23 January 2013

மாண்புமிகு பவர்ஸ்டார்!
லத்திகா திரைப்படத்தை முதல்நாள் முதல் ஷோ தியேட்டரில் காசுகொடுத்து டிக்கட் வாங்கி படம் பார்த்த இரண்டு பேர் தமிழ்நாட்டிலேயே நானும் நண்பர் லக்கிலுக்குமாகத்தான் இருக்க வேண்டும்.

நான் குடியிருக்கும் முகப்பேர் பகுதியில்தான் பவர்ஸ்டாரின் அட்ராசிட்டி முதன்முதலாக தொடங்கியது. ஊருக்குள் காதுகுத்து வளைகாப்பு பூப்புனித நீராட்டுவிழா என எதுநடந்தாலும் வான்டடாக ஆஜராகி வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தார். வேண்டாம் என்பவருக்கும்கூட கையபிடித்து இழுத்து மிரட்டியாவது உதவிகள் செய்தவர் அண்ணல் பவர். இவருடைய வள்ளல்தன்மையை பார்த்து பயந்து ஓடினவர்களும் கூட உண்டு. அண்ணாநகர் சரவுண்டிங்கில் எங்கு பார்த்தாலும் அவருடைய லத்திகா,ஆனந்த தொல்லை,மன்னவா,தேசியநெடுஞ்சாலை முதலான பட போஸ்டர்கள் எப்போதும் காணகிடைக்கும். அம்மன் கோயில் திருவிழாவில் கூழ் ஊற்றக்கூட ஸ்பான்சர் செய்து எங்கள் பகுதி மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்தவர் பவர் ஸ்டார்.

இவருடைய வெறித்தனமான கொடைவள்ளல் குணம் அண்ணாநகரை சுற்றியிருந்த மற்ற பகுதி மக்களும் கூட யார்சார் இவர் என திரும்பி பார்த்தது. அப்படி திரும்பி பார்க்க முடியாதவர்களை கூட வீதிக்கு நாலு பேனர் வைத்து அடித்து துவைத்து பார்க்க வைத்தவர் பவர்ஸ்டார். அவருடைய ஏரியா இந்தப்பக்கம் மதுரவாயல் அந்தபக்கம் அம்பத்தூர் என பரந்துவிரிந்து கொண்டிருந்தது.

லத்திகா படம் வெளியாவதற்கு முன்பே வேறு சில படங்களில் நடித்திருந்தார் பவர் ஸ்டார். வழக்கறிஞர் தமிழரசனோ என்னவோ அவர் தன் சொந்தகாசில் அடிக்கடி படமெடுத்து ஹீரோவாகிவிடுவார். அந்தப்படங்களிலெல்லாம் காமக்கொடூரனாக பெண்களை கற்பழிக்கும் வில்லனாக மட்டுமே நடிப்பார் பவர்ஸ்டார். இதுமாதிரியான பாத்திரங்களை மட்டுமே கேட்டுவாங்கி நடிப்பாரோ என்கிற சந்தேகங்களும் கூட எங்களுக்கு எழுவது உண்டு.
எப்போதும் பத்து பெண்களோடு கும்மாளம் அடிப்பவராகவேதான் அவருடைய திரைபிரவேசம் இருந்தது. எல்லா காட்சியிலும் அந்த பத்துபெண்களோடும் கட்டிபிடித்து விளையாடுவார் பவர். அதுதான் எங்களைப்போன்ற இளைஞர்களை கவர்ந்த அம்சமாக இருக்கலாம்.

அதுபோக சில பிட்டுப்படங்களிலும் கூட பவர்ஸ்டாரை பார்த்து பிரமித்திருக்கிறேன். தலையில் விக்கு கூட இல்லாமல் குஜாலான காட்சிகளில் கூட தன்னுடைய ஃபேவரட் சிரிப்போடு தனிமுத்திரை பதிப்பவராக பவர்ஸ்டார் இருந்தார். பிட்டே இல்லாத மொக்கை படங்களையும் கூட பவர்ஸ்டாருக்காக பார்த்திருக்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மருத்துவர் அணி தலைவராக இருந்தார் பவர் ஸ்டார். உண்மையில் அவர் எம்பிபிஎஸ் டாக்டரெல்லாம் கிடையாது. அக்குபஞ்சரோ ஆண்மைகுறைவோ அதுமாதிரியான அஜால்குஜாலான மருத்துவர். அவருக்கு பவர் ஸ்டார் என்கிற பட்டத்தை சூட்டியதே தோழர் திருமாவளவன்தான் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி!. ஆனந்த தொல்லை படத்தின் பாடல்வெளியீட்டுவிழா என்று நினைக்கிறேன் அதில்தான் டாக்டர் ஸ்ரீனிவாசனின் பவர்ஃபுல் ஆக்டிங்கை பார்த்து அசந்துபோய் பவர்ஸ்டார் என்கிற பட்டத்தை அன்னாருக்கு வழங்கினார் புரட்சிப்புயல் திருமா!

எந்த நேரத்தில் இந்த மருத்துவர் சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்று பெயர் சூட்டினார்களோ அன்றிலிருந்துதான் தமிழ்நாட்டுக்கே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்தது என்பது தற்செயலான விஷயமாக தெரியவில்லை.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் பவர்ஸ்டாரின் போஸ்டர்களை அதிகமாக பார்க்க முடியவில்லை. விழாக்களில் அண்ணலின் அதிரடி விசிட்கள் சுத்தமாக குறைந்துவிட்டது. தினமும் அலுலவகம் போகும் போதும் வரும்போதும் பேனர்களில் பார்த்து ரசித்த அந்த அழகான புன்னகையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். தமிழ்நாடு முழுக்கவே பவரின்றி தவித்துக்கொண்டிருக்கையில் அண்ணாநகர் மட்டும் பவர்ஸ்டாரை இழந்து தவிக்கிறது.

கண்ணா லட்டுதின்ன ஆசையா வேறு சூப்பர் ஹிட்டாகிவிட்டதாக கேள்விப்பட்டேன். அடுத்து ஷங்கரின் ஐ படத்தில் செகண்ட் ஹீரோவாக புக் ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறோம்.

எங்களிடமிருந்த ஒரு அற்புத கலைஞனை கோலிவுட் பறித்துக்கொண்டதோ என அஞ்சுகிறோம். பிரிவில்தான் ஒருவருடைய அருமை தெரியும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். வரணும் பழைய பவர்ஸ்டாரா அவர் அண்ணாநகருக்கு வரணும்..பேனரில் புன்னகைக்கணும்!

9 comments:

Robert said...

என்னது செகண்ட் ஹீரோவா??. தப்பா சொல்றீங்களே!! மெயின் ஹீரோவே நம்ம தானைத் தலைவர் பவருதான்.அதுக்கப்புறம் நடிக்கிறது எல்லாம் ஸ்ட்ரெயிட்டா ஹாலிவுட் தான். :-)

கல்வெட்டு said...

பவரின் வரலாற்றைச் சொன்னமைக்கு நன்றி அதிஷா
#இப்படிக்கு பழையகால பாடிக்குப்பம் வாசி

Anonymous said...

ஒன்லி ஒன் ஸ்டார்,அவரே பவர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,,, மீதமெல்லாம் உதார்ர்ர்ர்!!!!!!!!!!--பவர் பாசறை.

kumar said...

புரட்சி புயல்னா வைகோ தோழரே.இவர் சேரிபுயல்.

ஒரு தலித் இவரென்றால் என் ஆதரவு இன்னும் அதிகமாகிறது.

ReeR said...

பவர் ஸ்டார் .. நிஜ ஸ்டார் ஆகிடுவார்

நன்றி.

www.padugai.com

Thanks

குரங்குபெடல் said...

"எந்த நேரத்தில் இந்த மருத்துவர் சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்று பெயர் சூட்டினார்களோ அன்றிலிருந்துதான் தமிழ்நாட்டுக்கே மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு மின்வெட்டு அதிகரித்தது என்பது தற்செயலான விஷயமாக தெரியவில்லை. "

எப்டி தம்பி இப்டிலாம் யோசிக்கிறிங்க . .

அதே அண்ணா நகரில் அருளியிருக்கும்


powercut star ஆற்காட்டார் கோபிக்க போகிறார்

Anonymous said...

Very nice.I like your blog a lot.Entertaining..

Murali PP
Singapore

perumal karur said...

சந்தானத்தின் இடத்தை பவர் ஸ்டார் பறித்து விடுவார் போலிருக்கே

Raashid Ahamed said...

நீங்களே பவர் ஸ்டாருக்கு இவ்வளவு ஆதரவு தரும்போது... அண்ணனை தேர்தல்ல மட்டும் நிக்க சொல்லுங்க ! சும்மா கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வச்சிடலாம்.