06 May 2013

முடியல பாஸ் முடியல...
இந்த காதலிகள் இருக்கிறார்களே காதலிகள். அவர்களுக்கு எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். நேரங்காலமே கிடையாது. பின்னணியில் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னுமிருக்கா'' என்கிற பாடல் ஓட விடிய விடிய பேச வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கிறார்கள்.

காதலிகளுக்கு காதலன்கள்தான் எஃப்எம் ரேடியோ, டிடிஎச் தொலைகாட்சி, நூலகம், நியூஸ்சேனல் என சகலமும்... (இவைதவிர வேறு வேலைகளும் இருக்கிறது.)

காதலிக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம்தான். தினமும் ஒரு இரண்டு மணிநேரம் பேசுவதில் என்ன வந்துவிடப்போகிறது என காதலிக்காதவர்கள் நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமில்லை பாஸ்! அந்த இரண்டரை மணிநேரம் எப்படி இருக்கும் தெரியுமா. உரையாடல் என்பது இரண்டு பக்கமும் நிகழவேண்டியது. ஆனால் நம்மூரில் அப்படி கிடையாது.

காதலிகள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல 'அப்புறம்' 'சொல்லு' 'வேற என்னடா' என்பதைத்தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களாக எதையுமே பேசுவது கிடையாது.

நாமேதான் தினமும் புதுசு புதுசாக தினுசு தினுசாக பேசுவதற்கு டாபிக் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நல்ல சுவாரஸ்யமான டாபிக்காக இருக்க வேண்டியது அவசியம். போர் அடிக்கிற மேட்டராக இருந்தால் ''வேற எதுனா பேசுப்பா'' என்று கொஞ்சல் பட்டனை அமுக்கி சேனலை மாற்றிவிடுவார்கள்.

இதற்காக ஒவ்வொருநாளும் ஒபாமா தொடங்கி உலக நாட்டு நடப்புகள் அனைத்தையும் கரைத்து குடிக்க வேண்டியிருக்கிறது. இதில் கிரிக்கெட்,அரசியல் அறவே கூடாது, மற்ற பெண்களை பற்றி புகழ்ந்து பேசிவிடக்கூடாது. வேண்டுமானால் அவர்களை திட்டலாம்.

சினிமா வுக்கு அனுமதியுண்டு, அதுவும் கிசுகிசு மாதிரியானவைதான். உலக சினமாவெல்லாம் பேசினால் ப்யூஸை புடுங்கிவிடுவார்கள். இவை தவிர மெகாசீரியல், அழகுசாதனப்பொருட்கள், எதிர்கால வாழ்க்கை, நாம் வாங்கின மொக்கைகள் என பேசலாம்.

எது பேசுவதாக இருந்தாலும் அதை நன்றாக ப்ரீப்பேர் செய்து பேச வேண்டியிருக்கிறது. கொஞ்சம் போரடித்தாலும்

'வரவர என்கிட்ட பேச உனக்கு இஷ்டமேயில்ல.. என்ன உனக்கு பிடிக்காம போயிடுச்சு.. லவ் பண்றதுக்கு முன்னால எவ்ளோ நேரம் பேசுவ.. இப்பல்லாம் அவசர அவசரமா கடனுக்கு எதயாவது பேசிட்டு போனை வச்சிடற... இனிமே எங்கிட்ட பேசாத ''

என்று அலம்பல் பண்ணி போனை கட் பண்ணி நம்மை குற்றவாளியாக்கி தூக்கில் ஏற்றி கொடுமை படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த உரையாடல் கண்டத்தை தாண்டமுடியாத தண்டங்கள்தான் காதலில் தோல்வியடைந்து டாஸ்மாக்கில் வரபோகிறவர்களிடமெல்லாம் பேசி பேசி குடிக்க வருகிற மற்ற குடிநோயாளிகளுக்கு டார்ச்சர் கொடுப்பவர்களாக வளர்கிறார்கள்.

ஆனால் நல்ல காதலன்கள் தினமும் கஷ்டப்பட்டு டாபிக் பிடித்து பேசி காதலியின் கைத்தட்டல்களை வாங்கி 'கொண்டகாதலி'ல் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் காதலில் வெற்றி பெறுகிற ஒவ்வொரு காதலனும் பத்து கோபிநாத், நான்கு தென்கச்சி சுவாமிநாதன், இருபத்தைந்து சுகிசிவங்களுக்கு சமமானவர்கள்.. அவர்களை போற்றுவோம்!

14 comments:

T.N.MURALIDHARAN said...

//காதலிகள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல 'அப்புறம்' 'சொல்லு' 'வேற என்னடா' என்பதைத்தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்//
இது காதலிக்கும்போது

கல்யாணத்திற்குப் பிறகு அப்படியே 'வைச வர்சா"

லதானந்த் said...

எங்க காலத்தில எல்லாம் செல்போன் கிடையாது. அதனால் போன் பட்டனை அமுக்குவதில் எங்கள் நேரம் வீண் ஆனதில்லை.

Anonymous said...

"குடிநோயாளி"

- Really nice tamil word you have introduced me. Thanks

Anand said...

மிகவும் அருமை. உண்மை.. உங்கள் எழுத்தில் உள்ள பகடியை மிகவும் ரசிக்கிறேன்.. இப்போது தங்கள் இணையத்தளம் என் அலுப்பான பொழுதில் நினைவுக்கு வரும் முதல் தளம்.. Sit Back Relax and Enjoy சொல்வார்களே அது போல மூளையை (நக்கலாக சிரிக்காமல், எதோ இருப்பதை என்று வைத்துக் கொள்ளாலாம்!) அதிகம் கசக்காத காயபடுத்தாத பதிவுகள்.. .. எழுதுங்கள் வாசிக்கிறேன் தொடருங்கள் நேசிக்கிறேன்..karki bava said...

உனக்கு ஏனோ லவ், கடலை மேட்டர் மட்டும் செட் ஆகவே மாட்டேங்குது. புதுசா ஒரு மேட்டரையிம் காணோம் மாப்பி :)))

ஸ்ரீ ஸ்ரீநிவாசன் said...

// நல்ல காதலன்கள் தினமும் கஷ்டப்பட்டு டாபிக் பிடித்து பேசி காதலியின் கைத்தட்டல்களை வாங்கி 'கொண்டகாதலி'ல் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் காதலில் வெற்றி பெறுகிற ஒவ்வொரு காதலனும் பத்து கோபிநாத், நான்கு தென்கச்சி சுவாமிநாதன், இருபத்தைந்து சுகிசிவங்களுக்கு சமமானவர்கள்.. அவர்களை போற்றுவோம்! //

நன்றி பாஸ்! :-)

Arul uk said...

Nice

Anonymous said...

Superb

கார்த்திக் கவி said...

கல்யாணத்துக்கு அப்புறம்
இதுக்கு ஏதாவது பரிகாரம் உண்டா

elango selvam said...

quite good :)

elango selvam said...

quite good :)

Umesh Srinivasan said...

கடல போட்டா மட்டும் போதாது, கலர் கலரா வேற போடணுமா? நல்ல வேள 80/90 களில் இளமையக் கடந்தாச்சு.

perumal karur said...

அருமை

Sahayaraj said...

//காதலிகள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல 'அப்புறம்' 'சொல்லு' 'வேற என்னடா' என்பதைத்தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்//

- எனக்கென்னமோ இந்த " அப்புறம் " ங்கற வார்த்தைல ஏதோ சூட்சமம் இருக்கற மாதிரி தெரியுது ..ஏதாவது பேசியே அகணும்கறதால நாம நிறைய சொல்ல ...அதையெல்லாம் ஒரு EXCEL Sheetல நோட் பண்ணி வெச்சுப்பங்களோனு தோணுது :-)