27 January 2013

பராசக்திக்கு வயது 60!‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’

ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த ஆண்டோடு அறுபது வயதாகிவிட்டது.

ஒரு புதிய அலையை, சிந்தனையை தமிழ்சினிமாவுக்கு கொடுத்த திரைப்படம் பராசக்தி. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இப்பட படமெடுத்து அதை வெற்றிபெற செய்வதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல. அதுவும் சாதாரண வெற்றியல்ல..

பராசக்தி திரைப்படம் உருவான கதை ‘’என் தங்கை’’ என்கிற நாடகத்திலிருந்து தொடங்குகிறது. திருச்சி டி.எஸ். நடராஜன் என்பவர் எழுதிய இந்த நாடகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் பெருமளவில் ரசிகர்களை ஈர்த்த ஒன்றாக இருந்தது. பார்வையற்ற தங்கைக்காக தன் காதலை தியாகம் செய்யும் அண்ணனின் கதைதான் என்தங்கை. அந்த நாடகத்தில் பாசமிகு அண்ணனாக நடித்தவர் அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சாதாரண (சிவாஜி) கணேசன்.

அந்த நாடகத்தை கோவை சென்ட்ரல் ஸ்டுடீயோவை சேர்ந்த ஜூபிடர் சோமு பார்க்கிறார். அவருக்கு பார்த்ததும் பிடித்துவிட ஏ.எஸ்.ஏ.சாமி என்கிற அக்காலத்து முன்னணி இயக்குனரிடம் கூறுகிறார். அவரும் நாடகத்தை பார்த்து இதை சினிமாவாக செய்யலாம் என்று சம்மதிக்கிறார்.

அந்த நேரத்தில் ஏ.எஸ்.ஏ.சாமி நிறைய படங்கள் இயக்கி வந்தார். அதனால் சுந்தர் ராவ் நட்கர்னி என்பவருக்கு ‘’என் தங்கை’’ படத்தினை தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். ஆனால் நட்கர்னியோ முதலில் ஒப்புக்கொண்டு தன்னால் இதுபோல நவீனகதைகளை படமாக்குவதில் விருப்பமில்லை என்று மறுத்துவிடுகிறார். மீண்டும் என் தங்கை ஏ.எஸ்.ஏ.சாமிக்கே திரும்பிவருகிறது.

ஏ.எஸ்.ஏ.சாமி தமிழகமெங்கும் சூப்பர்ஹிட்டாக போய்க்கொண்டிருந்த பராசக்தி என்கிற நாடகத்தை பார்க்கிறார். அவரை அந்த நாடகம் பார்க்க தூண்டியவர் பி.ஏ.பெருமாள் என்கிற நேஷனல் பிக்சர்ஸின் அதிபர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்.

ஏ.எஸ்.ஏ.சாமிக்கு அப்போது ஒரு யோசனை தோன்றுகிறது பராசக்தி நாடகமும் அண்ணன்தங்கை பாசம் குறித்த கதைதான்.. அதையும் என்தங்கை நாடக கதையையும் சேர்த்து ஒன்றாக்கி ஒரு திரைக்கதை பண்ணினால் பிரமாதமாக வரும் என்று திட்டமிட்டார். ஆனால் என்தங்கை நாடகத்தை எழுதிய திருச்சி டி.எஸ்.நடராஜனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அதோடு அந்த நாடகத்தின் கதையை வேறொரு தயாரிப்பாளருக்கு விற்றும் விட்டார்!

முதலில் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு சூட்டிங்கும் தொடங்கி.. பின் என்தங்கை கைவிடப்பட்டது. கடைசியில் சிவாஜி நடித்த என்தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர் நம்ம புரட்சிதலைவர் எம்ஜிஆர்தான்!

என்தங்கைதான் போயிடுச்சே பராசக்தியையாச்சும் படமா எடுப்போம் என்று முடிவெடுக்கிறார் பெருமாள். அதனால் பராசக்தி நாடகத்தை எழுதிய பாவலர் பாலசுந்தரத்திடம் பேசி அதற்கான திரைப்படமாக்கும் உரிமையை வாங்குகிறார். அவரோடு ஏவி மெய்யப்ப செட்டியாரும் இணைந்துகொள்ள , படத்திற்கான திரைக்கதை வசனம் எழுத அந்த நேரத்தில் ஒரளவு புகழ்பெற்றுவந்த இளைஞரான கலைஞர் கருணாநிதியை நியமித்தனர். கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

என்தங்கை நாடகம் பார்த்த்திலிருந்தே என்றைக்காவது இதை படமாக்கினால் கணேசனைத்தான் ஹீரோவாக போடவேண்டும் என்பது பி.ஏ.பெருமாளின் ஆசை. அந்த அளவுக்கு என் தங்கை நாடகத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜி.
அதனால் பராசக்தி படத்துக்கு அவரையே நாயகனாக்குகிறார். பல ஆண்டுகளாக வறுமையிலும் பசியிலும் கிடந்த சிவாஜி பார்க்கவே ஒல்லியாய் கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பாராம். அவரை பார்த்தால் ஒரு நாயகனுக்கான தோற்றமே இருக்காதாம். இருந்தும் அவரைத்தான் நாயகனாக போடவேண்டும் என்று அடம்பிடித்து நாயகனாக்கினார் பி.ஏ.பெருமாள்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் ‘சக்ஸஸ்’. அந்த சக்ஸஸ் நடிகர் திலகம் சிவாஜியின் இறுதிவரை தொடர்ந்தது. அதை எழுதிய கலைஞருக்கும்தான்! படம் சூட்டிங் ஆரம்பித்து எல்லாம் மங்கலகரமாக மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

சில ஆயிரம் அடிகள் படமாக்கிய பின் அதை போட்டுப்பார்க்கிறார் ஏவி மெய்யப்ப செட்டியார். அவருக்கு சிவாஜியின் நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. ‘’ஏன்ப்பா இந்த கணேசன் என்னய்யா நடிச்சிருக்கான்.. சுத்தமா நல்லா இல்ல.. வசனம் பேசும்போது வாய் மீன் மாதிரி இருக்கு’’ என்று கணேசனை நீக்கிவிட பரிந்துரைக்கிறார். அதோடு கே.ஆர்.ராமசாமி என்கிற நடிகரை நடிக்க வைத்து படமாக்கலாம் என்று முடிவுசெய்கிறார். அது சிவாஜிக்கும் தெரியவருகிறது. எப்படிப்பட்ட வேதனையை அந்த நேரத்தில் சிவாஜி அனுபவித்திருப்பார். கற்பனைகூட செய்துபார்க்க முடியவில்லை.

பிஏ பெருமாளோ விடாப்பிடியாக இருந்தார். சிவாஜி கணேசன் நன்றாக நடிப்பான் எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்று சண்டை போடுகிறார். வசனகர்த்தாவான கருணாநிதியும் என்னுடைய வசனங்களை இவரைவிட வேறுயாராலும் சிறப்பாக பேசமுடியாது என்று சிவாஜிக்காக பேசுகிறார். இந்த களேபரத்தில் சில காலம் சூட்டிங் நிறுத்தப்பட்டது. கடைசியில் பிஏ பெருமாளின் நம்பிக்கை ஜெயித்தது. சிவாஜி நடிக்க பராசக்தி படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக தொடங்கியது!

படம் ஒருவழியாக முடிந்தபின்னும் கூட பல்வேறு தடைகள் தொடர்ந்தன. சென்சாரில் இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் என்ன செய்வதென்று குழம்பிப்போய்விட்டனர். படம் முழுக்க இதுவரை தமிழ்சினிமா பார்த்திடாத கேட்டிராத வசனங்களும் காட்சிகளுமாக நிரம்பியிருந்தன. வெட்டி எறியத்தொடங்கினால் மொத்தபடத்தையும் தடைதான் செய்யவேண்டியிருக்கும். சென்சாரில் தனிக்கமிட்டி அமைத்துதான் சென்சார் செய்யப்பட்டதாம்.

1952 நவம்பரில் ஒரு தீபாவளி நாளில் திரைப்படம் வெளியானது. படம் வெளியான சமயம் இத்திரைப்படத்துக்கு தடை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு படத்தில் இந்து மதம் குறித்த சமூகம் குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. தடைவருமோ என்கிற வதந்தியே படத்துக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியது. அதுவே தியேட்டருக்கு மக்களை இழுத்துவந்தது. படம் மெகாஹிட். அதுவரை பாடிப் பாடியே படமெடுத்த தமிழ்சினிமா இன்றுவரை பேசிப்பேசியே கொல்வதற்கு பராசக்தியும் ஒருகாரணமாக மாறியது!

அதுவரை புராண படங்களாக எடுத்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவை நவீன கதைகளின் பக்கமாக மடைமாற்றிய பெருமையும் பராசக்தியையே சேரும். பராசக்திக்கு முன்பும் கூட அவ்வப்போது சில படங்கள் நவீன கதைகளோடு முற்போக்கான கருத்துகளோடு வந்தாலும்.. பேச்சுத்தமிழில் தொடங்கி கதைசொல்லும் விதம் காட்சியமைப்புகள் எளிய மக்களுக்கும் புரியக்கூடிய திரைக்கதை என சகல விஷயங்களிலும் ஒரு டிரென்ட் செட்டராக பராசக்தி அமைந்திருந்தது.

சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பையும் அதன் குறைகளையும் பகடி செய்த முதல் படமாக பராசக்தியை பார்க்கலாம். தந்தை பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக முடியாவிட்டாலும் திரையில் ஒரளவாவது பேசிய படமாகவும் இப்படம் இருந்தது. ஏற்றதாழ்வுகள் மிகுந்திருந்த சமூகத்தை, நீதிமன்றங்களை, கோயில்களை, அகதிகள் மீதான அரச அடக்குமுறையை , நம்முடைய கட்டுப்பெட்டிதனமான மூடநம்பிக்கைகளை, ஏழைகள் மீதான அசட்டுப்பார்வையை என படம் முழுக்க கேள்விகளும், பகடியும் நிறைந்திருக்கும்.
சீர்திருத்த திருமணம், சுயஉரிமைக்காக சங்கம் அமைப்பது, பொதுவுடமை கொள்கைகள் மாதிரியான விஷயங்களையும் எளிமையாக பேசியது பராசக்தி. இப்படம் ஏன் இன்றளவும் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பாமரனுக்கும் புரியும்படி எழுதப்பட்டவை என்பதுதான்.

படம் வெளியான சமயத்தில் தமிழக முதல்வராக இருந்த ராஜகோபலாச்சாரியார் கடுமையாக இப்படத்தை எதிர்த்தாராம். இத்திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை மறுஆய்வு செய்யக்கோரி மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
இதுமாதிரி படங்கள் வந்தால் நம்முடைய ஆச்சாரம் அழிந்துவிடும், லோஹம் கெட்டுவிடும் , தமிழ்நாடே தீட்டாகிடும் என்கிற ரீதியில் அப்போதிருந்த சில முன்னணி பத்திரிகைகளும் வார இதழ்களும் கூட புலம்பின. எழுத்தாளர் கல்கியும் கூட தன் பங்குக்கு காரசாரமாக பராசக்தியை விமர்சித்து கட்டுரை எழுதினார். அதிகாரவர்க்கத்தின் எதிர்ப்புகளையும் தாண்டி மக்களின் பேராதரவுடன் இத்திரைப்படம் மகத்தான வெற்றிபெற்றது.

இன்றும் நம்முடைய நீதித்துறை காமெடிகளும், மூட பழக்கவழக்கங்களும், சாமியார்களின் சல்லாபங்களும், அதிகாரத்தின் அடாவடியும் குறைந்தபாடில்லை. அதற்காக பராசக்தியை யாரும் ரீமேக் செய்கிறேன் என்று எதையாவது செய்து பயமுறுத்த வேண்டாம். (கலைஞர் வேறு ஃப்ரீயாக இருக்கிறார்). சென்ற ஆண்டு கர்ணன் படத்தை வெளியிட்டது போல இந்த ஆண்டு பராசக்தியை கலர்பண்ணிக்கூட வெளியிடலாம்.

கலைஞர் பரம ஏழைதான் என்றாலும், அவருடைய வீட்டிலேயே கணிசமான திரைப்பட தயாரிப்பாளர்களும் மிட்டா மிராசுகளும் ஜமீன்தார்களும் இருப்பதால் அவர்களாவது மனது வைத்து இத்திரைப்படத்தை மீண்டும் கலரிலோ அல்லது அப்படியேவோ பெரிய அளவில் வெளியிடலாம். (கர்ணன் போல இதை ரிலீஸ் செய்தாலும் நன்றாக கல்லா கட்டமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்)

படத்தை மீண்டும் பெரிய அளவில் வெளியிடுவதை காட்டிலும் இந்த அறுபதாவது ஆண்டில் பராசக்திக்கு நம்மால் வேறெந்த மரியாதையையும் செய்துவிட இயலாது!.

***

தகவல் உதவி – ரான்டர்கை ஹிந்துவில் எழுதிய பராசக்தி தொடர்பான கட்டுரை, தியோடர் பாஸ்கரன் எழுதிய The Eye of the Serpent, மற்றும் கூகிள்.

15 comments:

ginglee said...

Arumai..

ginglee said...

Arumai..

Hemanth said...

SUPER

Anand said...

Very informative and an interesting article.. Thanks Athisha..

Anand said...

Very interesting and informative...thanks Athisa..

ஜானகிராமன் said...

அதிஷா. மிக நல்ல விரிவான பதிவு.நன்றி. ஆனா உங்களுக்கு ஏன் கலைஞர் மேல் இந்த காண்டு? இந்த கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் இரண்டு வரி வசனம், //ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!// பாரதிதாசன் பாடலில் இருந்து கலைஞர் திருடி எழுதியது. அதற்கு பதில் வேறு எதாவது வசனத்தைப் போட்டு இக்கட்டுரையை ஆரம்பித்திருக்கலாம். :)

ஜானகிராமன் said...

அதிஷா. மிக நல்ல விரிவான பதிவு.நன்றி. ஆனா உங்களுக்கு ஏன் கலைஞர் மேல் இந்த காண்டு? இந்த கட்டுரையின் துவக்கத்தில் இருக்கும் இரண்டு வரி வசனம், //ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!// பாரதிதாசன் பாடலில் இருந்து கலைஞர் திருடி எழுதியது. அதற்கு பதில் வேறு எதாவது வசனத்தைப் போட்டு இக்கட்டுரையை ஆரம்பித்திருக்கலாம். :)

chandra said...

good one athisa :)

chandra said...

good one athisa :)

Raashid Ahamed said...

அந்த காலத்தில் ஒரு அற்புத திருப்பு முனையை ஒரு பரபரப்பை ஏன் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த ஒரு திரைப்படம் தான் பராசக்தி.சிறப்பான தகவல்களுக்கு நன்றி.

Muraleedharan U said...

After some years we can write same story for VISWAROOPAM

perumal karur said...

பகிர்வுக்கு நன்றிங்க...

மருதநாயகம் said...

நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது, சொல்லிய விதம் மிக அருமை

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. அரிய தகவல்கள்.
நன்றி அதிஷா.

Anonymous said...

very good article... Thanks Athisha....


by--
Maakkaan