14 May 2013

முடியலங் மணி!
எம்ஆர் ராதாவின் ரத்தகண்ணீருக்குப் பிறகு வில்லனுக்காகவே ஹிட்டான படமென்றால் அது அமைதிப்படையாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டு திராவிட அரசியல் வரலாறை இதைவிடவும் பகடி பண்ணின ஒரு தமிழ்த்திரைப்படம் வேறெதுவும் இருக்கவே முடியாது. அப்படியொரு கிளாசிக் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது சப்பாத்திக்கல்லில் இட்லி சுடுவதுபோன்று கடுமையான சவால்கள் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும், திரைக்கதையையும் பாத்திரத்தேர்வையும் பார்த்து பார்த்து முந்தைய படத்துக்கு மரியாதை பண்ணுகிற வகையில் உருவாக்க வேண்டாமா? ஆனால் நாகராஜசோழன் எம்.ஏ எம்எல்ஏ படமோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல், மூன்றாந்தர பிட்டுப்படங்களின் தரத்தில்தான் வெளியாகியிருக்கிறது.

சிலபடங்களை சிலர் எடுக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கும், அவர்களுடைய மரியாதைகளுக்கும் நல்லது என்றும் நினைக்க வைக்கிறது. ‘அவதார்’ படத்தை அமைதிப்படை சத்யராஜையும், செந்தமிழன் சீமானையும் வைத்து மணிவண்ணன் இயக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் நாகராஜாசோழன் எம்ஏ எம்எல்ஏ.

அரசியலில் இருந்து ஒய்வுபெற்று வீட்டில் சும்மா இருக்கிறார் நாகராஜசோழன்.. மணிவண்ணன் அமைதிப்படை பார்ட் 2 எடுக்கிறார் என்பதை அறிந்து.. மீண்டும் அரசியலுக்குள் பிரவேசம் செய்கிறார். முதலமைச்சரின் ஊழல் ரகசியங்களை வைத்து மிரட்டி டைரக்டாக நான்கு நிமிடத்தில் ஈஸியாக துணை முதல்வராகவும் ஆகிவிடுகிறார். அதற்குபிறகு இங்கிலீஸ்கார பாரினர்ஸோடு சேர்ந்து ஒரு காட்டை அழித்து ரோடு போட.. நிஜமாகவே ரோடுதான் போடுவதாக திட்டம்போடுகிறார்.. ஆனால் காட்டை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் மக்கள்.
அவர்களை ஏமாற்றி எப்படி நாகராஜசோழன் ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. படிக்கும்போது சுமாராகவாவது இருக்கிற இந்தக் கதையை.. ஆப்பத்தை பங்குபோட்ட குரங்குபோல சீமானுக்கு கொஞ்சம், சத்யராஜூக்கு கொஞ்சம், தனக்கே கொஞ்சம், தன் மகன் ரகுவண்ணனுக்கு கொஞ்சம் என பிச்சு பிச்சு கொத்துக்கறி போட்டு கொதறியிருக்கிறார் மணிவண்ணன்!

அமைதிப்படையில் இயல்பான நடிப்பில், வில்லத்தனத்தில் அசத்திய அதே சத்யராஜ்தான்.. ஆனால் இந்தபடத்தில் ஏனோ வில்லத்தனம் காட்டவும் நாகராஜசோழனாக மாறவுமே, ரொம்ம்ம்ம்ப மெனெக்கெடுகிறார். வயதாகிவிட்டதால் முன்பிருந்த கம்பீரமும், அசால்ட்டுதனமும் சுத்தமாக மிஸ்ஸிங். ஆணிவேரே ஆடிப்போய் ஆடிகாரில் போய்விட்டதால், மீதி படத்தை சீமான்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்.

பிரபாகரனின் தம்பியாக நமக்குநாமே திட்டத்தின் கீழ் உலகிற்கு அறிவித்துக்கொண்ட தம்பி சீமான்.. இந்த படத்தில் சாதாரண இட்லிக்கடை அக்காவுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டவேண்டும். அதுவும் கிழவிகளுக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடுவதுபோல காமெடி காட்சிகளிலெல்லாம் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. காமெடிக் காட்சியில் கூட திடீரென பொங்கி எழுந்து.. ‘’அடேய் ராஜபக்சே.. கொடுங்கோலனே கொலைகாரப்பாவி.. தில்லிருந்தால் திநகர்பக்கம் வாடா’’ என்று அறைகூவல் விடுத்துவிடுவாரோ என்கிற அச்சமும் பயமுமாகத்தான் படம் பார்க்க வேண்டியிருந்தது.

அழகழகான லட்டுமாதிரி லேடீஸ் வாழும் காட்டை அழிக்க நினைக்கிற அரசியல்வாதியின் திட்டங்களை உடைக்க நினைக்கிறார் சீமான். நடுவில் அந்த லேடீஸோடு ஜாலி நடனம் வேறு ஆடுகிறார்.. ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பா..

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா சீமான். ஊரிலிருந்து காட்டுக்கு கிளம்பி போய்.. காட்டில் வாழும் ஆதிவாசிகளை உசுப்பிவிடுகிறார். வில் அம்பெல்லாம் வைத்து சண்டையிட தூண்டுகிறார். (அவதார் படத்தில் வருவது போலவே!)

சீமானை நம்பி ஆதிவாசிகள் வில் அம்பு வைத்து சண்டைபோட்டு செம அடி வாங்கி ஊரை காலிபண்ணிக்கொண்டு போக நேர்கிறது. அருவிக்கு பக்கத்தில் வெட்டியாக அமர்ந்து வாழைப்பழம் சாப்பிடும் சீமானிடம் விஷயத்தை சொல்கிறார் ஒரு அல்லக்கை! சீமான் அப்படியே ஷாக் ஆகி.. ‘’நாம் இப்போ தோத்துட்டாலும் நிச்சயமா இன்னொருக்கா ஜெயிப்போம்.. இப்போதைக்கு தலைமறைவாகிவிடுவோம்’’னு சொல்லிட்டு பக்கத்தில் இருக்கிற அருவியில் குதித்து தலைமறைவாகிவிடுகிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாமல் மக்கள் ஃபீல் பண்ண அவருடைய கதை அதோடு முடிகிறது. ப்ப்ப்ப்பா.. டேய் ரீல் அந்துபோய் நாலு வருஷம் ஆச்சுடா என்று பின் சீட்டிலிருந்து ஒரு தாத்தா கதறுவதைக் கேட்க முடிந்தது. ஈழத்தமிழர்களை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியெல்லாம் காமெடி பண்ணி கதறவிடுவார்களோ தெரியவில்லை.

மணிவண்ணன் என்ன நினைத்தாரோ, தன் மகனையும் சத்யராஜ், சீமானோடு பெரிய ஆளாக்கிவிட வேண்டியதுதான் என நினைத்து மகனுக்கும் ஒரு கதை பண்ணியிருக்கிறார். அவருக்கோ நடிப்பு என்பது கிலோவா, லிட்டரா எந்தக் கடையில் கிடைக்கும் என்கிற அளவில் வருவது வரவேற்கத்தக்கது. அவர்தான் நாகராஜசோழனின் மகனாம். அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்ல வேளையாக டூயட்டெல்லாம் வைக்கவில்லை. அந்த கொடுமையை வேறு பத்துரூபாய் கொடுத்த பாவத்துக்கு சகித்துக்கொள்ள வேண்டியதாயிருந்திருக்கும். மயிரிழையில் உயிர்தப்பியது மணிவண்ணன் புண்ணியம்.

இப்படியாக ஆளாளுக்கு நம்மைப்போட்டு படாய் படுத்த.. படத்தில் ஹீரோயின்களாக வருகிற இரண்டு பாட்டிம்மாக்களில் யார் மெயின் ஹீரோயின் என்பதை கண்டுபிடிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. பாட்டிம்மாவில் ஒன்று தொப்புள் தெரிய நடனமாடுவதெல்லாம், கொடுமைகளின் உச்சக்கட்டம்.

படம் பேசுகிற அரசியல் பற்றியெல்லாம் பேசுகிற அளவுக்கு ஒன்றுமேயில்லை. சீமானும், வைகோவும், தமிழருவி மணியனும் பேசுகிற அதே அம்மாவுக்கு வலிக்காத முனைமழுங்கிய அரசியல்தான். கொஞ்சம் ஜாலியான காமெடி வசனங்கள் மூலமாக மொக்கைமுலாம் பூசிகொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிவண்ணனுக்கு ரொம்பவே வயசாகிவிட்டது. உடல் நிலை ரொம்பவே மோசமாகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. அவரால் சரியாக நடக்க முடியவில்லை. வசனங்களை முந்தைய மாடுலேஷனில் இயல்பாக பேசமுடியவில்லை. உடல்நல குன்றி, இப்படியொரு படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாமோ என்று நினைக்கவைத்துவிடுகிறார். பல காட்சிகளையும் உதவி இயக்குனர்களை வைத்தே சமாளித்திருப்பார் போல.. படத்தின் ஒரே ஆறுதல் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற சில வசனங்களும், மணிவண்ணன்-சத்யராஜ் ஜோடி தோன்றி அலப்பறை பண்ணுகிற சில காட்சிகளும்தான்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமைதிப்படை’ படத்தின் தரத்திற்கு மிக அருகில் கூட இந்தப்படம் வரவில்லை. முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியையும் ஏனோதானோ என்று படமாக்கியிருப்பதும்.. பழைய பெருமையை வைத்தே துட்டுபார்த்துவிடலாம் என்று நினைத்து படமெடுத்திருப்பதும், அப்பட்டமாகத் தெரிகிறது.

செந்தமிழன், புரட்சி தமிழன், இனமான இயக்குனர் என்றெல்லாம் போட்டு படத்தை தொடங்கும்போதே உஷாராகி ஜன்னல் வழியாக குதித்து தப்பித்திருக்க வேண்டும். ம்ம் இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம். இந்த கெரகத்த எடுத்தத்துக்கு பழைய அமைதிப்படையவே டிடிஎஸ் பண்ணி இன்னொருக்கா விட்ருக்கலாங் மணி!

18 comments:

Unknown said...

///செந்தமிழன், புரட்சி தமிழன், இனமான இயக்குனர் என்றெல்லாம் போட்டு படத்தை தொடங்கும்போதே உஷாராகி ஜன்னல் வழியாக குதித்து தப்பித்திருக்க வேண்டும். ம்ம் இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம். இந்த கெரகத்த எடுத்தத்துக்கு பழைய அமைதிப்படையவே டிடிஎஸ் பண்ணி இன்னொருக்கா விட்ருக்கலாங் மணி!//neththi ...illa athisha adi,...

aravindan neelakandan said...

சிரித்து சிரித்து முடியவில்லை... இந்த மாதிரி விமர்சனம் வருவதற்காகவே மணியண்ணே நீங்க படம் எடுங்கண்ணே... பாத்து நொந்து நூடுல்ஸாகி இடுக்கண் வருங்கால் நகுகன்னு விமர்சனம் எடுக்கவே கிடைச்சிருக்காரு நமக்கொரு பலியாடு அதிஷா... இந்த ஒரு காரணத்துக்காக வாழ்க மணி....

Unknown said...

ரசிக்கும் படியான குட்டு ...பாராட்டுக்கள்

Unknown said...

ரசிக்கும் படியான குட்டு ...பாராட்டுக்கள்

Raashid Ahamed said...

பழைய அமைதிப்படை படத்துல தேர்தல் ரிசல்ட் அறிவிக்கும் போது ஆரம்பத்துல கூனிக்குறுகி இருக்கும் சத்யராஜ் கொஞ்ச கொஞ்சமா நிமிர்ந்து தெனவட்டா சிகரெட்ட பத்தவச்சிகிட்டு மணிவண்ணன் ஆளு மேலேயே கையை போடுற அந்த ஒரு சீனே போதும் அருமையா ரசிக்கிற சீன். ஆனா உங்க விமர்சனத்தை படிச்சபின்னாடி பேசாம பழைய படத்தையே இன்னொருதடவை பாத்துட்டு காசை வேஸ்ட் பண்ணாம இருந்திடலாம் போல தோணுது.

​செல்​லையா முத்துசாமி said...

படத்தோட ஒரே வெற்றி இப்படி ரசிக்கிற மாதிரி விமர்சனம் கிடைச்சிருக்கறதுதான். ஒரு விமர்சனத்துக்கு இத்தன கோடி செலவா?

rajasundararajan said...

முதலிலிருந்து கடைசிவரை சிரித்தேன். படத்திற்குப் போயிருந்தால் இவ்வளவு சிரித்திருக்க மாட்டேன். நன்றி!

Jayadev Das said...

சிரித்து சிரித்து முடியவில்லை... இந்த மாதிரி விமர்சனம் வருவதற்காகவே மணியண்ணே நீங்க படம் எடுங்கண்ணே...\\ Repeattuuuuuuuuuuuu

Unknown said...

ரசிக்கும் படியான குட்டு ...பாராட்டுக்கள்

perumal karur said...

மார்க்கட் போன டிக்கட்டெல்லாம் படம் எடுத்தா எப்படி இருக்கும்??

Anonymous said...

ஹா ஹா ஹா

Anonymous said...

Ungalukku Coimbatore slang nandraaga varukirathu. Pazhaya thalaimurayila neenga kandippa coimbatore kaaranaatthaan irundhurupeenga.

மணிகண்டன் said...

ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பா என்பது சரியான ரிதமில் இல்லை. அதனுடன் ஒரு "லா" வரவேண்டும்.

ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பாலா

தயவு செய்து திருத்தவும்

M.G.ரவிக்குமார்™..., said...

வயசானா கையைக் காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்!இல்லேன்னா இப்படித் தான் அசிங்கப்பட வேண்டியிருக்கும்!என்னங் மணி நாஞ்ச் சொல்றது?..

M.G.ரவிக்குமார்™..., said...

வயசானா கையைக் காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்!இல்லேன்னா இப்படித் தான் அசிங்கப்பட வேண்டியிருக்கும்!என்னங் மணி நாஞ்ச் சொல்றது?..

Anonymous said...

Naan sunday devi paradaisil inda padathai paarthen.intervel mudinthu 20 nimidathileye odi vandu vitten.Vayathana piraku silar nadikkamalum padam edukkamalum irunthal tamil cinimavukku nallathu. Ippodu varukira pasangalai parthu padam edukka katru kollungal mani&sathyarajji

அருண் said...

தியேட்டருக்கு(ஊட்டி) தனியாத்தான் போகோனம்போல இருக்கு

அருண் said...

தியேட்டருக்கு(ஊட்டி) தனியாத்தேன் போகோனம்போல இருக்கு