Pages

31 May 2013

சாத்தானே அப்பாலே போ!






தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகள் எந்த சப்தமும் இல்லாமல் அப்படியே செத்துப்போகின்றன. இறந்த குழந்தைகளை பரிசோதித்துப்பார்த்த போது அவை இறந்ததற்கான காரணத்தை யாராலுமே கண்டறிய முடியவில்லை. அக்குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தன.

2006 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ கழகம் ஒரு ஆய்வறிக்கையை இதுகுறித்து வெளியிட்டது.

இப்படிப்பட்ட திடீர் மரணங்களை SIDS என்று அந்த அறிக்கை அறிவித்தது. அதாவது SUDDEN INFANT DEATH SYNDROME. இந்த சிட்ஸால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துபோகிறார்கள்.

இன்றுவரை இதற்கான காரணியை தேடி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இப்போது இதற்கான முதல்காரணமாக மருத்துவர்கள் கருதுவது என்ன தெரியுமா? நம்முடைய புகைப்பிடிக்கும் பழக்கம்! PASSIVE SMOKING ன் பின்விளைவுகளில் ஒன்றுதான் இந்த சிட்ஸ்! அதற்காகவே நாம் நம்முடைய குழந்தைகளை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இதுமட்டுமல்ல நாம் புகைபிடிப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு இன்னும்கூட நிறைய பிரச்சனைகள் வருகின்றன. அதில் மிகமுக்கியமானது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான சுவாசக்கோளாறுகள். நுரையீரலில் தொற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் யாரோ புகைபிடிப்பதால் சுவாசக்கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர். தங்களுடைய வாழ்நாள் முழுக்க நிம்மதியாக மூச்சுகூட விடமுடியாமல் தவிக்கின்றனர்.

இவை தவிர ஒவ்வாமை நோயாலும், மூளைவளர்ச்சியின்மை, கற்றல் குறைபாடு, கேட்கும்திறனில் குறைபாடு என இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

அதெல்லாம் ரொம்ப அபூர்வமாதாங்க நடக்கும்? உங்க கிட்ட ஆதாரம் இருக்கா? நான் ஒருத்தன் புகைபிடிக்கறதால இப்படிலாம் நடந்துடுமா? இல்ல நான் ஒருத்தன் புகைபிடிக்கறl விட்டுட்டா எல்லாமே மாறிடுமா? என்கிற கேள்விகள் புகைபிடிக்கிற அப்பழக்கத்திற்கு அடிமையான எல்லாருக்குமே எழலாம்! (இதுவும் கூட நாம் கேட்கிற நம்முடைய மூளை உருவாக்கும் கேள்வி கிடையாது.. நம்முடைய ADDICTION கேட்கிற கேள்வி என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

எந்த ஒரு மாற்றமும் தனிமனிதனிடமிருந்தே துவங்க வேண்டும். லட்சம் பேர் புகைபிடிப்பதால் ஒரே ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் ஒரே ஒரு குழந்தைக்கு நுரையீரல் பழுதடைந்தாலும் கூட பாதிப்புதானே! அந்தக்குழந்தை நம்வீட்டு குழந்தையாகவும் இருக்கலாம். அது சிட்ஸ் பாதிப்பினால் துர்மரணம் அடைய நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு?

கர்ப்பிணி பெண்கள் இந்த PASSIVE SMOKING ஆல் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா? கருவில் இருக்கிற குழந்தை எடை குறைவான , உடல்குறைபாடோடு , சுவாசக்கோளாறுகளோடு பிறக்க நேரிடும் என்கிற சமீபத்திய ஆய்வு. பிறக்காத குழந்தையின் உடலிலும் நஞ்சை கலக்கவல்லது இந்த புகைப்பழக்கம்.

நர்சரி பள்ளிகளுக்கு அருகேயும் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும் குழந்தைகளை வைத்துக்கொண்டு புகைபிடிப்பவரையும் கண்டால் தயவுசெய்து இதுகுறித்து சொல்லுங்கள்.

நீங்க புகைபிடிப்பவராக இருந்தால் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும். உங்களுடைய உடல்நிலையை பற்றி உங்களுக்கே கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளைப்பற்றி நாம் கவலைப்பட்டேயாகவேண்டும். அடுத்த முறை புகைக்கும்போது உங்கள் குழந்தைகளை ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள். அதுபோதும்.