Pages

12 February 2013

நாய்குட்டிகள் வேண்டுமா?




வீட்டுக்கு அருகில் ஒரு தெருநாய் சிலநாட்களுக்கு முன் எட்டு குட்டிகளை ஈன்றது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். சரியான சுட்டிகள். ரொம்பவும் அழகு!

வீட்டுக்கு எதிரேயிருந்த ஒரு சாக்கடை ஓரம்தான் அவை வசித்தன. குட்டிநாய்கள் பத்துநாட்களிலேயே பயங்கர சுட்டியாக மாறிவிட்டன. இதனால் அவை சாலைக்கு வந்துவிடுவதும், அருகேயிருக்கிற வீடுகளுக்குள் நுழைந்துவிடுவதுமாக இருந்தன.

இதனால் கோபமடைந்த சில வீட்டுக்காரர்கள் அதனை அடித்தும் துன்புறுத்தியும் வந்தனர். அதோடு வாகன ஓட்டி ஒருவர் ஒரு குட்டியின் மேல் வண்டியை ஏற்றி கொன்றும் விட்டார். ப்ச்.

பார்க்க பாவமாக இருந்ததால் மீதியிருந்து ஏழு குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கிற காலி நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களுக்கு நடுவில் வைத்தோம். அங்கே அவை பாதுகாப்பாகவே இருந்தன. அம்மா அவ்வப்போது அந்த குட்டிகளுக்கு பாலும் பிஸ்கட்டும் கொடுத்து வந்தாள். (எங்கள் வீட்டில் ஏற்கனவே மூன்று பூனைக்குட்டிகளும் அதன் தாயும் இருப்பதால் அதோடு இவற்றை வைக்க முடியாத நிலை)

ஆனால் எத்தனை நாளைக்குத்தான் அவைகளை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதால் நான் ப்ளுக்ராசுக்கு போன் செய்து குட்டிகளை எடுத்துச்செல்ல இயலுமா என்று விசாரித்தேன். 50 நாட்களுக்கு பிறகுதான் முடியும் என்றும் சொல்லிவிட்டனர். போனவாரத்தில் அந்த குட்டிகள் 48 நாட்களை கடந்துவிட்டதால் மீண்டும் அழைத்துச்சொன்னேன். ஒருவாரம் கழித்து எடுத்துக்கொள்வதாக வாக்களித்திருந்தனர். நான் அதுவரை இதை பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா.

இன்று காலை புதர் மண்டிக்கிடந்த நிலத்தின் ஓனர் ஒரு பொக்லைன் இயந்திரத்தோடு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதோடு நிலத்தையும் சமன் செய்துகொண்டிருந்தார். ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் நானும் போய் குட்டிகளை தேடி எடுத்துவந்து மீண்டும் பழைய இடத்தில் சேர்த்தோம். நான்கு குட்டிகள்தான் கிடைத்தன.

மீதி இரண்டை காணவில்லை. எங்கெங்கோ தேடியும் அகப்படவில்லை. அங்கே எங்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர்.. ஏம்ப்பா அந்த இரண்டுகுட்டிகளும் மண்ணுலயே பொதஞ்சிடுச்சிப்பா என்று மிகமிக சாதாரணமாக கூறினார். நானும் அம்மாவும் பதறிப்போய் ஒவ்வொரு இடமாக தோண்டி தோண்டிய பார்க்க.. இரண்டுகுட்டிகளும் மண்ணுக்குள் கிடந்தன.

ஒரு குட்டியை வெளியே எடுத்ததும் கீக்கீ என கத்திக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடியது. இன்னொன்றோ உஸ்உஸ் என வாயிலிருந்து காற்றைவிட்டுக்கொண்டு போராடிக்கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு எடுத்து செல்லலாம் என்று அம்மாவும் நானும் முடிவெடுத்தோம். இதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த பெரியவர்

''ஏம்ப்பா இதை காப்பாத்தி என்ன பண்ணப்போறீங்க.. இதென்ன படிச்சி கலெக்ட்ரா ஆகப்போவுது'' என்றாரே பார்க்கணும். அம்மாவுக்கு செம கோபம் வந்துவிட்டது.

''ஏன்யா நீ மட்டும் இன்னும் உயிரோட இருக்க.. படிச்சி தாசில்தாரா ஆகப்போற சாகறதுதானே'' என்றதும் அந்த பெரியவருக்கு முகமேயில்லை. அப்படியே நகர்ந்துபோய்விட்டார்.

அதற்குபிறகு அம்மாவும் நானும் அருகில் இருக்கிற ஒரு கால்நடைமருத்துவரிடம் எடுத்துசென்றதும் அவர் சிகிச்சை செய்து நாய்க்குட்டியை சரிபண்ணினார். ஆறுகுட்டிகளில் ஒன்றை பக்கத்து தெரு நண்பர் ஒருவர் தன் வீட்டில் வளர்க்க எடுத்துச்சென்றுவிட்டார். மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.

நாளைக்கோ நாளை மறுநாளோ அந்த ப்ளூக்ராஸ் காரர்கள் வந்து மீதி குட்டிகளையும் அதன் தாயையும் எடுத்துச்சென்றுவிட்டால் நன்றாக இருக்கும். அவர்களோ இன்று நாளை என ஏதாவது சாக்குசொல்லிக்கொண்டேயிருப்பது வருத்தமாக இருக்கிறது. இன்னும் ஐந்து குட்டிகள் உள்ளன.

இந்தகுட்டிகளை எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வளர்க்க நினைக்கிறவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம். dhoniv@gmail.com . என்னுடைய வீடு முகப்பேர் மேற்கில் இருக்கிறது.