Pages

24 January 2013

'டிவி புகழ்' மனுஷ்யபுத்திரன்

மணி எட்டாகிவிட்டதா? கைகளில் ரிமோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்தாகிவிட்டதா? அப்படியே ரேண்டமாக ஏதோ ஒரு தமிழ் செய்தி சானலுக்கு செல்லுங்கள்... எந்த சேனலாக இருந்தாலும் அதில் அந்த மனிதர் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார். அவரை எந்த நாளிலும் எந்த சேனலிலும் சந்திக்க முடியும். ஒருவாய் காப்பித்தண்ணிகூட குடிக்காமல் இரண்டு மணிநேரம் கூட பேசக்கூடிய விவாதிக்கவல்ல அபார ஆற்றல் பெற்றவர் அவர்.

அவருடைய பேச்சு ஒரு குயிலின் கானத்தைப் போல கொட்டும் மழையில் நம் முகம்வருடிச்செல்லும் தென்றலைப்போல அமைதியான ஓடம்போல மிக மிக மென்மையானதாக இருக்கும் (என்று அவரே போடசொன்னார்). பாடகர் யேசுதாஸ் என்னதான் குத்துப்பாட்டே பாடினாலும் அது ஒரு மெலொடியைப்போலவேதான் நான் உணர்ந்திருக்கிறேன். போலவே இந்த மனிதரும் என்னதான் கோபமாக உரக்கப்பேசினாலும் அது அவ்வளவு டெரராக இருக்காது. அவ்வளவு சாஃப்ட்டு! அவர் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான 'டிவிபுகழ்' மனுஷ்யபுத்திரன்.

ஒவ்வொருநாளும் ஒரு செய்தி சேனல் துவக்கப்படுகிற சமகாலத்தில் எல்லா செய்திசேனல்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குபவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருக்கமுடியும். அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இவ்விஷயத்தில் அவருடைய சீனியரான கிழக்குப்பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி கூட இதை ஏற்றுக்கொள்வார். எந்த செய்தி சேனலைப் போட்டாலும் அதில் மனுஷ்யபுத்திரன் பேசுவதை சிலசமயம் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சேனல்களில் லைவ் ஷோகூட பண்ணுகிற வித்தைக்காரர்! இதெல்லாம் நித்யானந்தாவுக்கே வராத மாயாஜாலம்.

அமெரிக்காவில் குண்டுவெடித்தாலும் சரி. கோசா ஆஸ்பத்திரியில் ஆயாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தாலும் சரி., அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தில் ஆபாசகாட்சியாக இருந்தாலும்.. பேசப்போகிற டிவி சேனலிலேயே செய்தியாளர்களுக்குள் அடிதடியாக இருந்தாலும் சரி..

பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி இன்றே இப்போதே உடனடியாக ஒரு நல்ல மாற்றுக் கருத்து வேண்டுமா? பிடிங்க சார் அவர.. பிடிச்சு மைக்கை குடுங்க சார்.. என இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியில் உள்ள குட்டிப்பாப்பாகள் கூட சொல்லும்! அவரால் மட்டும்தான் சகல விஷயங்களுக்கும் கருத்துச்சொல்ல இயலும். கருத்து சொல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது ஒருகலை. அது மிகச்சிலருக்கே கைவரபெற்றுள்ளது.

தொலைகாட்சியில் கருத்து சொல்வதெற்கென ஒரு கல்லூரியை திறந்தால் அதில் நம்ம மனுஷ்யபுத்திரனையே பிரின்சிபாலாக போடலாம். (அந்தக்கல்லூரியில் மற்ற பதவிகளுக்கு பத்ரிசேஷாத்ரி, சுப.வீ, சாரு, பாஸ்கர்சக்தி, இளங்கோ கல்லாணை, முத்துகிருஷ்ணன் மாதிரியான சீனியர்களுக்கும் ஞாநி,சாலமன் பாப்பையா,சுகிசிவம் மாதிரியான சூப்பர் சீனியர்களுக்கும் இடம்கொடுக்கலாம்)

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்காக இல்லையென்றாலும் சீரிய கருத்துகளுக்காக இன்று தமிழகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அபிப்ராயப்படலாம். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை அறியாதவர்களும் கூட அவருடைய கருத்துகளை அறிந்தவர்களாக சமலோகத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டில்தான் சாத்தியம். அதற்கு சான்றாக புத்தகக் கண்காட்சியில் யாரோ ஒரு மாமி குருபெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் கூட மனுஷ்யபுத்திரனிடம் அடம்பிடித்து க்யூவில் காத்திருந்து ஆட்டோகிராப் வாங்கிச்சென்றதை பார்க்க முடிந்தது.

செய்திசேனல்கள் புயலென தமிழ்நாட்டை தாக்குவதற்கு முன் நீயாநானாவில் மட்டும்தான் தென்னாட்டு இலக்கியவாதிகள் அனைவருமே தொலைகாட்சியில் தரிசனம் கொடுத்துவந்தனர். அதற்கு மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கல்ல. ஆனால் ஆரம்பகாலத்தில் அவருக்கு பல்வேறு தயக்கங்களும் கேமரா ஓடும்போது சிந்தனை ஓட்டத்தில் தடையும் இருந்ததை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இன்றோ எல்லாமே தலைகீழ். ப்ராக்டீஸ் மேக்ஸ் ஏ மேன் பர்பெக்ட் என்று பாஸ் எனப்படும் பாஸ்கரன் என்கிற திரைக்காவியத்தில் நடிகரும் சிந்தனையாளருமான சந்தானம் அவர்கள் குறிப்பிட்டிருப்பார். அதற்கு சரியான உதாரணம் ம.பு.தான். அர்னாப் கோஸாமியும் கரன்தப்பாரும் கூட மனுஷ்யபுத்திரனிடம் தினந்தோறும் ஈவ்னிங் ட்யூசன் வந்து டிவியில் பேசுவது குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மனிதர் பிச்சி உதறுகிறார். கேமரா பயமோ தயக்கமோ இல்லாமல் என்ன பேசுகிறோம் என்கிற தெளிவும் நேர்த்தியும் கைவந்துவிட்டது.

அதோடு கொஞ்சமும் தட்டுதடுமாறால் எதைப்பற்றியும் எவ்வளவு நேரமும் பேசக்கூடியவராகவும் மாறிவிட்டார். அதனால்தானோ என்னவோ... கோபிநாத்தைவிட நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார் என்றுதான் இப்போதெல்லாம் மனுஷ்யபுத்திரனை நீயாநானாவுக்கு அழைப்பதில்லை என்று அவதானிக்கலாம்!

புத்தக கண்காட்சி சமயத்தில் மட்டும்தான் நம் செய்தி சேனல்களுக்கு மனுஷ்யபுத்திரன் ஒரு எழுத்தாளர் என்பதே நினைவுக்கு வரும்போல.. கடந்த பத்து நாட்களாகதான் எல்லா சேனல்களிலும் புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

புக்ஃபேர் முடிந்துவிட்டால் ''இவனுங்க வேற இன்னும் ஒருவருஷத்துக்கு புஸ்தகம் பத்தி மூச்சே விடமாட்டாய்ங்களே'' என்கிற அவசரமும் பதட்டமும் ஆதங்கமும் அவருடைய பேச்சில் தெரிந்தது. புக்ஃபேரும் முடிந்துவிட்டது.. இனி அடுத்தவருடம்தான் புத்தகம் பற்றியெல்லாம் பேசமுடியும். ஆனால் அலைகடல் ஓயுமா.. சூரியன் உதிப்பதுதான் மாறுமா.. அதுபோலவேதான் மனுஷ்யபுத்திரனும்.

இந்த வாரத்துக்கு விஸ்வரூபம் பட விவகாரம் சுடச்சுட காத்திருக்கிறது. இப்போதே முன்பதிவு முறையில் எந்தெந்த நேரத்துக்கு எந்தெந்த தொலைகாட்சியில் பேசுவது என்பதெல்லாம் புக்காகியிருக்கும். டிவியில் பேசுவதற்கென மனுஷ்யபுத்திரனை புக்செய்ய ஆன்லைன் ரிசர்வேஷன் வசதிகள்கூட உண்டு என்று கேள்விப்பட்டேன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலை விட அதிகமாக பேசப்போகிறவர் மனுஷ்யபுத்திரனாகத்தான் இருப்பார்.. வேண்டுமென்றால் ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு செய்திசேனலை தட்டித்தான் பாருங்களேன்!பின்குறிப்பு – திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது இந்த ஆண்டு மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கப்படவுள்ளது. அவருக்கு நம் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகள்!