Pages

06 September 2013

கலைஞரின் சிலை!முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலையின் இதயப்பகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் மறைவின் போது அது கலவரக்காரர்களால் இடித்துத்தரைமட்டமாக்கப்பட்டது. அந்த அபூர்வமான சிலையின் புகைப்படம் எதுவும் இதுவரை பார்க்க கிடைத்ததேயில்லை.

ஒரு தலைவர் உயிரோடிருக்கும்போது வைக்கப்பட்ட சிலை அது. கடந்த சில ஆண்டுகளில் அப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த தமிழ் தலைவருக்கும் நடந்திருக்காது. அப்படிப்பட்ட சிலை எப்படி இருந்திருக்கும் என்று பார்க்கிற ஆர்வம் எப்போதும் எனக்குள் இருந்தது. அந்த ஆவல் சென்றவாரத்தில் ஒருநாள் பூர்த்தியானது.

ஏதோ டிவியில், அனேகமாக அது கேடிவியாக இருக்கக்கூடும், ‘’பட்டம் பறக்கட்டும்’’ என்கிற பழைய படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ராமநாராயணன் எடுத்த இப்படம் அப்போதைய (70களின் இறுதியில்) வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தை அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் மிகமிக சோகமான வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

(ராமராஜன் அறிமுகமான படம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. படத்தில் அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். படத்தின் நாயகன் வாகை சந்திரசேகர். பத்துநாள் தாடியோடு ஒல்லிபிச்சானாக வயிறு ஒட்டி ஒரு வேலையில்லா ஏழையாக வாழ்ந்திருக்கிறார். மற்றபடி ரொம்ப நல்ல படமெல்லாம் இல்லை.)

இப்படத்தில் ‘’எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே... ஏழைகள் நாட்டினிலே’’ என்று தொடங்கும் பாடல் ஒன்று வருகிறது. கல்லூரியின் அரசியல் அடக்குமுறையை எதிர்த்து குரல்கொடுக்கிற மாணவர்கள் சென்னையின் தெருக்களெங்கும் ஊர்வலமாக செல்கிறார்கள்.

இப்பாடல்காட்சியில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலை இடம்பெற்றுள்ளது. அதுவும் முப்பது விநாடிகளுக்கு மேல் அது வெவ்வேறு கோணங்களில் காட்டப்படுகிறது. அதோடு பின்னணியில் ‘’தமிழின தலைவரே எங்கள் கலைஞரே’’ என்கிற கோஷங்களும் ஒலிக்கின்றன. (இயக்குனர் ராமநாராயணன் அக்காலத்திலிருந்தே திமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது). 80களிலிருந்து தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதிதான் போல!.

அனேகமாக இப்போது அண்ணாசாலையில் இருக்கிற புகாரி ஹோட்டலுக்கும் அதன் எதிரில் இருக்கிற தர்காவுக்கும் மத்தியில்தான் இச்சிலை இருந்திருக்க வேண்டும். தர்காவுக்கு அருகில் ரேமன்ட்ஸ் ஷோரும் கூட ஒன்று இருப்பதை கவனித்தேன். பழைய புகாரி ஹோட்டலும் இருக்கிறது.

மற்ற தலைவர்களுக்கு வைக்கப்படுகிற சிலைபோல இல்லாமல் இது ஒரு நீண்ட கல்லறை வடிவிலான அமைப்பின் மேல் நிறுவப்பட்டிருந்தது. எதை குறிக்கிற எதன் குறியீடோ தெரியவில்லை.

கறுப்பு நிற சிலையில் இருக்கிற உருவம் முப்பதுகளின் இறுதியில் இருக்கிற இளம் கருணாநிதியின் உருவம். வலது கரம் உயர்த்தி சூப்பர் என்பது போல ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் இணைத்து மூன்று என்று காண்பிப்பதாக அச்சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்று என்பது திமுக, அண்ணா, கடமை மாதிரியான மூன்றெழுத்து வார்த்தைகளையோ அல்லது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்கிற அண்ணாவின் மந்திரத்தையோ குறிப்பதாக இருக்கலாம். ஆனால் பார்க்க சூப்பராகவே இருந்தது.

ஒருவேளை அச்சிலை இடிக்கபடாமலிருந்தால் இப்படி இருந்திருக்கும்.

அண்ணாசாலையின் துவக்கத்தில் பெரியார் சிலை அங்கிருந்து கால் கி.மீட்டரில் ரிச்சி ஸ்ட்ரீட் அருகே அண்ணாவின் சிலை.. அங்கிருந்து கொஞ்சதூரம் வந்தால் தேவி தியேட்டர் தாண்டிவந்தால் புகாரி அருகே கலைஞர் சிலை. இன்னும் கொஞ்சம் எல்ஐசி தாண்டி வந்தால் ஸ்பென்சர் அருகே எம்ஜிஆர் சிலை என வரலாறு சரியான வரிசையில் இருந்திருக்கும். ஆனால் அதைதான் சிதைத்துவிட்டார்களே சின்னப்பையன்கள்.

இச்சிலைகள் மேட்டரில் ஒரு விஷயத்தை கவனித்தேன்.

பெரியார் எந்த எண்ணையும் காட்டாமல் அமர்ந்திருக்கிறார் அல்லது ஜீரோ வில் துவங்குகிறார். அண்ணா ஒரு விரலை தூக்கி ஒன்று என்று காட்டுகிறார். கலைஞர் மூன்று என மூன்றுவிரலை காட்ட... கொஞ்சதூரத்தில் எம்ஜிஆர் இரண்டு என்று காட்ட எப்படி இருந்திருக்கும்!! (எண் வரிசைகூட முன்பின்னாக மாறிப்போய் வரலாற்று களங்கமேற்பட்டிருக்கும்). நல்ல வேளையாக கலைஞர் சிலை இடிக்கப்பட்டுவிட்டது. இனி எம்ஜிஆருக்கு அடுத்த மூன்று விரலை காட்டி நிற்கலாம். சரியாக இருக்கும். ஒன்... டூ.... த்ரீ...


(படத்தில் காட்டப்பட்ட சிலை இதுதான்! ஸ்கிரீன் ஷாட் எடுத்துகொடுத்து உதவிய உடன்பிறப்பு செந்தழல்ரவிக்கு நன்றி)

முகநூலில் கோவி லெனின் பகிர்ந்த ஒருவிஷயம் -

“செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில்தானே குத்துகிறான்” -இதுதான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவின்போது தனது சிலையை ஓர் இளைஞன் கடப்பாறையால் உடைக்கும் படத்திற்கு கலைஞர் எழுதிய வரிகள்.