Pages

16 May 2013

சமரசம் உலாவும் இடமே...!
கடைசி பரீட்சையின் கடைசி கேள்வி... பாதி விடையை எழுதும்போதே மனசுக்குள் பந்துகள் குதிக்கத் தொடங்கிவிடும். பரீட்சை முடிந்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு போகமால் நேராக மைதானத்துக்கு போய் நாலு சிக்ஸர் விளாசினால்தான் மனசு அடங்கும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளத்தில் பேட்டும் பந்துமாகத்தான் நம்வீட்டு சிண்டு குண்டுகளை பார்க்க முடிகிறது. விடுமறை வந்துவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் போல பிஞ்சுபிளுவான்களுக்கு கைகளில் பேட்டும் பந்தும், மனசு நிறைய கிரிக்கெட்டும் அப்படியே பச்சக் என ஒட்டிக்கொண்டுவிடுகிறது.

நூறு டிகிரி உச்சி வெயிலோ பசியோ தாகமோ எதுவுமே இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. போடுகிற பந்துகளிலெல்லாம் விக்கெட் விழ வேண்டும். அடிக்கிற பந்தெல்லாம் சிக்ஸராக மாறவேண்டும்! ஏப்ரல் தொடங்கி மே கடைசிவரை அதுதான் கனவு... அதுமட்டும்தான்.

தமிழ்நாட்டில் வேறெந்த விளையாட்டும் இத்தனை பேரால் இவ்வளவு சிரத்தையாக விளையாடப்படுமா என்பது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியது. விடுமுறை என்றாலே பையன்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான். இப்போதெல்லாம் பெண் குழந்தைகளும் சாலைகளில் அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் மைதானங்களில் ‘பிட்ச்’ பிடிக்க சின்ன பாப்பாக்களும் போட்டி போடலாம்! பெண்பிள்ளைகள் கேட்டால் பையன்கள் மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பார்கள் என்பது வேறு கதை.. வேறு சப்ஜெக்ட்!

‘கல்லி கிரிக்கெட்’ அல்லது ‘ஸ்ட்ரீட் கிரிக்கெட்’! கிரிக்கெட்டுக்கேயுரிய சகல விதிகளையும் உடைத்தெறிந்து ‘’விளையாடுகிற இடத்துக்கும்,ஆடுகிற வீரர்கள் எண்ணிக்கைக்கும் பண வசதிக்கேற்ற உபகரணங்களுக்கும்’’ ஏற்ப விதிமுறைகளை தங்கள் இஷ்டப்படி வகுத்துக்கொண்டு ஆடுகிற இந்த கல்லிகிரிக்கெட்தான் இன்று நம்பையன்களுக்கு இருக்கிற ஒரே வெளிப்புற விளையாட்டு வாய்ப்பு!
நம் இஷ்டப்படி ரூல்ஸை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற சுதந்திரம்தான் இத்தனை பேர் இன்று எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் ஆட காரணமோ என்னவோ?

இதில் ஆடுகிற அத்தனை பேரும் ஆல்ரவுண்டர்கள்தான். ஸ்பெஷலிஸ்ட்பேட்ஸ்மேன்,ஸ்பின்னர்,வேகப்பந்துவீச்சாளர்,மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் என எந்த பாகுபாடும் கிடையாது. அதே போல நன்றாக படிக்கிற பையன், பணக்கார பையன், தடியானவன் என்கிற பேதமும் இல்லை. சாதிமத பேதமின்றி சகலரும் குவிந்து திறமைக்கு மதிப்புக்கொடுத்து ஆடும் ஆட்டம்தான் இந்த கல்லிகிரிக்கெட்!

கல்லி கிரிக்கெட் ஆட உங்களுக்கு பத்துக்கு பத்து அறைகூட போதுமானதுதான். சாலைகளில் சந்துகளில் ஆடலாம். தோட்டத்தில் பூங்காவில் பார்க்கிங்கில் க்ளாஸ்ரூமில் என எங்கும் விளையாட முடியும். தேவையானது பேட்டுபோல ஒரு பொருளும் பந்துபோல உருளையான ஒன்றும்தான். பேட் இல்லையா காலண்டர் அட்டைகூட பேட்டாகும். பால் இல்லையா கிழித்துப்போட்ட காகிதங்கள் சுருட்டப்பட்டு பந்தாகும். உபகரணம் எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

சாலையில் செல்லும்போது பையன்கள் கிரிக்கெட் ஆடும் மைதானத்தை பாருங்கள். ஒரு சிறிய மைதானத்தில் ஆயிரக்கணக்கான பேர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். இந்த ஆயிரம் பேரும் எப்படி தங்களுடைய பந்தினை தங்களுடைய அணியை எதிரணியை சரியாக கவனித்து ஆடுகிறார்கள் என்பதை சிபிஐயால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் காலை தொடங்கி அந்தி சாயும்வரை ஆட்டம் தொடரும்.

மைதானத்தில் ‘பிட்ச்’ பிடிப்பதுதான் பெரிய வேலை. இதற்காகவே அணியில் குட்டிப் பையன்களை நேர்ந்து விட்டிருப்பார்கள். பாவம் அந்த பொடிசு காலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து போய் மைதானத்தில் தங்களுக்கான பிட்ச்சில் ஒரு குச்சியை நட்டுவைத்துக்கொண்டு மற்ற நண்பர்கள் வரும்வரை கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும். காத்திருந்து பிட்ச்சை கொடுத்தால் அவனுக்கு பேட்டிங் செய்யவோ பந்துவீசவோ ஒன்றிரண்டு ஓவர்கள் வாய்ப்புத்தரப்படும்.

கேப்பில் வேறு யாராவது குச்சியை பிடுங்கிப்போட்டுவிட்டு பிட்ச்சில் விளையாட தொடங்கினால் அடிதடி ரகளைதான். குட்டிப்பையனுக்கும் செம மாத்துதான். சில நேரங்களில் ஒரே குழு வாராவாரம் விளையாடி ஒரு பிட்ச்சை தங்களுக்கே பட்டா போட்டு வைத்துக்கொள்வதுண்டு. மீறி நீங்கள் ஆடும் பட்சத்தில் ‘’ஹலோ இது நாங்க ரெகுலரா ஆடற இடம்.. எங்க ஏரியா உள்ளவராத.. கிளம்புங்க காத்துவரட்டும்’’ என வம்புபண்ணி விரட்டியடிப்பார்கள். சிலசமயம் மைதானத்துக்கு லேட்டாக போக நேர்ந்தால் உங்களுக்கு பிட்ச் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரங்களில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணிகளிடம் போய் ‘’பாஸ் மேட்ச் போட்டுக்கலாமா’’ என்று கேட்பதை தவிர வேறுவழியில்லை.

நீங்கள் போய் கேட்டவுடன் உடனே யாரும் விளையாட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பல கமிட்மென்ட்ஸ் இருக்கலாம். அல்லது உங்களுடைய அணியை டொக்கு அணியாக நினைக்கலாம். அல்லது ஆடி களைத்துப்போய் ரெஸ்ட் எடுக்கலாம். மனம் தளராமல் பத்து பதினைந்து அணிகளிடம் பேசினால் அல்லது கெஞ்சினால் ஒன்றாவது க்ளிக் ஆகும். பிட்ச் பிடிக்காமலேயே மேட்ச் ஆட வழிபிறக்கும். மேட்ச் ஆட அணி கிடைத்துவிட்டால் அத்தோடு முடிந்துவிடாது..

மைதானத்துக்குள்ளேயே எங்கிருந்து எதுவரை பவுண்ட்ரி. விக்கெட்டுக்கு பின்னால் ரன் இருக்கிறதா? வைட் மற்றும் நோபாலுக்கு ரன் உண்டா இல்லையா? போன்ற விதிமுறைகளை இரு அணி கேப்டன்களும் கூடிப்பேசி முடிவெடுப்பார்கள். எந்த ரூல்ஸ் இருந்தாலும் எல்பிடபிள்யூ மட்டும் இருக்கவே இருக்காது என்பது கல்லிகிரிக்கெட்டின் எழுதப்படாத நிரந்தரவிதி. இது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பின்பற்றப்படுகிறது.

சிலசமயம் பவுண்டரி பிரிப்பதில் சிக்கலாகிவிடுவதும் உண்டு. சிக்ஸ்ர் அடித்துவிடுவார் உங்கள் அணியில் ஒருவர். உடனே எதிர் அணி கேப்டன் நாங்க சொன்னது அந்த புதரை தாண்டி அடிச்சாதான் சிக்ஸர் அதனால ஃபோர்தான் என வாக்குவாதம் பண்ணுவார்.. அடம்பிடிப்பார். அதுவும் பிறகு அடிதடியில்தான் முடியும். அதனால் எது பேசினாலும் முன்பே சரியாக கறாராக பேசிவிடவேண்டும். ஒன்றிரண்டு ரன்கள் ஆட்டத்தையே மாற்றிவிடும். ஸ்கோர் குறித்துவைப்பது பேட்டிங் அணிதான் என்பதால் எதிரணி அசந்த நேரம் ஒன்றிரண்டு ரன்களை கூட்டிவிடுவதும்.. அதை எதிரணியில் யாராவது கண்டுபிடித்து சண்டைபோடுவதும் வாடிக்கை.

மைதானங்களில் அதிகாலை ஆறு மணியிலிருந்து 8 மணிவரை கூட்டம் குறைவாக இருக்கும். புத்திசாலிகள் அந்த நேரத்தில் விளையாடி முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். எட்டுமணிக்கு மேல் மைதானத்துக்கு வந்தால் விளையாடி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

கும்பலுக்கு நடுவே ஃபீல்டிங் செய்கிறவர் பாடுதான் பெரும்பாடு! சமயங்களில் யாரோ அடித்த பந்தை கேட்ச் பிடித்துக்கொண்டு.. ‘’ஹே... ஹவ்வ்ஜாட்’’ என்று கத்திக்கொண்டே ஓடுவார். ஆனால் கேட்சைப்பிடிக்க வேண்டிய ஆளோ அவருடைய அணியிடம் செம மாத்து வாங்குவார். நீங்கள் பேட்டிங் செய்யும்போது பிட்ச் மாறி வேறு பிட்ச்சில் வேறு அணிக்காக பேட்டிங் செய்ய நேரிடும்! அதனால் ஜாக்கிரதையாக ஆடவேண்டியிருக்கும்.

சரி அம்பயருக்கு என்ன செய்றதாம்.. எந்த அணி பேட்டிங் செய்கிறதோ அந்த அணியில் ஒருவர்தான் அம்பரயாக இருப்பார். அவர் ‘நேர்மை’யாக நடக்க ரொம்பவே மெனக்கெடுவார். அதாவது லெக்சைடில் பந்து போனாலே வைட்தான். அது ஸ்டம்புக்கு மேலே சென்றாலும் வைட்தான். ஆஃப் சைடில் பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் விலகினாலும் வைட்தான். என்னதான் பவுலர் சண்டைபோட்டாலும் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கையை கட்டிக்கொண்டு ஸ்ட்ரிக்டான ஆபீசர் போலவே நிற்பார்.

ரன் அவுட்டில்தான் எல்லா குல்மால்களும் நடக்கும். என்ன இருந்தாலும் பேட்ஸ்மேன் நம்ம கட்சியாச்சே.. அதனால் பாதி பிட்ச்சில் ரன் அவுட் ஆனாலும் அவுட் கொடுக்காமல் கடுக்காய் கொடுப்பார். இதுபோன்ற நேரங்களில் பவுலிங் அணி கடுப்பாகி அம்பயரை போட்டு புரட்டி எடுப்பது சகஜம்!

இந்த ஆட்டங்கள் பத்து அல்லது பதினைந்து ஓவர் போட்டிகளாகவே நடக்கும். இங்கிலீஸ்காரன் டி20 போட்டிகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே அதைவிட சிறிய டி10 போட்டிகளை கண்டுபிடிச்சது நாமதான்! பத்து அல்லது பதினைந்து ஓவர்தான் மொத்த ஆட்டமுமே என்பதால் எந்த பேட்ஸ்மேனும் முழுசாக விளையாட முடியாது ஒரு ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்தான் பேட்டிங் தரப்படும். அதற்குமேல் நன்றாகவே ஆடினாலும் அவராகவே ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிடுவார். அதனால் கிடைக்கிற பத்து பந்துகளையும் சிக்ஸரடிக்கவே மனசு சிறகடிக்கும்.

இப்படி மைதான அழிச்சாட்டியம் ஒருப்பக்கம் என்றால் இன்னொரு பக்கம் உபகரண குத்தாட்டம். ஒரே ஒரு பேட் ஒரு டென்னிஸ் பந்தோடு பத்துபேர் கொண்ட அணி மைதானத்துக்கு கிளம்பிவிடும். மேட்ச் ஆடலாமா பாஸ் என ஸ்டம்ப்ஸ் வைத்திருக்கும் அணிக்கு கொக்கிப்போடும். எந்த அணியும் கிடைக்காவிட்டால்.. மூன்று குச்சிகளை நட்டு கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிடுவார்கள். குச்சிகள் கிடைக்கவில்லையா? மூன்று செறுப்புகளை வரிசையாக வைத்து அதன் வழியாக பந்துசென்றால் அவுட்! அதுவும் வேலைக்கு ஆகலையா? சைக்கிள் இருந்தால் அதன் டயரை பக்கவாட்டில் நிறுத்திவைத்துவிட்டால் அதுகூட ஸ்டம்ப்தான்! எதுவுமே கிடைக்கலையா? துடைப்பை கட்டை, குப்பைத்தொட்டி, சுவரில் போடு மூன்று கோடு என எதுவும் ஸ்டம்பாகும்.

ஒரு பேட்தானே இருக்கு.. ரன்னருக்கு? அவருக்கு குச்சியோ கம்போ அல்லது வெறுங்கையோ பரிசளிக்கப்படும்! ரன் எடுத்தபின் பேட் கைமாறும்! டென்னிஸ் பந்துகள்தான் விளையாட பயன்படும். டென்னிஸ் பந்தை அப்படியே பயன்படுத்தினால் அதன்மேலிருக்கும் பஞ்சு பந்து பவுன்ஸ் ஆவதை தடுக்குமாம். அதனால் பந்தை பற்றவைத்து பஞ்சை பொசுக்கி விளையாடுகிறார்கள். தீயா வேலை செய்றதுனா இதுதான்போல! வெவ்வேறு நிறுவனங்கள் பந்துகள் தயாரித்தாலும் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென்று பிராண்ட் வைத்து அந்த கம்பெனி பந்துகளையே உபயோகிக்கின்றனர்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் பதினோறு வீரர்கள் கட்டாயம். ஆனால் கல்லியில் நான்கு பேர்கூட ஒருஅணியில் ஆடலாம். அதற்கேற்ப ரூல்ஸ் மாறும்.

அதுமாதிரி நேரங்களில் ஆஃப் சைட் அல்லது லெக்சைட் மட்டும்தான் ரன்கள் கணக்கெடுக்கப்படும். ஸ்டம்புக்கு பின்னால் ரன்கள் கிடையாது. மூன்றுபேர்தான் அணிகளில் இருக்கிறார்கள் என்றால் ஒன்பிட்ச் கேட்ச் கூட உண்டு. அதே போல குறிப்பிட்ட இடத்தில் அடித்தால் 1ஜி 2ஜி 3ஜி என ரன்கள் கொடுக்கப்படும். இது ஊழல் கணக்கில்ல.. ரன்கணக்கு. ஜி என்றால் கிராண்டட் என்று அர்த்தம். சாலையில் கிரிக்கெட் ஆடும்போது சாக்கடைக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட சில வீடுகளுக்குள்ளோ பந்து போய்விட்டால் இப்படி தூரத்துக்கேற்ப ரன் வழங்கப்படும். ஓவர் உற்சாகத்தில் எதிர்வீட்டு கண்ணாடிகளை உடைத்துவிட்டால் அவுட்! பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால்.. அடித்தவரேதான் போய் எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைத்து கழுவித்தரவேண்டும்.

மேலே சொன்னதையெல்லாம் வெறும் குட்டிப்பையன்கள்தான் பண்ணுவாங்க என தப்புக்கணக்கு போடவேண்டாம். உடனே அருகிலிருக்கிற மைதானத்துக்கு விசிட் அடிங்க.. 6 வயது சுள்ளான் முதல் 60 வயது தாத்தாவரைக்கும் கிரிக்கெட் ரூல்ஸை உடைத்துப்போட்டு கல்லி கிரிக்கெட்டில் சொல்லி அடிப்பதை காணலாம்.

40 வயதாகும் கம்பெனி மானேஜர் நான்கு ரன்னுக்காக ‘’டே போங்கடா நான் ஆட்டத்துக்கு வரல.. என் பேட்டை குடுடா, நான் வீட்டுக்கு போறேன்” என அடம் பிடித்து சண்டை போடுவதை பார்த்து ரசிக்கலாம். முதல் பந்திலேயே அவுட்டாகி ‘’இல்ல இது ட்ரயல்ஸுடா.. நீ முதல்லயே ஆல்ட்ரைல்ஸ் பஸ்ட்டு பால்னு சொல்லிட்டு போட்ருக்கணும்’’ என லந்து பண்ணுவதை பார்த்து சிரிக்கலாம்! கல்லி கிரிக்கெட் ஆடுகிற இடங்கள் வெறும் மைதானங்கள் அல்ல.. ஆனந்தம் ஆடும் களம்! உங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாட்டாலும் ஒருக்கா உங்க வாண்டுகளோட விளையாடிப்பாருங்க..விடமாட்டீங்க!

(நன்றி - புதிய தலைமுறை)