சில நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சிக்கு பகல் நேரத்தில் பேருந்தில் பயணிக்க வேண்டியிருந்தது. NH 45 ல் ரோடு பளிங்கு கல்லாட்டம் போட்டிருக்கிறார்கள். சாலையில் வாகனங்கள் வழுக்கிக்கொண்டு போகின்றன. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை பயணிக்கிற சாலைதான் என்றாலும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.
300 கி.மீ நீளும் இந்த சாலையில் இரண்டு விஷயங்கள் காளானைப்போல முளைத்திருக்கின்றன. ஒன்று கும்பகோணம் டிகிரி காபி. நூறு மீட்டருக்கு ஒரு கடை திறந்துவைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த கடைகளும் கூட இங்கே கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும் என்று எழுதி வைத்து தொழில் பண்ண வேண்டிய கொடுமையான சூழலில் இருப்பதை அவதானிக்க முடிந்தது.
ஒரு கடையில் காபி குடித்தேன். எனக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அது நிஜமாகவே கும்பகோணம் டிகிரி காபிதானா என்பதுவும்கூட உறுதியாக தெரியிவில்லை. இதுவரை ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபியை முகர்ந்து கூட பார்த்திடாதவன் நான்.
இந்த கும்பகோண டிகிரி காபி பிராண்டிங் எப்போது எங்கிருந்து இந்த சாலைக்குள் நுழைந்திருக்கும்.. முதன்முதலாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் டிகிரி காபி கடைபோட்டவர் நிச்சயம் நன்றாக கல்லா கட்டியிருக்க வேணும்.
ஒருவிஷயம் டிகிரி காபி என்றால் இன்னொரு பக்கம் 300 கி.மீ தூரத்துக்கு இரண்டு பக்கமும் பார்த்த ரியல் எஸ்டேட் காரர்களின் ப்ளாட்டுகள். சுற்றுசுவருக்கு மஞ்சள் நிறத்தில் பெயின்ட் அடித்து கலர் கலராய் கொடிநட்டு வெட்டி வைத்த கேக்குகளை போல நிலத்தை கூறுபோட்டு விற்கிறார்கள்.
தாம்பரம் தாண்டியதும் தொடங்குகிற இந்த ப்ளாட்டுகள், திருச்சி வரைக்குமே நீள்கிறது. இங்கெல்லாம் யார் நிலம் வாங்குவார்கள். இங்கே வாங்கினால் என்ன லாபம் கிடைக்கும்? இங்கே யாராவது வீடு கட்டி குடியேறுவார்களா? குடியேறினால் எங்கே வேலைக்கு போவார்கள்? இன்னும் சில ஆண்டுகளில் விலை இரண்டு மடங்காகிவிடும் என்றெல்லாம் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது.
சொந்தவீட்டு கனவு எனக்கும் கூட உண்டு. வாடகை வீட்டில் வசிக்கிற ஒவ்வொருவனுக்கும் நிச்சயம் இருக்கிற ஒன்றுதான். ஆனால் சென்னையில் வசிக்கிற நான் ஏன் எங்கோ திண்டிவனம் மிக மிக அருகில் இருக்கிற மிகச்சிறிய கிராமத்தில் நிலம் வாங்கி போடவேண்டும். அங்கே நான் வீடு கட்டப்போவதுமில்லை. குடியேறப்போவதுமில்லை. பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்கிறார்கள். யாரிடமிருந்து பிடுங்கி யாருக்கு விற்கப்போகிறோம்.
எந்த பொருளுக்கும் தேவை இருந்தால் மட்டுமே உற்பத்தி அதிகமாக இருக்கும். நம்முடைய சமூகத்திலும் சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் சமகாத்தில் மிகமிக அதிகமாகிவிட்டதா? அல்லது இது போலியாக நம் மனங்களில் திணக்கப்பட்டுள்ளதா? ஏன் இப்படி கொலைவெறியோடு தமிழ்நாடு முழுக்கவே கூறுபோட்டு கூவி கூவி நிலம் விற்கிறார்கள். அதை ஏன் நாமும் அதே வெறியோடு போய் வாங்கிக்குவிக்கிறோம்.
காலையில் அலுவலகம் போகிற நேரத்தில் டிவி நடிகர்கள் தமிழ்நாட்டையே விலைபேசுகிறார்கள். இன்னைக்கே நிலம் வாங்காட்டி இன்னும் பத்து வருஷத்துல உங்க குடும்பமே விஷம் குடிச்சி தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான் என்கிற எண்ணம் மிக பிரமாதமாக நம் மனங்களில் விதைக்கபடுகிறதோ?
NH45 ல் 300 கிலோமீட்டருக்கு விற்கப்படும் இந்த ப்ளாட்டுகள் முன்பு விவசாய நிலங்களாக இருந்ததற்கான எல்லா அடையாளங்களும் இன்னமும் மிச்சமிருந்தன. விவசாயம் நடந்துகொண்டிருந்த பல இடங்களும் பிளாட்டு போடுவதற்காகவே தரிசாக விடப்பட்டிருந்தன. எவ்வளவு நிலங்கள்.. எவ்வளவு விவசாயம்.. எவ்வளவு பசுமை.. எல்லாமே ஒரே சாயலில் கூறுபோடப்பட்டு சுற்றுசுவரோடு புதிய எஜமானர்களுக்காக காத்திருக்கின்றன.
இங்கே விவசாயம் பார்த்துக்கொண்டிருந்த குடும்பங்கள் என்னவாகியிருக்கும். அவர்களெல்லாம் நகரத்துக்கு பெயர்ந்திருப்பார்களா? நகரத்தில் இருப்பவன் ஏன் இந்த கிராமங்களில் நிலம் வாங்குகிறான். தனக்கேயுண்டான அடையாளங்களோடும் மனிதர்களோடு அமைதியாய் இருக்கிற கிராமங்களுக்குள் இந்த நகரத்து மனிதர்கள் ஏன் நுழைகிறார்கள். இன்னும் நிறைய நிறைய கேள்விகள்...
இதோ இன்று பொங்கல் நாளாம். விவசாயத்தை போற்றணும் விவசாயியை காக்கணும் மண்ணை நேசிப்போம் பயிர்களை பாதுகாப்போம் என யாரோ ஒரு நடிகர் டிவியில் வந்து பேசிக்கொண்டிருக்கிறார். நாமும் ஆமா விவசாயத்தை காக்கணும் என அதற்கு ஊங் கொட்டிவிட்டு.. எங்கோ செங்கல்பட்டு தாண்டி சின்ன கிராமத்தில் மலிவாக ஸ்கொயர்ஃபீட் 100 விலையில் பிளாட்டு கிடைக்கிறதாம்..வாங்கிப்போடுவோம்... விவசாயம் செழிக்கும்.
மற்றபடி சம்பிரதாயத்துக்காகவாச்சும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வோம் ஹேப்பி பொங்கல்.
16 comments:
உண்மைதான் ஆனால் விவசாயம் செய்து பிழைப்பது சிரமம்
உண்மைதான் ஆனால் விவசாயம் செய்து பிழைப்பது சிரமம்
Super Adhisha.
As a farmer I record my share your pain. Thanks.
" இங்கே யாராவது வீடு கட்டி குடியேறுவார்களா? குடியேறினால் எங்கே வேலைக்கு போவார்கள்? "
-super. may be work from home??
1. Please read this about the original Kumabakonam Degree Coffee:
http://www.thehindu.com/life-and-style/Food/kumbakonam-degree-coffee/article4034194.ece
2. Very perceptive observations about farming and real estate. Hopefully, only a small fraction of such land (near highways and such) are affected in this manner. It's a sad trend, nevertheless. :-(
Srikanth
அதாகப்பட்டது பல்வேற தொழில்கள் பெருகி, இருக்கிற எல்லா வளங்களையும் அடியோடு சுரண்டி ஏற்றுமதி செய்து, மனித உழைப்பை பன்னாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இப்படி பல வழிகளில் எல்லாரும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கார்,வீடுன்னு எல்லா சவுகர்யங்களோடும், அன்றாடம் உயர்த்தப்படுகிற விலைவாசி உயர்வைப்பற்றி எந்தக்கவலையும் இன்றி சவுகர்யமாக இந்த நாட்டில் வாழலாம். ஆனால் இந்த விவசாயி என்கிற ஜந்து மாத்திரம் காலம் பூராவும் கோவணத்தோடு நிலத்துல உழுதுட்டிருக்கனும்....அவனும் கொஞ்சம் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கட்டும் விடுங்க சார்...
athisha..en manasin kannadiyaha neengal irukintreergal..kumki padathula oru dialog varum innum konja kalathula sothuku pathila kallathan alli sapuduveengandu..manitharkalin perasaiyal athu nadakum kalam miha arukil..ellam valla iraivan anaivarukum nalla puthiyai kodukadum..."karthi.bsr said...
உண்மைதான் ஆனால் விவசாயம் செய்து பிழைப்பது சிரமம்" yaar sonnathu..neengal muyandru pathathu unda...unmayana ulaipuku entrum mariyathai undu thakka kooliyum undu...
aathangam purikirathu.
manathai thaakkum pathivu. nanri.
ஹாப்பி பொங்கல்.. :(
very sensible writing and noble thoughts Adhisha..இந்தியர்களாகிய நாம் கண்களை விற்று சித்திரம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம்.
அருமையான பதிவு ....
ஹாப்பி :-)
பொங்கல்.....
அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.
நல்ல வேளை இன்னும் சில கேள்விகள் கேட்டிருந்தால் எஸ்ரா தோற்றிருப்பார் உங்களிடம்
உங்கள் ஆதங்கம் சரியானது !! ஆனால் என்ன சொல்லி யாருக்கு புத்தி வரப்போகிறது. இயற்கையும் இப்படி விவசாயிகளை வஞ்சித்தால் அவர்கள் என்ன செய்வார்கள். ஆனால் ஒன்று நிச்சயம். நெல் அரிசி இவை தங்க விலைக்கு வரும் காலம், அரிசி ஒரு அபூர்வமான பொருளாகும் காலமும் வெகு தொலைவில் இல்லை. விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் அலட்சியப்படுத்தும் யாரும் எந்த நாட்டுக்காரனும் நல்லா வாழப்போவதில்லை.
உங்கள் ஆதங்கம் சரியானது !! ஆனால் என்ன சொல்லி யாருக்கு புத்தி வரப்போகிறது. இயற்கையும் இப்படி விவசாயிகளை வஞ்சித்தால் அவர்கள் என்ன செய்வார்கள். ஆனால் ஒன்று நிச்சயம். நெல் அரிசி இவை தங்க விலைக்கு வரும் காலம், அரிசி ஒரு அபூர்வமான பொருளாகும் காலமும் வெகு தொலைவில் இல்லை. விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் அலட்சியப்படுத்தும் யாரும் எந்த நாட்டுக்காரனும் நல்லா வாழப்போவதில்லை.
Post a Comment