10 September 2013

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்!
ஒரு புத்தகத்தின் 128 பக்கங்களையும் புன்னகையோடு வாசித்ததுண்டா? சிவக்குமாரின் ஆதிமங்கலத்து விசேஷங்கள் நூலின் ஒவ்வொரு வரியிலும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத்தான் நகரவேண்டியிருக்கிறது. அல்லது அவரே அதை பிடுங்கிக்கொள்கிறார். எவ்வளவு கனமான விஷயங்களையும் மிகமிக எளிய ஆனால் உற்சாகமான மொழியில் எள்ளலோடு சொல்லிச்செல்கிறார்.

ஆதிமங்கலம் என்கிற கற்பனை கிராமத்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விஞ்ஞான சாதனங்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் மனிதர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியமைக்கிறது என்பதுதான் மொத்த நூலுமே.. இவை கட்டுரைத்தொகுப்பா? அல்லது சிறுகதை தொகுப்பா? அல்லது இரண்டு கலந்த கலவையா? என்கிற ஆராய்ச்சிகளை தாண்டி... மிகமிக சுவாரஸ்யமாக எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணம். ஐம்பதாண்டு தமிழகத்தின் சுறுக்கப்பட்ட எளிய வரலாற்றின் ஒருபகுதி இப்புத்தகத்தினுள் இருக்கிறது.

தமிழ்நாட்டின் சிறுநகர கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்த வெவ்வேறு விஷயங்களும் இப்புத்தகத்தின் வெவ்வேறு பாத்திரங்களின் சம்பவங்களின் ஊடாக அலசிகாயப்போடப்படுகின்றன. மின்சாரம், பேருந்து, மருந்துக்கடை, டிவி, சுடிதார், பாக்கெட் மாவு, தபால் ஆபீஸ், மொபைல் போன், தொலைபேசி, அழைப்புமணி, கிரைண்டர் என இன்று நம்முடைய வாழ்க்கையோடு இணைந்துவிட்ட பல விஷயங்களின் முதல் வருகை எப்படி இருந்திருக்கும் என்பதை சிரிக்க சிரிக்க கூறுகிறார் சிவகுமார்.

90களின் துவக்கத்தில் ஊருக்குள் டிவி இருக்கிற ஒற்றை வீடுகளை முற்றுகையிட்டு டிவி பார்த்த காலம் ஒன்றுண்டு. காலையிலிருந்தே கேட் அருகே தபாலுக்காக காத்திருந்த காலம், பஸ் வருகிற நேரத்தை வைத்து டைம் சொன்ன ஆசாமிகள் உண்டு,கையில் மலேசிய வாட்ச் கட்டியிருப்பது ஒரு ஸ்டேடஸ்! போட்டோ பிடித்தால் ஆயுசு குறையும் என்கிற நம்பிக்கையில் படமெடுக்க தயங்கியதுண்டு. செங்கல் சைஸில் போன்களை கொஞ்சமாய் தெரியும்படி மேல் பாக்கெட்டில்வைத்துக்கொண்டு திரிந்தவர்கள் உண்டு, இப்படி எண்ணற்ற உண்டுகளை அச்சுஅசலான கிராமத்து மனிதர்களின் வழியே பதிவு செய்திருக்கிறார் க.சீ.சிவக்குமார்.

எந்த ஒரு புதிய விஷயமும் அதன் முதல் வருகையில் நம்மை பயமுறுத்தி பின்பு ஆச்சர்யப்படுத்தி... அதுகுறித்த பலவித அனுமானங்களை உருவாக்கி... இறுதியில் அனைவருக்கும் கிடைத்து.. சகஜமாகி வாழ்க்கையோடு கலந்துவிடுகின்றன. அதுகுறித்த பெரிய பிரக்ஞையே இன்றி வாழ ஆரம்பித்துவிடுகிறோம். உதாரணத்துக்கு மின்சாரம்..! இன்று மின்சாரம் இல்லையே என்று ஃபீல் பண்ணுகிற அதே நாம்தான் இதோ வெறும் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று அது வேறொன்றாக பரிணமித்திருக்கிறது. நாம் உபயோகிக்கிற எதுவுமே இதற்கு தப்பமுடியாது. அதுதான் இந்நூலின் மையமாக இயங்குகிறது.

நம்முடைய காதலை வீரத்தை நகைச்சுவை அன்பை சுற்றத்தை எப்படி இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் திருத்தி எழுதின என்பதை ஆதிமங்கலத்து பாத்திரங்களை வைத்துக்கொண்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார் க.சீ.சிவக்குமார்.

இதற்காக அவர் கையாண்டிக்கிற மொழி மிகவும் எளிமையானது. சுவையானது. துப்பாக்கியைப்பற்றிய கட்டுரை ஒன்று உள்ளது. அதில் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஜபர்தஸ்தாக வாழ்ந்த ஒருவர் தன் மகன்களின் சொத்துச்சண்டையில் மனமொடிந்து சில நாட்களில் மரித்துப்போவார். அக்கட்டுரையை இப்படி முடித்திருப்பார் சிவகுமார். ‘’மனிதன் துப்பாக்கிகளினால் மட்டும் சாவதில்லை’’.

‘’உடன் பதில்... உயிர் அதில்!’’ இவ்வளவு சிறிய ஆனால் சத்தான புஷ்டியான ஒரு காதல் கடிதத்தை எழுத்தாளர் க.சீ.சிவக்குமாரால்தான் எழுதமுடியும். இதுபோல ஆயிரத்தி சொச்சம் ஒன்லைனர்கள் புத்தகம் முழுக்க நிறைந்துகிடக்கின்றன.

நூலின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதைக்கே உரிய நேர்த்தியுடன் எழுதப்பட்டிருந்ததோடு படித்து முடிக்கும்போது சிறியதும் பெரியதுமான அதிர்வுகளையும் விட்டுச்செல்கிறது. செல்போன்குறித்த கட்டுரையை குறும்படமாகவே எடுக்கலாம் அவ்வளவு ஆழமான காதலும் பரபரப்பும் உள்ள அருமையான சிறுகதை அது!

புத்தகத்துக்கு மேலும் பலம் சேர்ப்பது மருதுவின் அருமையான ஓவியங்கள். ஒவ்வொரு ஒவியமுமே ஒரு கதை சொல்லும். தோளில் சின்ன வானொலியோடு தலையில் முண்டாசும் கோவணுமுமாக பாடிக்கொண்டே செல்லும் விவசாயியின் உருவம் சாகும்போதும் மறக்காது.

ஆதிமங்கலத்து விசேஷங்கள்
விகடன் பிரசுரம்


***

சென்றமாத (ஆகஸ்ட்) காட்சிப்பிழை திரை இதழில் இவர் தன்னுடைய திரைப்பட அனுபவங்களை எழுதியிருந்தார். மிகவும் வருத்தமூட்டுகிற அனுபவங்களை அவருக்கு திரைத்துறை அளித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதோ இதோ என போக்கு காட்டி கடைசிவரை வாசலிலேயே நிற்க வைத்து வேடிக்கை பார்த்த கதை க.சீ.சிவக்குமாரினுடையது. ஆனால் அதையும் கூட நகைச்சுவை உணர்வோடு சொல்லிச்சென்றிருந்தார். கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

9 comments:

Anonymous said...

புத்தகம் எவ்வளவுங்க?

Raashid Ahamed said...

இது ஜூனியர் விகடனில் தொடராக வந்த போது படித்த ஞாபகம் ! ஒரு பாகத்தை படித்த போதே வயிறு குலுங்க சிரித்தேன். சொல்லப்போனால் புத்தகம் முழுவதையும் சிரித்த படி படிக்க முடியும் என்று உறுதியாக சொல்லலாம் .

Raashid Ahamed said...

இது ஜூனியர் விகடனில் தொடராக வந்த போது படித்த ஞாபகம் ! ஒரு பாகத்தை படித்த போதே வயிறு குலுங்க சிரித்தேன். சொல்லப்போனால் புத்தகம் முழுவதையும் சிரித்த படி படிக்க முடியும் என்று உறுதியாக சொல்லலாம் .

Raashid Ahamed said...

இது ஜூனியர் விகடனில் தொடராக வந்த போது படித்த ஞாபகம் ! ஒரு பாகத்தை படித்த போதே வயிறு குலுங்க சிரித்தேன். சொல்லப்போனால் புத்தகம் முழுவதையும் சிரித்த படி படிக்க முடியும் என்று உறுதியாக சொல்லலாம் .

Anonymous said...

திறமை உள்ள மனிதர். சினிமா உலகம் விரும்பும் போலி முகமூடி அற்றவர் சிவகுமார்.

Venkatramanan Vasan said...

அன்பின் அதிஷா

மற்றுமொரு சிவக்குமார் ரசிகனைப் பார்ப்பது மகிழ்ச்சியாயுள்ளது!
நான்கு வருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வந்தது. அதே இடுகையில் சற்றுமுன் சில தொடுப்புகளைச் சேர்த்துள்ளேன்.

நிச்சயம் தங்களுக்கு உவப்பாயிருக்குமென நம்புகிறேன்.
தொடர்புள்ள இடுகை: புத்தகக்காட்சியும் க.சீ.சிவக்குமாரும்

அன்புடன்
வெங்கட்ரமணன்

சிவ.சரவணக்குமார் said...

எங்கள் ஊர் எழுத்தாளரைப்பற்றிய உங்கள் பாராட்டுக்கு நன்றி.....[ என் அண்ணனின் நண்பர்.......[எனக்கும் தான்] மேற்படி புத்தகத்தில் அவர் குறிப்பிடும் பைக் உலக நாதன் என் அண்ணனை மனதில் வைத்தே எழுதப்பட்டது என்று நினைக்கிறேன் ] ஆதிமங்கலம் என்று அவர் குறிப்பிடும் ஊர் கன்னிவாடி [ திருப்பூர் மாவட்டம் ]

இளம் பரிதி said...

'குண சித்தர்கள் ' படிச்சு பாருங்க ..அடி பிரிச்சு மேஞ்சு இருப்பரு...கிழக்கு பதிப்பகம் .... சிவக்குமார் அண்ணன் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் ...

ShrutiTV said...

Here is Writer Ka.Si. Sivakumar speech video

https://www.youtube.com/watch?v=7cdT43HGaaY