Pages

20 September 2013

பாம்புகள் என்றால்...




‘’சார் அவன் ஒரு நரிப்பய சார்’’
‘’அய்யோ அவனா அவனுக்கு பாம்பு மாதிரி உடம்பெல்லாம் விஷமாச்சே’’
‘’பிணந்திண்ணி கழுகுகள் மாதிரி சார் அவங்க.. செத்தாலும் விடாமட்டாங்க’’
‘’யானை மிதிக்கிறாப்ல உன்னை மிதிச்சிடுவேன் பாரு’’

இதுமாதிரியெல்லாம் சூழலியல் எழுத்தாளர் ச.முகமது அலியிடம் உரையாடினால் மூக்கிலேயே குத்திவிடுவார். காட்டுயிர்களை இதுபோல தவறாக உவமைப்படுத்துவதை அடியோடு வெறுப்பவர் முகமதுஅலி. மிகவும் கோபக்காரர். அதை அவருடைய எழுத்துகளில் ஒவ்வொரு சொற்களிலும் ஒவ்வொரு வரிகளிலும் உணர முடியும். சுற்றுசூழல் குறித்து அனல்பறக்க எழுதுபவர்கள் இவர்.

தன் எல்லா புத்தகங்களிலும் இதுபோன்ற உவமைகளை பயன்படுத்துவது, கார்ட்டூன்களில் விலங்கினங்களை தவறாக சித்தரிப்பது, பாடல்களில் இலக்கியங்களில் நம் புக்கங்களின் தலைப்புகளில் சிறார் கதைகளில் என விலங்குகளின் குணங்களாக சிலவற்றை முன்னிருத்துவதையெல்லாம் தொடர்ந்து விமர்சித்து வருபவர். கோவை மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் இவர் 80களிலிருந்து இன்றுவரை ‘’காட்டுயிர்’’ என்கிற மாத இதழையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

மிகசிறப்பாகவும் எளிமையாகவும் காட்டுயிர்களைப்பற்றி எழுதக்கூடியவர் முகமது அலி. அவருடைய ‘’யானைகள் – அழியும் பேருயிர்’’ என்கிற நூல் இதுவரை தமிழில் வெளியான யானைகள் குறித்த புத்தகங்களில் மிகமிக முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது. யானைகளைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய நூல் இது. இவை தவிர பறவைகள் குறித்து வட்டமிடும் கழுகு, நெருப்புக்குழியில் குருவி முதலான நூல்கள் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டவை. காட்டுயிர்கள் குறித்த சரியான புரிதலையும் தேடலையும் உண்டாக்குபவை. இதுவரை காட்டுயிர்கள் தொடர்பாக வெவ்வேறு தலைப்புகளில் ஆறுநூல்களை முகமது அலி எழுதியுள்ளார்.

அவருடைய ‘’பாம்பு என்றால்’’ என்கிற நூல் அண்மையில் வாசிக்க கிடைத்தது. பாம்புகளை பற்றிய நம்முடைய மூடநம்பிக்கைகளில் தொடங்கி அவற்றின் உடலமைப்பு, வாழ்க்கைமுறை என பல்வேறு தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்தியாவில் வாழும் 200 ப்ளஸ் பாம்பு வகைகளில் வெறும் நான்குவகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை மீதியெல்லாமே விஷமற்றவை என்கிற தகவல் முக்கியமானது. கருநாகம் அல்லது ராஜ நாகம், நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை விரியன், கடல் பாம்பு, பச்சைபாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், சாரைப்பாம்பு, மன்னுளிப்பாம்பு, சிறுபாம்பு, தண்ணீர் பாம்பு என தமிழகத்தின் பலவகை பாம்புகள், அவற்றின் வாழ்விடங்கள், உணவு முறை, வெவ்வேறு விதமான குணாதியசங்கள், பாம்புகள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மனிதர்கள் என பல தகவல்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.

நம் ஊரில் விநோதமான ஒரு பழக்கமுண்டு. பாம்புகளை தெய்வம் என வணங்குவோம். அதே பாம்பு வீட்டுக்குள்ளோ அல்லது தோட்டத்திலோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்லவோ எரித்துக்கொல்வதற்கோ தயங்குவதில்லை. எரித்தோ அடித்தோ கொன்றுவிட்டு அதற்கு பிறகு செத்துப்போன பாம்பை பார்த்து பயந்து போய் அதற்கு பூஜை செய்து பால் ஊற்றி புதைப்போம்.... இது என்ன வகையான மூடநம்பிக்கை என்பது புரியாத புதிரே. பாம்புகளை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இவ்வகை மூடநம்பிக்கைகளை ஒழிக்கவே முடியாது என்கிறார் முகமது அலி.

நாட்டில் பாம்புகள் கடித்து மாண்டுபோகிறவர்களில் பாதிபேர் பயத்தினாலே மாண்டுபோகிறவர்கள்தான் என்கிறது இந்நூல். அதோடு வீட்டுக்குள் பாம்பு வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பாம்புகள் கடித்துவிட்டால் எப்படி முதலுதவி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாம்புக்கடிக்கு உலகில் அலோபதி தவிர்த்து வேறெந்த முறை மருத்துவமும் ஆபத்தானதே என்று ஆணியடித்துச் சொல்கிறார்.

கொம்பேறி மூக்கன் என்கிற பாம்பு மனிதர்களை பழிவாங்க அவர்களை கடித்து கொன்றதோடு செத்துப்போனவரை புதைத்த சுடுகாடு வரைக்கும் வந்து பார்க்கும் என்று ஒரு கதை உண்டு.. உண்மையில் கொம்பேறி மூக்கன்கள் மிகச்சிறிய வகை பாம்புகள். அவற்றிற்கு விஷம் கூட கிடையாது! அதோடு இந்த மூடநம்பிக்கையாலேயே இவை தொடர்ந்து பார்த்த இடத்தில் கொல்லப்படுவது அதிகமாக நடக்கிறது என்று கவலைகொள்கிறார் நூலின் ஆசிரியர். அனகோன்டாவில் தொடங்கி நம்மூர் நாகாத்தாம்மன் படமெடுக்கும் இராமநாராயணன் வரை பாம்புகள் பற்றி கொஞ்சமும் புரிதல் இல்லாமல் படமெடுக்கிற இயக்குனர்களையும் சாடத்தவறவில்லை முகமது அலி.

இரண்டுபாம்புகள் அப்படியே சுருண்டு பின்னி பிணைந்திருப்பது நம்முடைய திரைப்படங்களில் இரண்டு பாம்புகளின் ரொமான்ஸாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இரண்டு ஆண்பாம்புகளின் சண்டை என்றும், இணைக்காகவும் தங்கள் வாழ்விடத்துக்காகவும் அவை சண்டையிட்டுக்கொள்வதை தவறாக இப்படி இத்தனைக்காலமும் சித்தரித்திருக்கிறோம்.

ராஜநாகம் அல்லது கருநாகம் என்கிற மிக அதிக விஷம்கொண்ட பாம்பு ஒன்று மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்ட சம்பவமும் இந்நூலில் இடம்பிடித்துள்ளது. காடுகளை ஆக்கிரமிக்கும் மனிதர்களின் பேராசைக்கு எப்படி காட்டுயிர்கள் பலியாகின்றன என்பதற்கு இச்சம்பவம் மிக நல்ல எடுத்துக்காட்டு.

வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம் பல தகவல்கள் நூலின் எல்லா கட்டுரைகளிலும் திரும்ப திரும்ப (உலகின் விஷமுள்ள பாம்பு ராஜநாகம், சிறிய பாம்பு மாதிரியான தகவல்கள்) வருகின்றன. கொஞ்சம் அதை பார்த்து எடிட் பண்ணிப்போட்டிருக்கலாம். ஏனென்றால் படிக்கும்போது எரிச்சலாக இருக்கிறது.

பாம்புகளின் சகல விஷயங்களையும் வெவ்வேறு நாட்டினரிடையே இருக்கிற பாம்புகளுடனான தொடர்புகளை எளிமையாக ஆராய்கிற இந்நூலில் ஏனோ இருளர்கள் பற்றிய ஒரு குறிப்பு கூட இல்லை. அது வேண்டுமென்ற தவிர்க்கப்பட்டிருக்கலாம். மற்றபடி பாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைகளை இந்நூல் போக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. பாம்புகளை பற்றிய அச்சம் அதிகமாக உள்ள என்னைப்போன்றவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய சிறிய நூல் இது.


பாம்பு என்றால்
இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியீடு
மேட்டுப்பாளையம்
தொலைபேசி எண் - 04259-253252
80பக்கங்கள் , 50ரூ.