்தில் குடியர்கள் வில்லனுமில்லை ஹீரோவுமில்லை..

ஆவணப்படம் போல நிச்சயம் இப்படம் ‘ரா’ வாக இல்லை. குடிகார சமூகத்தின் கொடுமைகளை தோலுரிக்கிறேன் பேர்வழி என ‘காட்’ ஆன அட்வைஸ் மழைகளும் கிடையாது. குடியால் குடும்பங்கள் பெண்கள் படும் வேதனை என மெகாசீரியல்களை போல கண்ணீரும் விடவில்லை. கம்பிமேல் நடப்பதை போன்றது இதுமாதிரி படமெடுப்பது. கொஞ்சம் தவறினாலும் படம் குடிப்பழக்கத்தை கொண்டாடுகிற படமாகவோ அல்லது குடிப்பழக்கம் கொடிய விஷம்.. என்னும் நியூஸ் ரீல் படமாகவும் ஆகிவிடும்! ஆனால் மிக சாமர்த்தியமாக மைல்டாக அதை கடந்துசென்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் கமலகண்ணன்.

டாஸ்மாக் கடையின் 24மணிநேரம்.. அவ்வளவுதான். ஒட்டுமொத்த படமும். டாஸ்மாக் பார் ஒன்றிலிருந்தே தொடங்கி அங்கேயே முடிகிறது. நம் காதுகளில் தினமும் வந்துவிழுகிற வாக்கியங்களே வசனங்கள்! நாம் அன்றாடம் சந்திக்கிற விதவிதமான குடிகாரர்களே பாத்திரங்கள். இவ்வளவுதான் மதுபானக்கடை திரைப்படம்!

நாள் முடிந்து, பொட்டியை கட்டும் ஒரு டாஸ்மாக் பாரின் இறுதி நிமிடங்களிலிருந்து படம் தொடங்குகிறது. கடைய மூடணும் வெளியே போங்க என பாரில் தண்ணி அடிப்பவர்களிடம் கெஞ்சுகிறார் பார் ஓனர்.. மறுக்கிறார்கள்... மிரட்டுகிறார்... மறுக்கிறார்கள்... ஒருகட்டத்தில் எங்களுக்கு குடிக்க உரிமையில்லையா.. என்று கேட்டு ஓவரான போதையிலேயே பாட்டு பாடி போராடி ஓய்ந்து போரடித்து கிளம்புகிறார்கள். மாபெரும் குப்பைத்தொட்டியை போல் காட்சியளிக்கும் டாஸ்மாக் பாரினை சுத்தப்படுத்துவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. (கதை என்று ஏதாவதிருந்தால் அது உங்கள் கற்பனையே என டைட்டில் கார்டு வேறு போடுகிறார்கள்! அது உண்மைதான்)

டாஸ்மாக் பார்கள் திறப்பதற்கு முன்பாகவே கைநடுக்கத்தோடு காத்திருக்கும் பிரபல குடிகாரர். வேலைக்கு போகும் முன் குடித்துவிட்டு செல்லும் கூலிக்காரர்கள்,துப்புரவு தொழிலாளர்கள். பிச்சை எடுத்தாவது குடிக்கும் படித்த இளைஞன். பாருக்கு வருகிறவர்களிடம் ஓசியில் வாங்கி குடிக்கும் பாட்டுக்காரன். தன் நிலத்தை விற்று அந்தகாசிலேயே குடித்து பைத்தியமாகி குப்பை பொறுக்கும் பைத்தியக்காரன். பார் நடத்தும் முதலாளி, பாரில் வேலை பார்க்கும் பையன்கள், டாஸ்மாக்கில் வேலைபார்க்கும் ஆள், மாமூல் வசூலிக்கும் போலீஸ்காரர், காதல் தோல்வியில் முதல் முறை குடிக்கும் இளைஞன், முதல் முறை பீர் குடிக்கும் பள்ளிசிறுவர்கள், அதே பள்ளியின் குடிகார ஆசிரியர், ராமர் அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து குடிக்கும் இளைஞர்கள், பார் பையன்களிடம் வீரம் காட்டும் சாதிசங்கத்தின் முரட்டு ஆள், ஆலை தொழிலாளர்கள் என ஏகப்பட்ட கேரக்டர்கள் படம் நெடுக..

இவர்கள் அத்தனை பேருக்கும் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அவர்கள் மதுபானக்கடைக்கு வருவதற்கும் குடிப்பதற்கும் ஒரு காரணமிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக போகாமால் மதுபானக்கடையின் உள்ளே மட்டுமே கதை நகர்கிறது. பாத்திரங்கள் வருகின்றன.. குடிக்கின்றன.. வெளியேறுகின்றன. இத்தனை பாத்திரங்களும் குடிப்பதற்கு முன்பும் பின்பும்.. இந்த இடைப்பட்ட காலத்தின் சுவாரஸ்ய மணித்துளிகள்தான் மதுபானக்கடை! சரியாக 24மணிநேரம் முடிந்ததும் படமும் முடிந்துவிடுகிறது.

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதியங்கள், உடல்மொழி, பேச்சு என பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் படத்தின் இயக்குனர். படம் முடிந்த பிறகு இந்தாளு நிச்சயம் மொடாக்குடிகாரனாத்தான்யா இருக்கணும் என்கிற எண்ணம் தோன்றிது. ஆனால் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு குடிப்பழக்கமே கிடையாதாம்!

தமிழ்சினிமாவில் இதுமாதிரியான படங்களில் இது முதல் முயற்சி என்றே சொல்லலாம். நான்லீனியர் தன்மையோடு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பறவைப்பார்வையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிக்கலாச்சாரத்தையும் , அதன் பின்னிருக்கும் அரசியலையும், ஒவ்வொரு குடிகாரனின் ஏக்கத்தினையும், அவனுடைய வேதனை, மகிழ்ச்சி, இன்ப துன்பங்களையும் சொல்லிவிடுகிற முயற்சியாக இப்படத்தினை அணுகலாம். இப்படத்தில் வருகிற பலரையும் நாம் தினமும் சந்தித்திருப்போம்.. அல்லது அது நாமாகவே கூட இருப்போம். அதுதான் இப்படத்தின் வெற்றி! இப்படம் எந்த பிரச்சனையையும் முன்வைக்கவில்லை. எந்த தீர்வையும் நமக்கு சுட்டிக்காட்டவில்லை. இன்றைய தமிழகத்தை உள்ளது உள்ளபடி குறுக்குவெட்டாக நமக்கு காட்டுகிறது! தட்ஸ் ஆல்!

ஒரு திரைப்படம் கோருகிற எந்த அடிப்படை சமாச்சாரங்களும் இப்படத்தில் கிடையாது. தான் செய்ய நினைத்த அனைத்தையும் முழுமையான சுதந்திரத்தோடு எந்த சமரசமும் இல்லாமல் செய்துபார்த்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுக செல்லும் ஒரு பதட்டம் கிளைமாக்ஸில் மாபெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமேயில்லாமல் எல்லா நாளினைப்போலவும் கிளைமாக்ஸும் பரபரப்பின்றி அமைதியாக முடிகிறது. அதுதான் இப்படத்திற்கு ஒருவித கல்ட் தன்மையை கொடுப்பதாக உணர்கிறேன்.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை புதுமுகங்களும் தங்களுக்கு தரப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருப்பதாகவே உணர்கிறேன். அதிலும் பெட்டிஷன் மணியாக வருகிற நடிகர்.. பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தின் நவரச நாயகன் அவர்தான். கவர்ந்தவர்களில் இன்னொரு ஆள் பாட்டு பாடி ஓசியில் குடிக்கும் வெள்ளைத்தலை தாத்தா.. படம் 7டி கேமராவில் படமாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அந்த உணர்வேயில்லை. கேமரா ஆங்கிள்களில் தொடங்கி, ஆர்ட் டைரக்சன், எடிட்டிங், இசை என எல்லாமே தரமாகவே இருக்கிறது. இத்திரைப்படம் ஒரு பாராட்டப்பட வேண்டிய அல்லது கொண்டாடப்பட வேண்டிய முயற்சி என்பதில் மாற்றுகருத்தில்லை.

ஆனால் எனக்கும் என்னோடு படம் பார்த்த இன்னும் சில நண்பர்களுக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்த இப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. பெரும்பாலானோருக்கு பிடிக்காமல் போகவே வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக பெண்களால் இப்படத்தை எள் அளவும் ரசிக்க இயலாது. குழந்தைகளுக்கு இப்படத்தை காட்டவே கூடாது.

நம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்!

17 comments:

சுந்தரராஜன் said...

:)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

(த.ம. 3)

Anonymous said...

excellent adhisha.....

Jackiesekar said...

மிக அழகாக எழுதி இருக்கே லக்கி.. ச்சே அதிஷா இரண்டு பெக்கு ஓவராபுடுச்சிப்பா...:-)

Jackiesekar said...

ஏன்டா... இப்படி நான் எழுதனும்னு நினைச்சதை எல்லாம் இப்படி நீயே எழுதி தள்ளிட்டா..? நான் என்னத்தை எழுதறது...??

Unknown said...

நல்லதொரு விமர்சனம்

Raashid Ahamed said...

தமிழ்நாடு எங்க போகுதுன்னு தெரியலை. இதோ நீங்களே தொடர்ச்சியா 2 பதிவு குடிகாரன், டாஸ்மாக் பத்தி எழுதி இருக்கீங்க, முழு மதுவிலக்கு தான் தமிழ் நாட்டின் இப்போதைய தேவை. என்ன தான் விளக்கம் சொன்னாலும் குடிகாரன் நல்லா வந்ததா சரித்திரமே இல்லை. குடியினால சீரழிஞ்ச, சந்தியில போன, நாசமா போன குடும்பங்கள் ஏராளம்.மதுவை வித்து வர்ற பணம் கூட பாவ பணம் தான்.

rajasundararajan said...

//நம் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் நாம் எப்போதும் மதுவுக்கு எதிரானவர்களாக இருந்ததேயில்லை. மது தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்திருக்கிறது. மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்.. மதுபானக்கடை திரைப்படம் பேசுகிற உணர்த்த விரும்புகிற விஷயமும் இதுதான்!//

Well written. I salute! (aptly in booze)

gnani said...

//மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை.// அபத்தமான வரிகள். சற்று சரித்திர்ம படியுங்கள். இதெல்லாம் நடந்ததினால்தான் 1920களிலும் 30 களிலும் கடுமையாகப் போராடி மதுவிலக்கைக் கொண்டு வந்தார்கள்.முப்பதுகளிலிருந்து எழுபதுகள் வரை மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.லட்சக்கணக்கானவர்கள் கள்ள சாராயம் குடித்து செத்துவிடவும் இல்லை.மதுவிலக்கு போன்ர நல்லவிஷயத்தை ஆதரிக்காவிட்டாலும் ப்ரவாயில்லை. மோசமான மதுக் கலாசாரத்தைப் போற்றும், ஏற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆதரிக்காதீர்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தலைப்புக்கேற்ற பொருத்தமான பதிவு.

Anonymous said...

/////மது என்றுமே தமிழனை பிச்சைக்காரனாக்கியதில்லை. அவனை மனநோயாளியாக மாற்றியதில்லை. முட்டாளாக்கியதுமில்லை. இன்று அதையெல்லாம் செய்கிறது நம் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடைகள்..//// மது தமிழர்களுக்கு ஒரு புதிய விஷயம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மேற்கண்ட வரிகள் எப்படி உண்மையாகும்?

அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் மட்டும் அவனை முட்டாளாக்கி,ஏழையாக்குகிறதா என்ன? அரசாங்கம் நடத்தாதபோதும் அது தனி மனித பலவீனம்தான்.அதில் குறிப்பிட்டவர்கள் மிகுந்த பலவீனம் ஆகிறார்கள்.இதில் அரசு ஒன்றும் செய்வதற்கில்லை...என்றே நினைக்கிறேன்.

தீவிரமாக குடியை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்து எட்டு பத்து வருசம்தானே ஆகிறது.இன்னும் பதினைந்துவருடம் கழித்து (அதாவது 25வருடத்தில்) கணிசமான அளவு நோயாளிகளாக மருத்துவமனைகளில் சேரும்போது,குடும்பங்கள் பாதிக்கப்படும்போது,(குறிப்பாய் பெண்கள்) அப்போது அது சம்பந்தமான படங்கள் வர ஆரம்பிக்கும். மேற்கத்திய நாடுகளில் இப்போதெல்லாம் குடியைப்பற்றி அல்ல...குடியிலிருந்து விலகுவதைப்பற்றி அரசாங்கங்கள் விளம்பரம் செய்ய ஆரம்பிக்கிறது.தனியார் மனநல கவுன்ஸிலிங்கும் பிரபலம்.(குடியும் வியாபாரம்...குடியிலிருந்து விலகுவதில் உதவுதலும் வியாபாரம்) இங்கே அது வர பத்து வருடமாகும். அது வரை சியர்ஸ்!

Anonymous said...

இந்த‌ ப‌ட‌ம் அட‌ல்ஸ் ஒன்லி ப‌ட‌ம் ச‌ரி நீங்க‌ளும் குழ‌ந்தைக‌ளுக்கு காட்ட‌வே கூடாதுன்னு எழுதி இருக்கீங்க‌. ஆனா சிவா ம‌னசுல‌ ச‌க்தி யு ச‌ர்டிபிகேட் ப‌ட‌ம். தொலைக்காட்சில‌ பிரைம் டைம் வ‌ருது, அதை ப‌த்தி என்ன‌ நினைக்கிறீங்க‌?

perumal karur said...

VERY NICE....

Sabarinathan Arthanari said...

உலக சினிமாவெல்லாம் நிறைய பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. வாழ்த்துகள் :)

Senthil kumar said...

சிகரட் எப்படி ஆண்மையின் அடையாளமாக ஒரு காலத்தில் கருதப்பட்டதோ இன்று தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதே அந்தஸ்தை பெற்றுள்ளது.

# நிஜமான வரிகள்...நான் குடிக்கமாட்டேன் என்று சொன்னால் நம்மை மேலும், கீழும் பார்பவர்களே இங்கு அதிகம்.

shankar said...

Really a very sincere effort from the director. welcome to kamalakannan. Nice review by you.

manjoorraja said...

மிகச் சிறந்த கச்சிதமான விமர்சனம்.

பாராட்டுகள்