Pages

04 November 2013

நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்


ஜெயமோகன் எழுதி 1995ல் வெளியான நூல் ‘’நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’’. சமகாலத்திற்கேற்ற சில மாற்றங்களோடு 2007ல் உயிர்மையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது (இப்போது நற்றிணைப்பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்). சமீபத்தில்தான் இந்தபுத்தகம் வாசிக்க கிடைத்தது.

இலக்கிய உலகிற்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகர்களுக்கான கோனார் நோட்ஸ் என்று இந்நூலை பற்றி இரண்டுவரியில் சொல்லலாம். இவ்வளவு எளிமையாகவும் உதாரணங்களோடும் இலக்கியத்தை எந்த எழுத்தாளருமே கற்றுத்தரமாட்டார்கள். ஒன்னாங்கிளாஸ் குழந்தையின் பென்சில் பிடித்த கையை பிடித்து ஸ்லேட்டில் வைத்து அனா ஆவன்னா போட்டு கற்றுத்தருகிற ஸ்கூல் மிஸ்ஸுக்கு இணையாக இலக்கியப்பாடமெடுக்கிறார் ஜெமோ. சிறுகதை என்றால் என்ன? நாவல் எப்படி எழுதப்படுகிறது? கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பதெல்லாம் கூட இந்நூலில் கற்றுக்கொடுக்கிறார் ஜெயமோகன்.

நவீன தமிழ் இலக்கியம் என்றால் என்ன? எது இலக்கியம்? ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும்? என்பதில் தொடங்குகிறது நூல். அதோடு இலக்கியத்தை வாசிப்பது ஒரு மிகவும் நுணுக்கமான பயிற்சி என்கிறார். ஒரு வாசகன் எப்படி படிப்படியாக இலக்கியதை அடையவேண்டும் என்பதுவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குழந்தையிலக்கியத்தில் தொடங்கி சாகசக்கதைகள் , மெல்லுணர்ச்சிக்கதைகள் வழியாக இலட்சியவாத எழுத்துகளை தாண்டி நல்ல இலக்கியபடைப்புகளை அடைவதே சரியான ரூட் என்கிறார் ஜெமோ.

இலக்கிய உலகிற்குள் புதிதாக நுழைகிற இளம் வாசகன் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை? என்னங்க ஒன்னுமே புரியல என்பதுதான். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை ஏன்படிக்கவேண்டும். புரியாத ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும் என்பதுமாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது நூலின் முதல் பகுதி. இலக்கியத்தின் அடிப்படைகள் என்னென்ன? படைப்புமொழி என்பது என்ன? இலக்கியத்தோடு சமூகமும் அரசியலும் எப்படி தொடர்புகொள்கின்றன என்பதுமாதிரி நிறைய விஷயங்கள் இந்நூலில் உண்டு.

இலக்கிய சூழலில் போலி பாவனைகள் என்கிற பகுதி மிகவும் கவர்ந்தது. இலக்கிய உலகில் உலவுகிற டூபாக்கூர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை இந்தப்பகுதி விளக்குகிறது. ஒரு படைப்பில் படிமம் என்பது என்ன? குறியீடு என்பது என்ன? ஒரு படைப்பு எப்போது செவ்வியல் அந்தஸ்தை பெறுகிறது. நாட்டார் வழக்கிலிருந்து செவ்வியல் தன்மையை அடைந்த படைப்புகள் என்ன என்பது மாதிரியான புரிந்துகொள்ள கடுப்படுக்கிற விஷயங்களையும் எளிமையாக விளக்குகிறார் ஜெமோ.

நூலின் இரண்டாம்பகுதி நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை சொல்கிறது. மணிக்கொடி காலத்தில் தொடங்கும் வரலாறு உயிர்மை காலம் வரைக்கும் நீள்கிறது. அவ்வரலாற்றின் வழியாக தமிழ் இலக்கியத்தில் என்னமாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நம்முடைய முன்னோடிகள் யார்? அவர்கள் எழுதியது என்ன? வணிக எழுத்து சூழலின் சவால்களை எப்படி எதிர்கொண்டனர் என்பதுமாதிரியான சங்கதிகளும் இவ்வரலாற்றின் வழியே சொல்லப்படுகிறது. ஐந்து தலைமுறை எழுத்தாளர்களின் வழியே தமிழ் இலக்கியம் எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை இப்பகுதி மிகசிறப்பாக சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம், விமர்சன இலக்கியம் மாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது.

கடைசி பகுதியில் இலக்கிய இயக்கங்கள்,கோட்பாடுகள் மாதிரியான விஷயங்களை விளக்க முயல்கிறார் ஜெமோ. ஆனால் அவர் எழுதியிருக்கிற விளக்கங்களை படித்து புரிந்துகொள்ள ஏதாவது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிற அளவுக்கு அது சிக்கலான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. இன்னும் கூட எளிமையாக நிறுத்தி நிதானமாக விளக்கியிருக்கலாம். அவசரமாக எழுதப்பட்ட பக்கங்கள் அவை.

செவ்வியல்,அழகியல்,கற்பனாவாதம்,நவீத்துவம்,பின்நவீனத்துவம்,தலித்திய இலக்கியம்,மீபொருண்மைவாதம்,மாய யதார்த்தவாதம்,சர்ரியலிசம் மாதிரியான பேரைக்கேட்டாலே நமக்கு பேஜாராகிற விஷயங்கள் குறித்த விளக்கங்களும் அதுமாதிரியான தமிழ்படைப்புகள் குறித்த அறிமுகமும் நூலில் இடம்பெற்றுள்ளன. செவ்வியலாக்கம்,நாட்டார்வழக்காற்றியல் மாதிரியான விஷயங்களை பற்றிய விளக்கங்களையும் ஜெயமோகன் எளிய மொழியில் கொடுத்திருக்கிறார். நூல் முழுக்க ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர் இலக்கியம் குறித்த அறிமுகமும் உண்டு.

அதோடு பாரதி,புதுமைபித்தன்,குபரா தொடங்கி கண்மணிகுணசேகரன்,ஷோபாசக்தி,சாருநிவேதிதா,யுவன்சந்திரசேகர் வரை வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களைபற்றியும் அவர்களுடைய படைப்புலகம் குறித்த அறிமுகமும் கூட உண்டு. கு.அழகிரிசாமி மற்றும் பிரபஞ்சன் குறித்து ஒரே கருத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன். இருவருமே எழுத்தையே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் அவர்களுடைய எழுத்தில் செறிவில்லை. அதோடு மிக அதிகமாக எழுதி தங்களுடைய எழுத்துதிறனை குறைத்துக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார். சாருநிவேதிதாவை பற்றி குறிப்பிடும்போது இலக்கிய வம்புகளையும் பலவகையான ஊடக செய்திகளையும் பாலியல் மனப்பாய்ச்சல்களையும் கலந்து எழுதியவர் என்கிறார்.

நூலில் ஐந்தாம் தலைமுறை மற்றும் இன்றைய இலக்கியம் இரண்டு பகுதிகளிலும் ஒரே கட்டுரை வெவ்வேறு வகையில் எடிட் செய்யப்பட்டு நாற்பது பக்கங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது. நூலின் கடைசியில் பின்னிணைப்பாக இலக்கிய உலகில் பயன்படுத்தப்படும் சிக்கலான வார்த்தைகள் (விழுமியங்கள்,புறமொழி,நனவிலி,நிகழ்வியல்,படிமம் மாதிரியான எண்ணற்ற சொற்களுக்கான அகராதி ஒன்றும் உள்ளது. படிக்க வேண்டிய நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் பட்டியலும் உண்டு.

நவீன தமிழ் இலக்கியத்திற்குள் வாசகனாகவோ எழுத்தாளனாகவோ நுழைய விரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய எளிய நூல் இது. அது மட்டுமில்லாமல் நம்முடைய இலக்கி வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். இது நவீன தமிழ் இலக்கியத்திற்கான ஜன்னலாக இருக்கும்.. இலக்கியம் குறித்த தேடலை உருவாக்கும். அந்த வகையில் இது நிச்சயம் முக்கியமான நூல்.