04 May 2013

'சினிமா' டவுசர் கழண்டுச்சே...!
சில அனுபவசாலிகள்.. நாம் எதையாவது செய்தால்.. அச்சச்சோ இப்படி பண்ணப்பிடாது.. இது தப்பூ.. அப்படி பண்ணப்பிடாது அது குப்பூ என தடுத்துக்கொண்டேயிருப்பதை தங்களுடைய தலையாய கடமையாக செய்துவருவதை காணலாம். கேட்டால் அதெல்லாம் எங்க அனுபவத்துல கத்துக்கிட்ட பாடம் தம்ப்பீ.. அத அப்படி பண்ணக்கூடாது தம்பி.. நடுவுல மானே தேனே கட்டாயம் போட்டுக்கணும்? அதை மட்டும் செஞ்சிடாதப்பா.. அப்படி செஞ்சாலும் பாதுகாப்பா செய்யணும் காண்டம் போட்டுக்கணும்? என நம் கையை பிடித்துக்கொண்டு கரகாட்டகாரன் கனகாவின் ஃபாதர் போல அக்கிரமம் பண்ணுவதை அடிக்கடி சந்தித்திருக்கலாம்.

எந்த ஒரு கலைஞனுக்கும் கட்டாயம் இருக்கவே இருக்க கூடாதது இதுமாதிரியான கைய புடிச்சி இழுத்தியா தொடர்புகள்தான்! க்ரியேட்டிவிட்டிக்கு முதல்தேவை கட்டற்ற சுதந்திரம்தான்.ஆனால் அன்பார்சுனேட்லி அன் யுனிவர்ஸல் ஒபீடியென்ட்லி பாவப்பட்ட கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களுக்கு அந்த பாக்கியமே கிடையாது.

சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இதுபோன்ற ஆயிரம் பெரிசுகளை தாண்டித்தான் வரவேண்டியிருக்கும். அப்படி வருவதற்குள் அவனுடைய சகல புதுமையான திறமைகளும், சிந்தனைகளும் மங்கிப்போய் மட்டையாகி மண்ணாங்கட்டியாகத்தான் வெளியே வருவான். ஏதாவது மொக்கையான லவ் ஸ்டோரியை தமிழ்சினிமாவின் சகல க்ளிஷேகளுடன் எடுத்து ஃப்ளாப்பாகி ஊருக்கே கிளம்ப வேண்டியதாகிவிடும்!

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக வருகிற குறும்பட இயக்குனர்களுக்கு இந்தத் தொல்லையில்லை. சொல்லப்போனால் அவர்களை சுற்றியிருக்கிற பெரிசுகள்.. ஏன்டா இப்படி சினிமா கினிமானு வெட்டியா திரியற, ஏதாச்சும் உருப்படியா பண்றா என்பதை மட்டும்தான் அறிவுரையாக வழங்குவதை பார்த்திருக்கிறேன்.

அதிகம் போனால் கஷ்டப்பட்டு உன்னை உங்கப்பாம்மா எப்படி படிக்க வச்சாங்க.. ஏன்டா இப்படி அவங்களை கஷ்டப்படுத்தற என்பதாக இருக்கலாம். ஆனால் யாரும் தப்பித்தவறியும் கூட இந்த இடத்துல காமெடி டிராக்.. இங்க ஒரு டூயட்டு.. ஃபைட்டு கட்டாயம்.. தர்மம் ஜெயிக்கணும் அதனால ஹீரோ சாகணும் மாதிரியான யோசனைகளை கொடுப்பதில்லை. அதுதான் இவர்களுக்கு பலமாக இருக்கிறது.

அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி தொடங்கி ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ்.. இதோ இப்போது ‘சூதுகவ்வும்’ நலன் குமாரசாமி வரை.. குறும்பட இயக்குனர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி காலி பண்ண பழம்பெரிசுகள் இல்லை.

அவர்களாகவே நீந்தித்தான் கரையை அடைகிறார்கள். நிறைய உலகப்படங்களை பார்த்து நிறைய வாசித்து தங்களுக்குள் விவாதித்து சினிமாவை கற்றுக்கொள்கிறார்கள். தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்கிற நேர்மை இவர்களுக்கு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து சினிமாவை படிக்கிறார்கள். சினிமாவுக்கென்று கதை வசனம் எழுதாமல்.. இயல்பாக தங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு தோல்வியை பற்றிய பயமே இல்லை!

அதனாலேயே என்னவோ இவர்களுடைய படங்களிலும், எந்த வித தயக்கமும் இல்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் கடைபிடித்துவந்த சகல இலக்கணங்களும், வரையறைகளையும் சுத்தியலால் உடைத்து நொறுக்கி குச்சியை விட்டு நோண்டி ஒரே ஜம்பில் மீறுகிறார்கள்.

‘மௌனராகம்’ மோகன் மாதிரி இருக்கிற நம்முடைய ஆர்தடக்ஸ் இயக்குனர்களுக்கு மத்தியில், அதே படத்தில் வருகிற துறு துறு கார்த்திக்கை போன்ற இந்த சுட்டிப்பையன்களின் வரவு தமிழ்சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அட்டக்கத்தியில் தொடங்கி, இதோ இன்று சூதுகவ்வும் வரை வந்தது எதுவுமே சோடைபோகவில்லை. மக்கள் அப்படியே அள்ளி கட்டிக்கொண்டு தலையில் வைத்துக்கொண்டாடுகிறார்கள்.

‘சூது கவ்வும்’ படம் ஓடுகிற உதயம் தியேட்டரில் மிகச்சரியாக ஒவ்வொரு மூன்று நிமிட இடைவெளியிலும், விசிலும், கைத்தட்டலும், சிரிப்பொலியும் பறக்கிறது. திரையரங்கமே அதிர்கிறது. ஹெலிகாப்டர் காட்சியில், முதல் கடத்தலில், நாயகனின் திட்டங்கள் சொதப்புகையில், சைக்கோ போலீஸ் டிக்கியில் சுட்டுக்கொள்ளும்போது, நாயகநண்பன் பிட்டுப்படத்தில் நடிக்கும்போது, டவுசர் கழண்டுச்சு மாமா என்று நாயகி சொல்லும்போது என ஒவ்வொரு முறையும் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள்.

ஒருபடத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் இந்த படத்தில் இல்லை. ஒரு படத்தில் என்னவெல்லாம் இருக்க கூடாதோ, அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. ஒரு நாயகன் என்னவெல்லாம் செய்ய மாட்டானோ, அதையெல்லாம் செய்கிறான். ஒரு நாயகி என்னவெல்லாம் பேசக்கூடாதோ, காட்டக்கூடாதோ, அதையெல்லாம் அவள் செய்கிறாள்.

நல்லவர்கள் படம் முழுக்க தோற்க.. கெட்டவர்கள் ஜெயிக்கிறார்கள். (படத்தில் மொத்தமாகவே நாலைந்து நல்லவர்கள்தான்.. இல்லை இரண்டுபேர்.. ஒருத்தர்.. நியாபகமே இல்லை)

இது நிச்சயமாக மசாலா படம்தான். ஆனால் இதில் டூயட் இல்லை.. காதல் இல்லை.. காமெடி டிராக் இல்லை.. அதிர வைக்கும் சண்டைகாட்சி இல்லை. ஆனாலும் தியேட்டரில் படம் பார்த்த சகலரும் ஆந்திரா மெஸ்ஸில் டபுள் மீல்ஸ் சாப்பிட்ட த்ருப்தியோடு ஆவ்வ்வ்வ்வ்… என ஏப்பம் விட்டபடி தியேட்டரை விட்டு சென்றதை காண முடிந்தது. படம் பேஜாருப்பா என்கிற குரல்களை கேட்க முடிந்தது.

குறும்பட இயக்குனர் என்பதாலேயே, ஒவ்வொரு காட்சியையும், ஒரு குறும்படத்தை போலவே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும், ஒரு GIMMICK ஒரு சஸ்பென்ஸ் மற்றும் ஒரு ட்விஸ்ட்! இதுதான் ஃபார்முலா.. தனக்குத் தெரிந்த இந்த ஃபார்முலாவை படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார் நலன்.

ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் இதுபோன்ற திரைக்கதை அமைப்பை பார்த்திருக்கலாம். அதற்கு ‘ரமணா’ நல்ல உதாரணம், ஒவ்வொரு காட்சியும் ஒரு குட்டி குறும்படத்தை போன்று அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மருத்துவமனை காட்சி.. பிணத்தோடு வருவது அதை அட்மிட் செய்வதில் தொடங்கி.. ஏழை குடும்பத்துக்கு பணம் வாங்கிக்கொடுப்பதில் முடிந்துவிடும்.

ஒரு கிம்மிக் ப்ளஸ், ஒரு சஸ்பென்ஸ், ஒரு ட்விஸ்ட்... ஒவ்வொரு காட்சியிலும் இந்த மூன்றும் சுவாரஸ்யமாக அமைந்துவிட்டால் படம் ஸ்யூர் ஹிட்! துப்பாக்கி திரைப்படம் இதற்கு நல்ல உதாரணம். இது நலன் குமாரசாமிக்கு நன்றாக கைவந்திருக்கிறது. முதல் கடத்தல் காட்சி இந்த வகையில் அமைந்திருந்தது. அதாவது ஒரு சில விதிமுறைகளோடு நடக்கிற கடத்தல்.. அதை எப்படி செய்யப்போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ். இறுதியில் கடத்திய பெண்ணுக்கே கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு செல்கிற ட்விஸ்ட். இப்படித்தான் மொத்தபடமும் கட்டமைக்கப்பட்டுள்ளது.அதோடு இயல்பான வசனங்கள் படத்தின் இன்னொரு பலம்.

திரைக்கதையில் குறிப்பிடதகுந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள், சில மொக்கையான காட்சிகள், திணிக்கப்பட்ட பாடல் ஒன்று என குறைகள் இருந்தாலும்.. புதுமுக இயக்குனரின் முதல் படம் என்பதால் தாராளமாக மன்னித்துவிடலாம். அதோடு காசுபணம்துட்டுமணிமணி பாடலும் கூட ஏதோ பெரிசு ஒன்றின் அட்வைஸால் சேர்க்கப்பட்டதாக இருக்கவேண்டும். படத்தோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. முதல் காட்சியில் ஒரு நியூஸ் பேப்பரில் படிக்கிற செய்திகள் மூலமாக படத்தில் நாம் சந்திக்கப்போகிற சகல பாத்திரங்களுக்கும் லீட் வைத்ததை மிகவும் ரசிக்க முடிந்தது.

விஜயசேதுபதியும் இசையமைப்பாளரும் இயக்குனருக்கு இரண்டு கைகளாக இருந்திருக்கிறார்கள். இந்த விஜயசேதுபதி எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகத்தான் திரையில் தெரிகிறார். உங்களுக்கு வயசென்ன பாஸ்?

இவருக்கு மட்டும் எப்படிதான் இதுமாதிரி லட்டு கேரக்டர்கள் வந்துமாட்டுகிறதோ? தொடர்ந்து நான்கு ஹிட்டுகள் கொடுத்துவிட்டபடியால், அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜயமங்கலம்னு ஏதாவது படத்தில் பஞ்ச் பேசி நடிக்காமலிருக்க பிராப்பிரஸ்த்தூ!

தமிழ்சினிமாவின் ஓட்டை டவுசரை கழட்டி தூர போட்டு விட்டு, புத்தம் புது ஜூன்ஸ் மாட்டி அழகு பார்க்கிற இளம் இயக்குனர்கள் படையில் இன்னொரு இளைஞர் நலன்குமாரசாமி.

(நன்றி - cinemobita.com)

13 comments:

Unknown said...

குறும்படம் இயக்குனர்களின் படைப்புகள் பாராட்டுக்குரியது . ஆனால் அதே சமயத்தில் இவர்கள் தன் முதல் திரைப்பட படைப்பில் தனக்கு தெரிந்த எல்லா திறமைகளையும் வெளிக்காட்டி விடுகின்றனர் . அடுத்த படத்திற்கு அதிக காலம் எடுத்து கொள்கின்றனர் . உதவி இயக்குனர் அனுபவம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். உதவி இயக்குனர் காலங்களில் இவர்கள் கலையை சேர்த்து வாழ்க்கையும் கற்று கொள்ள முடிகிறது . அப்பொழுது எதாவது ஒரு இடத்தில் சமுதாயம் இவனுக்கு கற்று கொடுத்ததை , சமுதாயத்திற்கு இவன் ஒரு படைப்பாக தரலாம் , அதே சமயத்தில் பத்து நிமிடத்தில் தரும் செய்தியை இரண்டு மணி நேரமாக மாற்றும் சமயத்தில் தோல்வி அடைய வாய்புகள் அதிகம். இவற்றை மட்டும் எல்லாம் நிவர்த்தி செய்தால் இனி வரும் காலம் இளைஞர்கள் காலமா தான்

asksukumar said...

அருமையன பார்வை !

KSB said...

பாஸ்.... கணேஷ் குமார் மோகன் இவரோட படமும் நல்லா இருக்கும் .....

ஊருக்கு நாலு பேரு
குட்டிம்மா
ராமசாமி
.

Anonymous said...

:-)

க. பூவன் said...

ஒரு நல்ல விமர்சனம். நன்றி

phantom363 said...

சிந்தனையாளர் அதிஷா...அடிச்சு வீசப்போறது சென்னையிலே சித்திரை மாசத்திலேயே கடும் மழை. பவர் கட் ஹோகயா !! :) :) congratulations !
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/940988_644882292204352_880486722_n.jpg

rajasundararajan said...

நல்ல விமர்சனம். ஏதாவது குறைசொல்லியே ஆகவேண்டும் என்பது விமர்சனத்தின் கட்டாயம் ஒன்றும் இல்லை.

Anonymous said...


நளன் குமாரசாமி..not..நலன் குமாரசாமி..( "நளன்"-தமயந்தி)


perumal karur said...

இந்த மாதிரி படங்கள் வந்து வெற்றி பெற்றால் தான் தமிழ் சினிமா ஹீரோக்களிடம் இருந்து முதலமைச்சர் நாற்காலியை காப்பற்ற முடியும்

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
வாழ்த்துகள் அதிஷா.

Senthil kumar said...

நல்ல விமர்சனம். நன்றி

Senthil kumar said...

நல்ல விமர்சனம்:)

swara said...

அருமையான பதிவு அதிஷா..தொடர்ந்து எழுதுங்கள்
Free classifieds in India