Pages

23 September 2013

மூடர்கூடம்




சாந்தி தியேட்டரில் மூடர்கூடம் படத்துக்கு அன்றைய தினம் முதல் டிக்கட்டை எடுத்தவன் நானே. எனக்கு பிறகு யாரெல்லாம் டிக்கட் எடுக்கிறார்கள் என்பதை கவுண்ட்டருக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். படம் போடும்வரை டைம்பாஸ் ஆகவேண்டாமா?

மூன்று ஜோடி காதலர்கள் மட்டுமே அதற்கு பிறகு டிக்கட் எடுத்து தியேட்டருக்குள் நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் ஆளுக்கு ஒரு மூலையை தேர்ந்தெடுத்து மறைந்துகொள்ள.. தன்னந்தனியாக நான் மட்டும் அமர்ந்திருந்தேன். அந்த ஜோடிகள் யாரும் படம் பார்க்க வந்தவர்களாக தெரியவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கவும் சாந்தியில் வசதியில்லை. ஆனால் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதை என்னுடைய வாசக மனது தானாகவே இட்டு நிரப்பிக்கொண்டிருந்தது.

ஏனோ அந்த பிரமாண்டமான இருள் நிறைந்த திரையங்கில் படம் அமர்ந்திருப்பது பூத்பங்களாவில் பேய்க்காக காத்திருப்பது போல் இருந்தது. டே சீக்கிரம் படத்தப்போடுங்கடா பயமாறுக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

நல்ல வேளையாக படம் தொடங்க சில நிமிடங்கள் முன்பு சிலர் என்னோடு இணைந்துகொண்டனர். சிலர் என்பது ஐந்து அல்லது ஆறுபேராக இருக்கலாம். அவர்களோடு நானும் சேர்ந்துகொண்ட படம் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் தொடங்கி முதல் சில காட்சிகளிலேயே நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு வசனமும் பாத்திரப்படைப்பும் காட்சிகளும் அவ்வளவு அரசியலும் பகடியும் நிறைந்ததாக இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். நவீன் மிகநன்றாக படமாக்கியிருந்தார்.

எனக்கு சிரிப்புன்னா சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு. ஆனால் எனக்கு அருகில் அமர்ந்திருந்த யாரும் சிரிக்கவில்லை. சீரியஸாகவே படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

என்னங்கடா இவ்ளோ சூப்பர் ஜோக்கு.. இதுக்கூட சிரிக்காம அப்படியே இடிச்ச புளி கணக்கா உக்காந்திருக்கீங்க என்கிற என் மனசாட்சியின் கதறல் யாருக்கோ கேட்டிருக்கும்போல.. லேசா ஹிஹி என்று சிரிப்பது கேட்டது! நான் தனியாள் இல்ல.

இடைவேளை.

கையில் சிகரட்டோடு ஒரு நபர் என்னிடம் வந்து தீப்பெட்டி இருக்குமா என்றார்.

‘’சார் நுரையீரல் பஞ்சுபோன்று மென்மையானது.. புகைபிடிப்பதால் இவ்வளவு பாதிப்பூ...’’ என்று சொல்லத் தொடங்கினேன். பக்கத்தில் இருந்த மணல் கொட்டிவைக்கப்பட்டிருந்த குண்டாவில் த்தூ என துப்பிவிட்டுச்சென்றார். அந்த குண்டா முழுக்கவே நிறையபேர் துப்பியிருந்தனர்.

இன்னொரு நபர் என் அருகில் வந்து நின்றார். ‘’என்னசார் படம்பூ... எடுக்குறானுங்க.. அஞ்சுரூவா கூட செலவுபூ பண்ணாத இன்னாபூ படம்பூ இது.. காமெடினு லூசுமாதிரி நட்ந்துக்குறானுங்க’’ என்று புலம்பினார்.

‘’சார் உங்களுக்கு படம் புரியலை.. இந்தமாதிரி படம் பார்க்க உங்களுக்கு கொஞ்சமாவது வாசிப்பு அனுபவம்.. அரசியல் ஞானம் இருக்கணும்.. அதாவது படத்துல சொல்ல வர விஷயம் என்னான்னா.. நம்ம சமூகத்துல இருக்கிற வெவ்வேற பிரச்சனைகளை அதன் தாக்கங்களை மார்க்ஸ் சொன்ன மாங்கா தத்துவத்த எவ்ளோ அழுகா...’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்க..

அதுவரை முறைத்தபடி கேட்டுக்கொண்டிருந்த அந்த நபரும் கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த குண்டானில் சிகப்பு நிறத்தில் துப்பிவிட்டுச்சென்றார். படம் ஆரம்பித்துவிட்டதுபோலிருக்க நானும் அதே குண்டானில் நானும் ஒருக்கா வெள்ளை நிறத்தில் துப்பிவிட்டு கிளம்பினேன்.

படம் தொடங்கியது.

ஒவ்வொருவராக சிரிக்க ஆரம்பித்து படம் முடியும்போது எல்லோருமே சிரித்துக்கொண்டிருந்தனர். சில இடங்களில் மிகப்பெரிய உற்சாகத்தோடு சத்தமாக அவர்கள் சிரித்தனர். நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்தேன். படம் முடிந்ததும் பார்க்கிங்கில் வண்டியை கிளப்பும்போது.. அந்த இடைவேளை துப்புதல் திலகம் என்னைப்பார்த்து புன்னகைத்தார். நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன். அடுத்தகாட்சிக்கு இரண்டுபேர்தான் காத்திருந்தனர். அவர்களும் காதல்ஜோடிகள்தான்.

சாய்சாந்தியில் கான்ஜூரிங் என்கிற ஹாலிவுட் படம் ஓடிக்கொண்டிருந்தது, அதற்காக வந்திருந்த இரண்டுபேர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு.. பேசிக்கொண்டிருந்தனர். ‘’மச்சான் மூடர்கூடம்னு கூட ஒருபடம் இருக்கே.. அதுக்கு போவமா.. செமயாருக்கும் போலருக்கே’’ என தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

‘’மொக்கை படம் போலருக்கு மச்சான்.. ஓவியாலாம் இருக்கு... அத பாக்க நாம பேய்ப்படத்துக்கே போவோம்’’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தவர்களிடம்...

‘’பாஸ் மூடர்கூடம் கட்டாயம் பாருங்க ரொம்ப நல்ல படம், மிஸ்பண்ணிடாதீங்க! இதுமாதிரி படங்களை நாமதான் என்கரேஜ் பண்ணனும்..’’ என்று சொல்லிவிட்டு என் வண்டியை கிளப்பிவீடுவந்து சேர்ந்தேன். அவர்கள் கான்ஜூரிங் போயிருப்பார்கள். அதோடு நான் சென்றபின் துப்பியும் இருக்கலாம். யாருக்குத்தெரியும்.

*******

படம் அட்டாக் ஆஃப் தி கேஸ் ஸ்டேஷன் என்கிற படத்தின் தழுவல் என்று நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்தார். வருத்தமாக இருந்தது. இன்னும் அப்படம் பார்க்கவில்லை. அப்படியெல்லாம் இருந்துவிடக்கூடாது என எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக்கொண்டேன். நவீன் மேல் நம்பிக்கை இருக்கிறது.