Pages

16 January 2013

என் பெயர் ரிசானா...இந்த மதம் அந்த மதம் என்றில்லை எல்லா மதமும் தனக்கேயுரிய சர்வாதிகார அரக்க குணங்களுடன்தான் இருக்கின்றன. நமக்குள்ளிருந்த கடவுளை கொன்றுவிட்டு மதத்தை கட்டிக்கொண்டு மாறடிப்பவர்களாகத்தான் மாறிவிட்டோம்.

மற்ற மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டும் போதெல்லாம் கூடி கும்மியடிப்பதும், தன்னுடைய மதத்தைப்பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால்.. கிடந்து தையா தக்கா என்று குதிப்பதும்தான் மதவாதிகளின் வாடிக்கையான செயலாக இருக்கிறது. அதற்கு இந்து இஸ்லாமிய கிறித்தவ எக்ஸட்ரா எக்ஸட்ரா பேதமேயில்லை.

சில நாட்களுக்கு முன் ரிஸானா என்கிற பெண்ணை சவூதி அரேபியா அரசாங்கம் மரணதண்டனை என்கிற பெயரில் மிக கொடூரமான முறையில் தலையை வெட்டி கொன்றது. இதை கண்டித்து இணையமெங்கும் ஏகப்பட்ட எதிர்ப்பலைகளை காணமுடிந்தது. இஸ்லாமிய சட்டங்கள் மீது கடும் விமர்சனங்களை பலரும் முன்வைத்தனர். உடனே பொத்துக்கொண்டு வந்துவிட்டது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு... சவூதியில் தரப்பட்ட தண்டனை சட்டப்பூர்வமானது.. நியாயமானது.. சரியானது என கையில் சொம்போடு நியாயம் சொல்ல கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ரிசானாவின் கதையை பார்த்துவிடுவோம்.

2005ஆம் ஆண்டு 17 வயதான ஏழைப்பெண்ணான ரிசானா இலங்கையிலிருந்து பஞ்சம் பிழைக்க சவூதி அரேபியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறார். வேலைக்கு சேர்ந்த சிலநாட்களில் பணியாற்றும் வீட்டிலிருந்த நான்கு மாத குழந்தைக்கு உணவுதரும் போது அக்குழந்தை மூச்சுதிணறி இறந்துவிடுகிறது. அதற்கு ரிசானாதான் பொறுப்பு.. அவள்தான் அக்குழந்தையை ஈவிரக்கமின்றி கழுத்தை நெறித்து கொன்றவர் என அபாண்டமாக குற்றம் சுமத்துகின்றனர் குழந்தையின் பெற்றோர்கள்.

ஏழை சொல் எதிலேயோ ஏறாது என்பதற்கிணங்க இந்த பெண்ணின் குரலுக்கு அரசாங்கம் செவிகொடுக்கவேயில்லை. அரசுதரப்பு உறுதியாக ரிசானாதான் கொலைசெய்தாள் என்று வாதாடியது. நீதிமன்றத்தில் மட்டும் என்ன வாழுதாம்.. ஏழு ஆண்டுகள் விசாரணை நடத்தி அவர்களும் கொலையை உறுதி செய்து அப்பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.

ஒரு குழந்தையை கொன்றதாக கூறி இன்னொரு குழந்தைக்கு மரணதண்டனை என்பதை விடவும் கேவலமான சட்டம் உலகில் எங்குமே இருக்க முடியாது.

இவ்விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்து, இலங்கை அரசு ரிசானாவை விடுவிக்க கோரி மன்றாடியது. மனித உரிமை கமிஷனும் கெஞ்சிக்கேட்டது. ம்ம் இஸ்லாமிய சட்டம்னா சட்டம்தான்.. கொல்றதுன்னா கொல்றதுதான் என விடாப்பிடியாக மறுத்துவிட்டார் சவூதி மன்னர். ரிசானாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாள் ஒன்றும் பண்ணமுடியாது என மறுத்துவிட்டது சவூதி அரசு.

ஐநாவின் மனித உரிமை கழகத்தை சேர்ந்த ரூபர்ட் கோல்விலே இவ்விஷயம் குறித்து வேறொரு பிரச்சனையை முன்வைக்கிறார். அது மிகமுக்கியமானதும் கூட.
'' அந்த பெண்ணை அடித்தும் துன்புறத்தியும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அதோடு நீதி விசாரணையின் போது அவளுக்கு வக்கீல்களின் உதவி கொடுக்கப்படவில்லை. அதோடு மொழிதெரியாத அந்தபெண்ணுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரையும் ஏற்பாடு செய்துதரவில்லை. இந்த விசாரணை எப்படி உண்மையானதாக இருக்க முடியும்'' என்கிறார்.

உலக அளவில் மரணதண்டனை அமலில் உள்ள நாடுகளில் அதிகம் பேரை ஆண்டுதோறும் கொல்லுவோர் பட்டியலில் சவூதிக்கு நான்காமிடம்! (முதலிடம் நமது அண்டைநாடான சீனாவுக்கு!) 2011ஆம் ஆண்டில் மட்டும் 85பேரை கொன்று குவித்திருக்கிறது சவூதி. இதில் பெரும்பாலனவர்கள் சாதாரண வேலைகள் பார்க்க சென்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஏழைகள்.

சவூதி அரேபியாவின் சட்டங்கள் இதுபோல பஞ்சம் பிழைக்க வருபவர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாக இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தன் அறிக்கையில் கூறுகிறது. நீதிமன்ற விசாரணையின் போது அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியை வழங்கியே ஆகவேண்டும் என்றெல்லாம் சட்டம் கிடையாது. உங்களுக்கு அந்த ஊர்மொழி தெரியாவிட்டால் கொடுக்கிற தண்டனையை வாங்கிக்கொண்டு வாயைமூடிக்கொண்டு தலையை கொய்தாலும் அமைதியாக குனிந்து கொள்ள வேண்டியதுதான். ஒருவேளை உங்கள் நாட்டு தூதரகம் ஏற்பாடு செய்தால் உதவலாம். ரிசானா விஷயத்தில் இலங்கையின் தூதரக கட்டுப்பாடுகளால் அந்த உதவியும் கூட கிடைக்கவில்லை.

இதுபோன்ற கொடூரமான சட்டங்களை கொண்ட நாடுகளை சரிசெய்ய ஒரே வழிதான். இந்தியா இலங்கை மலேசியா போன்ற நாடுகள் சவூதிக்கு தன் மக்களை பணிக்கு செல்வதற்கு தடைபோடுவதுதான். இதை 2011ஆம் ஆண்டிலேயே இந்தோனேஷியா செய்துள்ளது.

அந்நாட்டை சேர்ந்த 54 வயது ருயாத்தி என்கிற பெண் சக பணியாளரை கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படு மரண தண்டனை பெற்றார். அவருடைய தலையையும் துண்டித்து நீதியை நிலைநாட்டியது சவூதி அரசு. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது இந்தோனேஷிய அரசு.

உடனடியாக அந்நாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்தியது இந்தோனேஷியா. அதோடு அங்கே பணிபுரிந்தவர்களையும் திருப்பி அழைத்துக்கொண்டது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற நாடுகளுக்கு இதைவிடவும் சரியான எதிர்வினையை செய்யவே முடியாது. 'இப்படி செய்தாலாவது சவூதி தன் நாட்டுக்கு வந்து வேலைபார்ப்பவர்களுக்காக கொஞ்சமாவது தன் சட்டங்களை மாற்றிக்கொள்ளாதா என்பதே எங்கள் எதிர்பார்ப்பு'' என இந்தோனேஷிய வெளியுறவுதுறை மந்திரி பேட்டிகொடுத்தார். ம்ஹூம் எந்த மாற்றமுமில்லை.

2008ஆம் ஆண்டு HUMAN RIGHTS WATCH ரிப்போர்ட் ஒன்றை சமர்பித்தது. அதில் சவூதி மாதிரியான அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் என்ன மாதிரியான பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என விலாவாரியாக விளக்கியிருந்தனர். இது தொடர்ந்து இன்று வரை நடந்துகொண்டிருக்க கூடிய சமாச்சாரம்தான். இதைப்பற்றியெல்லாம் எந்த இஸ்லாமிய அடிப்படைவாதியும் மூச்சுவிட்டதாகக்கூட தெரியவில்லை. இந்த அரபுநாடுகளில் இஸ்லாமிய பெண்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது. இஸ்லாமிய சட்டங்கள் தாலிபான்களின் அடக்குமுறைகளுக்கு கொஞ்சம் சளைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தண்டனைகளும் அதே கொடூரங்களோடுதான் உள்ளன.

ரிசானாவை கொன்றதில் இருக்கிற பிழைகளை சுட்டிக்காட்டினால் மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது இந்த மதநல்லிணக்க நாயகர்களுக்கு.. இதுபோன்ற காரியங்களை அல்லாஹ்வின் பெயரால் எப்படி இந்த பாதகர்களால் செய்யமுடிகிறது என்று கேட்டால் போச்சு.. ரவுண்டு கட்டி உங்க மதத்துக்கும் எங்க மதத்துக்கும் சோடி போட்டு பாப்பமா சோடி.. விவாதத்துக்கு வரீயா.. என ஒத்தைக்கு ஒத்தை வம்பிழுக்க வந்துவிடுகிறார்கள்.

ரிசானாவின் படுகொலையை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. அதை தடுக்க முடியாமல் போலீஸார் திண்டாடுகிறார்கள். வெளிமாநிலங்களிலிருந்து குறிப்பாக பீகார் மாதிரியான பின்தங்கிய மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பிழைப்பு நடத்துகிற அப்பாவிகளை கொன்று பயத்தின் வழியே நீதி நிலைநாட்டப்படுகிறது.

இதையேதான் அரபு நாடுகளும் மேற்கொள்கின்றன. என்ன இங்கே சட்டம் அதை ஒப்புக்கொள்ளாது. ஆனால் அங்கே சட்டமே துணையாக நிற்கும். இதுமாதிரி தண்டனைகளால் மக்களை நிரந்தர அச்சத்தில் வைப்பதே இதன் பின்னிருக்கும் சாரம்சம். இக்கொடுமைக்கு தேச வேறுபாடின்றி பலிகொடுக்கப்படுவது இதுபோல பஞ்சம்பிழைக்க வந்த அகதிகளே. நம்முடைய இந்து தேசத்திலும் கூட மக்களை அச்சத்தில் வாழவைக்க சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் அவ்வப்போது கட்டவிழ்க்கப்படுவதும் இதன் நீட்சியே.

இப்படிப்பட்ட தேசத்தில்தான் நாம் மரணதண்டனை வேண்டும் என உரக்க குரல் கொடுக்கிறோம். தூக்கிலிடுவதை வரவேற்கிறோம். அஹிம்சையை உலகுக்கே போதித்த நாடு என்று ஒருபக்கம் பீத்திக்கொண்டு இன்னொரு பக்கம் மனிதாபிமானமற்ற மரணதண்டனைக்கு வக்காலத்து வாங்குகிறோம். அதை விடுங்கள்.

இப்போதைக்கு நம்மால் முடிகிற காரியம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் உறவினர்கள் குறிப்பாக பெண்கள் யாரேனும் சவூதி மாதிரியான அரபு நாடுகளில் வேலைபார்த்துக்கொண்டிருந்தால் அவர்களை திருப்பி அழையுங்கள். பிச்சை எடுத்தாவது இங்கே பிழைத்துக்கொள்ளலாம். உயிராவது மிஞ்சும்.