Pages

23 February 2013

ஏ மாஃபியாசோ ஆக்சன் சமோசா

தமிழ்நாட்டைவிட்டு தாய்லாந்துக்கு தன் தாய் தங்கையோடு வருகிறார் தாடிவைத்த ஹீரோவான தாதி... சாரி.. ஆதி (ஜெயம்ரவி)!. தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம்பிழைக்க முதன்முதலாக தாய்லாந்துக்கு சென்ற குடும்பம் நம்ம ஹீரோவுடைய குடும்பம்தான். வந்த இடத்தில் ஆதிக்கு கலெக்டர் வேலை கிடைக்கவில்லை என்பதால் அவர் கஞ்சாபொட்லம் விற்கும் வேலையில் கஷ்டப்பட்டு சேருகிறார்.

நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து கஞ்சாபொட்லம் விற்றதில் நிறைய பணம் கிடைக்கிறது. அதைவைத்து ஐந்தாவது நாள் கோடீஸ்வரன் ஆகி விடுகிறார். பெரிய கோடீஸ்வரன் ஆகிவிட்டதால் ஆறாவது நாள் மாபெரும் டான்களோடு யாருமே இல்லாத இடங்களில் சூட்கேஸ் மாற்றி மாற்றி ஏதேதோ பேசுகிறார். அப்படியே ஏழாவது நாளில் போகிற போக்கில் அவரும் ஒரு பெரிய டான் ஆகிவிடுகிறார். டான் ஆகிவிட்டதால் தாடியை வெட்டி ஒட்டி டேவிட் பூன் போல மீசை வைத்துக்கொள்கிறார். பிறகு கோட்டும் கறுத்தகண்ணாடியும் மாட்டிக்கொள்கிறார்.

படம் சின்ன பட்ஜெட் என்பதாலோ ஆள்பற்றாக்குறையோ இந்த டானுக்கு ஒரே ஒரு அல்லக்கைதான். அதோடு டான் என்றால் நாலு படி ஏறி இறங்கி தேவையில்லாமல் துப்பாக்கியை எடுத்து கோட்டுக்குள் சொறுகிக்கொள்ள வேண்டும் , அதை எடுத்து திரையைப்பார்த்து சுடவேண்டும், தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்ட நைட் டிரஸ் போட்டுக்கொண்டு சரக்கடிக்கவேண்டும்... உச்சா போவதாக இருந்தாலும்.. கட்டைக்குரலில்.. ‘’ஏ.....ய் டாய்லெட்.. எங்..க்க்..க இரு...க்கு..’’ என்று முக்கி முக்கி பேசவேண்டும். பில்லா படங்களில் தல அஜித் என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் செவ்வனே செய்கிறார் ஆதி. (டான் ஆகிட்டாராம்.).

ஆதி டான் ஆகி நிறைய சம்பாதிப்பது அவருடைய அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ‘தீ’ ‘பில்லா’ காலத்திலிருந்து இந்த அம்மாங்களே இப்படித்தான்! டான்களோட மனசை புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. அதனால் ஆதியின் அம்மாவை காட்டும்போதெல்லாம் ஆதியும் அம்மாவும் மாறி மாறி அழுகின்றனர். ‘’ம்ம்ம்மா..’’ என்று ஆதி அழும்போது திரிசூலம் படத்தில் சிவாஜிசார் ‘’ம்ம்ம்மா சும்ம்ம்த்தீ..’’ என்று அழுவது நினைவுக்கு வந்துவிடுகிறது!

டானுக்கு ஒரு தங்கை இருந்தால்.. அவள் யாராவது மொக்கை வில்லனை லவ்பண்ண வேண்டும்தானே.. அதுதானே டான்களின் விதி. அதற்குத்தான் டான்களுக்கு தங்கைகளே பிறக்கிறார்கள். ஆதியின் தங்கையும் லவ்பண்ணுகிறார். தங்கை காதலித்த மொக்கை வில்லனை ஆதி ஒரே புல்லட்டில் காலிபண்ணுகிறார். வாவ்!

இப்படியாக கதை போய்க்கொண்டிருக்க.. நமக்கு கொட்டாவி கொட்டாவியாக வருகிறது. அப்போதுதான் ஹீரோயின் ராணி (நீத்து சந்திரா) வருகிறார். டானை காதலிக்கிறார். அப்பாடா இனிமே ஏதோ நடக்கப்போகுது பாரு என்று நாம் நிமிர்ந்து உட்காரும்போதே படத்தில் பாதி முடிந்துவிடுகிறது. அதற்கு பிறகு இன்டர்வெல்லுக்கு முன் ஒரு மொக்கையான யூகிக்க கூடிய சஸ்பென்ஸ்.. ஆமாம் ராணியின் காதல் பொய்.. அவர் ஆதியை சிக்கவைக்க நடித்திருக்கிறார். ஏன்னா அவர் வில்லனோட காதலி.. வில்லன் யாருன்னா.. இன்னொரு ஜெயம் ரவி. அதுவும் அவர் ஒரு பெண்மை நிறைந்த ஆண்! பெயர் பகவான். (ஆதி-பகவான்.. டைட்டில வந்துடுச்சா)

அப்பாடா இனியாச்சும் குடுத்த நூறுரூவாய்க்கு நல்ல கதையா சொல்லுவாங்கய்னு நிமிர்ந்து உட்கார்ந்தால்... முதல்பாதியில் நம்மை மொட்டை அடிக்கிறார்கள் என்றால். செகன்ட் ஆஃப்பில்தான்டி மாப்ளே உனக்கு இருக்கு.. என்று நமக்கு அந்த மொட்டை மண்டையில் முட்டை உடைத்து ஆஃபாயில் போட்டு ஆணி அடிக்கிறார் இயக்குனர். தியேட்டரே கதறுகிறது.

சமீபத்தில் இவ்வளவு மொக்கையான ப்ரடிக்டபிள் ட்விஸ்டுகளுடன் ஒரு படத்தை பார்த்ததேயில்லை. 1965க்கு முன்பு இப்படம் வெளியாகியிருந்தால் ஃப்ரஷ்ஷாக இருந்திருக்குமோ என்னமோ? ஒருவேளை இது ஸ்கார்ஃபேஸ் படத்துக்கான ட்ரிபூட்டோ என்னவோ?

ஒரே ஒரு ட்விஸ்டை மட்டுமே நம்பி முன்னும் பின்னும் கதை பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அந்த ட்விஸ்ட் கூட ரொம்ப பழைய ‘’அத்தனையும் நடிப்பா’’ என்று கதறும் சிவாஜி, ‘’இல்லை கோப்பால் இல்லை..’’ என்று கதறும் சரோஜாதேவி காலத்து ட்விஸ்டுதான்!
ஆதியை கொல்வதற்காக போலீஸ்கும்பல் அவனை சங்கிலிபோட்டு அழைத்துச்செல்கிறது. போகிற வழியில் சில வில்லன்களிடம் ஒரு இரவுக்கு மட்டும் ஒப்படைக்கிறார் காவல்துறை அதிகாரி. அப்போதே தெரிந்துவிடுகிறது ஆதி தப்பிவிடுவான்னு. இருந்தும் அதை ஏன் அரைமணிநேரம் ஓட்டவேண்டும்! கிளைமாக்ஸில் கர்ணன் காலத்து சேஸிங் வேற.. நல்லவேளை அதிரடி சேஸிங்குகள் நிறைந்தபடம் என்று விளம்பரமெல்லாம் போடவில்லை.

கிளைமாக்ஸில் இரண்டு ஜெ.ரவிகளும் சந்திக்கும் காட்சியில் எங்கே பக்வான் ஆதியை பார்த்து ‘’தம்பி’’ என்றும் ஆதி இவனை பார்த்து ‘’அண்ணா’’ என்றும் கத்திவிடுவார்களோ.. என்று பயந்துகொண்டே படம் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

அதுபோக ஏதாவது ஆயா திடீரென வந்து ‘’இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால நீங்க இரண்டுபேரும் இரட்டை பசங்க.. ஒரு பிரச்சனையால பிரிஞ்சுட்டீங்க, அம்மாவோட ஒருத்தன் அப்பாவோட ஒருத்தன்னு...’’ என்றெல்லாம் பிளாஷ்பேக் சொல்லி கடுப்பாடிப்பாரோ அமீர் என்றெல்லாம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது. ஏன் என்றால் படம் முழுக்க எழுபதுகளின் இறுதியில் வெளியான அத்தனை படங்களின் சாயலும்! இந்த ஒரே ஒரு ட்விஸ்ட்டை மட்டும் ஏனோ அமீர் கையாளவில்லை. அதையும் கூட பயன்படுத்தியிருக்கலாம் பெரிய சேதாரம் இருந்திருக்காது.

ஆளவந்தான் படம் வெளியாகி பத்து வருடம் இருக்குமா? அந்த அளவுக்காவது கிளைமாக்ஸ் சண்டை அமைந்திருக்க வேண்டாமா? நீரும் நெருப்பும் காலத்து யுக்திகளை பயன்படுத்தி கிளைமாக்ஸ் சண்டையை படமாக்கியிருக்கிறார் அமீர். அவர்தான் ஸ்டன்ட் டிசைனாம்! படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற எதுவுமே மனதில் ஒட்டவில்லை என்பதைவிட புரியவில்லை! ஏன் எதுக்கென்றே தெரியாமல் ஒருஹிந்திப்பாட்டு வேற. படம் முடிந்தபிறகு அமீரே குத்தாட்டம் போடும் ஆங்கில ராப் சாங் கொடுமைகளும் உண்டு!

டேய் படம் முடிஞ்ச பின்னாடியும் துரத்தி துரத்தி டார்ச்சர் குடுக்கறாங்கடா.. என்று கத்த வேண்டும் போல இருந்தது.

ஜெயம்ரவி படம் முழுக்க சிவாஜியை மிமிக்ரி செய்கிறார். அவருக்கு முகமும் உடலும் முதிர்ந்த அளவுக்கு நடிப்பும் உடல்மொழியும் வாய்ஸ்மாடுலேஷனும் முதிர்ச்சி அடையவில்லை. மீசை வச்சிட்டா மட்டும் பூனை புலியாகிடுமா.. ஜெயம்ரவி சீரியஸாக பஞ்ச்வசனம் பேச ஆரம்பித்தாலே தியேட்டரே சிரித்து மகிழ்கிறது. நீத்து சந்திரா படம் முழுக்க நிறைய புகைபிடிக்கிறார். இவை தவிர சொல்ல ஒன்றுமில்லை.

ஜெயம்ரவிக்கு அஜித் ஆகவேண்டும் என்று ஆசை வந்திருக்கலாம்.. ஆனால் அமீருக்கு ஏன் விஷ்ணுவர்த்தன் ஆகவேண்டும் என்று ஆவல் வந்ததது என்றுதான் புரியவில்லை. ஸ்டைலிஷ் மேக்கிங் மட்டுமே ஒரு படத்தை காப்பாற்றிவிடும் என்று நினைத்திருப்பார் போல..ம்ம் அமீர் மேல் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.