Pages

10 July 2013

இது சிங்கம் டான்ஸ்!போனமுறை ஒருடன் எடையுடன் ஓங்கி அடித்த சிங்கம்.. இம்முறை பதினைந்து டன் எடையுடன் பாய்ந்து அடித்திருக்கிறார்.

லைட்வெய்ட்டிலேயே நம் காதுகள் பஞ்சராகிற அளவுக்கு தொற தொற என தொறக்கிற ‘’தொற சிங்கம்’’ ஹெவிவெயிட்டில் சும்மா விடுவாரா? சேம் ப்ளட்!

இயக்குனர் ஹரி ஒரு படத்துக்கு வசனமெழுத ஆரம்பித்தால் சேஷாயி பேப்பர் மில்லையே லீசுக்கு எடுத்தும் பத்தாமல் பக்கத்து மாநிலத்திடம் கடன் கேட்க வேண்டியிருக்குமோ என்னவோ! படத்தில் அம்புட்டு வசனம். அதில் முக்கால்வாசியை ஓயாமால் சூர்யா மட்டுமே சகலருடனும் பேசிக்கொண்டேயிருக்கிறார். அதுவும் அடித்தொண்டையில் ஹைபிட்ச்சில்...! இய்ய்ய்ய்ய்ய்...

படத்தின் வசனத்தை மட்டும் புத்தகமாக வெளியிட்டால் பத்து விஷ்ணுபுரம் அளவு வரும் என்று தோன்றுகிறது. சூர்யா பேசிக்கொண்டே அடிக்கிறார், பேசிக்கொண்டே சாப்பிடுகிறார், பேசிக்கொண்டே நடக்கிறார், பேசிகொண்டே ஓடுகிறார்.. பேசிக்கொண்டே காதலிக்கிறார் அழுகிறார் தூக்கத்திலும் கூட பேசுவார் போல அதை காட்டவில்லை.

இந்தியாவில் பேசினது போதாதென்று சவுத் ஆப்பிரிக்காவுக்கு டிக்கட் போட்டு போய் இங்கிலீஸில் பேசுகிறார்.இவர் பேசுகிற இங்கிலீஸ் தாங்கமுடியாமல் விட்டா இன்னும் நாலு பக்கத்துக்கு வசனம் பேசுவரோ என்கிற பயமோ என்னவோ ஆப்பிரிக்க அதிகாரி ‘’யெஸ் திஸ் இன்டியன் ஆபீசர் ஈஸ் கரெக்ட்’’ என்று சொல்லிவிடுகிறார்.

ஸ்டூடன்ட்ஸ் எப்படி படிக்கணும். தேசிய கீதத்துக்கு எப்படி மரியாதை கொடுக்கணும், எஸ்எம்எஸ் வச்சு எப்படி குற்றவாளிய கண்டுபிடிக்கணும், அப்பா அம்மா மேல எப்படி மரியாதையா இருக்கணும் என ஒரு டியூசன் மாஸ்டரைப்போல நிறைய கற்றுக்கொடுக்கிறார் சூர்யா.

அதோடு பாஞ்சடிச்சா பதினைஞ்சு டன் வெயிட்டு என பானாக்கு பானா போட்டு ஹரி டயலாக் எழுதின பாவத்துக்காக.. படம் முழுக்க கையை உயர்த்திக்கொண்டு பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். அடிக்கும்போது கழுத்து நரம்பெல்லாம் புடைக்கிற புடைப்பில் திரையிலிருந்து குதித்து அடித்துவிடுவாரோ என்கிற அச்சம் பரவலாக நிலவுகிறது.

பராசக்தி கல்யாணிக்கு பிறகு நம்ம சிங்கம் சூர்யாதான் ஒரு படத்தில் அதிகமான தூரம் ஓடியிருப்பார் என்று தோன்றுகிறது. கல்யாணியாச்சும் கடல் இருப்பதால் திரும்பி வந்துவிட்டாள். நம்ம சிங்கமோ கடல் கடந்து ஓடுகிறார். ஆப்பிரிக்காவுக்கே போய் உசைன் போல்ட் போன்ற தோற்றம்கொண்டவரை ரன்னிங் ரேஸில் தோற்கடிக்கிறார். ஓடும்போது சண்டையும் போட்டு பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். ஆப்பிரிக்க போலீஸ் ஆச்சர்யத்தில் ‘’வாட் ஈஸ் திஸ்’’ என்கிறார்கள்.

முன்பு விக்ரமுக்கு நேர்ந்தது சூர்யாவுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை படம் பார்க்கும் போது உணர முடிந்தது. வெர்சடைலாக நடித்துக்கொண்டிருந்த மனுஷன் திடீரென ஒரே மாதிரியான நடிப்புக்குள் தன்னை திணித்துக்கொண்டிருக்கிறார். ஒரே மாதிரியான உடல்மொழி, நடை, உடை, பேச்சு, சிரிப்பு, முக்கியமாக குரல்! (ஏழாம் அறிவில் மாற்றானில் பேசிய அதே மாடுலேஷனில் ‘’திருப்பி அடிக்கணும்.. கொல்லணும் என்றெல்லாம் பேசுகிறார்)

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில், சிமென்ட் விளம்பரத்தில் காபி விளம்பரத்தில் கேட்ட அதே குரல். வில்லனிடம் பஞ்ச் டயலாக் பேசும்போது கூடவே ‘’ஏர்டெல் ஆபர் பத்துரூபாக்கு ரீசார்ஜ் பண்ணுங்க.. பதினோரு ரூபாவுக்கு டாக்டைம்’’ என்று ஏதாவது பேசுவிடுவாரோ என்கிற எண்ணத்தோடு படம் பார்க்க வேண்டியிருந்தது. காதில் சூர்யா என்னும் விளம்பரக்காரனின் குரல் எங்கும் ஒலித்து வியாபித்து கிடக்கிறது.

முந்தைய சிங்கத்தில் சூர்யாவின் உயரம் ஒரு பெரிய குறையாக தெரியாது. காரணம் கொஞ்சம் நீண்ட அகலமாக பேண்ட் அணிந்திருப்பார். ஆனால் சமகால ஃபேஷனான ஷார்ட் டைட்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு இப்படத்தில் வருவதால் அவருடைய அரை அடிக்கும் அதிகமாக உயரங்கொண்ட ஷூவும் அவருடைய குட்டையான கால்களும் நன்றாகவே தெரிகிறது. இனி வருங்காலங்களில் சிங்கம் மூன்று நான்கு ஐந்து எடுக்கும்போது இதை தவிர்க்கவும். (ஏதோ நம்மால ஆன நல்ல காரியம்)

படத்தில் தாங்கவே முடியாத ஒன்று உண்டென்றால் அது ஹன்சிகா மோத்வானிதான். ப்ளஸ்டூ படிக்கிற ஸ்டூடென்டாம். மிஸ்டர் ஹரி நாங்க படிக்காதவங்க, எங்களுக்கு ஊர் உலகம் தெரியாது, எங்களை நீங்க ஏமாத்துங்க வேண்டாங்கல.. ஆனா மனசாட்சியோட ஏமாத்துங்க அவ்ளோதான் சொல்லமுடியும்.

நல்ல வேளை அனுஷ்காவுக்கு ஸ்டூடன்ட் வேஷம் குடுக்கலையேனு சந்தோஷபடு மச்சி என்று நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் அனுஷ்காவை பார்க்க.. வேண்டாம். என்ன இருந்தாலும் அடியேனும் ஒரு அனுஷ்கா ரசிகன்தான்.

மொக்கையான காமெடி காட்சிகள், ரொமான்ஸ் என்றபெயரில் ஹன்சிகா பண்ணுகிற அலப்பறைகள், நடுநடுவே குடும்பத்தினர் பண்ணுகிற சென்டிமென்ட் சொரிதல் அக்கிரமங்கள் என சகிக்கவே முடியாத பல விஷயங்கள். இதுபோக டிஎஸ்பி வேறு ஏற்கனவே போட்ட தன் பாடல்களையே ரீமிக்ஸ் பண்ணி கொடுமைப்படுத்துகிறார். அவரே சிங்கம் சிங்கம் என கத்தி கத்தி காதுகிழிக்கிறார். முந்தைய சிங்கத்தில் இருந்த பெப்பி மியூசிக்கும் அனுஷ்காவின் அழகும் முக்கியமாக பிரகாஷ் ராஜூம் இப்படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆப்பிரிக்க வில்லனெல்லாம் சுத்தமாக பயமுறுத்தவில்லை!

‘’அடிக்கிற கட்டதொரைக்கு தெரியாதுய்யா, அடிவாங்குற கைப்புள்ளையின் வலியும் வேதனையும்!’’ என்பார்கள் மூத்தோர்கள் முன்னோர்கள். அதுபோல படமெடுத்த ஹரிக்கு தெரியுமா நம்முடைய காதுவலியும் தலைவலியும்! படத்தின் டிக்கட்டோடு காதடைக்க பஞ்சும் அமிர்தாஞ்சனோட டைகர் பாமோகூட கொடுக்கலாம்!

படத்தில் இப்படி ஏகப்பட்ட குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதெல்லாம் படம் முடிந்த பின் ஆற அமர உக்காந்து யோசித்தால்தான் தெளிவாக தெரிகிறது. படத்தின் இயக்குனர் ஹரி என்கிற உள்ளூர் மந்திரவாதிக்கு மக்களை குறிப்பாக ஃபேமிலி மக்களை கட்டிப்போட்டு படங்காட்டும் குரளிவித்தை ஏதோ தெரியும்போல.. பேய் வேகத்தில் நம்மை எதைப்பற்றியும் சிந்திக்கவே விடாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

‘தம்பி எதுவாருந்தாலும் படம் முடிஞ்சப்பறம் முடிவு பண்ணிக்குவோம்’ என்று படம் பார்க்கிறவரோடு அக்ரிமென்ட் போட்டுக்கொள்கிறார். படம் தொய்வடையும்போதெல்லாம் சிலிர்க்க வைக்கிற ஹீரோயிச காட்சி ஒன்றை நுழைக்கிறார்.. உதாரணத்துக்கு மழையில் காத்திருந்து அடிக்கிற நோவெபன் வித் ஃபேமிலி ஃபைட்!

சிங்கம் பார்ட் ஒன்னில் ஒரு காட்சி வரும்.. நிழல்கள் ரவி கோபத்தோடு சூர்யாவை திட்டுவதற்காக ஸ்டேஷனுக்கு வருவார். அவர் பேசுவதற்கு முன்பாகவே சூர்யா பேச ஆரம்பிப்பார். பேசிக்கொண்டேயிருப்பார். நிழல்கள் ரவியை பேசவே விடமாட்டார். நிழல்கள் ரவி கேட்டுக்கொண்டே பின்னோக்கி நடந்துகொண்டேயிருப்பார். திடீரென்று பார்த்தால் ஸ்டேஷனிலிருந்து வெளியேறி சாலையில் நின்றுகொண்டிருப்பார். என்ன நடந்துது, சூர்யா என்ன பேசினார் என்பது புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நிற்பாரே அதுமாதிரி சிங்கம்2 படத்துக்கு டிக்கட் வாங்கி உள்ளே போனதுதான் தெரிகிறது.. படம் முடிந்து வண்டிபார்க்கிங்கில் நிற்கிறோம்.. நடுவில் சூர்யா நிறைய பேசினார் என்பதும் நமக்கு காது வலிக்கிறது என்பதையும் தவிர வேறு என்னாச்சு ஏதாச்சு என்கிற எந்த உணர்வும் இல்லை!