23 July 2013

டாலும் ழீயும்!பெரியவர்களுக்கு எழுதுவதை விட குட்டீஸ்களுக்கு எழுதுவது மிகவும் கஷ்டம். நல்ல நல்ல எளிய ஜாலியான வார்த்தைகளை கோர்க்க வேண்டும். கதையில் லாஜிக் என்பதை மிகச்சரியான விகிதத்தில் கலக்கும் வல்லமை வேண்டும். கதையில் புதுமைகள் வேண்டும். படிக்கும் குழந்தைகள் நான்காவது வரியில் சோர்ந்துபோய் தூங்கிவிடக்கூடாது. வரிக்குவரி ஆச்சர்யங்களை புகுத்த வேண்டும்.

வாக்கியங்களில் எளிமை, சமகால குழந்தைகளின் பேச்சுமொழி ஒரளவாவது பரிச்சயமாகியிருக்க வேண்டும்... குழந்தைகள் எழுத்து குறித்து இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனாலேயே தமிழில் யாருமே குழந்தைகளுக்கு கதைகள் எழுத தயாராயிருப்பதில்லை. அப்படியே எழுதினாலும் அது அத்தனை சிறப்பாக இருப்பதுமில்லை. என்னதான் வளர்ந்துவிட்டாலும் நானும் ஒரு மீசை வைச்ச குழந்தைதான் என்பதால் குழந்தைகள் கதை புத்தகங்களை தவறவிடவே மாட்டேன். யூமாவாசுகி, இரா நடராசன் தவிர்த்து தமிழில் அனேக குழந்தைகள் கதைகள் ஒரேமாதிரியான ஸ்டீரியோ டைப் நீதிக்கதைகளாகவே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

எதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே கதைகள் பின்னப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கிற பெரும்பாலான குழந்தைகள் கதைகள் தரமற்ற மொக்கை கதைகளே!

ஏற்கனவே சோட்டாபீமும் ஹட்டோரியும் டோரேமானும் ஆக்கிரமித்துவிட்ட குழந்தைகளின் உலகில் ஒரு புத்தகத்தை நுழைப்பது அத்தனை சுலபமில்லை. புத்தகத்தை கஷ்டபட்டு வாசிக்க குழந்தைகள் தயாராயில்லை. அவர்களுக்கு டிவி பார்ப்பது சுலபமாயிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை ஈர்க்கும்வகையில் கதைகள் எழுதுவது எவ்வளவு சவாலான வேலை!

விழியன் அந்த சவாலை மிக லாகவமாக தன்னுடைய நூல்களில் தாண்டுகிறார். அவர் எழுதிய மூன்று குழந்தைகள் புத்தகங்களை சென்றவாரம் வாசித்தேன். டாலும் ழீயும், பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை என மூன்றுமே டாப்டக்கரான கதைகள் கொண்டவை! மிகமிக எளிமையான கதைகள். இவை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் என நினைக்கிறேன். ஒவ்வொருகதையிலும் ஏராளமான தகவல்களும் ஆச்சர்யங்களும் இருக்கின்றன.

கடலில் வாழும் இரண்டு மீன் நண்பர்கள் சேர்ந்து கடலுக்குள் ஒரு கோட்டையை எழுப்புகிறார்கள். இதுதான் டாலும் ழீயும் புத்தகத்தின் கதை. கடல்வாழ் உயிரினங்கள் குறித்த எளிய தகவல்களோடு இக்கதை படிக்க மிக அருமையாக இருந்தது. நிலாவுக்கு செல்லும் ஒரு குட்டிப்பையனின் சாகசங்கள்தான் அந்தரத்தில் நடந்த அபூர்வகதை இக்கதையில் நிலவு குறித்தும் நட்சத்திரங்கள் குறித்தும் தகவல்கள் இருந்தாலும் நல்ல ஃபேன்டஸி கதையாக இருந்தது.

விழியனின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘’பென்சில்களின் அட்டகாசம்’ ’தான். எல்கேஜி வகுப்பு குட்டீஸ்களின் பென்சில்கள் சேர்ந்து சுற்றுலா போகின்றன. அவற்றை ஷார்ப்னர்கள் துரத்துகின்றன. அவை தப்பித்து எப்படியோ பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இறங்கி ஆட்டம் போடுகின்றன. திரும்பி பள்ளிக்கே வந்து பென்சில்களை காணோம் என தேடிக்கொண்டிருந்த குழந்தைகளை அடைந்தன என்பது கிளைமாக்ஸ்! கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள், அதிர வைக்கும் சேஸிங் அசர வைக்கும் காமெடி என பரபரப்பாக எழுதியிருக்கிறார் விழியன். நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களும் வாசிக்கலாம். உங்களுக்குள் இருக்கிற குழந்தைக்கு நல்ல தீனியாக இருக்கும்.

விழியன் இதுவரை ஐந்தோ ஆறோ குழந்தைகள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மூன்றுதான் வாசிக்க கிடைத்தது. ஒரு குழந்தைகளும் நாவலும் எழுதியிருக்கிறார் என்பதை அவருடைய இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ‘’காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே" என்கிற இரண்டு கதைகள் கொண்ட சிறுவர் நாவலையும் வாசிக்கும் ஆவல் வந்திருக்கிறது. தேடி வாசிக்க வேண்டும்.


விழியனின் சிறுவர்கதைகள் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கின்றன.

7 comments:

விழியன் said...

நன்றி அதிஷா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

குழந்தைகளுக்காக எழுதுவது உண்மையில் ஒரு சவால். இப்போதெல்லாம் குழந்தைப் பாடல்கள் அதிகமாக வருவதில்லை.ராணி வார இதழ் குழந்தைகளுக்காக ஒரு பக்கத்தை ஒதுக்கி இருக்கும்.இப்ஒது அந்தப் பகுதி வருகிறதா என்று தெரியவில்லை..தினமலர் சிறுவர் மலரும் சுட்டி விகடனும் கூட திருப்திகரமாக இல்லை.

Raashid Ahamed said...

அந்த காலத்தில் நான் படித்த முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ் மாதிரி வருமா ? அந்த படக்கதைகள் எல்லாம் இப்போ கொடுத்தாலும் படிப்பேன் அத்தனை சுவை. இப்போ புள்ளைங்க எங்க புத்தகமெல்லாம் படிக்கிதுங்க. டீவி வந்து எல்லாத்தையும் கெடுத்திடிச்சி. இருந்தாலும் நல்ல புத்தகம் கொடுத்தா புத்திசாலி பிள்ளைகள் ஆர்வமா படிக்க தான் செய்யும்.

சிவ.சரவணக்குமார் said...

ரஷித் அவர்களெ..... லயன் காமிக்ஸ் தற்போது புதிய பொலிவுடன் வந்துகொண்டுள்ளது........அவர்களின் தளம் இதோ.......http://lion-muthucomics.blogspot.in/

சிவ.சரவணக்குமார் said...
This comment has been removed by the author.
Raashid Ahamed said...

மிகவும் நன்றி அன்பர் சிவ.சரவணக்குமார். / அதிஷா ! லயன் முத்து காமிக்ஸ் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சியான செய்தி.

ஓஜஸ் said...

Please share the book reviews which u read frequently