Pages

30 May 2013

பாபநாசத்தில் மூன்றுநாட்கள் - ஒரு டைரிகுறிப்பு





நீண்டவரிசை. எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் பத்திருபது ஆட்கள், எல்லோரும் சீராக வரிசையில் செல்கின்றனர். வனப்பகுதிகளுக்கு நடுவில் இருக்கிற யாரோ பண்ணையாரின் மாந்தோப்பினை கடந்து ட்ரெக்கிங் சென்றுகொண்டிருந்தோம். மாமரங்களில் மாங்காய்கள் காய்த்து தொங்கினாலும் யாருக்கும் பறிக்கும் எண்ணமில்லை. எனக்கு ஒவ்வொரு மாங்காய்களை கடக்கும்போதும் ஒரு யுகத்தையே கடப்பதாக எதையோ விட்டுச்செல்வதாக ஒரு உணர்வு.

ஓடிப்போய் ஒரு மாங்காயை ஆர்வமாக பறிக்கிறேன். பறித்ததும் கடித்து ருசிக்கவும் தொடங்கிவிடுகிறேன். ப்ப்ப்ப்பா என்னா ஒரு சுவை. புளிப்பும் இனிப்புமாக இப்படி ஒருமாங்காயை இதற்குமுன்பு ருசித்ததேயில்லை. மாங்காயை பற்றி வரிசையில் எனக்கு முன்னால் செல்கிற கவின்மலரிடம் கூறுகிறேன். அவரும் அப்படியா அதிஷா.. எங்கே குடுங்க.. ஆர்வமாக என்னிடமிருந்து வாங்கி கடித்துப்பார்க்கிறார்.. அட ஆமாம்ப்பா செம டேஸ்ட்டு! கவின்மலரிடமிருந்து மாங்காய் சத்யாவுக்கு கை மாறுகிறது.. சத்யாவிடமிருந்து லாவ்ஸிடம் செல்கிறது.. லவ்ஸிடமிருந்து.. இன்னும் இன்னும் பலரிடம் மாறி மாறி அந்த மாங்காய் பயணிக்கிறது. யாருக்குமே அது எச்சில் மாங்காய் என்கிற தயக்கமோ அது திருடப்பட்ட மாங்காய் என்கிற பயமோயில்லை.

பால்யத்தில் நாம் எல்லோருமே செய்ததுதான் ஆனால் இப்போதெல்லாம் அப்படிச்செய்ய ஏதோ தடுத்துவிடுகிறது. ஆனால் பாபநாசத்திற்கு அருகேயிருக்கிற கரையார் வனப்பகுதியில் நடைபோட்ட எங்களுக்கு அந்த தயக்கமே இருக்கவில்லை. ஒவ்வொரு நொடியிலும் பால்யத்தை மீட்டெடுக்கவும் நண்பர்களோடு பாலினபேதமின்றி குதூகலிக்கவும் முடிந்தது.

அழுக்கு சட்டையுடன் திரிந்து, ஆற்றங்கரையிலும் அருவியிலும் விளையாடி, இயற்கையான உணவுகளை உண்டு, அறிமுகமில்லாத புதிய நண்பர்களோடு புத்தம் புதிதாக நட்பு பாராட்டி.. பாபநாசத்தில் முப்பதுபேர் மூன்றுநாட்களில் நிச்சயமாக குட்டி குழந்தைகளாகத்தான் திரிந்தோம்.

பாபநாசத்திலிருந்து திரும்பி வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வெறும் முன்றுநாட்கள்தான் அங்கே தங்கியிருந்தோம். ஆனால் அது முன்னூறு ஆண்டுகளானாலும் மறக்க முடியாத தருணங்களையும் நினைவுகளையும் கொடுத்திருக்கிறது. புத்தம்புதிதான உறவுகளையும் நண்பர்களையும் பரிசளித்திருக்கிறது. முதலில் இப்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பூவுலகின் நண்பர்களுக்கு நன்றி!

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் பாபநாசத்தில் ஒரு பயிற்சிபட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுசூழல் இதழியல் தொடர்பான பயிற்சி பட்டறை அது. இதில் சுற்றுசூழல் குறித்த விஷயங்களை எப்படி எழுதவேண்டும் என்பதில் தொடங்கி சூழலியல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் பல அறிஞர்களும் சான்றோர்களும் ஆன்றோர்களும் விரிவாக பேசினர். ஆனால் அது ‘’ஒரு மாதிரி பள்ளிவகுப்புகளை’’ நினைவூட்டியது என்பதால் பெரும்பாலான வகுப்புகளில் நன்றாக உறங்கினேன் என்பதே உண்மை. நமக்கும் க்ளாஸ் ரூமுக்கும் அவ்ளோ பொருத்தம்!

மூன்று நாட்களும் நல்ல ஆர்கானிக் பொருட்களால் செய்யப்பட்ட இயற்கை உணவுகள் பறிமாறப்பட்டன. இயற்கை உணவுகளுக்காகத்தான் நான் இதில் கலந்துகொண்டதே! வரகரிசி பொங்கல் தொடங்கி தூயமல்லி சோறு, வெள்ளை குழம்பு,பதநீர், கருப்பட்டி காபி, குதிரைவாலி பிஸ்கட், சிறுதானிய நூடுல்ஸ், சோளதோசை, தினைமாவு கொழுக்கட்டை, உளுந்தஞ்சோறு, நாட்டுக்கோழி கழி குழம்பு, மாட்டுக்கறி வறுவல்.. இன்னும் இன்னும்... உணவுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் மைக்கேலுக்கு நன்றி. (ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் மூன்றுநாட்கள் இவ்வளவு சிறப்பான உணவு எப்படிதான் அமைப்பாளர்களுக்கு கட்டுபடியானதோ அந்த பாபநாசம் சிவனுக்கே வெளிச்சம்!) மூன்றுநாட்களும் வயிறு ஒருபக்கம் இப்படி நிறைய இன்னொரு பக்கம் இயற்கை எழிலான பொதிகைமலை சூழல் மனசை நிரப்பியது.

அகஸ்தியர் மலை அருவியில் ஆட்டம், காடுகளுக்குள் ட்ரெக்கிங், மூலிகைப்பண்ணை விசிட், தாமிரபரணி ஆற்றில் குளியல், காணிப்பழங்குடியினரோடு ஓர் இரவு தங்கியிருந்தது என எல்லாமே அற்புதம்தான். இரவு 12மணிக்கு எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்,கவின்மலர்,வழக்கறிஞர் சுந்தர்ராஜன்,சுகிதா,வெற்றிசெல்வன், ராஜாராமன் என ஒரு குழுவாக தாமிரபரணி ஆற்றில் குளித்தது த்ரில் அனுபவம். காணிப்பழங்குடியினரின் கொக்கரா இசை நிகழ்ச்சியும் அந்தமக்களோடு பேசியவையும் மறக்க முடியாதது.

காணிப்பழங்குடியினரை பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறையை பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. அதைப்பற்றி இன்னும்கூட நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகமே எழுதலாம். ஆச்சர்யமனிதர்கள். தேன் எடுப்பதுதான் இவர்களுக்கு தொழில். அதுகுறித்து பேசும்போது.. தேன்கூட்டை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று ஒருவர் விளக்கினார். தேனீ ஒரு பூவில் அமர்ந்தால் அது அடுத்து இன்னொரு பூவுக்குத்தான் செல்லுமாம். ஆனால் அதே தேனீ நீரில் அமர்ந்தால் நேராக தன் கூட்டுக்குத்தான் செல்லுமாம்.. நீரில் அமரும் தேனீயை பின்தொடர்ந்தால் அந்த கூட்டை எளிதாக கண்டுபிடித்துவிடமுடியுமாம்! இங்கே எடுக்கப்படுகிற தேன் ஒருலிட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்!

மூன்றுநாட்கள் அசௌகரியமாக அசுத்தமாக மொட்டைமாடியில் உறங்கி அழுக்காக கால்வலியோடு காடுகளுக்குள் திரிந்து மண்ணில் உறங்கி,
அருவியில் குளித்து, நம்முடைய சுற்றுசூழலை காக்கிற உண்மையான பழங்குடி மனிதர்களை சந்தித்து அளவளாவி... சூழலியலை புரிந்துகொள்ள அதைபற்றி எழுத முதலில் செய்ய வேண்டியது இதுதான், இயற்கையின் சுவையை உணர்தல். மூன்றுநாட்களும் பட்டறைக்கு வந்திருந்த அனைவருமே அதை உணர்ந்திருப்பார்கள் என்பது உறுதி.

மூன்று நாட்கள் எல்லாம் முடிந்து மீண்டும் கான்கிரீட் காடுகளுக்கு கிளம்ப ஆயத்தமான எல்லோரிடமும் இருந்த ஒரே கேள்வி.. அடுத்து எப்பசார் இதுமாதிரி மீட்டிங் வைப்பீங்க என்பதுதான்!


(படம் - நண்பர் ஆறுமுகவேல்)