Pages

29 November 2013

ஒரு சாலையும் சில மனிதர்களும்




உலகில் மோசமான மனிதர்கள் என்று யாருமே கிடையாது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதும் தீயதும் ரத்தமும் சதையுமாக பிணைந்திருக்கிறது. அவரவர் சூழலே எதை வெளிப்படுத்துவதென்பதற்கான கருவியாக உள்ளது. நம் கண் எதிரே புலப்படுகிற நாமாக புரிந்துகொண்ட ஒரு மனிதன் அடுத்த நொடி எப்படியும் மாறலாம்.

ஓர் புல்லாங்குழலின் இசையால் எப்படிப்பட்ட மனிதரையும் அழ வைத்துவிட முடியும். ஒரு குழந்தையின் புன்னகை எந்த மனிதனின் நெஞ்சத்தையும் நெகிழவைத்துவிடும். ஒரு மிகச்சிறிய இழப்பு கூட யாரையும் கொலைகாரனாக்கூடும். ஓர் எதிர்பாராத அவமானம் நம்மை எளிதில் கொன்றுவிடக்கூடும். ஒரு பயணம் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடலாம். அப்படி ஒரு பயணம்தான் ‘’ தி குட் ரோட்’’ என்கிற குஜராத்தி திரைப்படம் முன்வைப்பது. ஒரு நெடுஞ்சாலையில் தன்னையே கண்டடைகிற சில மனிதர்களின் வாழ்க்கையை ஆர்பாட்டமில்லாமல் சொல்கிறது.

நீண்டுகொண்டே செல்லும் குஜராத்தின் நீண்ட நெடுஞ்சாலையில் பயணிக்கிற மூன்று பேருடைய வாழ்க்கைதான் படம் நெடுக சொல்லப்படுகிறது. தன்னுடைய லாரியை வேண்டுமென்ற விபத்துக்குள்ளாக்கி அதன்மூலமாக இன்சூரன்ஸ் பணத்தினை பெற்று அதை வைத்து வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கிற ஒரு லாரி டிரைவர், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தொலைந்துபோய் நெடுஞ்சாலையில் தனித்துவிடப்படும் ஒரு சிறுவன். மோசமான ஒரு சூழலிலிருந்து மும்பையிலிருந்து தப்பித்து தன் சொந்த ஊருக்கு திரும்பி படிப்பு,பாட்டி,விளையாட்டு,மகிழ்ச்சி என வாழ்க்கையை தொடங்க நினைக்கிற ஒரு சிறுமி. இந்த மூவருடைய வாழ்க்கை பயணத்தில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தை கொடுக்கிறது அந்த நெடுஞ்சாலை.

எப்போதும் தன் தொலைந்துபோன வாழ்க்கையை பற்றியும் இருளாய் தென்படும் எதிர்காலம் பற்றியும் கவலையில் ஆழ்ந்திருக்கிற லாரி டிரைவர், ஒரு சிறுவனின் பாடலில் லயித்து தொலைந்துபோகிறான். தன்னுடைய பால்யத்தை மீட்டெடுக்கிறான். தன்னையும் குழந்தையாக பாவிக்கிறான். அதிலே கரைந்து உண்மையான மகிழ்ச்சி இங்கே இப்போது என்பதை உணர்கிறான். எல்லாவற்றையுமே வெறுப்போடும் எரிச்சலோடும் அணுகுகிற பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு விபச்சார விடுதியில் தனக்கான அன்பை கண்டடைகிறாள். எப்படிப்பட்ட சூழலிலும் அடுத்தவருக்கு உதவுகிற உள்ளம் அவளுக்குள் பிறக்கிறது. நகரச்சூழல் தரும் படோடோபமான வாழ்க்கையில் திளைக்கிற பெற்றோர் தன் மகனை தொலைத்துவிட்டு தேடும்போது தங்களுக்கு வெளியே இருக்கிற உலகை கண்டுதெளிகிறார்கள்.

படத்தில் யாருக்கும் நீளநீளமான வசனங்களோ அதிரடியான காட்சிகளோ ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கிற வாழ்க்கையோ இல்லை. படம் நெடுக நிறைந்திருக்கிற மிகையில்லாத யதார்த்தமான காட்சிகள் மட்டுமே ஒட்டுமொத்தமான உணர்வுகளை நமக்குள் கடத்துகின்றன. அதிலும் அந்த லாரிடிரைவரும் சிறுமியும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இப்படம் குஜராத்தின் வறுமையை காட்டுகிறது, நெடுஞ்சாலையில் நடக்கிற குழந்தைகளை வைத்து நடத்தப்படும் விபச்சாரத்தை காட்சிப்படுத்துகிறது என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியாவின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் இவ்வகை பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய நெடுஞ்சாலைகளைப்போல மோசமான இடங்களை பார்க்கவே முடியாது. எல்லாவிதமான குற்றங்களும் அரங்கேறும் இடங்களாக அவை மாறிப்போய் பல ஆண்டுகளாகின்றன.

ஆனால் இப்படம் முன்வைப்பது அக்குற்றங்களை அல்ல, அக்குற்றங்களை தாண்டி அங்கே நடமாடும் மனிதர்களின் அன்பை காட்சிப்படுத்துகிறது. அவர்களுடைய நேயத்தை நமக்குள் கடத்துகிறது. அதுதான் இப்படத்தினை நம்முடைய மரபார்ந்த பாணி சினிமாவிலிருந்து வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.

படத்தில் மிகமிக பொறுமையாக நத்தையை விட மெதுவாக நகரும் காட்சிகள் எப்படிப்பட்ட மனிதனையும் சோதிக்கவல்லவை. அவார்ட் படங்களுக்கே உரிய அம்சமாக இது இருக்கிறது! இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது. விருது கிடைக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நிறைய பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம். நல்ல ப்ரிண்ட் டிவிடி சப்டைட்டிலோடு கிடைக்கிறது.

இப்படத்தின் முக்கிய பாத்திரமொன்றில் நடத்திருக்கிற சோனாலி குல்கர்னியை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால்.. மே மாதம் படத்தில் நடித்தவர் என்கிறது விக்கிபீடியா! அட!