Pages

04 September 2013

உலகின் நம்பர் ஒன் வாசகர்!



வெளிநாட்டு செய்திகள் என்றாலே எசகுபிசகான விஷயமாகவோ அல்லது ஏடாகூட சாதனைகளாக இருந்தால்தான் ஆர்வத்தோடு வாசிப்போம். ஆன்மோர்கனின் சாதனையும் ஒரு ஏடாகூட சாதனைதான் என்றாலும் நிறையவே இன்ட்ரஸ்டிங்!

எதையோ கூகிளில் தேடிக்கொண்டிருந்தபோது ஆன்மோர்கன் பற்றியும் அவருடைய வலைப்பதிவு முயற்சிகள் பற்றியும் சிலவாரங்களுக்கு முன்பு ஹிந்துவில் வெளியான கட்டுரை ஒன்று கண்ணில்பட்டது. அவரைப்பற்றி தேடி தேடி வாசித்தால் எல்லாமே ஆச்சர்யமான விஷயங்களாக இருந்தன. இவருடைய ஏ இயர் ஆஃப் ரீடிங் தி வோர்ல்ட் என்கிற முயற்சி தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பதாகவும் உற்சாகமூட்டக்கூடியதாஎவும் இருந்தன.

2012 ஒலிம்பிக்கின் போது இங்கிலாந்தை சேர்ந்த ஆன் மோர்கன் என்கிற இளம்பெண்ணுக்கு ஒரு எடக்கு மடக்கான யோசனை வருகிறது. உலகின் சகல புத்தகங்களையும் படித்துவிட்டால் என்ன? அது சாத்தியமில்லைதான் என்றாலும் அதில் ஒரு மடக்காவது அள்ளி குடிக்க முயற்சிபண்ணினால்... ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளின் மிகச்சிறந்த புத்தகங்களை தேடி படித்துவிட்டு 197வதாக உலகுக்கு ஒரு நல்ல புத்தகத்தை எழுதுவது என முடிவெடுக்கிறார். நல்லாருக்குல்ல ஐடியா!

ஆனால் அது இரண்டுவரியில் ஒரு பாராவில் விவரிப்பதுபோல அவ்வளவு எளிதாக இல்லை. சில நாடுகளில் புத்தகங்கள் என்பது மிக மிக அரிதாக அச்சிடப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் புத்தகமே கிடையாது எல்லாமே வாய்வழி கதைகள்தான். சில நாடுகளோ தங்களுடைய புத்தகங்களை மேற்கத்தியர்கள் வாசிக்கவும் நாட்டைவிட்டு வெளியே பரப்பவுமே தடைவிதித்திருந்தனவாம். அதுபோக இந்தியாவைப்போல பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாட்டில் எப்படி மிகச்சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது? ஒருநாட்டுக்கு ஒரு புத்தகம் என வாசித்தால் மட்டும் ஒருநாட்டின் சகல விஷயங்களையும் புரிந்துகொண்டுவிட இயலுமா?

உலக நாடுகளின் மிகச்சிறந்த இலக்கியங்களில் வெறும் மூன்று சதவீதம்தான் இங்கிலாந்தில் மொழிபெயர்க்கபடுகின்றன. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஆன் மோர்கனுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும் தேடுதல் வேட்டையையும் வேட்கையையும் விடவில்லை.
அதோடு ஒரே நாட்டின் பல புத்தகங்களையும் படிக்க முடிவெடுத்தார். தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய ஆர்வம் குறித்து ஒரு பதிவை எழுதிப்போடுகிறார். துவக்கத்தில் ஆதரவு குறைவுதான் என்றாலும் பின்னாளில் அவருக்கு உதவிகள் செய்ய உலகெங்கும் இருந்து வெவ்வேறு நாட்டினரும் முன்வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பல்வேறு புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி அனுப்பவும் பரிந்துரைக்கவும் செய்தனர். புத்தகமே இல்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணித்து அங்கே இருக்கிற மூத்தவர்களோடு பேசி பேசி கதைகள் கேட்டு சேகரித்திருக்கிறார்!

நல்ல நல்ல புத்தகங்களை தேடி தேடி சேகரித்து இரண்டுநாட்களுக்கு ஒரு புத்தகம் என்கிற யோசனையுடன் வேகவேகமாக படிக்கத்தொடங்கினார். ஒவ்வொரு புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டு அதை பற்றி தன்னுடைய வலைப்பூவில்(BLOG) ஒரு எளிய சிறப்பான அறிமுகமும் தர ஆரம்பித்தார்.

புத்தகங்கள் அவருடைய சிந்தனையோட்டத்தை உலகம் குறித்த புரிதலை மாற்றியமைத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். இந்தியாதான் புத்தக தேர்வுக்கு மிக கடினமானதாக இருந்தது என்றும் எம்டிவாசுதேவன் நாயரின் காலம் நாவலின் மொழிபெயர்ப்பு தன்னை பெரிதாக ஈர்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் மோர்கனின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இணையதளமான http://ayearofreadingtheworld.com/ க்கு ஒரு விசிட் அடித்துப்பாருங்கள். அதில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியில் இருக்கிறது. மலைப்பாக இருக்கிறது. எவ்வளவு விதமான புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகங்கள் குறித்தும் சளைக்காமல் எழுதப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான அறிமுகங்கள்.

வாசிப்பென்பது சுருங்கிப்போய்விட்ட காலத்தில் , வாசிப்புக்கான நேரத்தை மற்ற பல வித கேளிக்கை விஷயங்களும் தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிற காலத்தில், புத்தகங்களை வெறித்தனமாக நேசிக்கிற ஒருவரால்தான் இப்படி ஒரு முயற்சியில் இறங்கி வெற்றிபெற முடியும். ஆன்மோர்கனின் புத்தக அறிமுகங்களை மட்டுமே வாசித்தாலும் கூட ஒரு குட்டி உலகை புரிந்துகொள்ள முடியுமென்று தோன்றுகிறது!

ஆனுக்கு நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட) எதையாவது பரிந்துரைக்க நினைத்திருக்கிறேன். அதற்கு முதலில் நான் ஓரளவாவது வாசித்திருக்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். அதோடு இந்திய அளவிலாவது நம்மை சுற்றியுள்ள மாநிலங்களின் இலக்கியங்களை தேடி வாசிக்கவேண்டும் என்கிற உத்வேகம் உண்டாகியிருக்கிறது.

ஆன் மோர்கனின் இணையதளம் - http://ayearofreadingtheworld.com/

அவருடைய ஃபேஸ்புக் பக்கம் - http://www.facebook.com/pages/A-Year-of-Reading-the-World/344253838955473