Pages

05 January 2013

தாங்க்யூ ஜாக்கி!
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார்.

இந்தத் தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட் அறிவிப்பும், என்னைப்போன்ற கோடிக்கணக்கான ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான்.

குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர்.ஜாக்கியை குழந்தைகள்தான் கொண்டாடினர். அவர் குழந்தைகளுக்காகவே நடித்தார். அவருடைய சண்டைகளில் மூர்க்கம் இருக்கும்.. ஆனால் வன்முறை இருக்காது! அந்த மேஜிக் ஜாக்கிக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

அவருடைய படங்களை பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது, குளுக்கோஸ் டி குடித்த குதூகலத்தை கொடுத்தவர். ஓடும்பஸ்ஸை, தாவிக்குதித்துவிட வேண்டும்போல, நரம்பெல்லாம் உற்சாகம் உறைந்திருக்கும்.

ஜாக்கியின், சமீபத்திய படங்கள் எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை. அதில் அந்த பழைய ஜோரும் காமெடியும் குதூகலமும் உற்சாகமும் சுத்தமாக இல்லை.கடைசியாக, வெளியான ‘போலீஸ் ஸ்டோரி’ கூட நிறைய சோகமும் கோபமுமாகத்தான் இருந்தது. ஜாக்கியின் படங்களுக்கேயுரிய காமெடியும், ரத்தமில்லாத பரபர சண்டைகாட்சிகளும் மிஸ்ஸிங். கடைசியாக, ‘ஷாங்காய் நூன்’ தான் ஜாக்கிபாணியில் வெளியான, ரசிக்க வைத்த, படம். அது,வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அவருடைய, கடைசி ஆக்சன் படமான CZ12 (சைனீஸ் ஜோடியாக்) சென்றவாரம் வெளியானது. மிக சிறப்பாக அர்பணிப்போடு எடுக்கப்பட்ட அனைவரும் பார்க்க வேண்டிய படம். படம் முழுக்க காமெடி கலாட்டாதான்.

காமெடி படம் தானே, என ஏனோதானோவென்று எடுக்காமல், அதற்குள், ஒரு பிரச்சனையையும் நுழைத்திருக்கிறார் ஜாக்கி! அதற்காக, கருத்து சொல்கிறேன் பேர்வழி என போர் அடிக்காமல், ஆக்சனும் காமெடியும் கலந்து, பரபரப்பான ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார்.

படத்தின் இயக்குனரும் ஜாக்கிதான். சண்டைக்காட்சிகளும் அவருடையதே. ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒரு ஷாட், கூட, படத்தில் வீண் கிடையாது. அவ்வளவு, கச்சிதமான திரைக்கதையமைப்பு. இதுவரை, பார்த்திடாத, லொக்கேஷன்கள். ஸ்டன்ட் காட்சிகள், ஒவ்வொன்றும், அம்மாஞ்சிகளைக் கூட, விசிலடித்து கைத்தட்ட வைக்க கூடியவையாகவும் இருந்தன. மொத்தத்தில், இது, ஜாக்கி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் ட்ரீட்.

இத்திரைப்படத்திற்காக, இரண்டு, கின்னஸ் சாதனைகள, செய்திருக்கிறார் ஜாக்கி. அதில், ஒன்று ஒரே படத்தில், அதிக ஸ்டன்ட்களில் நடித்தவர் (Most Stunts Performed by a Living Actor), இன்னொன்று ஒரே படத்தில் அதிக வேலைகளை செய்தவர் (Most Credits in One Movie)! இதெல்லாம், நிறையபேர் செய்யக்கூடியதுதானே என்று தோன்றலாம்.

ஜாக்கிசானுக்கு வயது 58!

இந்த வயதில், நாமெல்லாம், எழுந்து நடமாடவே யோசித்தபடி இருப்போமோ என்னவோ? இந்த மனிதர் ஒரு ஸ்டன்ட் நடிகர், என்னவெல்லாம் செய்ய அஞ்சுவார்களோ, அத்தனையையும் தன் கடைசி படத்தில் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். அதோடு, படத்தில் இசை,எடிட்டிங்,கேமரா என ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துமுடித்திருக்கிறார்.

இனிமேல், இவளைப் பார்க்கவே முடியாது, என்கிற நிலையில், காதலியை விட்டுப் பிரிகிற கடைசி தருணம்.. . அப்படி ஒரு தருணத்தில் நாம் என்னவெல்லாம் செய்வோம்?

எப்படியெல்லாம் காதலியை முத்தமிடுவோம்? அணைக்கும்போது எவ்வளவு மூர்க்கமாக இருக்கும்? எப்படியெல்லாம் கதறி அழுவோம்? அந்த நொடிகள் தொடராதா என ஏங்குவோமில்லையா? அந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே, ஜாக்கியின், இந்த கடைசி படத்திற்கான உழைப்பினை பார்க்கிறேன். அதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களால் உணர இயலும். ஒவ்வொரு ஸ்டன்டிலும் பார்க்க முடியும். கிளைமாக்ஸ் சண்டைக்காக ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து உருளுகிறார்.. முகமெல்லாம் ரத்தம்.. மேக்கிங்கில் காட்டுகிறார்கள், சிரித்துக்கொண்டே வருகிறார் இந்த 58வயது பையன். யோவ் என்னய்யா.. உனக்கெல்லாம் வலிக்காதா.. என்று நமக்கு கோபம் வருகிறது.

கலையை நேசிக்கிற, தன் ரசிகர்களை மதிக்கிற, ஒருவனால் மட்டும்தான், இப்படியெல்லாம் அர்ப்பணிப்போடு இருக்க முடியும். மொழி,நாடு என்கிற எல்லைகள் தாண்டி, ஜாக்கியை, இத்தனை கோடிபேர் காதலிப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்.

சல்யூட் ஜாக்கி!