Pages

02 December 2013

வெள்ளையானை




அது 2009ம் ஆண்டின் துவக்கம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயம். கொத்து கொத்தாக மக்கள் இறந்துபோவது குறித்த செய்திகளும் படங்களும் இணையமெங்கும் வியாபித்திருந்தது. ரத்தந்தோய்ந்த அப்படங்களை பார்க்கும்போது மனது கிடந்து பதறும். நிர்வாணமாக கொல்லப்படும் பெண்களின் இளைஞர்களின் வீடியோக்களை பார்க்கும்போது கண்களில் நீர் கசியும். குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் என தினம் தினம் செத்துப்போன மக்களின் எண்ணிக்கையை கிரிக்கெட் ஸ்கோர் போல ஊடகங்கள் அறிவித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை.

அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தவிக்கும். ஒவ்வொரு முறையும் பதட்டமாகி பின் உடல் வெலவெலத்து என்ன செய்தவதென்று யோசித்து எதை எதையோ செய்து இறுதியில் எதுவுமே செய்யாமல் அமைதியாகும்.

நம்மால் என்ன செய்துவிட முடியும் என்கிற மோசமான கையறுநிலையின் உச்சத்தை அந்நாட்களில் நம்மில் பலரும் எட்டியிருக்கலாம். மிஞ்சிமிஞ்சிப்போனால் கலைஞரையும் ராஜபக்சேவையும் திட்டி நாலைந்து கட்டுரைகள் ஸ்டேடஸ்கள் ட்விட்டுகள் எழுதி இணையத்தில் போட்டு மனதை தேற்றிக்கொள்ளலாம். இன்றுவரைக்குமே நாம் அதையேதான் தொடர்கிறோம். அந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் சென்னையில் நடந்த அநேக போராட்டங்களில், ஊர்வலங்களில் கலந்துகொண்ட சமவயது இளைஞர்கள் மத்தியில் இதே உணர்வை உணர்ந்திருக்கிறேன். அந்த ஊர்வலங்களில் கருணாநிதி ஒழிக என வெறித்தனமாக கோஷம்போட்ட திமுக அனுதாபிகளைக்கூட பார்த்திருக்கிறேன். இந்த மனநிலையின் உச்சம் தொட்ட சிலர் தன்னையே மாய்த்துக்கொண்டதையும் கடந்திருக்கிறோம்.

இந்த கையறு நிலையை எதிர்கொள்ளும் ஒருவனுடைய மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் ‘’வெள்ளையானை’’ நாவல். இதனாலேயே இப்படிப்பட்ட கையறுநிலையை அடிக்கடி கடக்கிற நமக்கு இந்நாவல் மிக நெருக்கமான ஒன்றாகிவிடுகிறது.

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ்கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. அல்லது மிகசிறுபான்மை ஆங்கிலேயர்களால் அடக்கி ஆளப்பட்ட இந்தியா எனும் மாபெரும் தேசம் மிகச்சிறிய ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டதையும் கூட யானையும் பாகனுமாக உருவகிக்கலாம். (வெள்ளையர்களின் யானை!) நாவலில் வருகிற ஏய்டனுக்கும் கூட இதே சந்தேகம் வருகிறது.. இவ்வளவு பெரிய யானை ஏன் இந்த சின்ன பாகனுக்கு அடிமையாய் இருக்கிறது?

1878ஆம் ஆண்டு சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம்தான் நாவலின் களம். 300 தலித் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த எதிர்ப்பொலி. தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும் அவனுடைய மனைவியும் அமெரிக்க நிறுவனம் அமர்த்திய இந்திய ஆதிக்கசாதி கங்காணிகளால் கொல்லப்பட அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கின்றனர் அப்பாவி தலித்துகள்.

அதுதான் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகிறார் நாவலின் ஆசிரியர். அந்த சம்பவம் குறித்து திருவிக தன் வாழ்க்கை வரலாற்றி எழுதியிருந்த இரண்டொரு வரிகள்தான் இவ்வளவு பெரிய நாவலை எழுதுவதற்கான துவக்கப்புள்ளியாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லமாக இயங்கிவருகிற இந்த இடம் முன்பு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கட்டிகளை சேமிக்கிற மற்றும் பின் நாடெங்கும் விநியோகிக்கிற கிடங்காக இருந்தது. மிக மோசமான சூழலில் உடல் நலக்குறைவோடு குறைந்த கூலிக்கு இங்கே பணியாற்றிய இரண்டு தலித் தொழிளார்கள் கங்காணிகளால் கொல்லப்பட அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஏய்டன். அவருடைய பார்வையிலேயே அக்காலகட்டமும் சூழலும் மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களுமாக நாவல் விரிவடைகிறது.

ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்க முனைகிறார் ஏய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட தலித் இளைஞனான காத்தவராயன் உதவுகிறான். ஆதிக்க சாதியினரால் எப்படியெல்லாம் தலித்துகள் அடக்கப்படுகின்றனர் என்பதை அறிகிறான்.

அந்த காலத்தில் சதுப்பு நிலமாக கிடந்த புதுப்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஏழை தலித் மக்கள் வாழ்ந்த குடியிறுப்புக்கு அழைத்துச்சென்று காட்டுகிறான் காத்தவராயன். அதே பகுதியில் ஏழைகளை புறக்கணித்துவிட்டு ஒரளவு வசதியாக வாழ்ந்த தலித்துகளை பற்றிய செய்தியும் இங்கே இடம்பெறுகிறது.
செங்கல்பட்டு பகுதியில் எங்கெங்கோ இருந்து பிழைப்பு தேடி சென்னையை நோக்கி வந்து பசியால் வாடி உடல்மெலிந்து சாகும் ஆயிரக்கணக்கான மக்களை பற்றியும் ஏய்டன் காத்தவராயன் மூலமாக தெரிந்துகொள்கிறான். அதை குறித்தெல்லாம் விளக்கமாக ஒரு அறிக்கையை தயார் செய்து அந்த காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த ட்யூக் ஆஃப் பக்கிங்ஹாமுக்கு அளிக்கிறான்.

அம்மக்களுக்கான நீதியை பெற்றுகொடுக்க முனையும் அவனுடைய போராட்டம் படுதோல்வியை சந்திக்கிறது. அதிகாரத்தின் முன் மண்டியிட்டு பெருந்தோல்வியை சந்திக்கிறான். மனமுடைந்து விபச்சார தொழிலில் ஈடுபடும் தன் காதலியான மரிஸாவிடம் சரணடைகிறான். நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான இடம் இதுவென்று தோன்றியது. அதிகாரத்தின் உச்சியில் இருக்கிற ஏய்டன், விபச்சாரத்தொழிலில் ஈடுபடுகிற மரிஸாவின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பை கோருகிறான்.. அவள் மறுக்க அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் பிழைத்துவிடுகிறான். அதற்கு பிறகு அவனும் அந்த அதிகாரத்தின் ஆற்றில் தன்னை கரைப்பதோடு நாவல் முடிகிறது.

இந்நாவலில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கவளம் சோற்றுக்காக ZOMBIE களைப்போல அலைகிற ஏழை மக்களை ஜெயமோகனின் எழுத்து கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு அத்தியாயம் முழுக்க ஏய்டனோடு நாமும் கூட செங்கல்பட்டில் ப்ரிட்டிஷ் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஏழைகளோடு செய்வதறியாது திரிகிறோம். அவர்களுக்கு ஒரு பருக்கை உணவை கூட கொடுக்க இயலாமல் தவித்தபடி பயணிக்கிறோம். படிக்கும்போதே பதற ஆரம்பித்துவிடுகிறது. அச்சு அசலாக அக்காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். ஏய்டனின் காலணிகளில் ஓட்டிக்கொண்டு அழிய மறுக்கிற அந்த ரத்தத்துளிகள் நம்முடைய உடலிலும் ஒட்டிக்கொள்கின்றன.

தாதுபஞ்சத்தால் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஏழ்மையை எப்படி தங்களுக்கு சாதகமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஆதிக்க சாதி வணிகர்களும் முதலாளிகளும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் நாவலில் விளக்கப்படுகிறது. குறிப்பாக கோமுட்டி செட்டிகள், நாயக்கர்கள், நாயுடு,ரெட்டி என இப்பட்டியல் நீள்கிறது. இந்த ஆதிக்க சாதியினரின் திட்டங்களை எப்படி இடைநிலை சாதியினர் செயல்படுத்திக்காட்டினர், அவர்களுடைய ஆதிக்கசாதி மானோபாவம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் சில காட்சிகளில் விளக்குகிறார்.

அடிப்பட்டு கீழே கிடக்கிற தலித்தை தூக்க சொல்கிறான் ஏய்டன். ஆனால் இரும்பினைப்போல நிற்கிற காளமேகத்தின் சிப்பிபோன்ற கண்கள் அக்காலகட்டத்தில் நிலவிய கடுமையான சாதிவெறிக்கு சாட்சியாக நாவல்முழுக்க பரவியிருக்கின்றன. நாவலில் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத பாத்திரம் காத்தவராயனுடையது. அயோத்திதாச பண்டிதரின் சாயலில் உருவாக்கப்பட்ட அந்த பாத்திரம் பேசுகிற விஷயங்களும் சிந்திக்கிற நேர்த்தியும் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவராக இருப்பாரோ என்று எண்ண வைப்பவை. ஆனால் அவரோ நீலகிரி பக்கம் குருகுலக்கல்வி பயின்றவராகவே ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஆனால் அவருடைய பாத்திரம் ஆதிக்க சாதிக்கெதிராக தலித் மக்களிடையே முதன்முதலாக எழுகிற ஒற்றை குரலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நாவல் அயர்லாந்து நாட்டுக்காரனான ஏய்டனின் பார்வையிலும் மனவோட்டத்திலும் செல்வதால் ஏதோ மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிற உணர்வு உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம் துல்லியமாக ஒரு வெளிநாட்டுக்காரனைப்போல சிந்திக்கவும் அவனுடைய மனவோட்டங்களை சித்தரிக்கவும் மிகப்பெரிய CRAFTMANSHIPம் திறமையும் வேண்டும். அது நீண்டகாலமாக தொடர்ந்து எழுதுவதன் மூலம் கண்டைகிற நேர்த்தி. அது ஒரு மிகச்சிலஇடங்கள் தவிர்த்து எல்லாமே கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. (காத்தவராயன் என்கிற பெயர் சைவசமயத்துடையதாச்சே என ஓரிடத்தில் கேட்கிறான் ஏய்டன்!) மற்றபடி மனநுட்பமும் மொழிநுட்பமும் மிகச்சரியாக இந்நாவல் முழுக்க வெளிப்படுகிறது.

நாவல் முழுக்க நிறைந்திருக்கிற அந்த கையறுநிலை வாசித்து முடிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நம் கண்முன்னே அரங்கேறுகிற மிகப்பெரிய பாதகச்செயல்களையும் எளிதாக எடுத்துக்கொள்கிற மனநிலைக்கு நாம் எப்படி வந்தடைந்தோம் , நம்மிடமிருநுத நீதியுணர்ச்சியை எங்கே தொலைத்தோம் என்கிற கேள்வியையும் எழுப்பவும் அது தவறுவதில்லை.