Pages

17 January 2013

கண்ணே லட்டு தின்ன ஆசையா?



எந்த டிவியை போட்டாலும் அலெக்ஸ்பாண்டியன்தான். புரட்சிவீரன் கார்த்திதான். டிவிக்குள்ளேயிருந்து தாவி குதித்து வெளியே வந்து நம் காலை பிடிச்சி கெஞ்சி சார் சார் தயவு செஞ்சு இந்த படத்தை பாருங்க சார் ப்ளீஸ்ஸ்ஸ் இல்லைனா சந்தானத்தோட தங்கச்சிங்க மூணுபேரும் தூக்குல தொங்கி உயிரை விட்டுடுவாங்க என கெஞ்சுவது போல ஒரு மாயவலை...! எல்லா தொலைகாட்சிகளிலும் பொங்கல் நிகழ்ச்சிகள் அனைத்தும் அலெக்ஸ் பாண்டியன் டிரைலர்களுக்கு மத்தியில்தான் ஒளிபரப்பானது.

டிவியை ஆஃப் பண்ணிட்டா மட்டும் சனியன் விட்டுடுமா. அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்து நொந்து போன நம் எதிரிகள் சிலர் கூட்டணி போட்டு நமக்கெதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். ‘’மச்சான் மத்தவங்க சொல்றத கேக்காத படம் பட்டாசாருக்கு.. செம மாஸ்.. ரஜினிபடம் மாதிரி இருக்கும்.. மிஸ்பண்ணிடாத.. இட்ஸ் ஏ ஆக்சன் அட்வெஞ்சர் வித் க்ரைம் த்ரில்லர் , கார்த்தி செம சூப்பர் ஸ்டைல்டா’’ என்று ஏத்திவிட்டு மாட்டவைக்க வலைவிரிக்கிறார்கள். தெலுங்கு படமெல்லாம் விரும்பி பாக்குற உனக்கு இது நிச்சயம் புடிக்கும் பாஸ்.. அதுவும் சந்தானம் காமெடி இருக்கே..ஹோஹோ என சிரிப்பு காட்டி ஏமாற்ற பார்க்கிறார்கள்.

என்னை பார்த்தால் குச்சி மிட்டாய்க்கு ஆசைப்பட்டு புள்ளபுடிக்கறவனோடு போகிற குட்டிபாப்பா மாதிரியா இருக்கு... யாருகிட்ட....

போன வருஷமே முகமூடி,தாண்டவம்,சகுனி,மாற்றான்னு ஏகப்பட்ட கொடூரமான கொடுமைகளைப் பார்த்து நொந்து நூடுல்ஸாகி சுண்டு சூப்பாகி பேக்கு பஞ்சராகி இனிமே தமிழ்ப்படமே கிடையாது.. ஒன்லி கொங்குனி,போஜ்பூரிதான் என உறுதி பூண்டவன். நம்ம கிட்டயே சேட்டையா.. மாட்டுவமா... அதனால் அலெக்ஸ்பாண்டியன் படத்துக்கு விமர்சனமெல்லாம் கிடையாது. நிச்சயமாக கிடையாது.

அலெக்ஸ் பாண்டியனோடு வெளியாகியுள்ள சமகால படமான கண்ணாலட்டுதுன்ன ஆசையா படத்தினை பூஜை போட்ட நாளிலிருந்தே எப்போது ரிலீஸ் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். எங்க ஏரியாக்காரரான (முகப்பேர்) பவர் ஸ்டார் முதன்முதலாக அடுத்தவன் காசில் பொங்கல் வைக்கும்.. அல்லது நடிக்கும் படமென்பதால் எதிர்பார்ப்பு ஓவராகிவிட்டது.
அந்தகாலத்தில் கே.பாக்யராஜ் இயக்கி ஹீரோவாக நடித்த இன்றுபோய்நாளைவா படத்தின் ரீமேக்தான் கண்ணா லட்டு தின்ன ஆவலா? என்கிற படமாக இப்போது வெளியாகியுள்ளது. ரொம்ப பழைய ஊசிப்போன தகவல் செய்திதான் என்றாலும் அதை சொல்லவேண்டிய சமூகக்
கடமை நமக்கிருப்பதாக எண்ணி...

பவர்ஸ்டார் திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆராவாரத்தில் காதுகிழிகிறது. யெஸ்.. கிழி.. கிழி.. கிழி.. படம் முழுக்க பவர் பவர் பவர்தான். அவர் மட்டும் இல்லையென்றால் இதுவும் இன்னொரு மொக்கை படமாக ஆகிவிட்டிருக்கும். சந்தானம் பேசிப்பேசி சிரிக்க வைத்தால் நகைச்சுவையாக வசனங்கள் பேசாமல்,நடிக்காமல் ஒன்றுமே பண்ணாமல் ஒருவரால் சிரிக்க வைக்க முடியுமா.

ஒவ்வொரு காட்சியிலும் பவர்ஸ்டாரை சந்தானம் மிகமிக கேவலமாக பேசுகிறார். பவர்ஸ்டாரோ பால்வடியும் முகத்தோடு புன்னகைக்கிறார். பீசு பீசா கிழிக்கும் போதும் ஏசுபோல சிரிப்ப பாரு என்று ஏதோ ஒரு படத்தில் ஒரு பாடலில் வருமே அதுதான் நினைவுக்கு வந்தது.

கண்ணா லட்டு உண்ண ஆசையா படத்தின் ஹீரோ சந்தானமோ இன்னொரு புதுமுகமோ அல்ல.. நிச்சயமாக பவர் ஸ்டார்தான். படம் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஹிட். வசூலை வாரிக்குவிக்கிறது. ஆனால் இப்படி ஒரு மகத்தான சாதனைக்கு காரணமான பவர்ஸ்டாரோ விஜய்டிவியில் அந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்போடு அடக்கத்தோடு அமர்ந்திருப்பதை பார்க்கும்போது அசந்துபோய்விட்டது தமிழ்சமூகம்.

அந்த பொறுமையும் தன்னடக்கமும்தான் அவருடைய வெற்றிக்கு காரணமாக இருக்கமுடியும் என்றும் கூட தோன்றுகிறது. தன் மீது எறியப்படும் சாணியைக்கூட சானியா மிர்சாவாக நினைத்து மார்போடு அணைத்துக்கொண்டு வீரநடைபோடுகிற அந்த மாண்புதான் அவரை வெற்றிவீரனாக மாற்றியுள்ளதோ. அவருக்கு ஒருசல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய தன்னம்பிக்கைக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய விடாமுயற்சிக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய போராட்ட குணத்துக்கு இன்னொரு சல்யூட்டை வைத்துவிடுவோம். அவருடைய.... போதும்.

பலநாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ என்றெல்லாம் சொல்லமாட்டேன். கிரேஸி மோகன் நாடகம், எஸ்விசேகர் நாடகங்கள், லொள்ளுசபா இதையெல்லாம் பார்த்து ரசிக்கிற அனைவருக்கும் ஏற்றபடம். குடும்பத்தோடு காணலாம். நிச்சயமாக ஒவ்வொரு ஷாட்டிலும் சிரிப்பு வரும். விலா நோகும். தொழில்நுட்பரீதியில் எடிட்டிங் கேமரா திரைக்கதை என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் பவர்ஸ்டாரையும் சந்தானம் பஞ்ச்களையும் நம்பி படமெடுத்திருக்கிறார்கள். ராமநாராயணனுக்கு நல்ல நேரம் படம் பம்பர் ஹிட்டாகிவிட்டது. அதோடு கார்த்தி,விஷாலையெல்லாம் பந்தாடிவிட்டது. நல்லவேளை யார் செஞ்ச புண்ணியமோ பொங்கலுக்கு கமல்சாரின் விசுவரூபம் ரிலீஸ் ஆகவில்லை. டிடிஎச்சுக்கு நன்றி ஏசப்பா!

பாக்யராஜ் நடித்த இன்றுபோய்நாளைவா படத்தில் இருந்த உயிர்ப்பு இந்தப்படத்தில் நிச்சயமாக இல்லை. ஆனால் ‘கண்ணா லட்டு சாப்பிட ஆசையா’வில் காமெடியின் அளவு ஒரிஜினலை விட அதிகம்தான்.

என்றாலும் பாக்யராஜ் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக யதார்த்தமாக தனக்கேயுண்டான தனித்தன்மையுடன் இருக்கும். ஏக் காவ் மேன் ஏக் கிசான் காட்சியில் லட்டு ஊட்டிவிடும் பாட்டி முதற்கொண்டு சின்ன சின்ன பாத்திரங்களும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப்படத்தில் எல்லோருமே காமெடி செய்வதற்காகவே பிறந்தவர்களாக இருப்பது குறைதான். படத்தின் இன்னொரு குறை பாடல்கள் மற்றும் இசை. மற்றபடி படம் மிகவும் அருமை. வாயிருக்கிற எல்லோருமே ஒரு முறையாவது சுவைக்க வேண்டிய படம்.