22 February 2013

எப்படி ஜெயித்தார் எம்ஜிஆர்

1937 ஆண்டு. கல்கத்தாவில் மாயா மச்சீந்திரா என்கிற படத்தின் சூட்டிங். அப்போது எம்ஜிஆர் சாதாரண ராமசந்தராகத்தான் இருந்தார். புரட்சிதலைவரெல்லாம் கிடையாது. துடிப்பான இளைஞரான எம்ஜிஆர் அக்காலகட்டத்தில் ஏகப்பட்ட ஆங்கிலப்படங்கள் பார்க்கிறார். இத்தனைக்கும் எம்ஜிஆருக்கு அந்த சமயத்தில் ஆங்கிலம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் சினிமாவின் மீது தீராத ஆர்வமும் குறுகுறுப்பும் துறுதுறுப்புமாக திரிந்த காலம் அது.

ஒரு நாள் சில நண்பர்களுடன் ஆங்கில படம் ஒன்றை பார்க்கிறார். அப்படத்தின் பெயர் 'இஃப் ஐ வேர் ஏ கிங்''. ரொனால்ட் கால்மேன் என்கிற நடிகர் நடித்த சூப்பர் ஹிட் படம் அது. படம் முழுக்க IF I WERE A KING என்கிற வசனம் படம் முழுக்க இடம்பெறுகிறது. அந்த வசனத்துக்கும் மட்டும்தான் அர்த்தம் தெரிந்துவைத்திருந்தார் எம்ஜிஆர். படம் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து விதவிதமாக 'நான் மன்ன்னானால்' என்கிற வசனத்தை விதவிதமாக சொல்லிப்பார்க்கிறார். ஒருவேளை தான் தமிழ்நாட்டுக்கே மன்னனானால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சிந்தித்துப்பார்க்கிறார்.

''அந்தகாலத்திலேயே ஏழ்மையை பற்றியும் மக்களின் நிலையைப்பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக்கொண்டிருந்தேன் என்பதே சரியானது.. நாட்டிலே இதுபோன்ற தொல்லைகள் ஏன் இருக்க வேண்டும் என அடிக்கடி எண்ணுவேன்.. அதுதான் இந்த நாடோடியை மன்னனாக மாற்றியது'' என்கிறார் எம்ஜிஆர்.

பின்னாளில் எம்ஜிஆர் தமிழ்நாட்டுக்கே மன்னன் ஆனதெல்லாம் வரலாறு. அவர் நடித்து வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் திரைப்படத்துக்கான கருப்பொருள் இப்படித்தான் உருவானது. இச்சம்பவத்தை தன்னுடைய புத்தகமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் எம்ஜிஆர். நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றபோது அதற்காக வெள்ளிவிழா மலர் தயாரிக்கப்பட்டது. அதில் இப்படத்தின் பின்னணிகள் குறித்து ஏகப்பட்ட தகவல்களை பகிர்ந்திருக்கிறார் எம்ஜிஆர். 'யாருக்கு வெற்றி' என்கிற பெயரில் வெளியான இக்கட்டுரைகளை எழுத்தாளர் அஜயன்பாலாவின் நாதன் பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது.

''எப்படி ஜெயித்தேன்'' என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகத்தில், நாடோடி மன்னன் திரைப்படத்தை தயாரிக்கவும், இயக்கவும் எம்ஜிஆர் பட்ட பாட்டினை அறிந்துகொள்ள முடிகிறது. படத்தை தயாரிப்பதில் தொடங்கி அதை படமாக்குவதில் பட்ட இன்னல்களை தனக்கேயுரிய அடக்கத்துடன் பகிர்ந்துகொள்கிறார் எம்ஜிஆர்.

இன்று ஏகப்பட்ட ஹாலிவுட் மற்றும் உலகசினிமாவிலிருந்து கதையை சுட்டு படமெடுப்பதை பார்க்க முடிகிறது. நாடோடி மன்னனும் கூட பிரிசனர் ஆஃப் ஜென்டா என்கிற படத்தின் தழுவல்தன். ஆனால் அதை தன் படத்துக்கான முதல் விளம்பரத்திலேயே அறிவித்திருக்கிறர் எம்ஜிஆர். அதோடு ஆங்கிலக்கதையை எப்படி தமிழுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தார் என்பதையும் குறிப்பிட்டு ஒரு கட்டுரையில் விளக்குகிறார்.

நாடோடி மன்னன் திரைப்படம் பாதி கறுப்பு வெள்ளையிலும் மீதி கலரிலும் இருக்கும். படத்தின் ஒளிப்பதிவாளரான ராமுவின் மீது எம்ஜிஆருக்கு அப்படி ஒரு மரியாதை. அதனால் படம் முழுமைக்கு அவரை ஒளிப்பதிவாளராக பயன்படுத்துவது என முடிவாகிறது. ஆனால் ராமுவோ தான் கலர் படத்தில் வேலை பார்த்த அனுபவமே கிடையாது வேறு யாராவது நல்ல நிபுணரை பயன்படுத்திக்கொள்ளுங்களேன் என்று எம்ஜிஆரிடம் கேட்கிறார். ஆனால் எம்ஜிஆரோ நீங்கள்தான் வண்ணக்காட்சியையும் படமாக்க வேண்டும்.. இல்லையென்றால் படத்தில் கலரே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

அதோடு ராமுவை வைத்து ஒருநாள் மட்டும் கலர் படமெடுக்கிற கேமராவில் டெஸ்ட் சூட்டிங் செய்து அதை மும்பைக்கு அனுப்பி சோதனை செய்கிறார். நன்றாக வந்திருக்கிறது என்று மும்பையிலிருந்து தகவல் வர.. மீதி படம் கலரிலேயே ராமுவை வைத்து எடுக்கப்படுகிறது. ராமு தவிர படத்தின் இசையமைப்பாளர்,எடிட்டர் தொடங்கி சாதாரண லைட் பாய் வரைக்கும் இப்படத்தின் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருடைய பின்னணியையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமல்லாது படத்தின் நடிக நடிகையர் அனைவரது உழைப்பையும் விளக்கும் வகையில் சில கட்டுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக சந்திரபாபு குறித்தும் அவருடனான எம்ஜிஆரின் தள்ளுமுள்ளுவும் சுவாரஸ்யமானது.

எம்ஜிஆர் ஒரு காட்சிக்காக சில குதிரைகளை ஏற்பாடு செய்கிறார். அதில் ஒன்று முரட்டுக்குதிரை. சந்திரபாபு அந்தக்குதிரையில்தான் பயணிப்பேன் என்று அடம்பிடிக்கிறார். எம்ஜிஆர் எவ்வளவோ தடுத்தும் கேட்கமல் அதில் ஏறி.. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கீழே விழுந்து கைகால்களில் காயத்தோடு திரும்புகிறார். அச்சமயத்தில் எம்ஜிஆர் சந்திரபாபுவுக்கு கொடுத்த அறிவுரை சினிமா கலைஞர்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

''சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள் புகழுகிறார்கள் என்றால் அந்த சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையே எத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையே கற்றுக்கொண்டிருப்பார். அதற்காக எத்தனை வருடங்கள் உழைப்பு தேவைப்பட்டிருக்கும். அவைகளை எல்லாம் ஒரேநாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த திறமைகளையெல்லாம் ஒரே விநாடியில் இழந்துவிடும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வது ஒரு கலைஞன் மக்களுக்கு செய்கிற மகத்தான துரோகமில்லையா'' என்று குறிப்பிடுகிறார்.
இதுபோல இன்னும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கிறது. அந்தகாலத்து சலிப்பூட்டும் எழுத்து நடைதான் என்றாலும் சம்பவங்கள் பலதும் அட போட வைக்கின்றன. அக்காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச்செல்கின்றன. புத்தகத்தின் இறுதியில் அறிஞர் அண்ணா இப்படத்துக்கு எழுதிய மதிப்புரை (விமர்சனம் என்று சொல்லமுடியாது) இடம்பெற்றுள்ளது. அதில் திராவிட இயக்கத்துக்கும் இப்படத்துக்குமான அரசியில் தொடர்புகளை விலாவாரியாக விளக்கி குறிப்பிட்டுள்ளார். படத்தில் இருக்கிற குறியீடுகள் குறித்தெல்லம் பேசுகிறார்!

புத்தகம் முழுக்க எம்ஜிஆர் தன்னுடைய புரட்சிதலைவர் இமேஜையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு ஒரு சாதாரண ராமசந்தராகவே நம்மோடு உரையாடுகிறார். அந்த எளிமையும் தன்னடக்கமும்தான் ராமசந்தர் என்கிற நாடோடியை மன்னனாக்கியதோ என்னவோ!
ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது தனிநபருக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அதன் ஒவ்வொரு ஃப்ரேமுக்கு பின்னாலும் எண்ணற்ற மனிதர்களின் வியர்வையும் உழைப்பும் அடங்கி இருக்கிறது. அந்த மகத்தான உழைப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் வெற்றியின் சூத்திரம் அடங்கியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இந்த எப்படி ஜெயித்தேன்!

****

''எப்படி ஜெயித்தேன் - எம்ஜிஆர்''
நாதன் பதிப்பகம்
விலை - 50
nathanbooks03@gmail.com
044-45542637


(நன்றி - cinemobita.com)

8 comments:

Anonymous said...

திரு அதிசா,
முதலில் மன்னனானால் என்று அந்த சொல்லைத் திருத்துங்கள்.

இச்சொல் வரும் இரு இடங்களிலும் இது தவறாகவே எழுதப் பட்டிருக்கிறது.

சினிபிட்டாவிலும் இப்படியேதான் எழுதிக் கொடுத்தீர்களா?

ஹூம்...எழுத்தாளர்கள்?!..

jaisankar jaganathan said...

ஜெயலலிதா பத்தி ஒன்னும் இல்லையா?

Anonymous said...

//எண்ணற்ற மனிதர்களின் //

இப்படியெல்லாம் எழுதக்கூடாது. எண்ணற்ற மனிதர்கள் என்றால் கோடிக்கணக்கிலா? நிறைய மனிதர்கள் கூடிச் செயல்தான் ஒரு திரைப்படம். எண்ணற்ற மனிதர்கள் கூடிச்செய்ததது என்றால் என்ன?

அடுத்து, ராமச்சந்திரன் என்ற பெயரை ராமச்சந்திரா என்றாக்கி விட்டீர்கள்.

இதைப்போன்று நிறைய, அதாவது உங்கள் வழியில், எண்ணற்ற எழுத்துப்பிழைகள்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள் அதிஷா.

Jayadev Das said...

நல்ல பதிவு, எழுத்துப் பிழையை பெரிதாக்க வேண்டியதில்லை.

Raashid Ahamed said...

எப்படி ஜெயித்தார் !! என் தங்க தலைவர் சொல்லட்டுமா ? எதில் ஜெயித்ததை பற்றி !! ஏழைகளின் மனங்களை ஜெயித்தாரே அதைச்சொல்லவா ? அரசியலில் எதிரிகளை ஜெயித்தாரே அதைச்சொல்லவா ? படுத்துகொண்டே பதவியை ஜெயித்தாரே அதைச்சொல்லவா ? சினிமாவில் வில்லன்களை ஜெயித்து ரசிகர்களின் உள்ளங்களை ஜெயித்தாரே அதைச்சொல்லவா ? “இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்லவேண்டும் ! இவர் போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்” இந்த ஒருவரி வேறு யாருக்கு பொருந்தும் !!

perumal karur said...

அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க...

There was an error in this gadget