Pages

23 January 2013

தமிழ் ஆழி
இந்த மாதம் முதல் வெளிவரத் துவங்கியிருக்கும் தமிழ் ஆழி இதழ் ஒருவழியாக ஜனவரி முடிவதற்குள் கையில் கிடைத்துவிட்டது. விலை இருபது ரூபாய்தான். ஆனால் இதழின் உள்ளடக்கமும், வடிவமைப்பும், செய்திகளும் கொடுத்த காசுக்கு மேல் தரமானதாக இருந்தது. அப்படியே ஷாக்காகிட்டேன் என்று சொன்னால் மிகையல்ல..

எந்த செய்தியாக இருந்தாலும் அதை எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்கிற இதழியல் முறை இன்று வெகுவாக குறைந்துவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே கிடைத்த தகவல்களை மட்டும் கோர்த்து அவசர அடியில் எதையாவது எழுதிக்குவிக்கிற பத்திரிக்கையாளர்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் புதுமை. அரசியல் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு யாருமே பேசத்தயங்குகிற விஷயங்களை 'தில்'லாக பேசுவது போன்ற காரியங்கள் சுத்தமாக குறைந்துவிட்டது. அதுதவிர கட்டுரைகளின் நேர்த்தியுலும் லேஅவுட்டிலும் சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் இதழ் என்பது இன்றும் கானல்நீர்தான்.

அந்தக்குறையை போக்குகிற அளவுக்கு என்று ஒரேயடியாக சொல்விடவும் முடியாது. ஆனால் அந்த தரத்தினை நெருங்குகிற அளவுக்கு முயற்சி செய்திருக்கிறது தமிழ் ஆழி. ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் மிகமிக நேர்த்தியோடும் அதேசமயம் மிகுந்த அக்கறையுடனும் தயாரித்திருக்கிறார் இதழின் ஆசிரியரான ஆழி செந்தில்நாதன்.

ஆழி செந்தில்நாதன் நீண்டகால இதழியல் அனுபவமுடையவர். இந்தியா டுடே மாதிரியான பத்திரிகைகளில் பணியாற்றியவர். சீனா குறித்து அவர் எழுதிய டிராகன் புத்தகம் என்னுடைய விருப்பப் பட்டியலில் இடம்பெற்ற நூலாக எப்போதும் இருப்பது. அவருடைய நீண்ட கால அனுபவத்தினையும், தமிழில் இப்படி ஒரு இதழை சாத்தியமாக்குகிற ஆர்வம் மற்றும் அர்பணிப்பையும் தமிழ் ஆழியின் முதல் இதழிலேயே பார்க்க முடிந்தது. அவருக்கு பூங்கொத்துகள்.

முதல் இதழில் அணு உலை எதிர்ப்பாளரான சுப.உதயகுமாரின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. வெறும் அணு உலை அரசியலோடு மட்டுமே நாமும் நம் ஊடகங்களும் உதயகுமாரினை இணைத்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவருடைய பன்முகத்தன்மையை தமிழகத்தில் இன்றைய சூழலில் அவருடைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது அவருடைய பேட்டி. அணு உலை ஆதரவாளரோ எதிர்ப்பாளரோ யாராக இருந்தாலும் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.

சாதிவெறி அரசியலை மீண்டும் பிடித்துக்கொண்டு திரிகிற மருத்துவர் ராமதாஸின் அரசியல் காய்நகர்த்தல்கள் குறித்த பேராசிரியர் தீரனின் கட்டுரைதான் இந்த இதழின் ஹைலைட். காதல் எதிர்ப்பு என்கிற போர்வையில் அவர் முன்னெடுத்திருக்கிற ஆபத்தான அரசியல் போக்கினை இக்கட்டுரை சிறப்பாக பதிவு செய்துள்ளது. அதோடு டெல்லி பாலியல் வன்கொடுமையை ஒட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையைவிட அதில் மாலதி மைத்ரி எழுப்பியுள்ள கேள்விகள் மிக முக்கியமானவை. இவை தவிர மோடியின் வெற்றி, சச்சின் ஒய்வு பெற்றது, நீர்பறவை விமர்சனம், ஒரு புத்தக விமர்சனம் என பல விஷயங்களையும் ஆழமாக பேசியிருக்கிறது இந்த ஆழி.

குறைகளென்று பார்த்தால் இதழை வாசிக்கும்போது பல கட்டுரைகளும் மொழிபெயர்ப்போ என்கிற எண்ணம் உருவாகிறது. சில இடங்களில் வேண்டுமென்றே அதி உயர் தமிழ்சொல் பிரயோகங்களையும் காணக்கிடைத்தது. இயல்பான தமிழில் கட்டுரைகள் வந்தால் அனைவருமே படிக்க இலகுவாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். அதோடு கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டுகளுக்கும் கொஞ்சம் பக்கங்கள் ஒதுக்கலாம். புத்தக அறிமுகத்துக்கு ஒரு பக்கம்தான் கொடுத்திருக்கிறார்கள். அதையும் அதிகமாக்கலாம்!

போலவே இலக்கியத்துக்கும் கொஞ்சமாவது பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுத்து உதவலாம். வருங்காலங்களில் இந்த குறைகள் நிச்சயமாக குறையும் என்று எதிர்பார்ப்போம்.

சாதிக்கு அப்பால் மாதிரியான கட்டுரைகள் தமிழ் இதழியல் சூழலில் வெகுஜன இதழ்களில் வெளிவர வாய்ப்பேயில்லாதவை. இதுமாதிரி தைரியமான முயற்சிகளை தொடர்ந்து தமிழ்ஆழி செய்ய வேண்டும். அதோடு தரத்திலும் சார்பற்ற தன்மையிலும் கொஞ்சமும் விலகிவிடக்கூடாது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்போதைக்கு ஆண்டு சந்தா போட்டுவிட நினைத்திருக்கிறேன். நீங்களும் கட்டாயம் ஒரு முறையாவது வாங்கி படித்துப்பார்த்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களிடம் தமிழ் ஆழி குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

தமிழ் ஆழி இதழ்குறித்த மேலும் விபரங்களுக்கு - zsenthil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.